சனி, 9 செப்டம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 205 : வேண்டும் சித்திரவதைத் தடுப்புச் சட்டம் 1/2

      09 September 2023      அகரமுதல(தோழர் தியாகு எழுதுகிறார் 204 : கொல்லன் தெருவில் ஊசி விற்றேன்! – தொடர்ச்சி)

வேண்டும் சித்திரவதைத் தடுப்புச் சட்டம் 1/2

நேற்று 26/06 காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் சித்திரவதை எதிர்ப்புப் பரப்புரையைப் பசுமைவழிச் சாலையில் இடம் பெற்றுள்ள மாநில மனிதவுரிமை ஆணையத்திலிருந்தே தொடங்கியது மிகப் பொருத்தமாக அமைந்தது.

மாநில மனிதவுரிமை ஆணையத்தின் தலைவர் நீதியர் எசு. பாசுகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராசு, மாநில மனிதவுரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், நீதியர் இராச இளங்கோ, அசீதா, பிரிட்டோ, சீலு பிரான்சிசு, சுதா இராமலிங்கம், சட்டப் பேரவை உறுப்பினர் வரலட்சுமி, முனைவர் குழந்தை, முனைவர் பாலமுருகன், ஆசீர், கூட்டியகத்தின் செயலாளர் தோழர் மீ.த. பாண்டியன் ஆகியோர் பேசினர்.

வீரத் தமிழ்தேசியத் தமிழர் தமக்கு ஏற்பட்ட சித்திரவதைப் பட்டறிவையும் அதற்கு நீதி பெறுவதற்கான போரட்டத்தையும் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் சார்பில் நான் நோக்கவுரை ஆற்றினேன். எனது உரையின் முகன்மைக் கூறுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

சூன் 26 வரலாற்றில் முத்திரை பதித்த நாள்.

1945ஆம் ஆண்டு இதே நாளில்தான், இரண்டாம் உலகப் போர் முடிவதற்கு முன்பே, அமெரிக்க நகரமான சான் பிரான்சிசுகோவில் 50 நாடுகள் ஐநா பட்டயத்தில் [UNITED NATIONS CHARTER] ஒப்பமிட்டன. இதுதான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிறப்பைக் குறித்தது. இன்றைய நிலையில் ஐநா உறுப்பரசுகள் பாலத்தீனம் உட்பட 194.

இந்தியா சார்பில் ஐநா பட்டயத்தில் ஒப்மிட்டவர் சர் ஆற்காடு இராமசாமி முதலியார். [ஐநாவுக்கே போனாலும் முதலியார் முதலியாராகவே போயிருக்கிறார்! முன்னொட்டு ‘சர்’ வெள்ளைக்காரன் கொடுத்த பட்டம். பின்னொட்டு ‘முதலியார்’ இந்துச் சமூகம் வழங்கிய பட்டம்.]    

1987ஆம் ஆண்டு இதே நாளில்தான் சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தம் செயலுக்கு வந்தது. முன்னதாக, சித்திரவதை மற்றும் கொடிய, மனிதத் தன்மையற்ற, இழிவான நடத்துமுறை அல்லது தண்டனைக்கு எதிரான ஒப்பந்தம் (CONVENTION AGAINST TORTURE AND CRUEL, INHUMAN, DEGRADING TREATMENT OR PUNISHMENT)  வரையப் பெற்று 1984 திசம்பர் 10ஆம் நாள் ஐநா பொதுப் பேரவையில் இயற்றப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் அரசுகள் ஒப்பமிட வேண்டும். ஒப்பமிட்டால் போதாது, ஏற்புறுதி செய்ய [RATIFY] வேண்டும்.

இருபது நாடுகள் ஏற்புறுதி செய்த பின் 1987 சூன் 16ஆம் நாள்தான் இந்த ஒப்பந்தம் செயலுக்கு வந்தது. அரசுகள் சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்தை இயற்றுவதற்கு வாக்களித்தாலும், அதனை நடைமுறைப்படுத்த விரும்பாமையைத்தான் இது காட்டுகிறது. அரசதிகாரத்துக்குச் சித்திரவதை தேவை என்று வெளிப்படையாக அறிவிக்கா விட்டாலும் இதுதான் அவற்றின் உள்ளக்கிடக்கை.

1987ஆம் ஆண்டு இந்த நாளில் செயலுக்கு வந்து விட்ட சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்தில், பத்தாண்டு கழித்து 1997ஆம் ஆண்டுதான் இந்தியா ஒப்பமிட்டது. ஆனால் இன்று வரை ஏற்புறுதி செய்யவில்லை. ஏற்புறுதி செய்வதானால் இந்திய நாடாளுமன்றத்தில் ஒப்பந்தத்தை முன்வைத்து இயற்ற வேண்டும். இயற்றினால்தான் அது சட்ட வலிமை பெறும். இது தொடர்பான ஐநா குழுவுக்கு இந்தியா பொறுப்புக்கூற வேண்டிய கட்டாயம் உருவாகும்.

 சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்தில் ஒப்பமிட்ட இந்திய அரசு அதனை ஏற்புறுதி செய்யவில்லை என்பது இந்தியாவில் மனிதவுரிமை அமைப்புகளின் கடுமையான இடித்துரைக்கு இலக்கானதோடு பன்னாட்டு அரங்கில் இந்தியாவுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தி வந்த நிலையில், 2010ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இதற்கான சட்ட முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. அவ்வளவுதான், வேறு ஒன்றும் நடக்கவில்லை.

 பன்னாட்டு அரங்கில், காட்டாக உலகளாவிய காலமுறை மீளாய்வில் (UPR) இது பற்றிய கேள்விகளுக்கெல்லாம் இந்தியத் தரப்பின் விடை “பரிசீலனையில் உள்ளது” என்பதே.  சித்திரவதைக்கு எதிரான பன்னாட்டுச் சட்டத்தை முறையாக மதித்து ஏற்றுக் கொண்டுள்ள 173 நாடுகளில் இந்தியா ஒன்றில்லை என்பது வெட்கக்கேடானது. இந்த நிலையில் இந்தியா ஆகப் பெரும் குடியாட்சியமாம்! சனநாயகமாம்! நம்புங்கள்!

 2002ஆம் ஆண்டு “சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்துக்கு விருப்புசார் வகைமுறை” [Optional Protocol to the Convention against Torture] இயற்றப்பட்டது. சித்திரவதை மற்றும் கொடிய, மனிதத் தன்மையற்ற, அல்லது இழிவான நடத்துமுறையைத் தடுக்கும் நோக்கம் கொண்ட இந்த ஒப்பந்தத்தின் படிக், காவல் கூடங்களைப் பன்னாட்டு மேலாய்வு செய்ய அனுமதிக்க வேண்டும். இது தவிர உள்நாட்டளவிலும் தற்சார்பான தடுப்புப் பொறிமுறைகளை உருவாக்க வேண்டும். இது வரை 91 அரசுகள் மட்டும் இந்த வகைமுறையை ஏற்றுக் கொண்டுள்ளன.

இந்தியா பற்றிச் சொல்லவே வேண்டா. இறையாண்மை என்னாவது? சித்திரவதை இல்லை என்றால் இந்திய இறையாண்மையைக் காக்க முடியாது என்பதுதான் அரசின் முடிவா? எனக் கேட்க வேண்டியுள்ளது.

சித்திரவதைக்கு எதிரான பன்னாட்டுச் சட்டம் இந்தியாவில் செயல்வடிவம் பெறாத நிலையில், இந்திய நாட்டுக்கென்று சித்திரவதைக்கு எதிரான சட்டம் ஏதும் இல்லாத நிலையில், தமிழ்நாடு அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தித் தமிழ்நாடு காவல் சித்திரதைத் தடுப்புச் சட்டம் [TAMILNADU PREVENTION OF TORTURE ACT] இயற்ற வேண்டும் என்று காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் வலியுறுத்துகின்றோம். இந்த ஆண்டே, இந்தத் திங்களே இப்படி ஒரு சட்டம் இயற்றினால் சிறப்பாக இருக்கும் என்பது மட்டுமல்ல, அதற்கான அவசரத் தேவையும் தமிழ்நாட்டில் உள்ளது. 

1987ஆம் ஆண்டு சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தம் செயல்வடிவம் பெற்ற இந்த நாளைத்தான் “சித்திரவதையினால் துயருற்றவர்களுக்கு ஆதரவு தரும் பன்னாட்டு நாளாக”க் கடைப்பிடிக்கிறோம்.

சரி, சித்திரவதைக்கு எதிரான பன்னாட்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இந்தியா மறுக்கிறது. இதற்கென்று தேசியச் சட்டமும் இல்லை, மாநிலச் சட்டமும் இல்லை. அப்படியானால் இப்போது நம் காவல் நிலையங்களில் நடக்கும் சித்திரவதை சட்டப்படியானதா? இல்லை. 1955ஆம் ஆண்டில் அது  வரை நடைமுறையில் இருந்த கசையடிச் சட்டம் ஒழிக்கப்பட்டு விட்டது. அத்தோடு எவ்வகையான உடல்-ஒறுப்புத் தண்டனைக்கும் [corporal punishment] சட்டத்தில் இடமில்லாது போயிற்று. நான் காவல்துறை அதிகாரியைத் தாக்கினால் குற்றம். அவர் என்னைத் தாக்கினாலும் குற்றம். இரண்டும் ஒரே அளவிலான, ஒரே தன்மையிலான குற்றங்கள்தாம். இரண்டுக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தில் ஒரே பிரிவு அல்லது பிரிவுகள்தாம்! பென்னிக்குசு- செயராசு கொலைக்காகச் சிறையில் இருக்கும் காவல்துறையினர் பத்துப் பேரும் இந்தியத் தண்டனைச் சட்டத்தில் புரிந்த குற்றத்துக்காகத்தான் சிறையில் அடைபட்டுள்ளனர் என்பதை மறவாதீர்கள்.

சித்திரவதைக் குற்றம் புரிந்தவர்களை இப்போதுள்ள சட்டங்களின் படியே தண்டிக்க முடியும். ஆனால் அது அவ்வளவு இயல்பாகவோ எளிதாகவோ நடப்பதில்லை.

 ஒன்று, இந்தக் குற்றவாளிகள் தொடர்ந்து அதிகாரத்தில் நீடிக்கின்றார்கள். சித்திரவதை அச்சுறுத்தலைக் கொண்டே பாதிக்கப்பட்டவர்களின் வாயை அடைக்க அவர்களுக்கு வாய்ப்புள்ளது. அதே போல் சான்றுகளை அழிக்கவும், சான்று சொல்லக் கூடியவர்களை ஆசை காட்டியோ அச்சுறுத்தியோ வழிக்குக் கொண்டுவரவும் வாய்ப்புள்ளது.          

 (தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 233

வெள்ளி, 8 செப்டம்பர், 2023

“இலக்குவனார்” நூலாய்வு – த.கு.திவாகரன்

 


பகுத்தறிவாளர் எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணையவழிக் கூட்ட எண் 60

ஆவணி 22, 2054 / 08.09.23 வெள்ளிக்கிழமை
மாலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை

நூலாய்வு
நூல்: மறைமலை இலக்குவனார் எழுதிய
இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில்
“இலக்குவனார்

அறிமுகவுரை:
அரிமா முனைவர் த.கு.திவாகரன்

இணைப்பு எண்: 82311400757
கடவுச்சொல்: PERIYAR
தோழர் தியாகு எழுதுகிறார் 204 : கொல்லன் தெருவில் ஊசி விற்றேன்!

 
(தோழர் தியாகு எழுதுகிறார் 203 : நெல்லையில் ஊடகச் சந்திப்பு – தொடர்ச்சி)

கொல்லன் தெருவில் ஊசி விற்றேன்!

நெல்லை வரும் போதெல்லாம் சுடலைமாடன் தெருவில் தோழர் தி.க.சி.யைப் பார்த்துப் பேசாமல் திரும்ப மாட்டேன். என்னோடு உரையாடும் அந்தக் குறுகிய நேரத்தில் தன் மகிழ்வுகளையும் மனக்குறைகளையும் கொட்டித் தீர்த்து விடுவார்.

அவரது மனநிலையை அகவை முதிர்ந்த தந்தை தன் மகன் போன்ற ஒருவரைப் பார்க்கிற உணர்வு என்று சொல்ல முடியாது. நான் நெல்லை வரும் செய்தி கிடைத்ததிலிருந்தே வழி மேல் விழி வைத்து என்னை எதிர்பார்த்துக் காத்திருப்பார். உண்மையில் தாயைப் பார்த்த தனயனின் மனநிலையில்தான் பேசுவார். எது பற்றி எல்லாம் நான் எழுத வேண்டும் என்று அறிவுறுத்துவார். தன் கனவுகளையெல்லாம் எனக்குச் சொல்லி அவற்றை நான் மெய்படச் செய்ய வேண்டும் என்பார். அவர் என் மீது கொண்டிருந்த அந்தப் பெருநம்பிக்கையைக் காப்பாற்ற என்ன செய்யப் போகிறேன்?

முன்பு திகசி அவர்களைப் பார்க்கும் துடிப்பு போல் இப்போது காலுடுவெல்லைப் பார்க்கும் துடிப்பு தொற்றிக் கொண்டது. காலுடுவெல் 1893ஆம் ஆண்டில் மறைந்து 130 ஆண்டுகளாகின்றன. சற்றொப்ப 54 ஆண்டுகள் அவர் வாழ்ந்த இடையங்குடியைப் பார்த்தால் என் மனத்துக்கு அவரைப் பார்த்தது போலவே இருக்கும்.

22/06 இரவு எனக்கு வசதியான அறையெல்லாம் ஏற்பாடு செய்து தங்க வைத்து விட்டுப் புறப்பட்ட பிரிட்டோ “அண்ணா, ஏதும் தேவை இருந்தால் கேளுங்கள்” என்றார். இடையன்குடிதான் வேண்டும், எப்படியாவது இடையன்குடி பார்க்காமல் நெல்லையிலிருந்து புறப்பட மாட்டேன் என்று விடையளித்தேன். அவர் இனிப்பான ஒரு செய்தி சொன்னார்:

“நாளை நீங்கள் இடையன்குடி போகலாம், உறுதியாக! ரெவரெண்ட் (அருள்திரு) கிப்சன் உங்களை அழைத்துப் போவதாகச் சொல்லியிருக்கிறார். அவர் அப்பகுதியைச் சேர்ந்த சேகரகுரு. கூடுதலாக ஒன்று: நாளை குருக்களின் கூடுகையில் நீங்கள் காலுடுவெல் பற்றிச் சுருக்கமாகப் பேச வேண்டும் என்று கேட்டுள்ளார். அந்தக் கூட்டம் முடிந்தவுடன் அவருடனேயே நீங்கள் இடையன்குடி போகலாம்.”

ஊடகச் சந்திப்பு முடிந்தவுடன் பீட்டருடன் ஊசிக் கோபுரத் தேவாலயத்துக்கு விரைந்தேன். அருள்திரு கிப்புசன் (வயது 48) என்னை ஆர்வத்துடன் வரவேற்று அழைத்துப் போய் அந்தக் கூடுகையில் உட்கார வைத்தார். பேராயர் பருனபாசு உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். கழுத்து முதல் பாதம் வரைக்குமான வெண்ணிற நீண்ட அங்கி (CASSOCK) உடுத்தியிருந்தார். இடுப்பைச் சுற்றி இளஞ்சிவப்பு வண்ணப் பட்டை அணிந்திருந்தார். அவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அதே வெண்ணிற அங்கியில் இடுப்பைச் சுற்றி கருப்புக் கயிறு கட்டியிருந்தனர்.

அது பெரிய வழிபாட்டுக் கூடமாக இருக்க வேண்டும். பேராயர் பேசி முடித்த பின் என்னைக் காலுடுவெல் பற்றிச் சிறிது நேரம் பேச அழைத்தார். கிப்புசன் என்னை அறிமுகம் செய்து சில வார்த்தைகள் பேசினார்.

முன்பே கிப்புசன் என்னை அரை மணி நேரம் வரை பேசச் சொல்லியிருந்தார். அவ்வளவு நேரம் பேசலாமா? என்ன பேசலாம்? நெல்லையில் கிறித்துவ சமயத்தை நிறுவிய காலுடுவெல் பற்றி கிறித்துவ அருள் தந்தைகளிடமே பேசுவது எப்படி? இப்படிப் பல தயக்கங்களோடுதான் பேசத் தொடங்கினேன்.

“உங்களிடையே காலுடுவெல் பற்றிப் பேசுவது கொல்லன் தெருவில் ஊசி விற்பதைப் போன்றது” என்று சொல்லித் தொடங்கினேன்.

நம்முடைய நாடு வெப்ப மண்டலத்தில் இருக்கிறது. இங்கு பிறந்த நமக்கு இந்த வெயில் தாங்கவில்லை. மின் விசிறி இல்லாமல் உட்கார முடியவில்லை. குளிரி(ஏசி) வசதி தேவைப்படுகிறது. குளிர் மண்டலத்தில் பிறந்த காலுடுவெல் வெப்பம் தகிக்கும் செம்மண் படர்ந்த தேரிக்காட்டில் இடையன்குடியில் ஐம்பதாண்டுக்கு மேல் வாழ்ந்துள்ள செய்தி அவரது அருப்பணிப்பைக் காட்டுகிறது. நெல்லைச் சீமையையே அவர் தமது தாய்மண்ணாக மதித்துள்ளார். இந்த மண்ணையும் மக்களையும் அவர் போல் நேசித்த அயலார் யாரும் உண்டா?

தமிழ்நாட்டில் காலுடுவெல் பாதம் படாத இடமில்லை. கால்நடையாகவே தமிழ்நாடெங்கும் சுற்றியுள்ளார். தஞ்சைப் பெரிய கோயிலும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலும் அவரை வியப்பில் ஆழ்த்துகின்றன. அதை விடவும் தமிழ் மக்களின் பண்புகளைக் கண்டு வியக்கிறார்.

சமயப் பரப்பலுக்காகக் காலுடுவெல்லுக்கு முன் தமிழ்நாட்டுக்கு வந்த சில திருப்பணியாளர்கள் இந்நாட்டுக்கே உரித்தான வருண-சாதியமைப்பைக் கண்டு மிரட்சியுற்றார்கள். இயேசுவின் நிகர்மைச் செய்தியை இம்மண்ணில் ஊன்றுவதற்கு சாதி போடும் தடையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கில்லை. சாதியத்திடம் அவர்கள் சரணடைந்து விட்டார்கள். நொபிலி போன்றவர்கள் பார்ப்பனர்கள் போலவே உடுத்தி, பார்ப்பனர்களைப் போலவே நடந்து கொண்டார்கள்.

இராபருட்டு காலுடுவெல் இந்த வழியை ஏற்கவில்லை. தாம் பணியாற்ற வேண்டிய மக்களை அவர் சரியாகப் படித்தார். “திருநெல்வேலி சாணார்கள் ஒரு சித்திரம்” என்பதுதான் காலுடுவெல் எழுதிய முதல் நூல். 1849இல் ஆங்கிலத்தில் இந்நூல் வெளிவந்த போது அதைப் படிக்கும் அளவுக்குக் கல்வியறிவு பெற்ற நாடார் அல்லது சாணார் அநேகமாய் எவருமில்லை.

இன்று அதே நாடார் சமுதாயம் கல்வியில் வெகுவாக முன்னேறியிருக்கிறது, முன்னேறிய சைவ வேளாளர்களை விடவும் முன்னேறியிருக்கிறது. இதற்கு அடித்தளமிட்டவர் கால்டுவெல்தாம்.

அண்மையில் ஒரு முறை “காலுடுவெல் செய்த கலகம்” என்ற தலைப்பில் அரசியல் வகுப்பு எடுத்தேன். காலுடுவெல் மொழியியல் அல்லது மொழிநூல் துறையில் செய்த புரட்சி அறிவுலகில் பரவலாக அறியப்பட்ட ஒன்றுதான். அதற்கும் மேலே சமூகக் களத்திலும் அவர் கலகம் செய்தார்.

தம் பெயரையே எல்லிசன் என்று மாற்றிக் கொண்ட எல்லிசு தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகள் சமற்கிருதமாகிய வடமொழியைச் சார்ந்தவையல்ல என்று வேர்ச்சொல் ஆய்வு வழியில் மெய்ப்பித்தார். அவர் 41 அகவையில் மறைந்தார். எல்லிசின் பணியை காலுடுவெல் அறிந்தேற்கிறார்.

தமிழை முதற்பெரும் உறுப்பாகக் கொண்ட திராவிட மொழிக் குடும்பம் என்ற வரையறை கால்டுவெல் செய்ததே. திராவிட மொழிகள் தென்னிந்தியாவில் மட்டுமல்ல, மத்திய இந்தியாவிலும் வடமேற்கு இந்தியாவிலும் கூட வழக்கில் இருப்பதை அவர் மெய்ப்பித்தார். திராவிட மொழிகளைச் செப்பமுற்ற மொழிகள், செப்பமுறாத மொழிகள் (திருந்திய மொழிகள், திருந்தா மொழிகள்) என்று வகைப்படுத்திப் பட்டியலிட்டார். நீலமலைத் தோடர்கள் பேசுவதும் ஒரு திராவிட மொழிதான்.

காலுடுவெல் செய்த ஆய்வில் குறை காண்போர் உளர். அதனால் அவரது மதிப்பு குன்றி விடாது. அறிவியலில் குறைகண்டு குறைகண்டுதான் முன்னேற்றம் ஏற்படும். கலிலியோவிடம் குறைகண்டால்தான் நியூட்டன், நியூட்டனிடம் குறைகண்டால்தான் ஐன்சுடைன், அவரிடமும் குறைகண்டால்தான் இசுடீபன் ஆக்கிங்கு. மொழியியல் அல்லது மொழிநூல் எனபதும் ஓர் அறிவியல்தான்.

காலுடுவெல்லிடம் சில குறைகள் கண்ட மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அதேபோது காலுடுவெல் செய்த புரட்சியை ஏற்றுப் போற்றவும் செய்தார். தனித்தமிழியக்க வரலாறு குறித்துப் பாவாணர் சொல்வார்:

“தமிழின் தொன்மையை உலகிற்கறிவித்தவர் காலுடுவெல் பெருமகனார்; தனித்தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற்கலைஞர்; செடியாகத் தழையச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகளார்! நான் மரமாக வளர்த்து வருகிறேன்.”

கால்டுவெல் செய்தது ஊடுடைப்பு (breakthrough), அடிப்படையான முன்னேற்றம், புரட்சியமான மாற்றம். இது மொழித் துறையோடு நிற்கவில்லை. காலுடுவெல்லின் மொழியியல் முடிவுகளே திராவிட இயல், தமிழியல் என்ற சமூக-அரசியல் போக்குகளுக்கும் விதையிட்டது, அல்லது உரமிட்டது. மொழி வரலாற்றில் மட்டுமல்ல, சமூக அரசியல் வரலாற்றிலும் காலுடுவெல் பதித்த முத்திரை உறுதியானது, நிலையானது.

காலுடுவெல்லின் பெரும்படைப்பு (magnum opus) A COMPARATIVE GRAMMAR OF THE DRAVIDIAN OR SOUTH-INDIAN FAMILY OF LANGUAGES [திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் ஒப்பிலக்கணம்] என்ற நூல் 1856ஆம் ஆண்டு வெளிவந்தது. 1875ஆம் ஆண்டு இதன் திருந்திய இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. முதல் பதிப்பு வெளிவந்த பின் திராவிட மொழிகளின் இலக்கணம் குறித்து வந்த புதிய செய்திகள் திருந்திய இரண்டாம் பதிப்பை வெளியிட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தின. ஆனால் மூன்றாம் பதிப்பை வெளியிட அவர் இல்லாமற்போனார். காலுடுவெல் மறைந்த பின் மூன்றாம் பதிப்பைச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. மூன்றாம் பதிப்பில்தான் ‘அவர்கள்’ தங்கள் வேலையைக் காட்டினார்கள்.

இரண்டாம் பதிப்புக்கும் மூன்றாம் பதிப்புக்கும் பாரிய வேறுபாடுகள் இருந்தன. காலுடுவெல் எழுதிய பல பக்கங்கள் பதிப்பாசிரியர்களால் உள்நோக்கத்தோடு நீக்கபட்டிருப்பதை இன்றைய தமிழியல் மாணவர்கள் வெளிபடுத்தியுள்ளார்கள். அது என்ன உள்நோக்கம்? சாதிய நோய் பீடித்த உள்ளங்களுக்குக் கால்டுவெல்லின் அறச் சிந்தனைகள் உவப்பாய் இல்லை. காலுடுவெல்லைக் குழுதோண்டிப் புதைத்து வரலாற்றிலிருந்து காணாமல் அடிக்கும் முயற்சிதான் அது.

கால்டுவெல்லைக் கடுமையாக வெறுத்தவர்களில் ஒருவர் தமிழ்த் தாய் வாழ்த்து எழுதிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை என்பதைக் கேட்க உங்களுக்கு வியப்பாக இருக்கும். ஆம், திருவிதாங்கூரின் அடிமைமுறையையே ஆதரித்த வேளாளச் சிந்தனைக்கு கால்டுவெல்லின் அறச் சிந்தனை கசக்கத்தானே செய்யும்?

தமிழ்மொழியை வடமொழித் தளையிலிருந்தும் தமிழ் மண்ணைச் சாதிய இருளிலிருந்தும் மீட்டெடுக்க அயாரது பாடாற்றியவர் இராபருட்டு காலுடுவெல். அவரிடமிருந்து ஆய்வுக் கலையைப் பயின்றால் போதாது. ஒடுக்குண்ட மக்களிடம் அவர் காட்டிய நேசத்தை, எதிர்ப்புக்கஞ்சாத நெஞ்சுரத்தை நாமும் வரித்துக் கொள்ள வேண்டும்.

காலுடுவெல் வாழ்ந்து பணியாற்றிய காலத்தை விடவும் இது கடினமான காலம். மணிப்பூரிலிருந்து வரும் செய்திகள் இதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன. நாட்டை இருளில் தள்ள நடக்கும் முயற்சிகளை எதிர்த்து மக்களுக்கு விழிப்பூட்டும் பெரும்பணியில் இன்றே நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம்.

உரையை முடிக்கும் போது இப்படிச் சொன்னேன்:

“பேசியது போதும் என்று நினைக்கிறேன், காலுடுவெல் வாழ்ந்த மண்ணைப் பார்க்கும் அவசரத்தில் உள்ளேன். புறப்படுகிறேன். நன்றி வணக்கம்.”

அருள்திரு சேகரகுருக்கள் பலரும் என்னைக் கைகுலுக்கிப் பாராட்டினார்கள். சிலர் “காலுடுவெல் பற்றி நீங்கள் சொன்ன செய்திகள் இது வரை நாங்கள் அறியாதவை” என்றார்கள்.” கூடுகையில் கலந்து கொண்ட சேகரகுருமார்கள் 144 பேர் என்பதைப் பிறகு அருள்திரு கிப்புசன் சொன்னார்.

பகலுணவு முடித்துக் கொண்டு அருள்திரு கிப்புசன், அன்பர் நெல்லை பீட்டர் ஆகியோருடன் இடையன்குடி நோக்கிய பயணம் தொடங்கியது. இரு நாட்களாகவே எங்களை எல்லா இடத்துக்கும் அழைத்துச் சென்று கொண்டிருந்த ஓட்டுநர் பாலுவிடம் “இனி வேறு எங்கும் போக வேண்டா, நேராக இடையன்குடிதான்” என்றேன். ஆகட்டும் என்றார். கடைசியாக 1998ஆம் ஆண்டு மரணத் தண்டனை எதிர்ப்புப் பயணத்தின் போது இந்தப் பகுதியில் – கன்னியாகுமரி, இராதாபுரம், கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி – கிடைத்த பட்டறிவு பற்றிப் பேசிக் கொண்டே பயணத்தில் பறந்து கொண்டிருந்தோம். நல்ல வெளிச்சம் இருக்கும் போதே இடையன்குடி சென்றடையும் துடிப்பில் வழியில் எதற்காகவும் நில்லாது சென்றோம். (இடையன்குடிச் செய்திகள் ஒருநாள் இடைவேளைக்குப் பின் சொல்கிறேன்.)

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 232

வியாழன், 7 செப்டம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 203 : நெல்லையில் ஊடகச் சந்திப்பு

 
(தோழர் தியாகு எழுதுகிறார் 202 : எப்படிச் செத்தார் புளியங்குடி தங்கசாமி? – தொடர்ச்சி)

நெல்லையில் ஊடகச் சந்திப்பு

இனிய அன்பர்களே!

சாத்தான்குளத்துக்காகத்தான் நெல்லைப் பயணம் என்றாலும், பென்னிக்குசு-செயராசு நினைவேந்தல், சாத்தான்குளக் காவல்நிலையப் பார்வை ஆகியவற்றை முடித்துக் கொண்டு அதே நாள் மாலை தங்கசாமியின் காவல் சாவுக்கு (புளியங்குடி காவல்நிலையமா? பாளையங்கோட்டை நடுவண் சிறையா?) நீதிகோரிப் போராடப் புளியங்குடியும் செல்ல வேண்டியதாயிற்று.

மறுநாள் (23/06/2023) மதியம் 11 மணியளவில் நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடக சந்திப்புக்கு அன்பர் பீட்டர் ஏற்பாடு செய்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே நெல்லை செல்லும் போதெல்லாம் பீட்டர் ஊடகச் சந்திப்பு வைத்துக் கொள்வது வழக்கம்தான். அநேகமாய் எல்லா ஊடகங்களிலிருந்தும் செய்தியாளர்கள் வருவதும், நான் சொல்லும் கருத்துகள் மீது வினாக்கள் தொடுப்பதும், பொருத்தமாகச் செய்தி வெளியிடுவதும் கூட ஊக்கமளிப்பனவாக இருக்கும். இடையில் மகுடை(கொரோனா) பெருந்தொற்று காரணாமாக மூன்றாண்டுக்கு மேல் நெல்லை செல்லாத நிலையில் இந்த ஊடகச் சந்திப்பு பயனுள்ளதாக இருக்கும் என நம்பினேன். “தமிழ்நாட்டு அரசியல் போக்குகள்” என்று இந்த ஊடகச் சந்திப்புக்குத் தலைப்புக் கொடுத்திருந்தேன். சந்திப்பின் போது ஒரு சுருக்கமான செய்திக் குறிப்பும் ஊடகர்களுக்கு அச்சறிக்கையாகவும் புலனச் செய்தியாகவும் தரப்பட்டன.

ஊடகச் சந்திப்பின் போது இ.கு.ச.க.(எசுடிபிஐ) மாவட்டச் செயலாளர் எசு.எசு. கனி, வழக்கறிஞர் ஆரிஃப் பாட்சா, இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பீட்டர், சீர்மரபினர் உரிமைமீட்பு இயக்கத்தைச் சேர்ந்த அரிகர பாண்டியன் ஆகியோரும் உடனிருந்தனர்.

ஊடகச் சந்திப்பில் நான் தெரிவித்த கருத்துகளையும், என்னிடம் கேட்கப்பட்ட வினாகளுக்குச் சொன்ன விடைகளையும் ஈண்டு தொகுத்தளிக்கிறேன். –

தமிழ்நாட்டு அரசியல் போக்குகள்

1) தமிழ்நாட்டில் காவல்நிலையக் கொடுமைகள் முடிவில்லாத தொடர்கதையாக நீண்டு வருகின்றன. இவற்றை இல்லாமற்செய்யும் முயற்சிகளைத் தமிழக அரசு முழு விரைவுடன் செய்யவில்லை. சாத்தான்குளம் பென்னிக்குசு-செயராசு தொடங்கி புளியங்குடி தங்கசாமி வரை காவல்நிலையக் கொலைகள் நடந்துள்ளன.

2) அம்பாசமுத்திரம் இ.கா.ப.(ஐபிஎசு) அதிகாரி பல்பிடுங்கி பல்பீர்சிங்கு இதுவரை கைது செய்யப்படவில்லை. முதல் தகவல் அறிக்கை போட்ட பிறகும் கைது செய்யாமல் இருப்பது ஏன்?

3) உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் சைலேந்திர பாபுவின் 41 கட்டளைகளையும் பொதுவாகத் தமிழக காவல்நிலையங்கள் மதித்து நடப்பதில்லை. நேற்று சாத்தான்குளத்தில் நானே இதை நேரில் பட்டறிந்து கொண்டேன்.

4) தூத்துக்குடி செம்பு உருட்டு (சுடெருலைட்டு) துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா செகதீசன் அறிக்கையின் பரிந்துரைகள் இன்று வரை செயலாக்கப்படவில்லை. உடனடியாக அந்தப் பரிந்துரைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5) சாதி ஆணவக் குற்றங்களும் கொலைகளும் தொடர்ந்து நடப்பது தமிழ்நாட்டுக்கே தலைக்குனிவு ஆகும். ஆணவக் குற்றங்களைத் தடுக்கவும் தண்டிக்கவும் தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.

6) தமிழ்ச் சமூகத்தில் இன்றளவும் தீண்டாமைக் கொடுமைகள் நடந்து வருவது வெளிப்படையான உண்மை. அருப்புக்கோட்டை அருகே ஆதித்தமிழர்கள் (அருந்ததியர்கள்) தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகி வருவதாகத் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

7) காவல்துறைக்குள்ளேயே தீண்டாமையும் சாதி வன்மமும் நீடிக்கின்றன. சென்ற ஏப்பிரல் 14ஆம் நாள் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அம்பேத்துகருக்கு வணக்கம் செலுத்தக் கூடிய தணிந்தசாதி(தலித்து) மக்கள் மீது காவல்துறை நடத்திய தடியடி, பொய்வழக்குகள், நெஞ்சில் அம்பேத்துகர் உருவத்தை பச்சை குத்திய திமுக வட்டச் சார்பாளர் முருகன் மீது காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவை குறித்து அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

8) நீண்ட காலமாகச் சிறையில் வாடும் இசுலாமியக் கைதிகளை விடுதலை செய்வதாக மு.க. தாலின் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். பத்தாண்டுக்கு மேல் சிறையில் கழித்த அனைத்து ஆயுள் தண்டனைக் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.

9) தமிழக அரசு இந்தப் போக்குகளை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும். இல்லையேல் பாசக அரசவன்முறை(பாசிச) ஆபத்தை முறியடிக்க அதனால் இயலாமற்போகும். ஊழல் அரசியல்வாதிகளால் அரசவன்முறை(பாசிச) எதிர்ப்பில் உறுதியாக நிற்க முடியாது என்று சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

10) ச.எ.த.(ஊபா) போன்ற சட்டங்களைத் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) போன்ற இந்திய அடக்குமுறை ஏற்பாடுகள் குடியாட்சிய ஆற்றல்கள் மீதும் சிறுபான்மை மக்கள் மீதும் ஏவுவதைத் தமிழக அரசு எதிர்க்க வேண்டும்.

11) நா.தொ.ச.(ஆர்எசுஎசு) – பாசக மத வெறி ஆதிக்க வெறி அரசியல் எவ்வளவு தீங்கானது என்பதற்கு மணிப்பூர் சான்றாக உள்ளது. இப்படிப்பட்டவர்களுக்கு எதிராகத் தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

12) செந்தில் பாலாசி ஊழல் செய்திருப்பதாகத் திமுக சார்பில் முக தாலின்தான் குற்றஞ்சாட்டினார். அந்தக் குற்றச்சாட்டை இன்று வரை அவர் விலக்கிக் கொள்ளவில்லை. அவரைத் திமுகவில் சேர்த்துக் கொண்டதால் அவரது ஊழல் மீது மாநில அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. அவரை அமைச்சரும் ஆக்கிக் கொண்டார்கள். திமுகவை அச்சுறுத்த இது பாசக அரசுக்கு வாய்ப்பாகி விட்டது. இப்போதும் செந்தில் பாலாசி மீது இயல்பான சட்டங்களின் படி நடவடிக்கை எடுக்கலாம். பணப் பரிமாற்றத் தடைச் சட்டம் [PMLA] என்பது படுமோசமான கறுப்புச் சட்டம் ஆகும். இந்தச் சட்டத்தையும் காங்கிரசு தலைமையிலான, திமுக முதலான இந்திய அரசுதான் இயற்றியது. இந்தச் சட்டத்தையே திமுக எதிர்க்கிறதா? செந்தில் பாலாசி மீது பயன்படுத்தியதை மட்டும் எதிர்க்கிறதா? நாம் இந்தச் சட்டமே கூடாது என்கிறோம். இந்தச் சட்டம் இருக்கும் வரை செந்தில் பாலாசி வெளியே வருவதற்கு வாய்ப்பில்லை. பிணையிலும் கூட வர முடியாது. செந்தில் பாலாசி எவ்வளவு பெரிய ஊழல் குற்றவாளியானாலும், அவருக்குரித்தான மாந்த உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும்.


(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 231

புதன், 6 செப்டம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 202 : எப்படிச் செத்தார் புளியங்குடி தங்கசாமி?

 
(தோழர் தியாகு எழுதுகிறார் 201 : சாத்தான்குளம் பென்னிக்குசு செயராசு – தொடர்ச்சி)

எப்படிச் செத்தார் புளியங்குடி தங்கசாமி?

தென்காசி மாவட்டம் புளியங்குடி நடுக்கருப்பழகுத் தெருவைச் சேர்ந்த தங்கசாமி (த/பெ மாடசாமி) சென்ற 11.06.2023 அன்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றவர் அன்று இரவு வீடு திரும்பவில்லை.

அவர் வெளியூர் வேலைக்குச் செல்வதும், அங்கேயே தங்கி விடுவதும் வழக்கமே என்பதால் குடும்பத்தினர் – அம்மாவும், தம்பி ஈஸ்வரனும் – நண்பர்களும் பெரிதாக அலட்டிக் கொண்டார்களில்லை. தங்கசாமி மறு நாளும் வரவில்லை, அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பும் இல்லை. அவரது செல்பேசியும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தது.

கவலையுற்ற தாயும் தம்பியும் நண்பர்களும் தங்கசாமி வேலைக்குச் செல்லக் கூடிய இடங்களில் எல்லாம் தேட முற்பட்டார்கள். எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஒரு நாள், இரு நாள், மூன்று நாளாயிற்று.

நான்காம் நாள், 14/06 மாலை 5.30 மணியளவில் புளியங்குடி ஊர் நாட்டாமையைக் கூப்பிட்டனுப்பிய புளியங்குடி காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருட்டிணன், தங்கசாமி பற்றி விசாரிப்பது போல் விசாரித்து விட்டுக் கடைசியில் சொன்னார்: “தங்கசாமி பாளையங்கோட்டை மத்திய சிறையில் வைத்துச் செத்துப் போய் விட்டான்.”

குடும்பத்தினரும் ஊர் மக்களும் இச்செய்தி அறிந்து காவல் நிலையத்துக்குச் சென்றார்கள். ஆய்வாளர் பாலகிருட்டிணன் அவர்களிடம் சொன்னார்: “நாங்கள் இருசக்கர வாகனம் ஒன்றைப் பிடித்து வைத்திருந்தோம், அது தனக்குச் சொந்தம் என்று கேட்டு வாங்கிப் போக தங்கசாமி காவல் நிலையத்துக்கு வந்தான். நாங்கள் அவனைக் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்தோம். இன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் வைத்து அவன் இறந்து விட்டதாகத் தகவல் வந்துள்ளது. உடல் இப்போது திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளது.”

மறுநாள் 15/06 காலையில் தங்கசாமியின் தம்பி ஈசுவரன், உறவினர்கள் கணேசன், சிவராசு, கருப்பசாமி, அமிர்தராசு ஆகிய ஐவரும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைப் பிணவறையில் தங்கசாமியின் உடலைப் பார்த்தனர். உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டு, காணொளியும் நிலைப்படமும் எடுத்துக் கொண்டனர். அவர்கள் பிணவறையிலிருந்து வெளியே வந்த பின் பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் சதீசுகுமார் செல்பேசியைப் பிடுங்கிக் காணொளிப் பதிவுகளை அழித்து விட்டார். “ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று ஈசுவரன் கேட்ட போது உதவி ஆணையர் விடையே சொல்லாமல் கோபமாக முறைத்து விட்டுப் போய் விட்டார்.

தங்கசாமியின் இறப்பு பெருமாள்புரம் காவல் நிலையக் குற்ற எண் 255/2023இல் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொண்ட ஈசுவரன் சடலக் கூறாய்வு அறிக்கையும் கூறாய்வின் போது எடுத்த காணொளிப் பதிவும் வேண்டுமென்று கேட்டு அன்றே வழக்கறிஞர் உதவியோடு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விண்ணப்பித்தார். திருநெல்வேலி நீதித்துறை நடுவர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கும் மின்னஞ்சலில் விண்ணப்பிக்கப்பட்டது. அன்று மாலையே உடற்கூறாய்வு அறிக்கை தரப்பட்ட போதிலும், காணொளிப் பதிவுகள் தரப்படவில்லை.

தங்கசாமியின் சடலக் கூறாய்வு அறிக்கையின் படி அவரது உடலில் 7 காயங்கள் காணப்பட்டுள்ளன. இறப்புக்கு 3-4 நாள் முன்னதாக அந்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தக் காயங்கள் ஏற்படுவதற்கான வன்முறைத் தாக்குதல் புளியங்குடி காவல் நிலையத்தில் நடந்ததா? அல்லது பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் நடந்ததா? என்று உறுதியாகத் தெரியவில்லை. எது எப்படியானாலும் காவல் சித்திரவதையால்தான் அவர் உயிரிழந்தார் என்பதில் ஐயமில்லை. சட்டப் புறம்பான இந்தச் சித்திரவதை யாரால் எங்கே செய்யப்பட்டது என்பதை முறையான புலனாய்வில்தான் கண்டறிய முடியும்.

தங்ககசாமியைப் பிடித்த (கைது செய்த) புளியங்குடி காவல் நிலைய ஆய்வாளர் அதற்கான கைதுக் குறிப்பாணை வழங்கினாரா? குடும்பத்தாருக்குத் தகவல் கொடுக்கவில்லை. டிகே பாசு நெறிமுறைகள், சைலேந்திரபாபுவின் 41 கட்டளைகள் எதையாவது கடைபிடித்தரா? புளியங்குடி காவல் நிலையத்தில் கண்காணிப்புப் படக் கருவிகள் உள்ளனவா?

தங்கசாமியைக் காவலில் வைத்து(‘ரிமாண்டு’ செய்து) நீதித்துறைக் காவலுக்கு அனுப்பி வைத்த சிவகிரி நடுவர் அவரிடம் ஏதாவது கேட்டறிந்தாரா? அவரை ஏறெடுத்துப் பார்த்தாரா? தலைகுனிந்தபடி காவல் ஆணையில் ஒப்பமிட்டு அனுப்பி விட்டாரா?

பாளையங்கோட்டை மத்தியச் சிறை அதிகாரிகள் தங்கசாமியை சிறைக்குள் சேர்த்துக் கொண்ட போது அவரிடம் என்ன கேட்டார்கள்? அவரை மருத்துவ ஆய்வுக்கு அனுப்பினார்களா? சிறைக்குள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவமனைக்கு உடனே அனுப்பி விட்டதாகவும் சிறை அதிகாரிகள் சொல்கிறார்கள். அவர் இங்குக் கொண்டுவரப்படும் போதே பிணமாகத்தான் இருந்தார் என்று மருத்துவமனை அதிகாரிகள் சொல்கிறார்களாம். அப்படியானால் வரும் வழியில் உயிர் போய் விட்டதா? உண்மை தெரிய வேண்டும்.

தமிழ்நாட்டில் இனிக் காவல் கொட்டடிச் சாவே நிகழாது என்று உறுதி கொடுத்த முதலமைச்சர் மு.க. தாலினுக்குப் புளியங்குடி தங்கசாமியின் சாவு பற்றித் தெரியுமா?

தங்கசாமி தணிந்தசாதி(தலித்து) என்பதால் குற்றவாளிகள் மீது ப.சா.,ப.இ, (எசுசி, எசுடி) வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளான காவல் அதிகாரிகளையும் சிறை அதிகாரிகளையும் சிறைப்படுத்த வேண்டும். நம்பகமான விசாரணை வேண்டும். தங்கசாமி குடும்பத்தார்க்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளுக்காகப் புளியங்குடியில் ம.பொ.க.(சிபிஎம்), இ.பொ.க.(மா.இலெ.)(சிபிஐ(எம்எல்)), விசிக, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்த் தேசிய அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து போராடி வருகின்றன. காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நானும் கலந்து கொண்டு விரிவாகப் பேசினேன்.

இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே மாவட்ட ஆட்சியர் மறைந்த தங்கசாமியின் தாயாரை அழைத்துப் போய் உடலை வாங்கிக் கொள்ளச் சொல்லிப் பேரம் செய்து கொண்டிருந்தார். அந்தப் பகுதியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருவரும் இந்தப் பேரத்தில் மும்முரமாய் ஈடுபட்டிருப்பதாக அறிந்தேன்.

புளியங்குடியில் நடந்தது என்ன? நடக்க வேண்டியது என்ன? எல்லாவற்றையும் சாத்தான்குளத்திலிருந்து புளியங்குடிக்கு நீண்ட சாலைப் பயணத்தின் போது எனக்கு விளக்கிச் சொன்னவர் வழக்கறிஞர் மாடசாமி. தமிழ்நாட்டைக் காவல் சித்திரவதை இல்லாத தேசமாக்கும் முயற்சியில் தோழர் மாடசாமி போன்றவர்களின் உழைப்பு மகத்தானது. நமக்கு ஊருக்கு ஊர் மாடசாமிகள் தேவை.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 2
30

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 201 : சாத்தான்குளம் பென்னிக்குசு செயராசு

 
(தோழர் தியாகு எழுதுகிறார் 200 : மோதி வாயில் கொழுக்கட்டை!-தொடர்ச்சி)

சாத்தான்குளம் பென்னிக்குசு செயராசு


22/06/2023 அன்று சாத்தான்குளம் பென்னிக்குசு செயராசு மூன்றாம் ஆண்டு நினைவுநாள். ஏற்கெனவே உங்களுக்குச் சொன்ன படி, பென்னிக்குசு செயராசு குடும்பத்தினர் நான் அந்த நாளில் சாத்தான்குளத்தில் தங்களோடு இருக்க வேண்டும் என்று விரும்புவதாகச் சில நாள் முன்பு என்றி திபேன் வாயிலாக அறிந்தேன்.

செயராசின் மருமகன் அகட்டினும் இதை உறுதி செய்த போது, எப்படியும் போய் விடுவது என்று முடிவெடுத்தேன். அதே ஊரைச் சேர்ந்த நண்பர் இசக்கிமுத்து அழைத்து என் வருகையை உறுதி செய்து கொண்டார். அந்தப் பகுதியைச் சேர்ந்தவரான ததேவிஇ அமைப்புச் செயலாளர் தோழர் மகிழனையும் என்னோடு அழைத்துச் செல்ல விரும்பினேன். அன்பர் நலங்கிள்ளி உடனே தொடர்வண்டிப் பயணச்சீட்டுக்கு ஆவன செய்தார்.

மூன்றாண்டுகளாக அந்தக் குடும்பத்தினரைப் பார்த்து ஆறுதல் சொல்லத் தவறி விட்டேன் என்ற குற்ற உணர்விலிருந்து விடுபடப் போகும் மாறுதலான உணர்வோடு பயணத்துக்கு அணியமானேன்.

கடைசி நேரத்தில் சுருதிக்கு உடல்நலம் குன்றவே, மகிழன் என்னோடு வர முடியாத நிலையில் நான் மட்டும் 21/06 இரவு தாம்பரத்தில் வண்டியேறி 22/06 விடியற்காலையில் நெல்லை போய்ச் சேர்ந்தேன். என்னை அழைத்துப் போக அன்பர் பிரிட்டோ வந்திருந்தார்.

பிரிட்டோவும் அன்பர் நெல்லை பீட்டரும் உடன்வர சாத்தான்குளத்துக்குப் புறப்பட்டேன். வழியிலேயே பிரிட்டோ சொன்ன தகவல்: தென்காசி மாவட்டம் புளியங்குடியில் ஒரு காவல் சாவு நிகழ்ந்துள்ளது. அதற்கு நீதி கோரிப் போராட்டம் நடந்து வருகிறது.

“இன்று மாலை புளியங்குடியில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று போராட்டத்தில் முன்னுக்கு நிற்கும் மா.பொ.க.(சிபிஎம்) கட்சியினர் விரும்புகின்றனர். நீங்கள் சாத்தான்குளம் வருவது தெரிந்து அழைக்கின்றனர்” என்றார். போகலாம், அதற்குமுன் விவரம் முழுக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றேன்.

அடுத்து நான் ஒரு கோரிக்கை வைத்தேன். காலுடுவெல் வாழ்ந்த இடையன்குடிக்குப் போக வேண்டும், இன்றோ நாளையோ போகலாம்.

இடையிடையே சாத்தான்குளத்திலிருந்து இசக்கிமுத்து அழைத்துக் கொண்டே இருந்தார். நாங்கள் போய்ச் சேரும் போதே சாத்தான்குளம் கடைத்தெரு பகுதியில் பென்னிக்குசு செயராசு மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தொடங்கியிருந்தது. சுப. உதயகுமார், பேராசிரியர் பாத்திமா முதலான பலரும் வெளியூர்களிலிருந்து வந்திருந்தனர் உள்ளூர் மக்கள் திரளாகக் கூடியிருந்தனர். அவர்களிடையே வணிகர்களும் அனைத்துக் கட்சியினரும் கலந்திருப்பதை உணர முடிந்தது.

பென்னிக்குசின் அக்காள் பெருசிசு நின்ற படியே நிகழ்ச்சியைக் கவனித்துக் கொண்டும், வலையொளிக்காரர்களுக்குப் பேட்டியளித்துக் கொண்டும் இருந்தார். நீண்ட நேரம் கழித்தும் அவர் நின்று கொண்டே இருப்பதைப் பார்த்து நான் அவரை உட்காரச் சொல்லி சைகை செய்தேன், அவர் மறுத்த போதும் விடாமல் வலியுறுத்தி உட்கார வைத்தேன்.

என்னைப் பேச அழைத்த போது பென்னிக்குசு செயராசு படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி மெழுகுவத்திச் சுடரேற்றிய பின் பேசினேன். மூன்றாண்டு முன்பு சாத்தான்குளம் கொடுமை தமிழ்நாட்டில் ஏற்படுத்திய அதிர்வுகளை நினைவுகூர்ந்து, பென்னிக்குசு செயராசு குருதித் துளிகளிலிருந்து விளைந்ததே காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் என்று அறிவித்தேன்.

கூட்டியக்கத்தின் இப்போதைய பணிகளை விளக்கி விட்டு, தமிழ்நாட்டில் காவல் சித்திரவதைத் தடுப்புச் சட்டம் தேவை என்ற கருத்தை வலியுறுத்தினேன்.

எனக்கு முன் பேசிய அன்பர் பிரிட்டோ காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் ஒரு செயல்திட்டத்தை அறிவித்தார். காவல் நிலையங்களை நேரில் பார்வையிட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி கண்காணிப்புப் படக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளனவா? காவல் நிலைய முகப்பில் அது பற்றிய அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளதா? என்பதைச் சரிபார்ப்பதுதான் அது.

“இன்று இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் அண்ணன் தியாகு தலைமையில் நேராகச் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்குச் செல்வோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சுருக்கத்தைத் தமிழில் நூல் வடிவில் வெளியிட்டுள்ளோம். அதை அந்த அதிகாரிகள் கையில் ஒப்படைப்போம். முறையாகக் கண்காணிப்புப் படக் கருவிகள் பொருத்தியுள்ளார்களா என்று பார்த்து விட்டு வருவோம்” என்று பிரிட்டோ சொல்லி விட்டார். நிகழ்ச்சி முடிந்த பின் நான், பிரிட்டோ, சுப. உதயகுமார், பாத்திமா, வழக்கறிஞர் மாடசாமி ஆகியோர் காவல் நிலையத்துக்குப் புறப்படத் திட்டமிட்டோம். பென்னிக்குசு செயராசு படத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினர் மாலை அணிவிக்க வர, நாங்கள் புறப்படுவது தாமதமாயிற்று.

இறுதியில் நாங்கள் கூட்டமாகப் புறப்பட்ட போது காவல்துறை ஆய்வாளரும் மற்றக் காவலர்களும் எங்களை வழிமறித்தனர். “இன்றைய நிகழ்ச்சியை இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள், மற்றதைப் பிறகு பார்க்கலாம்” என்றார் ஆய்வாளர். நடந்து முடிந்த நினைவேந்தல் நிகழ்ச்சி வேறு, நாங்கள் காவல் நிலையத்துக்கு வரும் திட்டம் வேறு என்பதை அவருக்குப் புரிய வைக்கவே முடியவில்லை.
“நாங்கள் கூட்டமாக வரவில்லை, மூன்று நான்கு பேர் மட்டும் வருகிறோம்” என்று பேசிப் பார்த்தோம். முடியவே முடியாது என்றார். “காவல் நிலையத்தைப் பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு. உங்களால் எங்களைத் தடுக்க முடியாது” என்று கண்டிப்பாகக் கூறி விட்டு நடக்கத் தொடங்கி விட்டேன்.

நாங்கள் நடந்து போய்ச் சேருவதற்குள் காவல் நிலையத்தில் ஒரு படையையே குவித்து விட்டார்கள். நாங்களும் பின்னடிப்பதாக இல்லை. கடுமையான வாக்குவாதம் நடந்தது. இறுதியில் துணைக்கண்காணிப்பாளர் (பெயர்: அருள்) மட்டும் எங்களைத் தனது அலுவலகத்துக்குள் அழைத்துப் போய் உட்கார வைத்துப் பேசினார். அந்த அலுவலகத்தில் வெளியே அறிவிப்பும் இல்லை, உள்ளே ஒரு கண்காணிப்புப் படக் கருவியும் கூட இல்லை என்பதைக் குறித்துக் கொண்டோம். எங்கள் பணி ஓரளவு முடிந்தது.

ஆனால் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் எங்களைக் காவல் நிலையத்துக்குள் விடவே மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார். அவர் சொன்ன ஒரு செய்தி பொருள் பொதிந்தது:

“நாங்கள் யாரையும் அடிக்கறதில்லை ஐயா! அடித்துவிட்டு யார் சிறைக்குப் போவது?”

அவரது இந்தச் சலிப்புத் தொனி… சிக்கல் ஏதுமில்லாமல் கைதியை அடிக்கும் தடையிலா உரிமைக்காக அவர் ஏங்குவதன் வெளிப்பாடுதான்!

வெளியே வந்து ஊடகங்களிடம் நடந்ததைச் சொல்லி முடித்து, பென்னிக்குசு செயராசு இல்லம் சென்று உணவருந்தி விட்டு அம்மா உள்ளிட்ட குடும்பத்தினரிடம் ஆறுதல் தந்து விடை பெற்று நெல்லை நோக்கிப் புறப்பட்டோம்.

காலுடுவெல்லின் இடையங்குடி செல்ல இனி நேரமில்லை. நெல்லை சென்று புளியங்குடி விரைய வேண்டும். புளியங்குடி காவல் நிலையத்தில் தங்கச்சாமியின் உயிரிழப்புக்கு நீதி கேட்கும் ஆர்ப்பாட்டம்! பென்னிக்குசு செயராசு மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் ஒரு பக்கம், தங்கச்சாமியின் காவல் சாவுக்கு நீதிகோரும் போராட்டம் மறுபக்கம்! இந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு இந்த வகையில் மாறவே இல்லையா?

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 22
9