சனி, 15 ஜூன், 2019

பூம்புகார் அவலநிலை – க.தமிழமல்லன்பூம்புகார் அவலநிலை

1975இல் தமிழக முதல்வராக இருந்த இலக்கியப்பேராசான் கலைஞர் தம் கற்பனை வளத்தால் சிலப்பதிகாரம் என்னும் ஒப்பற்ற இலக்கியத்திற்கு உயர்வாழ்வு அளித்தார். சிலப்பதிகாரக் கதைக்காட்சிகளை நுட்பம் மிக்க சிற்பப் பலகைகளாக உருவாக்கினார். சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட எழுநிலைமாடத்தைப் பூம்புகாரில்  கட்டி அதில் மக்கள் பார்த்து மகிழுமாறு பதிக்கச்செய்தார். அவற்றை ஒருமுறை பார்த்தாலே சிலப்பதிகாரத்தைப்  படித்த எண்ணம் நமக்குத் தோன்றும்.மிக அழகான கண்ணகி, மாதவி  சிலைகளையும் அங்கு நிறுவச் செய்தார். மக்கள் அவர்களை நேரில் பார்க்கும் தோற்றத்தையே அச்சிலைகள் உண்டாக்கும்.
ஏறத்தாழ 34 குறுக்கம் (ஏக்கர்) பரப்பளவில் அந்தச் சிலப்பதிகாரக் கலைக்கூடம் அமைக்கப் பட்டது. அங்குச் செல்லும் சாலையின் தொடக்கத்திலிருந்தே கரிகாலன் தோரண வாயில், இளங்கோஅடிகள் தோரணவாயில் போன்ற அழகான வாயில்களை அமைத்தது அன்றைய கலைஞர் அரசு. அங்கே கலையரங்கம் பாவைமன்றம்,நெடுங்கல் மன்றம் போன்ற மன்றங் களை அமைத்து உண்மையான பழங்காலப் பூம்புகாரைப் பார்ப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது அன்றைய அரசு. எந்த நாட்டிலும் ஓர் இலக்கியத்திற்கு இவ்வளவு உயர்மதிப்பு அளிக்கப்பட்டதாகச் சான்று இல்லை.
மக்கள் மனங்கவரும் சுற்றுலா, பொழுதுபோக்கு நல்லிடமாக அதைக் கலைஞர் உருவாக்கி யிருந்தார்.
இன்று அதன் நிலை மிகவும் அருவருப்பாக ஆகிவிட்டது.
1.எழுநிலை மாடத்தில் இருந்த மின்இணைப்பு உடைக்கப்பட்டுக் கிடக்கிறது. விளக்கு எரிய வாய்ப்பில்லை. இருட்டாக இருப்பதால் சரியாகப் பார்க்க இயலவில்லை.
 2“.தொடாமல் பார்க்கவும்” என்னும் அறிவிப்போடு இரண்டு பேழைகள் இருக்கின்றன. அவற்றில் பழங்கால இசைக்கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் உள்ள சில பொருள்கள் உடைக்கப்பட்டுள்ளன.அந்த நிலைப்பேழைகள் திறந்தே கிடக்கின்றன.
3.அங்கே அழகிய வேலைப்பாடமைந்த கண்ணகிசிலையும் மாதவிசிலையும்  உள்ளே திறந்த அரங்கில் கண்ணாடிக் கதவால் பூட்டப்பட்டுக் கிடக்கின்றன. அச்சிலைகள் இருக்குமிடத்தில் புதர் மண்டிக்கிடக்கிறது.
4.வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு சட்டைபோடாமல் வாயிலுக்கு வெளியே கட்டைமேல் வழிப்போக்கர் போல அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் ஐந்து உருவா கொடுத்துவாங்கிய நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே அனுப்புகிறார். அவரிடம் அவலநிலை பற்றிக் கேட்டது தவறாகி விட்டது. என்னை ஒன்றும் செய்யமுடியாது யாரிடம் வேண்டுமானாலும் சொல்….என்று சொல்கிறார்.
5.திறப்புவிழாக் கல்வெட்டு ஒன்றும் கண்ணில் படவில்லை.
6.ஆனால் சற்றுத் தொலைவில் கடலையொட்டி அமைந்துள்ள நெடுங்கல் மன்றத்துக்கு எதிரில் ஒரு கல்வெட்டு சிதைந்து போய்க்கிடக்கிறது. அதில் திறந்த ஆண்டு அதைத் திறந்தவர் பெயர் கள் இருக்கின்றன. மன்றத்தைப் பார்ப்பவர் முயன்றால் தான் தேடிப்பார்க்க முடியும்.
அந்த நெடுங்கல் மன்றம் மிகஅழகானது. அதைச் சுற்றிலும் பெரிய வட்டமான தரை அமைக்கப் பட்டுள்ளது. ஆனால் அத்தரை இப்போது மண் தரையாக மாறிவிட்டது.
7.நெடுங்கல் மன்றத்தின் துாண்கள் உடைந்துபோய்க் கிடக்கின்றன. சுற்றுலாப்பயணிகளின் மண்டைமேல் அது விழுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அப்படி விழுந்தால் ஒருவேளை விடிவுபிறக்குமோ என்னவோ?  நாம் பார்க்கும் போது காதலன் காதலி ஆகியோர்  திகைப்புடன் நின்று நெளிந்தனர்.நெடுங்கல்மன்றத்தின் எதிர்ப்பக்கத்தில் ஒருபெரிய கட்டடம் இருக்கிறது. பாழடைந்து  இடிந்துபோய்க் கிடக்கிறது. அங்குச் சில அறைகள் இருக்கின்றன. மேலே போக மாடிப்படி அமைத்திருக்கிறார்கள். எல்லாம் பாழடைந்த கிணறு போலக் கிடக்கின்றன.
8.அங்கு ஐந்தாறு சிறுகட்டடங்கள் தோப்புக்குள் இருக்கின்றன. அவை முத்துச்சிப்பி போல அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவை அனைத்தும் உடைந்து போய் காரை பெயர்ந்த நிலை யில் அருகில் போக முடியாத அளவுக்கு மோசமாக இருக்கின்றன.
9.கலைக்கூடத்தின் எதிரில் இருப்பது பாவை மன்றம். அது ஒரு தோப்பு. அங்கே சுற்றுலாக் குழந்தைகள் விளையாடச் சறுக்குமரம் போன்றவை இருக்கின்றன. அங்குள்ள பாவை மன்றம் உயரமாகவும் வட்ட வடிவிலும் மிக அழகாக அமைக்கப்பட்டிருந்தது. எட்டு அழகிய பெண் களின் சிலைகள் சுவர்களில் புடைப்புச் சிற்பங்களாகப் பெரிதாக அமைக்கப்பட்டுள்ளன.. திருக்குறள் காமத்துப்பாலின் சில குறட்பாக்களுக்கு விளக்கமாக அச்சிலைகள் அமைந்துள்ளன. ஆனால் அவை குப்பைத் தொட்டிக்குள் இருப்பதுபோல் இப்போது காட்சியளிக்கின்றன. பெருக்கித் துப்புரவு செய்து பலஆண்டுகள் ஆகியிருக்கும் போலும். பக்கத்திலும் சுற்றிலும் ஒரே குப்பைகள். உணவை உண்டு மக்கள் எறிந்த பாக்குத் தட்டுகளும் தாள்தட்டுகளும் குப்பையாய்க் குவிந்துள்ளன.அவற்றைப் பார்க்கும் போது மனம் குமுறுகிறது. இலக்கிய ஆர்வலர்களுக்கும் பொதுமக்களுக்கும் செய்யும் ஏமாற்றாக இந்நிலையை உணரவேண்டும். கும்பகோணம், காரைக்கால், தாராசுரம் போன்ற சிறப்பான சுற்றுலா இடங்களைப் பார்ப்பவர்கள் ஆர்வத்தோடு இங்கு வந்து ஏமாற்றத்தைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள்.
கலைக்கூடத்தைப் பார்ப்பதற்கு நுழைவுக் கட்டணம்வேறு வாங்குகிறார்கள்.  சீட்டில் தமிழைக் காணவில்லை ஆங்கிலத்தில் மட்டுமே அந்த நுழைவுச்சீட்டு இருக்கிறது. அதில்  மீண்டும் வருக என்று அச்சிட்டு வைத்திருக்கிறார்கள். பாவைமன்ற முகப்பில் சீட்டு கொடுக்கும் ஒரே ஒர் ஆள் தன் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். கேட்டால் சுற்றுலா அலுவலகத்தில் கேட்கச் சொன்னார்.
அவர் சொன்னபடி அங்கே சென்றோம். அங்கே மின்சாரம் இருந்தது. மூன்றுபேர் அங்கே இருந்தனர். சுற்றுலா அலுவலர் மாதவன் நம்மைப் பார்த்ததும் விரைந்து சட்டையைப் போட்டுக்கொண்டார். அவரிடம் பூம்புகார் கலைக்கூடத்தைப் பற்றிய விளக்கப் புத்தகம் கேட்டோம் தயங்கியபடியே கொடுப்பதாகச் சொன்ன அவர் கடைசிவரை கொடுக்க வில்லை. சிரிப்பைத்தான் கொடுத்தார்.
“ஆட்கள் போடவில்லைங்க, துப்புரவு செய்தாலும் மக்கள் ஒத்துழைப்பு இல்லைங்க ” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். மின்சாரம் இருக்குமே என்றெல்லாம் “உண்மை ”யைச் சொல்லிக்கொண்டிருந்தார். கண்ணகி மாதவி சிலைக்கருகில் பாம்பு இருப்பதாகச் சொல்கிறார்கள் அதனால் பூட்டிவைத்திருக்கிறோம் என்று தான் பார்க்காத பாம்பின்மேல் குற்றம் சொன்னார். 34ஏக்கரில் உள்ள இப்பரப்பைப் பராமரித்தல் இயலவில்லை என்றார். “கல்லுாரிமாணவர்களை அழைத்துவந்து நாங்கள் துப்புரவு செய்யலாமா?” என்று கேட்ட தற்குச் சரி என்று சொன்னார்.
பூம்புகாரை நன்றாக வைத்திருந்தால் நல்ல வருவாயும் கிடைக்கும். பொதுமக்களுக்கு நல்ல இடத்துக்கு வந்து போன மன நிறைவும் இருக்கும். பொறுப்புள்ள முதல்வரும் அமைச்சரும் அதிகாரிகளும் இதைக் கவனிப்பார்களா? பூம்புகார் மயிலாடுதுறை வட்டங்களில் உள்ள பொதுநல ஆர்வலர்கள் கவனித்து நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும். பொது மக்க ளிடம் பேசும் போது, “கலைஞரிடம் உள்ள வெறுப்பை இன்னும் மாற்றிக்கொள்ளாமல் இருக்கிறார்கள். இருள் விலக ஒருநாள் வரவேண்டும்” என்று கூறினர்.


அளவளாவல் – கவிதை உரையாடல்

அகரமுதல


ஆனி 01, 2050 ஞாயிறு 16.06.2019
மாலை 5.30

குவிகம் இல்லம்

ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,

24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,

சென்னை 600 017

தொடர்பிற்கு: சதுர்புசன் 98400 96329; கிருபானந்தன் 97910 69435

புதன், 12 ஜூன், 2019

முனைவர் இரா.மோகன் பிரியா விடை பெற்றார்!


முனைவர் இரா.மோகன்பிரியா விடை பெற்றார்!

எழுத்தாளர், சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர், கவிஞர், தமிழ்த் தேனீ பேராசிரியர் முனைவர் இரா.மோகன் இன்று(வைகாசி 29,2050 / 12.06.2019)  காலை மாரடைப்பால் மரணமுற்றார். நேற்று நெஞ்சகநோய்ப் பாதிப்பால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் இன்று திரும்பவில்லை.
 ஆய்வு மாணாக்கர்களுக்கு வழிகாட்டியாகவும் நூல்களுக்கு அணிந்துரை, திறனாய்வு, மதிப்புரை வழங்கிப் படைப்பாளர்களை ஊக்கப்படுத்துபவராகவும் நகைச்சுவை மன்றத்தில் பங்கேற்று நகைச்சுவை வாணர்களின் ஊக்குநராகவும் புன்னகையுடனும் பண்புடனும் அனைவருடனும் பழகும் தோழராகவும் சிறந்து விளங்கிய முனைவர் இரா.மோகன் தமிலுகில் இருந்து பிரியா விடை பெற்றார்.
செளராட்டிரக் குமுகத்தில் தலைசிறந்த தமிழறிஞராகவும் தகைமையாளராகவும் புகழுடன் விளங்கிய முனைவர் இரா.மோகன் புகழடல் எய்தினார்.
தமிழுலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டு அவர் அகன்று விட்டார்,
ஒருசாலை மாணாக்கராகத் கல்லூரிக் காலத்திலிருந்து தோழமை பூண்டிருந்த இனிய நண்பர் மறைவு அதிர்ச்சியாக உள்ளது. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். உற்றார் உறவினர் துன்பத்தில் அ்கரமுதல மின்னிதழும் இலக்குவனார் இலக்கிய இணையமும் தமிழ்க்காப்புக்கழகமும் பங்கேற்கின்றன.
நாளை மறுநாள் இறுதிச்சடங்கு நிகழ உள்ளது.  
துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

செவ்வாய், 11 ஜூன், 2019

கருத்துக் கதிர்கள் 09-11: இலக்குவனார் திருவள்ளுவன் [09. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பங்களிப்பு தேவை. 10. இளைய உறுப்பினருக்கு அமைச்சர் பதவி தருவதில் தவறில்லை. 11. இராசன் செல்லப்பாவின் குரல் சரியே! ]

கருத்துக் கதிர்கள் 09-11 
[09. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பங்களிப்பு தேவை. 10. இளைய உறுப்பினருக்கு அமைச்சர் பதவி தருவதில் தவறில்லை. 11. இராசன் செல்லப்பாவின் குரல் சரியே! ]
09. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பங்களிப்பு தேவை.
 பா.ச.க.வின் கடந்த ஆட்சியிலும் அமைச்சரவையில் தமிழர்களுக்கு உரிய முதன்மை தரவில்லை. இப்பொழுது அடியோடு பங்களிப்பு தரவில்லை. பிற மாநிலத்தைச் சேர்ந்த தமிழர் இருவர் அமைச்சரவையில் இருப்பது மகிழ்ச்சிதான். எனினும் இவர்களைத் தமிழ்நாட்டின் சார்பாளர்களாகச் சிறிதும் கருத இயலாது.  இன்றைய நிதியமைச்சர் முன்பு பதவி உறுமொழியைக் கன்னடத்தில் எடுத்துவிட்டுத் தன்னைக் கன்னடப் பெண்ணாகத் தெரிவித்த அவர் மொழி யுணர்வைப் பாராட்ட வேண்டும். எனினும் அவரைத் தமிழ்நாட்டின் பா.ச.க.வில் கருத்து செலுத்தக் கூடியவராகக் கருதலாமே தவிர, தமிழ்நாட்டு நலனில் கருத்து செலுத்த வாய்ப்புள்ளவராகக் கருத முடியாது. வெளியுறவு அமைச்சர் தமிழ்நாட்டு மக்களின் நலனில் கருத்து செலுத்த போதிய நேரம் ஒதுக்க வாய்ப்புள்ளவராகக் கருத இயலாது. தமிழ்நாட்டு மக்கள் எளிதில் தொடர்பு கொள்வதற்குத் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே அமைச்சர்களாக இருக்க வேண்டும். எனவே, பா.ச.க.அமைச்சரவையில் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குப் பங்களிக்க வேண்டுகிறோம்.
10.  இளைய உறுப்பினருக்கு அமைச்சர் பதவி தருவதில் தவறில்லை.
பா.ச.க. கூட்டணி அமைத்துப்போட்டியிட்டாலும் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. எனவே, கூட்டணி அமைச்சரவைதான் அமைக்க வேண்டும் என்ற தேவையில்லை. எனினும் கூட்டணி அறத்தை மதித்தும் வருங்காலக் கூட்டணியின் நிலைப்புத் தன்மையைக் கருதியும் கூட்டணிக் கட்சியினரையும் அமைச்சரவையில் சேர்த்துள்ளது. அவ்வாறு சேர்க்கும் பொழுது ஒரு கட்சிக்கு ஒரே ஓர் உறுப்பினர் என்ற அளவுகோலை வைத்துள்ளது. இதனை ஏற்காததால் ஐக்கிய சனதா தளம் அமைச்சரவையில் சேரவில்லை. தமிழ்நாட்டில் பா.ச.க.வின்  பதவி ஒதுக்கீட்டுக் கொள்கைக்கிணங்க ஓர் அமைச்சர் பதவியை மட்டும் அ.தி.மு.விற்குத் தர முன் வந்ததாகச் செய்திகள் வந்தன. மாநிலங்களவையில் மூத்த உறுப்பினர்கள் இருக்கும் பொழுது இளையவருக்குக் கொடுப்பதா என எதிர்ப்பு வந்ததால் யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்கின்றனர்.
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் இரவீந்திரநாத்துகுமார் பன்னீர்செல்வம்அ.தி.மு.க.வின் ஒரே உறுப்பினராவார். அவருக்கு மத்திய அமைச்சர் பதவிதருவதில் தவறில்லை. யாரும் அமைச்சராகப் பிறப்தில்லை. முதன் முதலில் அமைச்சர் பொறுப்பேற்ற பின்பு பட்டறிவு பெற்றுச் சிறப்பாகச் செயல் படுவோர் பலராவர்.
தோல் இருக்கப் பழம் விழுங்கிகளான மூத்தவர்கள் இருக்கும் பொழுது இளையவருக்குக் கொடுப்பதில் தப்பில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற வழி  பிற அரசியல்வாதிகளும் கடைப்பிடிக்கும் வழிதான். எனினும் அமைச்சர் ஆனால், மூத்தவர்கள் கண்கொத்திப் பாம்பாக இருந்து தவறு நேராதிருக்க உதவவும் வாய்ப்புள்ளது. அதே நேரம் தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிராகச்  செயல்பட்டுத் தமிழகநலன்களைப் புறக்கணிக்கும் பா.ச.க.  அ.தி.மு.க.விற்கு இரண்டு அமைச்சர் பதவிகளை வழங்குவதே நல்லது.
11. இராசன் செல்லப்பாவின் குரல் சரியே!
 அ.தி.மு.க.விற்கு வலுவான ஒற்றைத் தலைமை வேண்டும் என அ.தி.மு.க.வின் மதுரை வடக்குச.ம.உ. இராசன் செல்லப்பா குரல் கொடுத்துள்ளார். இப்பொழுது அ.தி.மு.க.வில் இருப்பது கூட்டுத் தலைமை அல்ல.
தலைவர், செயலர் இணைந்து ஒப்பமிடுவது முறைதான். ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து ஒப்பமிட வேண்டிய தேவையில்லை. இணைந்து கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். சரிதான். ஆனால், ஒருங்கிணைப்பாளர் தனித்தே அறிக்கைகள் முதலானவற்றில் ஒப்பமிடுவதே முறையாகும். அரசு நிகழ்ச்சிகளிலும் இணந்தே இருப்பதுபோன்ற தோற்றம் காட்ட முயல்வதும் தேவையில்லை. ஒருங்கிணைப்பாளரே ஒற்றைத் தலைமையாகச் செயல்படலாம். அல்லது கூட்டுத் தலைமை வேண்டுமென்றால்  தலைமைக் குழு எனக் குறிப்பிட்டு இருவரும் இணைந்து செயல்படலாம். அல்லது இராசன் செல்லப்பா வேண்டியவாறு வலுவான ஒற்றைத் தலைமையை ஏற்படுத்திக் கட்சியை வலுவாக்கலாம். அதே நேரம் இம்முயற்சியால் கட்சியில் மேலும் பிளவு வராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இலக்குவனார் திருவள்ளுவன்

வந்தவாசியில் முப்பெரு விழா

அகரமுதல

வந்தவாசியில் முப்பெரு விழா


வந்தவாசி அரசுக் கிளை  நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நேற்று (வைகாசி 27, 2050/  சூன் 10, 2049) முப்பெரு விழா நடைபெற்றது.
        இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார்.
கிளை நல்நூலகர் பூ.சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.
       இராமலிங்கம் எரிநெய் நிலைய உரிமையாளர் இரா.சிவக்குமார், அரசுக் கிளை நூலகர் க.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
         குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள், உலக இரத்தத்தான நாள், போதைப் பொருள்- சட்டவிரோதக் கடத்தலுக்கான பன்னாட்டு எதிர்ப்பு நாள்ஆகிய முப்பெரு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கரூர் வைசியா வங்கியின் வந்தவாசி கிளை மேலாளர் சி.சங்கர் பங்கேற்றார்.
        தேசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மேனாள் தலைமையாசிரியர் குப்பன், கவிஞர் சாகீர் உசேன் முதலானோர் கலந்துகொண்டனர்.
        நிறைவாக, வந்தவாசி அரசுக்கிளை நூலகர் சா.தமீம் நன்றி கூறினார். நூலக உதவியாளர்
பு.நாராயணன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
  –   வந்தை அன்பன்

திங்கள், 10 ஜூன், 2019

வெருளி அறிவியல் - இலக்குவனார் திருவள்ளுவன் : முதல் தொகுப்பு


வெருளி அறிவியல் - இலக்குவனார் திருவள்ளுவன்
  முதல் தொகுப்பு
மக்களுக்கு ஏற்படும் தேவையற்ற காரணமற்ற பேரளவு அச்சத்தை விளக்குவதுவெருளி அறிவியல்’ என்னும் நூல். இந்நூலைத் தொடர்  கட்டுரைகளாக அகரமுதல மின்னிதழில் < http://www.akaramuthala.in > வெளியிட்டு அறிவியல் வலைப்பூவிலும் (thiru-science.blogspot.com/) தளத்திலும் பகிர்ந்து வருகின்றேன்.
உடல்நல அறிவியல் கட்டுரைககளை நாம் படிப்பது நமக்கு நன்று. இதில் பயன்படுத்தப்பெறும்   கலைச்சொற்கள் பிற மொழிகளில் கிரேக்கம், இத்தீன் முதலான பிற மொழிச் சொற்களாகத்தான் உள்ளன. உலகில் முதல் முறையாகத் தாய்மொழியில் கலைச்சொற்கள் பயன்படுத்தப்படுவது இந்நூலில்தான். தமிழில் கலைச்சொற்களை உருவாக்கிக் குறிப்பிடுவதால் படிப்பதற்கு எளிமையாக இருக்கும்.
இது வரை வெளிவந்தவற்றை இப்பொழுது பின்வரும் இணைப்புகளில் தருகின்றேன். ஒரே நாளில் அனைத்தையும் படிக்க இயலாதுதான். எனவே, நேரம் இருக்கும் பொழுது படிப்படியாகப்படித்துக் கொள்ளலாம்.
 கட்டுரைகள் இணைப்புகள் வருமாறு: