சனி, 6 ஜூலை, 2019

புறநானூறு சொல்லும் வரி நெறி! -இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
புறநானூறு சொல்லும் வரி நெறி!
மத்திய நிதியமைச்சர் நிருமலா சீதாராமன், சூலை 5 ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தில் முன் வைத்த 2019-20 நிதிநிலை அறிக்கையில் புறநானூற்றுப் பாடலில் இருந்து மேற்கோள் காட்டியுள்ளார். இதன் மூலம் சங்கத்தமிழின் சிறப்பையும் பண்டைத் தமிழரின் வரி விதிப்புக் கொள்கையையும் உலகம் அறியச் செய்துள்ளார். எனவே, அவருக்கு நம் பாராட்டுகள். அவரால் மேற்கோளாகக் கூறப்பட்ட பாடலை நாமும் அறிவோமா?
புலவர் பிசிராந்தையார் காணாமலேயே கோப்பெருஞ்சோழனுடன் நட்பு கொண்டவர்; அவர் வடக்கிருந்து உயிர் துறந்த பொழுது தாமும் உண்ணாமல் உயிர் துறந்தவர். இதனால் இருவரும் நட்பிற்கு இலக்கணமாகக் கூறப்படுவர். புறநானூற்றில் நான்கு, அகநானூற்றில் 1, நற்றிணையில் 1 என அவரின் 6 பாடல்கள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன.
புலவர் பிசிராந்தையார், பாண்டியன் அறிவுடை நம்பிக்கு வரிவிதிப்பு எப்படி இருக்க வேண்டும் என அறிவுரை கூறிப் பாடல் இயற்றினார். இப்பாடல் புறநானூற்றில் 184 ஆவது பாடலாக அமைந்துள்ளது. அப்பாடல் பொருளை நாமும் அறிந்து அகம் மிக மகிழ்வோம்.
அந்தப் பாடலும் விளக்கமும் வருமாறு:
காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகுவதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே, 5
கோடியாத்து, நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போலத், 10
தானும் உண்ணான், உலகமும் கெடுமே!
       இதன் பொருளைப் பார்ப்போம்:
காய்ந்து விளைந்த நெல்லை அறுத்துக் கவளம் கவளங்களாக யானைக்குக் கொடுத்தால் ‘மா’ என்னும் சிறிய அளவு கூட இல்லாத மிகச் சிறிய நிலத்தில் விளைந்த நெல், அதற்குப் பல நாள் உணவாக வரும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே உண்ணுமாறு மேயவிட்டால் என்ன ஆகும்? யானை தின்னும் நெல்லின் அளவை விட அதன் கால்களில் மிதிபட்டு அழியும் நெல்லின் அளவு மிகுதியாகும்.
அரசன் வரி திரட்டும் நெறிக்கேற்ப முறையாக மக்களிடம் வரி பெற்றால், மக்கள் துன்பமில்லாமல் கொடுக்கும் வரியால் கோடிக்கணக்கில் பொருள்களைத் திரட்டுவான். இதனால் நாடும் தழைக்கும் மக்களும் பயனுறுவர்.
அரசன் அரசியல் அறிவில் குறைந்தவனாக, அறமுறை அறியாச் சுற்றத்துடன் ஆரவாரமாக, மக்கள் அன்பு கெடுமாறு முறையின்றி நாள்தோறும் பெருமளவு வரியை வற்புறுத்திப் பெற முற்பட்டால் என்ன ஆகும்? யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடைய மாட்டான். அவனால் நாடும் கேடுறும்.
இப்பாடல் மூலம், யானைக்கு உணவு வழங்கும் முறையைப் புலவர் பிசிராந்தையார் வேந்தனுக்கு உணர்த்தி அறமுறைப்பட்ட வரி திரட்டலே பெருஞ்செல்வம் தரும் என உணர்த்தினார். பாண்டியன் அறிவுடை நம்பியும் உணர்ந்து அதற்கேற்ப வற்புறுத்தி வரி திரட்டும் முறையைக்கை விட்டு வரி நெறியைப் பின்பற்றினார்.
கணக்கில் ‘மா’ என்பது இருபதில் ஒரு பங்கு (1/20) என்னும் அளவைக் குறிக்கும். நில அளவையில் 100 குழி கொண்ட வயல் பரப்பைக் குறிக்கும். 16 சாண் அளவு 1 கோல் என்றும் 18 கோல் அளவு 1 குழி என்றும் கூறப்பெறும். அஃதாவது சதுர அளவையில் 288 சாண் அளவு 1 குழி.
‘செய்’ என்பது சங்கக்காலத்தில் பயன்படுத்தப்பெற்ற நில அளவு. இதனைச் சிலர் 100 சிறுகுழி என்கின்றனர். இது தவறாகும். ‘மா’ என்னும் நில அளவைவிடச் ‘செய்’ என்னும் அளவு பெரிது என்பதை இப்பாடலே உணர்த்துகிறது. அவ்வாறிருக்க 100 குழி அளவு கொண்ட ‘மா’ என்னும் நிலத்தை விட 100 சிறுகுழி கொண்ட ‘செய்’ என்னும் அளவு எப்படிப் பெரிதாக இருக்க முடியும். ‘செய்’ என்பது பெரு நில வயலைக் குறித்திருக்கிறது.
இதன் மூலம் சிறிய அளவான ‘மா’ அளவு நிலத்தில் பயிராவதை முறையாக யானைக்குக் கொடுத்தால் யானைக்குப் பல நாள்களுக்கு உணவாக அமையும்.. மாறாக 100 வயல் பரப்பில் யானை தானே போய் உண்ணும் படி விட்டால் அங்குமிங்குமாகச் சென்று யானை உண்பதால் அதன் காலில் பட்டு அழிவது உண்ணும் அளவை விட மிகுதியாக இருக்கும். இவ்வாறு உவமையைக் கூறி வரி நெறியை உணர்த்துகிறார் புலவர்.
சங்க இலக்கியப் பாடல்கள் திணை என்றும் துறை என்றும் வகுக்கப்பட்டிருக்கும். ஒருவரின் வலிமை, சிறப்பு, புகழ் முதலானவற்றைப் பாடும் ‘பாடாண்திணை’ப் பிரிவில் இப்பாடல் உள்ளது. குறைகளை எடுத்துக்கூறி செய்யவேண்டியனவற்றைச் செவியில் அறிவுறுத்தும் ‘செவியறிவுறூஉ’ என்னும் துறையில் இப்பாடல் அடங்கும். மன்னராட்சியாக இருந்தாலும் மன்னருக்கு அறிவுரை கூறுவதையே ஒரு பிரிவாக வகுத்துப் பாடல்கள் பாடியுள்ளனர். மக்களாட்சியில் அதற்கான இடம் எங்கே இருக்கிறது?
இப்பாடல் மூலம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பழந்தமிழ்நாட்டில் வரிவிதிப்புக் கொள்கைகளும் அவற்றுக்கான நூல்களும் இருந்துள்ளன எனப் புரிந்துகொள்ளலாம். இச்சிறப்பை நாடாளுமன்றம் மூலம் உலகிற்கு உணர்த்திய அமைச்சர் நிருமலா சீதாராமனுக்கு மீண்டும் பாராட்டுகள்!
இலக்குவனார் திருவள்ளுவன்
மின்னம்பலம், 06.07.2019

நன்னன் குடியின் நூல் வெளியீடும் பரிசளிப்பும் – தி.பி.2050ஆடி 14, 2050 / செவ்வாய் / 30.07.2019 மாலை 6.00

திருவாவடுதுறை தி.என்.இராசரத்தினம் கலையரங்கம்

சென்னை 600 028

தி..தலைவர் கி.வீரமணி

தி.மு.தலைவர் மு..தாலின்

முனைவர் துரை.சந்திரசேகரன்

வழ..இராமலிங்கம்

குவிகம் : அளவளாவல்: எசு.ஆர்.தியாகராசன்

அகரமுதல

ஆனி 22, 2050 ஞாயிறு  07.07.2019 மாலை 5.00

 மனை 1, சே.கே.அத்துவைதா (JK ADVITA)

99, செளபாக்கியா குடியிருப்பு

அண்ணா முதன்மைச் சாலை

க.க.நகர், சென்னை

அளவளாவல்: பாரதி ஆர்வலர் எசு.ஆர்.தியாகராசன்

தொடர்பிற்கு: 97910 69435

வெள்ளி, 5 ஜூலை, 2019

தமிழால் இணைவோம்…! – மறைமலை இலக்குவனார்

தமிழால் இணைவோம்…!

தமிழ் இந்திய மொழிகளுள் ஒன்று மட்டுமல்ல, ஓர் உலகமொழியாகவும் திகழ்கிறது. ஆங்கிலம், சீனம், இசுபானிசு மொழி போன்று உலகெங்கும் பேசப்பட்டுவரும் மொழி நம் தமிழ்மொழி என்பதனைப் பெருமையுடன் நாம் அனைவரும் கூறலாம்.
உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களால் தமிழ் பல சிறப்புகளைப் பெற்று புதிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறது. இலங்கை, மலேசியா, மொரீசியசு நாட்டிலும் தொடர்பு மொழியாக இருப்பதுடன் தமிழ், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுகிறது. இதுபோன்றே ஆத்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா, தமிழ், கல்விக்கூடங்களில் மாணவர்களால் படிக்கப்படுகிறது. அமெரிக்காவில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளில் தமிழ் இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பாவில் நார்வே, சுவீடன், சுவிட்சர்லாந்து நாடுகளில் பள்ளிப்பிள்ளைகள் ஆர்வத்துடன் தமிழ் பயில்கிறார்கள். சீனப் பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்பிக்கப்பட்டு வருவதுடன் சீன வானொலியில் தமிழ்ப்பிரிவு சிறப்பாக இயங்கிவருகிறது. இவ்வாறு உலகெங்கும் பரவி வளர்ந்துவரும் தமிழுக்கு ஓர் ஊக்க ஊற்றாகவே உலகத் தமிழ் மாநாடு அமைந்துள்ளது எனலாம்.
அரை நூற்றாண்டுக்கு முன், 1966-ஆம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி வந்த தனிநாயக அடிகளார் உலகெங்கும் வாழும் தமிழர் ஒன்றுகூடித் தமிழ்வளர்ச்சி குறித்த திட்டங்களை இயற்றவும், விவாதிக்கவும் மாநாடு நடத்தவேண்டுமென்று கனவு கண்டார். அப்போது மலாயாப் பல்கலைக்கழகத்தில் மலேசிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் மாநாடு வெற்றியுடன் நடத்திச் சாதித்துக்காட்டினார். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் புறநானூற்றுப் பாடல் அடியை மாநாட்டின் குறிக்கோள் வாசகமாக்கினார். தமிழர்கள் அனைவரும் தங்கள் வேறுபாடுகளை மறந்து தமிழால் ஒன்றுபட வேண்டும் என்பதே அவர் கண்ட கனவாகும்.
1966-ஆம் ஆண்டு நடந்த அம்மாநாட்டுக்குப் பின்னர் 1968-ம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைநகர், சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்றது. அப்போது முதல்-அமைச்சராக விளங்கிய அறிஞர் அண்ணா அம்மாநாடு சிறப்பாக நடைபெற எல்லா வகையிலும் ஈடுபட்டு உழைத்தார். அப்போதுதான் சென்னைக் கடற்கரையில் தமிழ்ச்சான்றோர்களின் சிலைகள் நிறுவப்பெற்றன. தமிழ்நாட்டின் மூன்று பல்கலைக்கழகங்களில் திருக்குறள் ஆராய்ச்சி இருக்கை உருவாக்கப்பட்டது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் அமைக்கப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இம்மாநாடு நடத்தப்பட வேண்டுமென்னும் நடைமுறை வகுக்கப்பட்டு 1970-ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் பாரீசு நகரில் மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது.
தமிழ்நாட்டிலிருந்து, அப்போது முதல்வராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி தலைமையில், ஒரு குழு சென்று கலந்துகொண்டது. இந்த வரலாறு நீண்டு கொண்டே செல்லும். எனினும் 1981-ஆம் ஆண்டு மதுரையில் அப்போதிருந்த முதல்-அமைச்சர் எம்ஞ்சியாரின் ஈடுபாட்டால் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. 1995-ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் எட்டாம் உலகத் தமிழ் மாநாடு அப்போதிருந்த முதல்-அமைச்சர் செயலலிதாவால் நடத்தப்பட்டது.
இப்போது பத்தாவது உலகத் தமிழ் மாநாடு அமெரிக்காவில் இன்று (சூலை 4) தொடங்க உள்ளது. நூற்றுக்கணக்கான அறிஞர்கள் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு கோணங்களில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்க உள்ளார்கள். தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியம் எனத் தமிழின் தொன்மையான நூல்களைப் புதிய கோணங்களில் ஆராய்ச்சி செய்யும் கட்டுரைகள் வழங்கப்படவுள்ளன. இத்துடன் நில்லாமல் தமிழரின் தொன்மையைக் கண்டறிய உதவும் கல்வெட்டுகள், வரலாற்று ஆவணங்களும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களால் புதிய உண்மைகள் உலகுக்கு வழங்கப்படும் என்பதும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
கணினித்துறையில் ஏற்பட்டுள்ள கண்டுபிடிப்புகளைக் கொண்டு தமிழ் வளர்ச்சிக்கு ஆவன செய்தற்குரிய திட்டங்கள், கீழடியில் அண்மையில் கண்டறியப்பட்ட அகழ்வாய்வுகள் மூலம் அறியலாகும் தமிழர் வரலாறு போன்ற பயனுள்ள ஆய்வுகளை இம்மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் காணும்போது மனம் மகிழ்கிறது.
தமிழறிஞர்களின் ஒருமித்த முயற்சியால் தமிழ் பல புதிய ஆக்கங்களை இம்மாநாட்டின் மூலம் அடையும் எனவும், தமிழருக்குப் புதிய அறிவுத்துறைகளுக்கான வாயில்கள் திறக்கப்படும் எனவும் நம்புகிறோம்.
பத்தாம் உலகத்தமிழ் மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் தமிழறிஞர்களையும் உலகெங்குமிருந்து இம்மாநாட்டுக்கு வரும் அறிஞர்களையும் வாழ்த்துவோம். தமிழால் இணைவோம். வெல்க தமிழ்.
முனைவர் மறைமலை இலக்குவனார்,
சிறப்பு வருகைப் பேராசிரியர்,
கலிபோர்னியா பல்கலைக்கழகம், அமெரிக்கா.
தினத்தந்தி நாள் சூலை 4, 2019

திங்கள், 1 ஜூலை, 2019

உலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019

 அகரமுதல


புரட்டாசி 20, 2050 – 07.10.2013 திங்கள்
காலை 10.00
ஒளவைக்கோட்டம், திருவையாறு

உலக உத்தமர் காந்தியடிகள்

தமிழ்க் கவிஞரகளின் கவிதாஞ்சலி

கவிதைகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கவிஞர் முனைவர் மு.கலைவேந்தன்

தலைவர், அனைத்துலகத் தமிழ்க்கவிஞர் மன்றம்

கல்லாடனார் கல்விக் கழகம், புதுச்சேரி

ஒளவைக்கோட்ட அறிஞர் பேரவை, திருவையாறு

சிலப்பதிகார மாநாடு 2019, சிட்டினி, ஆத்திரேலியா

இளங்கோவடிகள் சிலை திறப்பு விழா
முதலாவது அனைத்துலகச் சிலப்பதிகார மாநாடு, 2019
புரட்டாசி 10-12, 2050 – செட்டம்பர்  27, 28, 29, 2019
தமிழ் இலக்கியக் கலை மன்றம் ஆத்திரேலியா

அனைத்துலக 17ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு

அனைத்துலக 17ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு

சிறப்புப் பயிலரங்குகள்

 

ஆடி 11, 2050 – 27.07.2019

சனி காலை 9.30 முதல் மாலை 5.00 வரை

புத்தகக் கண்காட்சி

சிலப்பதிகார இலக்கியப் பயிலரங்கம்

அகரமுதல


தமிழ் ஐயா கல்விக் கழகம்

ஒளவை அறக்கட்டளை

போட்டித் தேர்வு மூலம்

சிலப்பதிகார இலக்கியப் பயிலரங்கம்


தொடர்புக்கு : முனைவர் மு.கலைவேந்தன்

153, வடக்கு வீதி, திருவையாறு 613204

பேசி 094867 42503 மின்வரி : mukalaiventhan@gmail.com