சனி, 7 மே, 2011

kalaignar greets semmozhi awardees: செம்மொழி விருது பெற்றவர்களுக்குக் கருணாநிதி வாழ்த்து

எஞ்சிய தொல்காப்பியர் விருதுகள் ௨ ஐயும் குறள்பீட விருதுகள் 2 ஐயும் வழங்குவது எப்போது?  பிற மொழிகளுக்கு வழங்குவதுபோல் மூத்த அறிஞர்களுக்கான வாழ்நாள்முழுவதும் விருதுத் தொகை வழங்கும் செம்மொழி விருதுகள் எப்பொழுது வழங்கப்படும்? தமிழ்மொழிக்கு மத்திய அரசால் காட்டப்படும் மாற்றாந்தாய் மனப்பான்மை எப்போது ஒழியும்?  செம்மொழிக்குப் போராடிய முதல்வர் நடவடிக்கை எடுக்காவிட்டால் யார் எடுப்பார்கள்? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!செம்மொழி விருது பெற்றவர்களுக்கு கருணாநிதி வாழ்த்து

First Published : 07 May 2011 05:30:41 AM IST


சென்னை, மே 6: "செம்மொழி' விருது பெற்ற தமிழறிஞர்களுக்கு முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:தில்லி நீதிமன்றத்தில் என் இளைய மகள் கனிமொழி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் "செம்மொழி' விருது பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழறிஞர்கள் தில்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.2005-06-ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருதை பேராசிரியர் அடிகளாசிரியரும், 2006-07-ம் ஆண்டுக்கான குறள் பீடம் விருதை பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட்டும் பெறுகின்றனர். இந்த இரண்டு பரிசுகளும் தலா ரூ.5 லட்சம் சிறப்பு பரிசு கொண்டவை. இதோடு ரூ.1 லட்சம் சிறப்பு பரிசு கொண்ட இளம் அறிஞர் விருதுகளும் வழங்கப்படுகின்றன.தமிழ் உலகம் நீண்ட நெடுங்காலமாகவே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறபோது எனது நினைவுகளில் பல நிகழ்ச்சிகள் தோன்றிப் பளிச்சிடுகின்றன.குடியரசுத் தலைவர் மாளிகையில் விருது பெறும் தமிழறிஞர்கள் அனைவரையும் சென்னையிலிருந்தவாறே மனதார வாழ்த்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

வெள்ளி, 6 மே, 2011

dinamani article about Dogra certificate: டோக்ரா இனத்தவருக்கு அநீதி

உண்மையை உணர்த்தும் நீதியை வேண்டும் நல்ல கட்டுரை.  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

டோக்ரா இனத்தவருக்கு அநீதி

First Published : 06 May 2011 01:11:45 AM IST


சமீபத்தில் காஷ்மீரில் ஓர் இனத்துக்கு எதிரான அநீதி வெகு சிறப்பாக அரங்கேறியுள்ளது. காஷ்மீரில் ஒருபோதும் அமைதி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் ஹுரியத் மாநாடு அமைப்பு இதனை முன்னின்று நடத்தியுள்ளது.தங்களின் வழக்கமான பாணியில் வன்முறைப் போராட்டத்தில் ஆரம்பித்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டனர். "டோக்ரா சான்றிதழ்' வழங்கும் திட்டம் நிறுத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்து விட்டது. அதென்ன டோக்ரா சான்றிதழ், அதன் மூலம் மக்களுக்கு அப்படி என்ன அநீதியை இழைத்துவிட மத்திய, மாநில அரசுகள் துணிந்துவிட்டன என்பதைப் பார்த்தால் டோக்ரா இனத்தவர் மீதுள்ள நியாயம் புரியும்."டோக்ரா' இன மக்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பனி படர்ந்த லடாக் பகுதியில் வசித்து வரும் பூர்வகுடிகள்.இவர்களின் ஒட்டுமொத்த மக்கள்தொகை சுமார் 9 லட்சம். பஞ்சாப், இமாசலப் பிரதேச மாநிலங்களிலும், பாகிஸ்தானிலும் இவர்கள் வசித்து வருகின்றனர்.இவர்கள் பொதுவாக சற்று உயரம் குறைந்தவர்கள். சராசரி உயரமே 160 செ.மீ.தான். ஜம்முவில் பின்தங்கிய நிலையில் வாழும் இந்த மக்களும் துணை ராணுவத்தில் சேர்வதற்காக, உயரம், மார்பளவு ஆகியவற்றில் சில சலுகைகளைக் கோரினர்.இந்தச் சலுகையைப் பெறும் வகையில் அவர்களுக்கு "டோக்ரா சான்றிதழ்' வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஓர் அறிவிக்கையை கடந்த ஜனவரியில் வெளியிட்டது.டோக்ரா இனத்தவர்கள் உயரத்தில் குறைந்தவர்கள் என்றாலும், வீரத்தில் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. பனிச் சிகரத்தில் ஏறுவதில் அவர்களுக்கு நிகர் எவருமில்லை.பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்தே ராணுவத்தில் "டோக்ரா ரெஜிமெண்ட்' படைப்பிரிவும் உள்ளது.முழுக்க முழுக்க காஷ்மீரில் பின்தங்கிய ஒருபகுதி மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டுதான் இந்த அறிவிக்கை வெளியானது என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஆனால், எப்போது எதைவைத்துப் பிரச்னையை ஏற்படுத்தலாம் என்று காத்திருந்த சில பிரிவினைவாதிகள் இந்த விஷயத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.இன ரீதியாகவும், வட்டார ரீதியாகவும் ஜம்மு-காஷ்மீர் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சி இது. இந்தச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை உடனடியாக வாபஸ்பெற வேண்டுமெனக்கூறி, போராட்ட அறிவிப்பை வெளியிட்டார் ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் சையது அலி ஷா கிலானி.டோக்ரா சான்றிதழுக்கு எதிர்ப்புக் கிளம்பியதுமே, உள்துறை அமைச்சரையும், பிரதமரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார் காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா. அடுத்த சில நாள்களிலேயே டோக்ரா சான்றிதழ் விஷயத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார். ஓமர் அப்துல்லாவின் தந்தையும், மத்திய அமைச்சருமான ஃபரூக் அப்துல்லாவும் இதே போன்ற கருத்தைக் கூறி டோக்ரா மக்களுக்குச் சான்றிதழ் வழங்கும் விஷயத்தின் வேரிலேயே வெந்நீரை ஊற்றினார்.இந்தக் கருத்து குறித்து தனது "மகிழ்ச்சியின்மையை' வெளிப்படுத்துவதைத் தவிர, காங்கிரஸ் கட்சியால் வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை.தொடர்ந்து டோக்ராக்களுக்கு தனிச் சான்றிதழ் வழங்குவது காஷ்மீரில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறி, வன்முறை நெருப்பில் எண்ணெய் ஊற்றினார் மிதவாத ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் மிர்வாய்ஸ் உமர் பரூக்.இதனால் மாநிலத்தில் டோக்ரா சான்றிதழ் வழங்குவதற்கு எதிராகக் கடையடைப்பு, வன்முறை, தீவைப்பு என போராட்டம் தீவிரமடைந்தது.இதனிடையே திடீரென டோக்ரா சான்றிதழ் வழங்குவதை ரத்து செய்வதாக அறிவித்தார் முதல்வர் ஓமர் அப்துல்லா. பிரிவினைவாதிகள் விஷமப் புன்னகையுடன் அடுத்த போராட்டத்துக்குக் காரணத்தைத் தேடத் தொடங்கிவிட்டனர்.மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான மெஹ்பூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி மாநில அரசின் மேலும் ஒரு மோசமான அணுகுமுறை இது என்று கூறி பிரச்னையை முடித்துக் கொண்டது.கடைசியில் சலுகையை இழந்த காஷ்மீரில் சிறுபான்மையினரான டோக்ரா மக்களுக்காகப் போராட யாருமில்லை. ஏனெனில் தேர்தலின்போது அவர்களின் வாக்கு வங்கி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.முஸ்லிம்கள் சிறுபான்மையினத்தவராக உள்ள மாநிலங்களில் தங்களுக்குச் சலுகை வேண்டும் என்று போராடுகின்றனர்.அதேசமயம் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரில் மற்றொரு சிறுபான்மை இனத்தவருக்கு இதுபோன்ற சலுகை கிடைப்பதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். தங்களது செயல்பாடுகள் சரியானதுதானா? என்பதை அவர்கள் ஆத்ம பரிசீலனை செய்து பார்க்க வேண்டும்.தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைக்கு எதிரான போராட்டத்தையும், அதற்குப் பணிந்து விட்ட மாநில அரசின் செயலையும் உள்ளக் கொதிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் டோக்ரா மக்களின் மனவேதனை எப்படி அடங்கும் அல்லது அது எந்த வகையில் வெளிப்படும் என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லும்.

nellai kannan article about kalaignar family: கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?

நேற்று (௫.௫.௨௦௧௧) பொதிகையில் ஒளிபரப்பான குறளின் குரல் நிகழ்ச்சியில் முனைவர் மா.நன்னன் அவர்கள், கல்வியால் நேர்மையாக வாழாமல், தனக்குரிய தீய பாதையில் மேலும் தேர்ச்சி பெற்றவனாக அல்லது பெற்றவளாக அல்லது பெற்றவர்களாக விளங்கும் உண்மையை எடுத்துரைத்தார். இவரது விளக்கம் இக் கட்டுரையின்கேள்விக்கேற்ற விடையாகும்.
௨.) கலைவாணர் சோவியத்து நாடு சென்ற பொழுது பள்ளி மாணாக்கரிடம் ௧௦௦ உரூபாய்க்கு ஒரு பொருளை வாங்கி ௧௧௦ உரூபாய்க்கு விற்றால் என்ன (ஆதாயம்) கிடைக்கும் என்பது போன்ற ஒரு வினாவை கேட்டதாயும் சிறைத்தண்டனை கிடைக்கும் என மாணவர்கள் விடையிறுத்ததாகவும் ஒரு செய்தி உண்டு. ஆனால்,  நம் நாட்டுக் கல்வி முறை வேறு. இதனால்தான் பாரதியார் படித்தவன் பாவம் செய்தால் ஐயோ ஐயோ என்று போவான் எனக் குமுறினார் .
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
அருமையாக எழுதுகிறார் நெல்லை கண்ணன். ஆனால், குறிப்பிட்ட குடும்பத்தைத் தாக்க வேண்டும் என்பதையே மையமாகக் கொண்டதாகத்தான் கட்டுரை அமைகிறது. நேரு மூத்த தலைவர்கள் பலர் இருக்கும்பொழுது ஏன் தன் மகளைக் காங்.கின் தலைவராக்கினார் , இந்திராவிற்குப் பிறகு இராசீவ் ஏன் தலைமையமைச்சர்  ஆனால் என்பன போன்ற பல செய்திகளை அவரே அறிவார். ஆனால், தேவைக்கேற்ப மறைக்க வேண்டியவற்றை மறந்ததுபோல் மறைத்து விட்டு ஒரு தலைச்சார்பாகவே எல்லாக் கட்டுரைகளையும் எழுதுகிறார். காங்.கிற்கு வால் பிடிப்பதை விட்டு விட்டு நடுவுநிலைமையுடன் எழுதினால் இவரது கருத்திற்கு மதிப்பு  ஏற்படும். இல்லையேல் விழலுக்கு இறைத்த நீர்தான். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

கல்வி என்ன தந்தது இவர்களுக்கு?

First Published : 06 May 2011 01:11:15 AM IST


கேடில் விழுச்செல்வம் கல்வி என்றார் வள்ளுவப் பெருந்தகை.இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால் தம்மை விளக்குமால் தாமுளவாக் கேடின்றால் எம்மர் உலகத்தும் யாமறியோம் கல்வி போல்மம்மர் அறுக்கும் மருந்து, என்கிறது நாலடியார். ஆமாம், இந்த ஜென்மத்தைச் சிறக்கச் செய்யும். எடுத்து, எடுத்து யார் யாருக்குத் தந்தாலும் பெருகுமே தவிர, குறையாது. நம்மை அடுத்தவருக்கு உணர்த்த உதவும். எல்லா அறியாமையையும் அறுத்து எறியும் சிறந்த மருந்து கல்வி என்கிறது இந்தச் செய்யுள். திமுக தலைவர் கருணாநிதியின் மகன்கள் அழகிரியும், ஸ்டாலினும், மகள் கனிமொழியும் கற்றவர்கள்தானே?ஆனால், நாலடியார் சொன்ன கல்வி அவர்களுக்கு வழங்கப்படவில்லையா? இல்லை, அவர்கள் தந்தையாரால் கோட்டம், சிலைகள் என்று போற்றப்பட்ட வள்ளுவரின் கல்வி குறித்து இவர்களுக்குச் சொல்லித் தரப்படவில்லையா? புரியவில்லை.ஒரு பெரிய அரசியல் இயக்கத்தில் அந்த இயக்கத்துக்காக தங்களையே அழித்துக்கொண்ட பலபேரும், சொத்து சுகங்களை இழந்த பலபேரும் இருந்தும் இவர்கள் இந்த அரசியல் பொறுப்புகளை எப்படி ஏற்றுக் கொண்டார்கள்?இன்று பெண் கவிதாயினியாக, பெண்ணியக்கப் போராளியாகத் தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிற கனிமொழிக்கு எப்படி, ஏன் இது புரியவில்லை?அவர் கற்ற கல்வி, வள்ளுவப் பேராசான் குறிப்பிட்ட கல்வியாக இருந்திருந்தால் அவர் தன் தந்தையிடம் என்ன சொல்லியிருக்க வேண்டும்? ""அப்பா இந்த இயக்கத்தைத் தலைமை தாங்கி வழிநடத்திய அண்ணாவின் குடும்பத்திலே படித்தவர்கள் இருக்கிறார்கள். கழக முன்னோடிகள் பலரது வாரிசுகள் படித்தவர்கள். கட்சித் தொண்டாற்றுபவர்கள். உங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு தொண்டர்களாகவே தங்களைத் தேய்த்துக் கொள்பவர்கள். அவர்களிலே ஒருவருக்கு இந்தப் பதவியைத் தந்தால் அண்ணாவின் இதயம் உங்களிடம்தான் இருக்கிறது என்று நாம் தமிழர்களிடம் சொல்வது நிஜம் என்று மக்கள் மன்றத்தை நம்ப வைக்க முடியும். அண்ணாவின் ஒரு மகன் உங்கள் ஆட்சியிலேயே தற்கொலை செய்துவிட்டாரே. அந்தப் பழியைத் துடைத்திருக்க முடியும்'' என்று சொல்லியிருக்க வேண்டாமா?அவர் கற்ற கல்வி, அவர் கற்ற கவிதைகள் அடுத்தவர் உழைப்பைச் சுரண்டக் கூடாது என்று அவரைச் சிந்திக்க வைத்திருக்க வேண்டாமா?அப்படி அந்தப் பதவியைப் பெற்றதற்குப் பிறகு அந்த இயக்கத்துக்கும் அதன் தலைவரான தனது தந்தைக்கும் உண்மையாகவாவது இருந்திருக்க வேண்டாமா? இருந்திருந்தால் ராசாவுக்குத் தொலைத்தொடர்புத் துறையைக் கட்டாயம் பெற்றுத்தர வேண்டி தந்தைக்குத் தெரியாமல் நீரா ராடியாவிடம் கேட்டிருப்பாரா?அவரால் அமைச்சரான ராசா அவராலேயே நாற்பது தினங்களுக்கு மேல் சிறையிலிருக்கிறாரே. இன்று கனிமொழியைக் கூட்டுச் சதிகாரர் என்று மத்தியப் புலனாய்வுத் துறை சொல்கிறதே. அதுமட்டுமல்ல, அவரது பண விளையாட்டுகளில் எந்தச் சம்பந்தமுமில்லாத தயாளு அம்மாள் அசிங்கப்படுகிறாரே, சரியா? இதுதான் அவர் கற்ற கல்வி கற்றுக்கொடுத்த பாடமா?ஸ்டாலினை ஓரளவு ஒத்துக்கொள்ள முடியும். ஆனால், அவரது மகன்கள் கற்றவர்கள்தானே? தன்னைத் தவிர, யாரையுமே தொழில் செய்யவிடாமல் திரைப்படத்துறையை ஆட்டிப் படைக்க ஆசைப்படலாமா? அவர்களும் கற்ற கல்வி அவர்களுக்கு உதவவில்லையே? கோட் சூட்டோடு தாத்தாவின் பக்கத்திலேயே நிற்கிறாரே தயாநிதி மாறன். அவரும் கட்சித் தலைமைக்குத் தெரியாமல் தாத்தா கருணாநிதிக்குத் தெரியாமல் நீரா ராடியாவிடம், அழகிரி ரெüடி, படிக்காதவர், முரடன் அவரை அமைச்சராக்க விட்டுவிடக் கூடாது என்று சொல்லிவிட்டு, பின்னர் அழகிரியோடு அகமது பட்டேல், குலாம் நபி ஆசாத், பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி வீட்டுக்கு எப்படி ஒன்றாகப் போக முடிந்தது. என்ன கல்வி இவர்கள் கற்ற கல்வி?ஏற்கெனவே மதுரையில் இவர்களின் போட்டியினாலே மூன்று உயிர்கள் பலியாயினவே. கலைஞர் தொலைகாட்சி அன்றுதானே உதயமாயிற்று. இன்று அதனால்தானே தயாளு அம்மையார் அசிங்கப்படுத்தப்படுகிறார். என்ன கற்றார்கள்?இன்று இளைஞர்கள் பரவலாகப் படித்ததாகச் சொல்ல மறுக்கிறார்கள். இன்ன படிப்பில் சேர்த்திருக்கிறேன் என்று சொல்வதில்லை. என்ன வாங்கியிருக்கே என்றுதான் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்கிறார்கள். காரணம், படிப்பதற்கு அவர்கள் அள்ளிக் கொடுக்கும் நன்கொடைப் பணம். அளவுக்கு மீறிய கல்விக் கட்டணம்.அழகிரியாவது மத்திய அமைச்சர் பதவியை அண்ணா குடும்பத்தில் ஒருவருக்குக் கொடுக்கச் சொல்லிவிட்டு தமிழ்நாட்டு அரசியலைப் பார்த்திருக்கலாமே. இல்லையென்றால், பாரதீய ஜனதா கட்சி இவர் பதில் சொல்ல சங்கடப்படுகிறார் என்று இவரைக் கேலிப் பொருளாக்கியிருக்குமா. என்ன கற்றார்கள் இவர்கள்?ராகுல் காந்தியைச் செய்தியாளர்கள் கேட்கின்றனர். நீங்கள் பிரதமர் ஆவீர்களா என்று. ஆங்கிலத்தில் "ரிடிக்குலஸ்' (சிரிப்புத்தான் வருகிறது) என்கிறார். அமைச்சராவீர்களா என்கின்றனர். மூன்று, நான்குமுறை எம்.பி.யாக இருந்த பிறகு யோசிக்கலாம் என்கிறார்.ராகுலையும், பிரியங்காவையும் வைத்து மக்களிடம் வாக்கு வாங்கிக் கொள்ளையடிக்கப் பார்க்கும் போலி காங்கிரஸ்காரர்கள் அவரிடம் கெஞ்சிப் பார்த்தனர். அவர் மிகத் தெளிவாக இருந்துவிட்டார். ராகுலும், பிரியங்காவும் கற்ற கல்வி சரியாக இருப்பதுபோல் தெரிகிறதே! ராசா ஒரு தலித் என்பதால் பழி வாங்கப்படுகிறார் என்றார் முதல்வர் கருணாநிதி. இன்னும் ராசா சிறையில்தான் இருக்கிறார். என்ன செய்ய முடிந்தது கருணாநிதியால்? உப்புத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஒரு தப்பும் செய்யாமலா, எந்தவித ஆதாரமும் இல்லாமலா ராசா சிறையிலிருக்கிறார்?கலைஞர் தொலைக்காட்சி பற்றிய கேள்வி எழுந்தபோது முதல்வர் கருணாநிதி என்ன சொன்னார் என்பது அவருக்கு மறந்திருக்கலாம். நமக்கு மறக்கவில்லை.""கலைஞர் என்கிற பெயரைத் தவிர, எனக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. அதில் எனது மனைவியும் மகளும் பங்குதாரர்கள், நான் சம்பந்தப்படவில்லை'' என்பதுதான் அவரது பதிலின் சாராம்சம்.முதல்வரின் மனைவியும், மகளும் சம்பந்தப்பட்ட ஒரு வியாபார நிறுவனம் முறைகேடுகளில் சிக்கி உச்ச நீதிமன்றத்தின் நேரடிப் பார்வையில் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம்? முதல்வரின் மகனோ, மகளோ, மருமகனோ, மருமகளோ மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தால், அதற்கும் கட்சிக்கும் முடிச்சுப் போடவா முடியும்?பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் உருவான கழகம் என்கிறார்கள். அண்ணா தொடங்கிய கட்சி என்கிறார்கள். அந்தக் கட்சி, இப்போது தலைவரின் குடும்பத்தினரைப் பாதுகாக்க உயர்நிலை செயல் திட்டக் குழுவைக் கூட்டி விவாதிக்கிறது.கட்சிக்கு அரணாக இருக்க வேண்டிய தலைவரின் குடும்பம், இப்போது கட்சி என்கிற கேடயத்துக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு தங்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறது.சுயமரியாதை, சுயமரியாதை என்று பேசுகிறார்களே, கழகத்தில் யாருக்கும் அது இல்லையா? அமைச்சர்கள் அனைவரும் அநேகமாகக் கற்றவர்கள். வாயே திறக்க மாட்டேன் என்கிறார்களே. அவர்கள் கல்வி அவர்களுக்கு ஒன்றுமே தரவில்லையா?


dinamani editorial - no accidents; only carelessness: தலையங்கம்: விபத்தல்ல, கவனக்குறைவு...

பழையனவற்றை நினைவுகூர்ந்து எழுதப்பெற்ற நல்ல தலையங்கம். செவிடன் காதில் ஊதிய சங்காக இல்லாமல் அரசுகள் கருத்தில் கொள்ள வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


தலையங்கம்: விபத்தல்ல, கவனக்குறைவு....

First Published : 06 May 2011 01:10:36 AM IST


ஐந்து நாள் தேடலுக்குப்பின் அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டுவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு அரசு மரியாதையுடன் இடா நகரில் அடக்கம் செய்யப்படுகிறது. ஏப்ரல் 30-ம் தேதி தவாங்கிலிருந்து அருணாசலப் பிரதேசத்தின் தலைநகரான இடா நகருக்குத் திரும்புவதற்காகக் கிளம்பிய முதல்வர் டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டர் சேலா கணவாய் பகுதியில் திடீரென்று காணாமல் போனது முதலே, நாடு தழுவிய அதிர்ச்சியும் திகைப்பும் தொடர்ந்து வந்தன. இந்திய சீன எல்லைப் பகுதியில் தவாங்கிலிருந்து 30 கி.மீ. தொலைவில் லுகுதாங் என்கிற கிராமத்தில் முதல்வர் காண்டுவும் அவருடன் பயணித்த நான்கு பேர்களும் சடலமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.பவன் ஹன்ஸ் என்கிற தனியார் ஹெலிகாப்டர் நிறுவனத்தின் எ350-பி3 ஹெலிகாப்டரில்தான் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரும், அதில் பயணித்தவர்களின் சடலங்களும் அருகிலுள்ள கிராமத்தினரால் கண்டறியப்பட்டு, ஐந்து நாள் தேடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. வேடிக்கை என்னவென்றால், விபத்து நிகழ்ந்த இடம் முதல்வர் டோர்ஜி காண்டுவின் தொகுதியான முக்தோலின் பகுதி என்பதுதான்.விமான விபத்துகளில் பிரபலங்கள் உயிரிழப்பது ஒன்றும் புதியதல்ல. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில்தான் இறந்தாரா என்கிற சர்ச்சை இன்றுவரை ஓய்ந்தபாடில்லை. ஐ.நா.வின் பொதுச் செயலராக சுமார் எட்டாண்டு பதவி வகித்த சுவீடன் நாட்டைச் சேர்ந்த டாக் ஹாம்மர்ஷீல்ட் 1961-ல் விமான விபத்தில் இறந்தபோது அது விபத்தா, சதியா என்று எழுந்த சர்ச்சை இன்றுவரை தொடர்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலம், சஞ்சய் காந்தி, மத்திய அமைச்சராக இருந்த மாதவராவ் சிந்தியா, மக்களவைத் தலைவராக இருந்த பாலயோகி, முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி என்று விமான விபத்துகளில் உயிரிழந்தோரின் பட்டியல் நீளும். ஏன், ராணுவ இணையமைச்சராக இருந்த என்.வி.என். சோமுவும் மூன்று ராணுவ அதிகாரிகளும் அருணாசலப் பிரதேசத்தில் இதே தவாங்க் பகுதியில்தான் ஹெலிகாப்டர் விபத்தில் 1997-ல் உயிரிழந்தனர் என்பது கவனத்துக்குரியது.சமீபத்தில் அடுத்தடுத்து இரண்டு ஹெலிகாப்டர் விபத்துகள் நடந்தேறி இருப்பதுதான், அதுவும் இதே தவாங்க் பகுதியில் நிகழ்ந்திருப்பதுதான், பல கேள்விகளை எழுப்புகின்றன. ஒருசில நாள்களுக்கு முன்புதான் 17 சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று இதே பகுதியில் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. அடுத்த சில நாள்களிலேயே முதல்வர் டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டரும் விபத்துக்குள்ளாகி இருக்கிறது என்றால், இந்தப் பகுதி ஹெலிகாப்டர் பயணத்துக்கு ஏற்றதுதானா என்கிற முக்கியமான கேள்வியை அல்லவா எழுப்புகிறது.கடந்த சனிக்கிழமை நண்பகலில் முதல்வர் டோர்ஜி காண்டுவின் ஹெலிகாப்டர் கிளம்பும்போது தட்பவெப்பநிலை சாதகமாகவும், வானம் தெளிவாகவும்தான் இருந்ததாகக் கூறுகிறார்கள். அப்படியும் தவாங்கிலிருந்து கிளம்பிய 20 நிமிடங்களில் அந்த ஹெலிகாப்டர், விமான நிலைய ராடாரிலிருந்து மறைந்தது என்றால், திடீரென்று தட்பவெப்ப நிலை மாறியதா என்றுதானே கேட்கத் தோன்றும்?உண்மை என்னவோ அதுதான். அருணாசலப் பிரதேசத்தின் தட்பவெப்ப நிலையே விசித்திரமானது. எப்போது திடீர் திடீரென்று மேகங்கள் தோன்றும், மழை பெய்யும், வெயில் அடிக்கும், இருள் சூழும் என்றெல்லாம் கணிக்க முடியாத தட்பவெப்ப நிலைமை அந்தப் பகுதியில் காணப்படும் என்பது, விமான ஓட்டிக்குத் தெரியாவிட்டாலும், முதல்வர் டோர்ஜி காண்டுவுக்குத் தெரியும்.தவாங்கிலிருந்து இடா நகருக்குப் புறப்படுபவர்கள் காலையில் பத்து மணி முதல் பகல் 12 மணிக்குள் கிளம்பி விடுவார்கள். பிற்பகல் நேரத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும் என்பது தெரிந்தும், முதல்வர் ஏன் கவனக்குறைவாய் இருந்தார் என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.முதல்வர் டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருக்கும் இந்த வேளையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சீதாராம் யெச்சூரியின் தலைமையிலான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, சுற்றுலா, கலாசாரம் தொடர்பான சீதாராம் யெச்சூரி தலைமையிலான 30 பேர் அடங்கிய நிலைக்குழுவின் 168 மற்றும் 169-வது அறிக்கைகள், மாநிலங்களவைத் தலைவரான ஹமீத் அன்சாரியிடம் தரப்பட்டுள்ளன. இந்த அறிக்கையில், ஹெலிகாப்டர்களின் பாதுகாப்புப் பற்றிய குறிப்புகள் கவனத்தில்கொள்ள வேண்டியவை.முக்கியமான அரசியல் தலைவர்கள் செல்லும் ஹெலிகாப்டர்கள் பல வேளைகளில் விமானப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில்லை என்கிறது இந்த அறிக்கை. இரவு நேரங்களில் பறப்பது, காலநிலை பற்றிய அக்கறையின்மை, சரியாகக் காட்சிகள் தெரியாவிட்டாலும் சமாளித்துப் பறப்பது போன்ற விதிமுறை மீறல்கள் வி.ஐ.பி.களை ஏற்றிச்செல்லும் ஹெலிகாப்டர்களில் சர்வசாதாரணமாக நடப்பதாகவும், இதற்கு வி.ஐ.பி.கள்தான் முக்கியமான காரணம் என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறது அந்த அறிக்கை.ஏறத்தாழ 120 ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறு விமானங்கள் மலைப்பகுதிகளில் பறப்பதற்கான தகுதியே அற்றவை என்றும், போதுமான ஹெலிகாப்டர்கள் இல்லாததால்தான் இவற்றைப் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்தி இருக்கிறது. மேலும், இதுபோன்ற விபத்துகளில் அதிகமானவை, ஹெலிகாப்டர்களில் பயணிக்கும் வி.ஐ.பி.களின் வற்புறுத்தலால், தட்பவெப்ப நிலையைக் கவனிக்காமல் விமானிகள் பறக்க எத்தனிப்பதாலும், அவர்களது அவசரத்துக்கு ஈடுகொடுத்து விரைந்து பறப்பதாலும் ஏற்படுகிறது என்கிற சீதாராம் யெச்சூரி அறிக்கை.விபத்துகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஆனால், விபத்துகளிலிருந்து நாம் பாடம் படிக்க வேண்டாமா? குறைந்தபட்சம், விபத்துகளை விரைந்து விசாரித்துத் தவறுகளைத் திருத்தவும், முறையான பாதுகாப்பு வசதி மற்றும் தொழில்நுட்பமுள்ள விமானங்கள்தான் செயல்படுகின்றனவா என்பதைத் தீர்மானிக்கவும், அனுமதி தரவும், அடிக்கடி சோதனை செய்யவும் ஒரு தனியான அமைப்பை உருவாக்கினால்தான் என்ன?அது முதல்வரானாலும், சுற்றுலாப் பயணியானாலும் மனித உயிர் என்ன வெல்லக் கட்டியா, போகட்டும் என்று விட்டுவிட?

வியாழன், 5 மே, 2011

Rs.3.00 crore to cricketers by kalaignar :இந்திய வீரர்களுக்கு ரூ 3 கோடி: கருணாநிதி வழங்கினார்

பணம் கொட்டுகின்ற இடத்தில்தான் கொட்டுகின்றது. ஒரே  ஆட்டத்திற்கு முதன்மை கொடுத்தாலும் அதனை வேறு மாதிரி நடைமுறைப்படுத்தலாம். இப்பரிசுத்  தொகையை வீரர்களுக்கு வழங்கியதற்கு மாற்றாக வளரந்து வரும் வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த அணியின் பெயரில் அறக்கட்டளை நிறுவி இளம் வீரர்களை ஊக்கப்படுத்தலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

இந்திய வீரர்களுக்கு ரூ 3 கோடி: கருணாநிதி வழங்கினார்
First Published : 05 May 2011 12:53:23 PM IST

சென்னை, மே.5: உலகக் கோப்பையை வென்ற எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ரூ 3 கோடி மற்றும் தமிழக வீரர் அஸ்வினுக்கான ரூ 1 கோடி சிறப்புப் பரிசை தமிழக அரசின் சார்பில் முதல்வர் கருணாநிதி இன்று வழங்கினார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அண்மையில் மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி மிகச் சிறப்பாக விளையாடி, இலங்கை அணியை வென்று, 28 ஆண்டுகளுக்குப் பிறகு  உலகக் கோப்பையை மீண்டும் கைப்பற்றி மகத்தான சாதனை படைத்தது.இச்சாதனையைப் போற்றிப் பாராட்டும்வகையில், இந்தியக் கிரிக்கெட் அணிக்குத் தமிழக அரசின் சார்பில் ரூ 3 கோடி சிறப்புப் பரிசும், இந்திய கிரிக்கெட் அணியில் பங்கு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு ரூ 1 கோடி சிறப்புப் பரிசும் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின்படி, இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 3 கோடியைச் சமமாகப் பிரித்து வழங்கிட முடிவு செய்து - அணியின் தலைவர் திரு. எம்.எஸ். தோனி,  சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு தலா 21 லட்சத்து 42 ஆயிரத்து 857 ரூபாய்க்கான காசோலைகளையும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கௌரவச் செயலாளர் என். சீனிவாசனிடம் அணியின் ஏனைய வீரர்களுக்கான காசோலைகளையும், இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் ஆர். அஸ்வினிடம் 1 கோடி ரூபாய்க்கான காசோலையையும் கருணாநிதி இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் வழங்கினார்.இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dinamani article by indira parthasarathy: சொல் குறுக நிமிர் கீர்த்தி!

இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்குப் பிடித்த தொடர் "சொல் குறுக நிமிர் கீர்த்தி'  என்பது. சேக்சுபியரைப்பற்றிக் குறிப்பிடும்பொழுதுகூட இத் தொடரைக் கையாள்வார். சொற்களால் விளக்க இயலா மிகுதியான புகழை உடையவர் என்பதைக் குறிப்பதற்காகப் - புகழைக் குறிக்கப் போதுமான சொற்கள்  இல்லை என்பதற்காகக் - கவியரசர் கம்பர்
"உரை குறுக நிமிர் கீர்த்தி  " என்கிறார். இதனை உள்வாங்கிய இ.பா. அவர்கள் சொல் குறுக எனக் குறிப்பிடுகிறாரா? அல்லது சொல் குறுக என்றும் கம்பர் கூறியுள்ளாரா? இ.பா. அவர்கள் விளக்கினால் நன்று. உரை என்பதே சரி என்னும் முடிவிற்கு வந்தால் இனித் திருத்திக் கொள்வார் அல்லவா? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

சொல் குறுக நிமிர் கீர்த்தி!

First Published : 05 May 2011 12:16:21 AM IST


நான் தில்லிப் பல்கலைக்கழகத்தில் பணி புரிந்தபோது, ஒரு நாள் நளினி என்கிற மாணவி என்னிடம், என் அக்காவின் கணவர் உங்களைப் பார்க்க விரும்புகிறார் என்று கூறினாள். நான் எதற்காக என்பது போல் புருவத்தை உயர்த்தி அவளைப் பார்த்தேன். அவருக்குத் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. குறிப்பாக, அவரே ஒரு கவிஞர். புதுக் கவிதை எழுதுகிறார். சி.சு.செல்லப்பா வெளியிட்டிருக்கும் புதுக் குரல்களில் அவருடைய இரண்டு கவிதைகள் இருக்கின்றன என்றாள்.அவர் என்ன செய்கிறார் என்று கேட்டேன்.நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் சிறப்பு நிருபர். அவர் கடந்த ஆறு மாதங்களாகக் "கணையாழி' என்ற தமிழ் மாதப் பத்திரிகை நடத்தி வருகிறார் என்றாள்.பிரபல அமெரிக்க தினசரியின் சிறப்பு நிருபர், தமிழ்க் கவிஞர் என்பதோடு மட்டுமல்லாமல், ஒரு தமிழ் மாதப் பத்திரிகை நடத்தி வருகிறார் என்ற செய்தியின் கலாசார அதிர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள எனக்குச் சிறிது நேரமாயிற்று.அழைத்துவா, நானும் அவரைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்றேன்.அடுத்தவாரம் இருவரும் சந்தித்தோம். அந்த அதிசய மனிதர்தாம் கி.கஸ்தூரிரங்கன். ஆங்கிலப் பத்திரிகையின் சிறப்பு நிருபர் என்பதைக் காட்டிலும், ஒரு தமிழ்ப் பத்திரிகையை நடத்தி வருவதுதான் அவருக்குப் பெருமை தரும் விஷயமாக இருந்தது என்பது எனக்குப் புரிந்தது. இதே ஆர்வம்தான், போன நூற்றாண்டின் பின் எழுபதுகளில், தில்லியில் அவர் பார்த்து வந்த ஆங்கிலப் பத்திரிகை வேலையை ராஜிநாமா செய்து, அதைவிடக் குறைவான சம்பளத்தில் சென்னையில், தமிழ்ப் பத்திரிகையில் பணி புரிவதற்கும் காரணமாயிற்று. அவர் நியூயார்க் டைம்ஸில் இருந்தபோதே, அப்பொழுது பிரசுரமாகிக் கொண்டிருந்த "சுதேசமித்திர'னில் அரசியல் பத்தி எழுதிக் கொண்டிருந்தார். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பெருந்தலைவர் காமராசர் அப்பத்தியின் தீவிர வாசகரென்று அவரே கஸ்தூரிரங்கனிடம் ஒரு சமயம் சொன்னபோது, அவருக்குப் புலிட்ஸர் பரிசு பெற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.கஸ்தூரிரங்கன் இயல்பாகவே அடக்கமும் அமைதியும் நிறைந்தவர். ஆனால், அவர் காமராசர் இவ்வாறு கூறியதைப் பல தடவைகள் நினைவு கூர்ந்து பேசுவது வழக்கம் என்றால், தமிழ்ப் பத்திரிகையாளராக இருப்பதுதான் தமக்குப் பெருமை என்பதற்கு அவர் அடிமன உணர்வுதான் காரணம் என்று நினைக்கிறேன்.1962-ல் இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே நிகழ்ந்த போரைப் பற்றி "நியூயார்க் டைம்ஸ்'க்கு அனுப்பிய களச் செய்திகள்தாம் (ச்ண்ங்ப்க் ழ்ங்ல்ர்ழ்ற்ண்ய்ஞ்) அவரை ஒரு நல்ல நிருபராக அடையாளம் காட்டியது. இதற்குப் பிறகு இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மேல்நாட்டு வாசகர்களுக்குச் சுவாரஸ்யம் தரும் பல்வேறு விஷயங்களைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார்.வாரணாசியில் படகுகளில் வசித்த அமெரிக்க ஹிப்பிகளை நேர்காணல்கள் நிகழ்த்தி அவர் எழுதியவை அமெரிக்க வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. பழ்ஹய்ள்ஸ்ரீங்ய்க்ங்ய்ற்ஹப் ஙங்க்ண்ற்ஹற்ண்ர்ய் பற்றியும், மகேஷ் யோகியைப் பற்றியும் நியூயார்க் டைம்ஸில் வந்த முதல் குறிப்பு கஸ்தூரிரங்கன் எழுதியதுதான்.முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் கேரள ஆயுர்வேத வைத்தியசாலையில் இளமைக்காகச் சிகிச்சை பெற்றார் என்ற செய்தி கேட்டு, நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் இந்த வைத்திய சாலைகளைப் பற்றி விவரமான குறிப்பு அனுப்பும்படிக் கஸ்தூரிரங்கனைப் பணித்தார். அவை பிரபலமாவதற்கு, நியூயார்க் டைம்ஸில் இதைப் பற்றிய செய்தி வந்தது என்பதும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். அவர் "தினமணி கதிர்' ஆசிரியராக இருந்தபோது பல இளம் எழுத்தாளர்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்தார். பல நல்ல எழுத்தாளர்கள் கதிரில் எழுதும்படியாகவும் செய்திருக்கிறார். சாகித்ய அகாதெமி விருதுபெற்ற "வானம் வசப்படும்' என்ற நாவலைப் பிரபஞ்சன் கதிரில் எழுதுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் கஸ்தூரிரங்கன்.1988-ல் நான் புதுவைப் பல்கலைக்கழகத்தில் பணியேற்றபோது, "தினமணி'யில் மாதம் இருமுறை இரண்டு ஆண்டுகள் தவறாமல் கட்டுரைகள் எழுதியது அவர் தந்த ஊக்கத்தினால்தான். என்னுடைய ஐந்தாண்டு போலந்து அனுபவத்தைப் பயணக் கட்டுரைகளாக எழுத நினைத்தபோது, அதை நாவலாக எழுத யோசனை சொன்னவரும் அவர்தாம். அது "ஏசுவின் தோழர்கள்' என்ற தலைப்பில், கதிரில் வந்தபோது அவருடைய யோசனையின் அருமை எனக்குப் புலப்பட்டது.அவர் நடத்திய "கணையாழி' அருமையான இளம் புதுக்கவிஞர்களை இனம் கண்டது. இன்று பிரபலமாக இருக்கும் பல கவிஞர்கள் "கணையாழி'யில் எழுதத் தொடங்கியவர்கள்தாம். குறு நாவல் வளர்ச்சிக்காக அவர் ஆற்றியிருக்கும் பணி அளப்பரியது. "கணையாழி'யில், அமரர் தி.ஜானகிராமன் பேரில் ஆண்டுதோறும் குறுநாவல் போட்டி நடந்து வந்தது. முழு நாடகங்கள், தமிழ்ப் பத்திரிகைகளில் வராத காலத்தில், "கணையாழி' அவற்றைப் பிரசுரிக்கத் தயங்கவில்லை. ஜெயந்தன் நாடகங்களை "கணையாழி' பிரசுரித்தது. என்னுடைய நந்தன் கதையும் அப்பத்திரிகையில் பிரசுரமாயிற்று."கணையாழி' மூலம் கஸ்தூரிரங்கன் ஆற்றிய இலக்கியப் பணியில், அசோகமித்திரன் பங்கும் கணிசமானது. பல இளம் நல்ல எழுத்தாளர்களைக் கண்டறிவதற்கு, இப் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் என்ற முறையில் அவர் உறுதுணையாக இருந்திருக்கிறார். மிகச்சிறந்த பத்திரிகை ஆசிரியர், அரசியல் விமர்சகர், கவிஞர், கட்டுரையாளர், பல நல்ல எழுத்தாளர்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர், எழுத்துச் சாதனையாளர் சுஜாதாவைக் கண்டெடுத்தவர் (இருவரும் பள்ளி நண்பர்கள்) ஆக பன் முகங்களை உடைய நண்பர் கி.கஸ்தூரிரங்கன், இறுதி மூச்சு இருந்த வரை பழுத்த காந்தியவாதியாகவும், ஆன்மிக நாட்டமுடையாராகவும் இருந்து வாழ்ந்ததுதான் மாபெரும் சாதனை."சொல் குறுக நிமிர் கீர்த்தி' என்பான் கம்பன். இது கஸ்தூரிரங்கனுக்கு மிகவும் பொருந்தும்.

throw away pesticides - use natural medicines: பக்க விளைவுகள் ஏற்படுத்தாத தாவரப் பூச்சிக் கொல்லிகள்

நாடெங்கும் இதே முறையைப் பின்பற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊட்டச்ச்த்து உணவு என எதை நம்பி உண்டாலும் வேதியியல் உரத்தின் பக்க விளைவு ஊறு செய்கிறது. எனவே, இயற்கையான தாவரப் பூச்சிக் கொல்லிகளே எங்கும் பயன்படுத்த வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


பக்க விளைவுகள் ஏற்படுத்தாத தாவரப் பூச்சிக் கொல்லிகள்

First Published : 05 May 2011 02:56:08 AM IST


கற்றாலை
கடலூர்: விவசாயிகள் தாவரப் பூச்சிக் கொல்லிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கி இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி தரும் செய்தியாக உள்ளது. குறைந்த பரப்பளவு நிலத்தில், அதிக விளைச்சல் காண வேண்டும் என்ற ஆவல் தான் பசுமைப் புரட்சி திட்டங்களுக்கு வித்திட்டது. அதற்காகப் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள், ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளால், மனித இனம் பெருமளவுக்கு பாதிப்புகளை சந்திக்கும் நிலை உருவாகி இருக்கிறது. பல லட்சம் கோடி பணம், ரசாயன உரங்கள், ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்துகள் தயாரிக்கும் தொழிலில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்களின் பயன்பாட்டால் அந்த ரசாயனங்கள் மனிதனின் உடலில் புகுந்து பல்வேறு நோய்களுக்கும், சுகாதாரக் கேடுகளுக்கும், பக்க விளைவுகளுக்கும் காரணமாகி விடுகின்றன. உதாரணமாக தென்னை மரத்தில் ஏற்படும் பூச்சித் தாக்குதல்களை ஒழிக்க மோனோ குரோட்டோபாஸ், கார்போசல்பான் போன்ற மருந்துகளை தென்னையின் வேர்கள் மூலம் செலுத்தினர். இந்த மருந்துகளின் ரசாயனங்கள் இளநீரில் காணப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன்பிறகுதான் தென்னை விவசாயிகள் விழித்துக் கொள்ளத் தொடங்கினர். வேப்பங் கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் அசாடிராக்டின் போன்ற தாவரப் பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்த தற்போது தொடங்கியுள்ளனர். தாவரப் பூச்சிக் கொல்லிகள் கிராமங்களில் கிடைக்கும் தாவரங்களான ஆடாதோடா, நொச்சி, எருக்கு, வேம்பு, சோற்றுக் கற்றாழை, எட்டிக் கொட்டை போன்றவற்றைக் கொண்டு, வேக வைக்கும் முறையிலும், ஊறல் முறையிலும் தயாரிக்கப்படுகின்றன. ஊறல் முறை: நொச்சி, ஆடாதோடா, வேம்பு, எருக்கன், பீச்சங்கு (உண்ணி முள்), போன்றவற்றின் இலைகள் 2 கிலோ, எட்டிக் கொட்டை 2 கிலோ ஆகியவற்றை இடித்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். அவை மூழ்கும் அளவுக்கு 12 லிட்டர் மாட்டு சிறுநீர், 3 லிட்டர் சாணக் கரைசல் ஆகியவற்றில் 7 முதல் 15 நாள்கள் வரை ஊறவிட வேண்டும். இலைகள் கரைந்து கூழ் ஆகிவிடும். இதில் ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களில் தெளிக்கலாம். வேக வைக்கும் முறை: மேற்கண்ட இலைகள், எட்டிக் கொட்டை தலா 2 கிலோ எடுத்து பாத்திரத்தில் இட்டு, 15 லிட்டர் நீரை ஊற்றி 2 முதல் 3 மணி நேரம் வேக வைக்க வேண்டும். வெந்தபின் சாற்றை வடித்து எடுக்கவேண்டும். ஆறியபின் அதில், ஒரு படி மஞ்சள் தூள் கலந்து 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதன்மூலம் கிடைக்கும் வடிசாற்றில், 100 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம். பூசண நோய் கட்டுப்பாட்டுக்கு மேற்கண்ட சாறில் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 500 கிராம் முதல் 1 கிலோ வரை கலந்து தெளிக்கலாம். நுண்ணுயிர் இலைக் கருகல் நோய்களுக்கு, சோற்றுக் கற்றாழை 3.5 கிலோ, இஞ்சி 200 கிராம், இவற்றுடன் புதினா அல்லது சவுக்கு இலை 2 கிலோ சேர்த்து மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். ஆற வைத்து வடித்த சாற்றுடன் மஞ்சள் தூள் ஒரு படி கலந்து, சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 500 கிராம் அல்லது ஒரு கிலோ கலந்து தெளிக்கலாம். வேப்பங்கொட்டை சாறு சிறந்த இயற்கைத் தாவர பூச்சிக் கொல்லி மருந்தாக பயன்படுகிறது. 5 கிலோ வேப்பங் கொட்டையை உரலில் இட்டு இடித்து, சல்லி சாக்கு அல்லது மெல்லிய துணியில் கட்டி, 10 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சாற்றினை பிழிந்து எடுத்து வடிகட்டி, 190 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம். மூலிகை மட்கா என்ற இயற்கைப் பூச்சிக் கொல்லி மருந்து, 5 வகையான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.Same election procedure for all states - Ex.minister thiruna: எல்லா மாநிலங்களிலும் ஒரே தேர்தல் நடவடிக்கை தேவை: அமைச்சர் திருநாவுக்கரசர்

எல்லா நோய்க்கும் ஒரே மருந்தை அளிக்க இயலாது. ஒரே நோயாக இருப்பினும் எல்லார்க்கும் ஒரே மருந்தை அளிக்க இயலாது.  நோயின் தன்மையுடன் நோயாளியின் தன்மை குறித்தும் ஆராய்ந்து  அவரது உடலுக்கேற்ற மருந்துதான் தரப்படும். எனவே, மருந்து மாறுபடும். எனவே,  தேர்தல் ஆணையத்தின் பற்களைப் பிடுங்க வேண்டும் என்பதற்காக ஊதுகுழலாக  ஒரே மாதிரியான தேர்தல் நடவடிக்கை எனக் கோருவது  சற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

தலைப்பில் திருநாவுக்கு அமைச்சர் பதவி அளித்து விட்டீர்களே! அவ்வளவு நம்பிக்கையா? உண்மையிலேயே கவனக்குறைவுதானா? அவர் அமைச்சராக ஆனால் நல்ல  தொண்டு செய்வார். ஆனால், காங்.கின் சார்பில் வெற்றி பெற்று அமைச்சராவது என்பது தமிழ்நாட்டிற்குப் பெருங்கேடு. அவர்  தோற்றால்தான் கட்சித்தாவல்கள் குறையும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

எல்லா மாநிலங்களிலும் ஒரே தேர்தல் நடவடிக்கை தேவை: 
அமைச்சர் திருநாவுக்கரசர்

First Published : 05 May 2011 01:30:45 AM IST


சென்னை,மே 4: தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களை வரையறை செய்வதுடன், எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியான தேர்தல் நடவடிக்கை மேற்கொள்ளவும் சட்டம் இயற்ற வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை திருநாவுக்கரசர் சந்தித்தார்.இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:தேர்தல் நடந்து முடிந்ததற்குப் பிறகு மரியாதை நிமித்தமாக கருணாநிதியைச் சந்தித்தேன். 6-வது முறையாக அவர் முதல்வராவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இதற்காக அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலைப் பார்க்கிறபோது தமிழகத்தில் கொஞ்சம் அதிகமான கெடுபிடிகள் இருப்பதாக பொதுமக்களும் கருதுகிறார்கள். நாங்களும் கருதுகிறோம்.இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிப்பதுடன் தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களையும் வரையறை செய்ய வேண்டும்.இதைப்போல எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியான தேர்தல் நடவடிக்கை மேற்கொ ள்ளவும் சட்டம் வகுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.


புதன், 4 மே, 2011

tamil woman got victory in canada parliament election :கனடா நாடாளுமன்றத் தேர்தல்: தமிழ்ப் பெண் வெற்றி


தினமணி நேயர்கள் சார்பில் பாராட்டுகளும் வாழ்த்துகளும். கனடா மக்கள் புலம்பெயர் மக்களுக்குஆதரவாக இருப்பினும்முதன்மைக் கட்சிகள் எதிராக உள்ளன.இந்நிலையை மாற்றி ஈழத்தமிழர்களின் இன்னல் போக்கிடவும் தமிழ் ஈழம் மலர்ந்திடவும் உலகத் தமிழர்கள் செழித்திடவும் தமிழ் ஓங்கிடவும் பெண்மை போற்றிடவும் தொண்டாற்றிட வாழ்த்துகள். அன்புடன் .இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!


கனடா நாடாளுமன்றத் தேர்தல்: தமிழ்ப் பெண் வெற்றி

செவ்வாய், 3 மே, 2011

hunger strike in chengalpattu camp: செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் 6-வது நாளாக உண்ணாவிரதம்

௧௪ ஆவது நாட்களாக உண்ணாநிலை மேற்கொ்ண்டுள்ளனர். தினமணியோ ௬ நாள் என்கிறது. மற்றோர் இதழோ பார்வையாளர்கள் தரும் உணவுப் பொருள்களை உண்டு உண்ணா நோன்பு இருப்பதாகக் கேலி பேசுகிறது. ஏன் இந்த இருட்டடிப்பு? தினமணி நடுநிலையோடு ஆராய்ந்து உண்மையை உலகிற்குத் தெரிவிக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் 6-வது நாளாக உண்ணாவிரதம்

First Published : 03 May 2011 01:31:39 AM IST


செங்கல்பட்டு, மே 2: செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் 27 இலங்கை அகதிகள் 6-வது நாளாக திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு வழக்குகளில் கியூ பிரிவு போலீஸôரால் கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 40 பேர் செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த ஜனவரி 7-ம் தேதி 5 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் பிப்ரவரி 28-ல் விடுதலை செய்வதாக கூறினர். 2 மாதமாகியும் விடுதலை செய்யாததால் மீண்டும் ஏப்ரல் 27 முதல் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் முதல் நாள் காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆனந்தகுமார், ஜெயக்குமார் ஆகிய இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் முகாமில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

kalaignar wants reshuffle e.c.power: கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி


தணிக்கை முறை மாநிலத்திற்கு மாநிலம்  வேறுபடுகிறது. மது விலக்கு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. இவைபோல் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒவ்வோர் அளவுகோல் என்பதே இந்திய அடையளாம். தேர்தல் ஆணையமும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் என்பதைப்  ப.சி. புரிந்து கொள்ள வில்லை. அடுத்த தேர்தல்களில் தமிழகத்தைப்  பிற மாநிலங்களும் பின்பற்றும் நிலையை  உருவாக்க வேண்டும். மாறாகத் தமிழகத் தேர்தல் ஆணையத்தின் பற்களைப் பிடுங்கக் கூடாது. ௧௫௦ கோடி உரூபாய் பிடித்து விட்டு வெறும ௫ கோடி மட்டும் பிடித்தது போன்ற பொய்யான தோற்றத்தைக் காட்டுவது நிறுத்தப்படும்  வகையில் தேர்தல் ஆணையத்திற்கு முழு  அதிகாரம் தேவை என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி

First Published : 03 May 2011 04:09:18 AM IST


சென்னை, மே 2: அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள எந்தவொரு அமைப்பும், கடிவாளமின்றி ஓடுவதை அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை என்று தேர்தல் ஆணையத்தின் மீதான தனது அதிருப்தியை முதல்வர் கருணாநிதி வெளிப்படுத்தியுள்ளார்.  இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளைப் பற்றி சிவகங்கையில் நடந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசியிருக்கிறார். தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களிலும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும், மற்ற மாநிலங்களில் கட்சித் தொண்டர்கள், கட்சியின் சின்னம் பொறித்த தொப்பி அணிந்திருந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், பிளக்ஸ் பேனர், பொதுக் கூட்டம் என அனைத்தும் நடந்தன எனவும், தமிழகத்தில் மட்டும் தேர்தல் ஆணையம் அதிக கெடுபிடி விதித்துள்ளதாகவும் அவர் பேசியுள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என ப.சிதம்பரம் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.  தமிழகத்தில் எத்தகைய கெடுபிடிகள்-காவல்துறை நடவடிக்கைகள், தேடுதல் வேட்டைகள், ஜனநாயக நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவதில் விதிக்கப்பட்ட வரையறைகள்-தேர்தல் ஆணையத்தால் கடைப்பிடிக்கப்பட்டன என்பதை அனைவரும் அறிவர்.  தேர்தல் ஆணையம் இந்திய அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. தேர்தல் ஆணையம் என்பது விருப்பு வெறுப்புகளை அகற்றி அனைவருக்கும் பொதுவாகவும், நடுநிலையோடும் செயல்பட வேண்டிய ஒரு அமைப்பாகும். ஒவ்வொரு மாநிலத்திலும்  வெவ்வேறு அளவுகோல்களை தேர்தல் ஆணையம் கடைபிடித்திடக் கூடாது என்பதே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்தாகும்.  கருத்து வேறுபாடு இல்லை: தேர்தல் ஆணையத்துக்கான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டு முறைப்படுத்த வேண்டுமென்பதில், அரசியல் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஒரே அமைப்பு, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நடைமுறையைப் பின்பற்றுவது என்பது ஜனநாயகத்தை வளப்படுத்துவதற்கு உதவாது. இந்திய அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள எந்தவொரு அமைப்பும், கடிவாளமின்றி ஓடுவதை அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை.  இந்தப் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிப்பதுடன் அரசியல் சட்ட நிபுணர்களையும் கலந்து ஆலோசித்து முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுவே ஜனநாயகத்தின் மீதும், அரசியல் சட்டத்தின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ள அனைவரின் எதிர்பார்ப்பாகும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

thirukkural ambassadors in summer holidays: கோடை விடுமுறை குதூகலம்: தூதுவர்களை உருவாக்கும் திருக்குறள் பேரவை

குறள்நெறி பரப்பும் மன்றத்தார்க்குப் பாராட்டுகள். தொண்டு பரவட்டும்! பணி தொடரட்டும்! நன்னெறி மலரட்டும்! நல்லோர் உருவாகட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

கோடை விடுமுறை குதூகலம்:
தூதுவர்களை உருவாக்கும் 
திருக்குறள் பேரவை

First Published : 03 May 2011 01:54:58 AM IST


இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ள இரண்டரை வயது குழந்தை ஹரினி. காஞ்சிபுரத்தில் திருக்குறள் பேரவை சார்பில் நடைபெற்ற கோடைக்கால பயிற்சி வகுப்பு.
காஞ்சிபுரம், மே 2: காஞ்சிபுரத்தில் 1330 திருக்குறள் தூதுவர்களை உருவாக்குவதற்காக கோடைக்கால இலவச பயிற்சி முகாம் திருக்குறள் பேரவை சார்பில் நடைபெற்று வருகிறது.  ÷திருக்குறள் பேரவை சார்பில் கோடைக்கால பயிற்சி முகாம் காஞ்சிபுரம் நகரத்தில் ஸ்ரீ நாராயணகுரு மெட்ரிக் பள்ளி, தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் மடம் உள்பட ஏழு இடங்களில் நடைபெறுகிறது. இப்பயிற்சி முகாமில் ஒவ்வொரு இடங்களிலும் முதல் கட்டமாக 30 மாணவர்களை சேர்த்து பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  ÷தொழிலாளர் தினமான மே 1-ம் தேதி இப்பயிற்சி முகாம் தொடங்கியது. தற்போது ஒவ்வொரு மையத்திலும் 20 மாணவர்கள் வரை சேர்ந்துள்ளனர்.  ÷இம்மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்சியுடன் நினைவாற்றல், நன்னெறி ஆகியவற்றிலும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. திருக்குறளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் 11 நாள்கள் இப்பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இப்பயிற்சி வகுப்புகளில் 1330 திருக்குறளையும் நன்கு கற்றுத் தேர்ச்சி பெறுபவர்களுக்கு திருக்குறள் தூதுவர்கள் என்ற பட்டம் வழங்கப்படுகிறது.  ÷இதுபோல் ஏற்கெனவே திருக்குறளை நன்கு கற்றுத் தேர்ந்த 18 பேருக்கு திருக்குறள் தூதுவர் என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு உருவாக்கப்படும் திருக்குறள் தூதுவர்களைக் கொண்டு பல்வேறு இடங்களில் திருக்குறள் பயிற்சியை நடத்தவும் திட்டமிட்டு வருகின்றனர்.  ÷தற்போது காஞ்சிபுரம் பகுதியில் நடைபெற்று வரும் பயிற்சி வகுப்புகளை குறள் அமிழ்தன், புலவர் பரமானந்தம், பயிற்சியாளர் எல்லப்பன் ஆகியோர் ஒருங்கிணைத்து வருகின்றனர். இவர்களுடன் சேர்ந்து காஞ்சிபுரம் பயிற்சி மையங்களில் கா.கலைவாணி, ப.கெüசல்யா, ப.காயத்திரி ஆகிய திருக்குறள் தூதுவர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.  ÷காஞ்சிபுரம் நாராயணகுரு மெட்ரிக் பள்ளியில் நடைபெறும் பயிற்சி மையத்தில் ஹரினி என்ற இரண்டரை வயது குழந்தையும் திருக்குறள் பயிற்சி எடுத்து வருகிறது. இங்கு குழந்தைகளுக்கு திருக்குறள் பயிற்சி அளிக்கும் அதேவேளையில் அவர்கள் ஆரோக்கிய வாழ்வு, கோடை வெப்பத்தை தணிப்பதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.  ÷இப்பயிற்சி குறித்து திருக்குறள் பேரவை நிறுவனர் குறள்அமிழ்தனிடம் கேட்டபோது, ""திருக்குறள் பேரவை சார்பில் இதுவரை 18 திருக்குறள் தூதுவர்களை உருவாக்கியுள்ளோம். மொத்தமாக 1330 திருக்குறள் தூதுவர்களை உருவாக்கி அவர்கள் மூலம் தமிழகமெங்கும் பட்டி, தொட்டி எல்லாம் திருக்குறளை பரப்புவதே எங்கள் நோக்கம். அதற்காகவே இலவசமாக இப்பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம்'' என்றார். 

திங்கள், 2 மே, 2011

Dinamani editorial about section 124A : தலையங்கம்: வேண்டாம் இந்தச் சட்டம்!

மிக நல்ல கருத்து. ஆனால்,  நம் நாட்டில் நம் நாட்டு அரசாங்கங்களுக்கு எதிராகப் பேசினால் கூட விட்டு விடுவார்கள். அடுத்த நாட்டு அரசாங்கத்தின் படுகொலைச் செயல்களைப் பேசினால் நம் நாட்டு இறையாண்மைக்கு எதிரானது எனத் தண்டிப்பார்கள். எதிர்க்கட்சியாக இருந்து உரிமைக் குரல் கொடுப்பவர்கள், ஆளும் கட்சியானால் இதே சட்டப்பிரிவை வேண்டாதவர் மீது பயன்படுத்துகிறார்கள். தினமணி தலையங்கம் ஓர் இயக்கமாக மாறி இது போன்ற  தேவையற்ற பல சட்டப்பிரிவுகளை நீக்கும் நிலை ஏற்பட வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! தலையங்கம்: வேண்டாம் இந்தச் சட்டம்!

First Published : 02 May 2011 02:10:14 AM IST


சட்டங்கள் எல்லாமே காலமாற்றங்களுக்கு ஏற்ப மாற்றப்படவேண்டியவைதான். சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப சட்டங்களும் மாற்றப்படாவிட்டால், சட்டமீறல்கள் நடைபெறுவதை எந்த அரசாலுமே தடுக்க முடியாமல் போய்விடும். அந்த அரசும் வெகுஜன விரோத அரசாக மாறி, மக்களின் ஒட்டுமொத்த வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளாக நேரிடும்.  இந்தியா சுதந்திரம் அடைந்து இன்னும் சில மாதங்களில் 64 ஆண்டுகள் நிறைவுபெறப் போகிறது. ஆனால், ஓர் அடிமை நாட்டை ஆள்வதற்காகப் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய பல சட்டங்களை நாம் இன்னும் மாற்றாமலும் அகற்றாமலும் பாதுகாத்து வருகிறோம் என்பதுதான் வேதனையான ஒன்று. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்குவதற்காகவும் அவர்களைத் தண்டிப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள் இப்போது சுதந்திர இந்தியாவில் மக்களின் நியாயமான உணர்வுகளை அடக்குவதற்காகவும் ஒடுக்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது?  சமீபத்தில் டாக்டர் வினாயக் சென் மீது சத்தீஸ்கர் அரசால் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கில் உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தி இருக்கும் சில கருத்துகள், இந்தியச் சட்டவியலில் இருக்கும் இந்தக் களங்கத்தைத் துடைத்து, ஏனைய பல பிரிட்டிஷ் காலனி ஆதிக்க காலத்திய சட்டப்பிரிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைக்கு வலு சேர்த்திருக்கின்றன. குறிப்பாக, தேசத் துரோகக் குற்றம் தொடர்பான 124 அ பிரிவு தேவைதானா என்கிற கேள்வியை எழுப்பி இருக்கிறது அந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.  இந்தியச் சட்டவியலில் 1870-ல் சேர்க்கப்பட்ட 124 அ என்கிற சட்டப்பரிவு, தேசத்துரோகம் என்கிற குற்றத்துக்கு, எந்தவிதமான அடிப்படைக் காரணங்களையும் குறிப்பிடாமல், மூன்று விதமான தண்டனைகளைப் பரிந்துரைக்கிறது. தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், ஆயுள்தண்டனையோ, மூன்றாண்டு சிறைத் தண்டனையோ, இல்லை வெறும் அபராதமோ நீதிபதியின் கணிப்புக்கு ஏற்ப விதிக்கப்படலாம் என்கிறது 124 அ பிரிவு. இவைஇவை தேசத்துரோகம் என்றோ, இன்ன தவறுக்கு இன்ன தண்டனை என்றோ இந்தச் சட்டப்பிரிவில் குறிப்பிடவில்லை என்பதுதான் வேடிக்கை.  1922-ல் மகாத்மா காந்தியடிகள் தமது "யங் இந்தியா' இதழில் இரண்டு கட்டுரைகளை எழுதினார். இந்தச் கட்டுரைகளுக்காக தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். கூண்டில் நிறுத்தப்பட்ட மகாத்மா காந்தி கூறிய கருத்து இதுதான் - ""இந்த அரசுக்கும் ஆட்சிக்கும் எதிராக எழுதுவதும் பேசுவதும் எனக்கு உணர்வுப் பூர்வமான விஷயமாகி விட்டிருக்கிறது. தேசப்பற்று என்பதைச் சட்டத்தின் மூலம் உருவாக்கவோ, முறைப்படுத்தவோ முடியாது. இந்த 124 அ என்கிற சட்டப் பிரிவு என்பது கருத்துச் சுதந்திரத்தை அடக்கவும் ஒடுக்கவும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சட்டங்களில் முதன்மையானது''.  இந்த 124 அ பிரிவின் கீழ் கைது செய்யப்பட்ட சுதந்திரப் போராட்டக் கால தலைவர்களின் பட்டியல் பாலகங்காதர திலகர், வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, லாலா லஜபதிராய், வீரசாவர்க்கார் என்று நீளும். இரண்டு முறை இந்தச் சட்டத்தின் கீழ் தேசத்துரோகக் குற்றத்துக்காக திலகர் கைது செய்யப்பட்டு கூண்டில் நிறுத்தப்பட்டபோதும், நான் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக எழுதவும், பேசவும் செய்தேனே தவிர இந்த தேசத்து மக்களுக்கு எதிராகச் செயல்படவில்லை என்று கூறி, தனக்கு தரப்பட்ட தண்டனையை ஏற்றுக்கொண்டார் என்கிறது சுதந்திரப் போராட்ட சரித்திரம்.  1951-ல் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிதர் ஜவாஹர்லால் நேரு, நாடாளுமன்றத்திலேயே "இதுபோன்ற கண்டனத்துக்கு உரிய சட்டப் பிரிவு எதுவுமே இருக்க முடியாது என்றும், இதை எவ்வளவு சீக்கிரம் அகற்றுகிறோமோ அவ்வளவு நல்லது என்றும் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.  இவ்வளவெல்லாம் இருந்தும் இன்றும் ஏன் இப்படி ஒரு சட்டப் பிரிவு நமது சட்டவியலில் தொடர வேண்டும் என்பதுதான் வியப்பாக இருக்கிறது. மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையே, கருத்துச் சுதந்திரம்தான். கருத்துச் சுதந்திரத்தின் உயிர்ப்பான பகுதி எது என்று கேட்டால், ஆட்சியாளர்களுடனான கருத்து வேறுபாடும், அரசியல் செயல்பாடுகளை கேள்வி கேட்கும் உரிமையும்தான்.  1962-ல் பிகார் மாநில அரசுக்கு எதிரான கேதார்நாத் சிங் வழக்கில் 124 அ சட்டப் பிரிவை அங்கீகரித்த உச்ச நீதிமன்றம் இன்னொரு விஷயத்தையும் தெளிவாக்கியது. அரசின் செயல்பாடுகளை கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பது என்பது தேசத்துரோகம் என்று கருதப்படக் கூடாது என்பதுதான் அது.  "தேசத் துரோகம்' பற்றிய 124 அ சட்டப் பிரிவு 1860-ல் இயற்றப்பட்ட இந்திய சட்டவியலில் கிடையாது. 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சுதந்திரத்துக்கான குரலை ஒடுக்குவதற்காக இந்தச் சட்டப் பிரிவு இணைக்கப்பட்டது. 1898-ல் இது மேலும் கடுமையாக்கப்பட்டு, அரசுக்கு எதிரான கருத்துகள் தேசத் துரோகக் குற்றமாக்கப்பட்டன.  உலகில் உள்ள பல நாடுகளில் தேசத்துரோகம் என்கிற சட்டப் பிரிவு இருந்தால், அதை அகற்றி வருகின்றன. நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் தேசத் துரோகக் குற்றம் வந்ததே நீர்த்துப் போய்விட்ட நிலைமை. பிரிட்டனில் கடைசியாகத் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட சம்பவம் 1947 உடன் முடிந்துவிட்டது. அதற்குப் பிறகு இந்தச் சட்டப் பிரிவே பயன்படுத்தப்பட வில்லை. ஆனாலும் கூட 2010-ல் இந்தச் சட்டப் பிரிவு பிரிட்டிஷ் சட்டவியலிலிருந்து அகற்றப்பட்டது. ஏனைய நாடுகளில் அரசியல் காரணங்களுக்காக எதிர்க் கட்சிகளையும், விமர்சனங்களையும் அடக்கவும் ஒடுக்கவும் இந்தச் சட்டப் பிரிவு, பிரிட்டனை முன் உதாரணம் காட்டி பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அதற்குக் காரணம்.  மக்களாட்சி முறையில் விமர்சனங்கள் எழுப்பப்படுவதும், ஆட்சிக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பதும் தடுக்கப்படக் கூடாது. விமர்சனங்களும், மக்களின் நியாயமான உணர்வுகளும் தேசத்துரோகம் என்று வர்ணிக்கப்பட்டு ஒடுக்கப்படக் கூடாது. பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கால 124 அ பிரிவு சட்டம், சுதந்திர இந்தியாவுக்குத் தேவையில்லை. மக்களின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் விமர்சனங்களையும் சட்டத்தால் அடக்க நினைக்கும் மடமைக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.  தேவையில்லை இனியும் இந்த 124 அ!

வகுப்புகளுக்கு மட்டம்போடும் மாணவர்களுக்குத் தேர்வு எழுதக் கருணை காட்டக்கூடாது: தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

நாம் பாராட்டுகின்ற வெளிநாட்டுக் கல்வி முறைகளில் வருகைக்கு முதன்மை அளிப்பதில்லை. அதனைப் பயன்படுத்தி நூலக வாசிப்பிற்கு முதன்மை அளித்து நம் கல்வி முறையை மாற்றலாமே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
 
 
வகுப்புகளுக்கு மட்டம்போடும் மாணவர்களுக்கு தேர்வு எழுத கருணை காட்டக்கூடாது: தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

First Published : 02 May 2011 01:06:52 AM IST


புது தில்லி, மே 1: வகுப்புகளுக்கு மட்டம் போடும் மாணவர்களுக்கு தேர்வு எழுத கருணை காட்டக் கூடாது என்று தில்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.  ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தில் இதழியலை பாடமாக எடுத்து படித்த 3 மாணவர்கள் வகுப்புகளுக்கு ஒழுங்காக செல்லாமல் மட்டம் போட்டனர். இந்த 3 மாணவர்களுக்கும் வருகை பதிவு 75 சதவீதத்துக்கும் கீழ் குறைந்தது. இதையடுத்து இவர்கள் இறுதியாண்டு தேர்வு எழுத பல்கலைக் கழகம் அனுமதி மறுத்தது.  இதையடுத்து 3 மாணவர்களும் தாங்கள் அளித்த மருத்துவ சான்றிதழை ஏற்று தேர்வு எழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி தில்லி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி கைலாஷ் காம்பீர் விசாரித்து தீர்ப்பு கூறினார். தீர்ப்பில் அவர் கூறியது:  மாணவனோ அல்லது மாணவியோ அவர்கள் படிக்கும் பாடத்தை அறிய முழு ஈடுபாட்டுடன் வகுப்புகளுக்குச் சென்றால்தான் அவர்கள் மேன்மை அடைய முடியும். ÷கல்லூரி,பல்கலைக் கழகங்களில் மாணவர்களின் வருகை பதிவு ஒரு சட்டம். அதற்கு விதி விலக்கு அளிக்க முடியாது. இந்த 3 மாணவர்களுக்கும் கருணை காட்டினால், ஒழுங்கீனத்துக்கு அங்கீகாரம் கொடுத்ததுபோல் ஆகிவிடும். இந்த விஷயத்தில் கண்டிப்பாக இருப்பது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் கல்லூரி,பல்கலைக் கழகங்களுக்கும் நன்மை பயப்பதாக இருக்கும்.  மாணவர்களின் வருகை பதிவு விஷயத்தில் பல்கலைக் கழகங்கள் தங்கள் விதிகளில் உறுதியாக இருக்கும்படி வலியுறுத்தி உச்ச நீதி மன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. இதில் விதிமுறை ஏதாவது தளர்த்தினால் அது பரிகாசத்துக்கு இடமாகிவிடும். இதனால் மாணவர்கள் வருகை பதிவு விஷயத்தில் நிவாரணம் தேடி நீதிமன்றத்துக்கு வரக் கூடாது.  அவசரத் தேவை ஏற்பட்டால் மாணவர்களின் வருகை பதிவில் 2 வாரங்கள் தளர்த்த பல்கலைக் கழகத்துக்கு அதிகாரம் உள்ளது. அதற்கு மேல் தளர்த்தக் கூடாது. ஒரு மாணவர் வகுப்புக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அவரின் மருத்துவ சான்றிதழை பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் பரீசிலிக்கலாம் என்று நீதிபதி கைலாஷ் காம்பீர் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 1 மே, 2011

May Day - Dinamalar Photo Message


May Day - Dinamalar Photo


China supports srilanga: ஐ.நா. அறிக்கை: இலங்கைக்கு சீனா ஆதரவு

அரசு அறியாமலோ அரசை மீறியோ படைத்துறையினர் போர்க்குற்றங்கள் புரிந்திருந்தால் அரசு உசாவுவதில் பயன் உண்டு. ஆனால், போர்க்குற்றங்களையும் இனப்படுகொலைகளையும்
சிங்கள அரசே புரிந்துள்ளதால்  குற்றவாளியே எப்படி உசாவவும் நீதி வழங்கவும் முடியும்?  சீனா தொடர்ந்து சிங்களத்திற்குச் சார்பாக இருப்பதற்காகவாவது இந்தியா ஈழத்தை ஆதரிக்க வேண்டாவா? இனப்படுகொலைகளில் சீனாவிற்கு உள்ள பங்கும் உசாவப்பட்டு அனைத்துக் குற்றவாளிகளுக்கும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! ஐ.நா. அறிக்கை: இலங்கைக்கு சீனா ஆதரவு

First Published : 01 May 2011 03:32:23 AM IST


பெய்ஜிங், ஏப். 30: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையின் போது பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டது போர்க்குற்றமே என்ற ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உலக நாடுகள் மே மத்தியில் இலங்கைக்கு நெருக்கடி அதிகரித்து வந்த நிலையில், திடீரென சீனா அதற்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது.  இலங்கை அதிபர் ராஜபட்சயை போர்க் குற்றவாளியாக அறிவித்து விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இப் பிரச்னையை இலங்கையிடமே விட்டுவிடுங்கள், பெரிதுபடுத்த வேண்டாம். இது தொடர்பாக விசாரணை நடத்த அந்நாட்டு அரசே குழு ஒன்றை அமைத்துள்ளதால், அதன் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளே சரியானதாக இருக்கும் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ சனிக்கிழமை தெரிவித்தார்.  இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையானதை, உலக நாடுகள் வெளியில் இருந்து செய்தால் போதும் என்றும் ஹாங் அதில் குறிப்பிட்டுள்ளார்.

+2 results on May 9th : மே 9-இல் + 2 தேர்வு முடிவுகள்

நல்ல வேளை. அதிகாரிகள் சொன்னவாறு தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு, அவை செல்லாது அமைச்சர் அறிவிக்கும் நாளில் வெளியிடுவதுதான் சரியான முடிவுகள் எனச் சொல்லாமல் எப்படியோ அறிவித்து விட்டார்களே! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


மே 9-ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
First Published : 01 May 2011 02:38:36 AM IST

Last Updated : 01 May 2011 03:56:26 AM IST
சென்னை, ஏப். 30: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது. இதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சனிக்கிழமை அறிவித்தார்.  மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலமாகவும் அரசுத் தேர்வுகள் துறையினரால் அறிவிக்கப்படும் இணையதளம், எஸ்எம்எஸ், தொலைபேசி எண்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  "மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் கிட்டதட்ட முடிவடைந்துவிட்டன. கம்ப்யூட்டரில் பதிவான மதிப்பெண்களில் உள்ள தவறுகளைத் திருத்தும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பணிகளும் மே 8-ல் தான் முடிவடையும். எனவே வரும் திங்கள்கிழமை (மே 9-ம் தேதி) முடிவுகள் அறிவிக்கப்படும்' என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.  பிளஸ் 2 தேர்வு முடிவு மே 14-ம் தேதியும், பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு மே 25-ம் தேதியும் வெளியிடப்படலாம் என்று பள்ளி கல்வித்துறை செயலர் டி. சபிதா கடந்த வாரம் தெரிவித்தார். இந்த அறிவிப்பு அரசைக் கலந்து ஆலோசிக்காமல் பள்ளிக் கல்வித்துறையே தன்னிச்சையாக அறிவித்தது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டினார்.  "தேர்வு முடிவு தேதிகளை அறிவிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரிகள், அதன் அமைச்சரைக் கலந்து ஆலோசித்து விட்டு முதல்வரின் ஒப்புதலைப் பெறுவர். அவர் அனுமதி அளித்த பிறகு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மூலமாகத் தேர்வு முடிவு தேதி அறிவிக்கப்படும். இதுவே நடைமுறை. ஆனால், இதற்கு மாறாக, பள்ளிக் கல்வித்துறை செயலரே தேர்வு முடிவு தேதியை அறிவித்துள்ளார். இந்த விஷயத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது. தேர்தல் தேதி முடிவு அறிவிப்புக்கும், தேர்தல் நடத்தை நெறிமுறைகளுக்கும் தொடர்பில்லை'' என்று அமைச்சர் தெரிவித்தார்.  அமைச்சரின் எதிர்ப்பால், பிளஸ் 2 முடிவுகள் வெளியாகும் தேதியை முடிவு செய்வதில் குழப்பம் நிலவியது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மே 9-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு திடீரென அறிவித்துள்ளார்.  10 வகுப்புத் தேர்வு முடிவு: பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இப்போது நடைபெற்றுவருகிறது. பணி முடிந்ததும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும்.