சனி, 10 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 127 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 2

 
(தோழர் தியாகு எழுதுகிறார் 126 : சீமான் ‘தமிழவாளரா’? தொடர்ச்சி)

வடவர் வருகையும் தமிழ்நாடும் 2

 நம்முடைய ஈழத் தமிழர்கள் 10 இலக்கம் பேர் மேலை நாடுகளில் போய் வாழ்கிறார்கள், உழைத்துப் பிழைக்கிறார்கள். அவர்கள் ஆசைப்பட்டுச் செல்லவில்லை. இனக் கொலையினால் விரட்டப்பட்டுச் சென்றார்கள்;  மீண்டு செல்ல வாய்ப்பு இருந்தால் மீளத்தான் விரும்புவார்கள். யாருக்கும் அகதியாக, வழியற்றவராக, ஏதிலியாக வாழப் பிடிக்காது. இன்றைக்குப் பொருளியல் காரணங்களுக்காக, வறுமையின் காரணமாக அகதிகளாக விரட்டப்பட்டு இடம்பெயர்ந்து செல்பவர்களுடைய கூட்டம்  உலகெங்கும் அதிகமாக இருக்கிறது.  இதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற பொருளியல் சூழல், பொருளியல் நெருக்கடி. தாராளியம் லிபரலிசம்  என்றெல்லாம் சொல்கிறார்கள்   (LPG – Liberalization, Privatization and Globalization). எதை ‘லிபரலைசு செய்திருக்கிறார்கள்? எதைத்  தாராளம் ஆக்கி யிருக்கிறார்கள்?  பெருமுதலாளிகள் சுரண்டுவதைத் தாராளமாக்கி இருக்கிறார்கள்.  அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும்  நர வேட்டை நடத்துவதற்கான கதவுகளை திறந்து விட்டிருக்கிறார்கள்

அமெரிக்க நிறுவனம் ஒன்று இந்திய நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டுகிறது என்றால்? உடனே அது இந்த நாட்டின் மீதான தாக்குதல் என்கிறார் அதானி.   அமெரிக்க நிறுவனத்திடம் நீதானே போய்ப் பங்குகளை விற்றாய்? பங்குகளை வாங்கியவன் மோசடிகளை வெளிப்படுத்தினால், அப்போது அது நாட்டின் மீதான தாக்குதல் ஆகிறது. இந்தியாவிற்கு வெளியே நான் பங்குகளை விற்க மாட்டேன் என்று முடிவு எடுக்க முடியுமா உன்னால்? உலகப் பணக்காரர்கள் வரிசையில் இடம்பெறுவதற்கு உனக்கு யார் தேவைப்படுகிறார்கள்?  உலகெங்கும் சென்று சுரண்ட வேண்டி இருக்கிறது. ஆத்திரேலியாவில் நிறுவனம் இருக்கிறது, வங்கதேசத்தில் நிறுவனம் இருக்கிறது பல்வேறு தொழில்களில் முதலீடு செய்கிறார்கள். இதுதான் தாராளமயம், இதுதான் தாராளியம்.

இந்தப் புதுத் தாராளியம்தான் 1990களில் தொடங்கி இந்திய அரசினுடைய கொள்கையாக இருக்கிறது. இப்போது இது தீவிரமடைந்திருக்கிறது முதலீட்டை ஒரு வினாடிச் செய்தியில், கணினியில் ஒரு சொடுக்கின் மூலமாக பல்லாயிரம் அயிரைப் பேரடி(கிலோமீட்டரு)க்கு அப்பால் பெயர்த்து விடலாம். இண்டன்பெருக்கு சார்ட்டுசு(Hindenberg shorts)” என்று சொல்வார்கள், ஒரு குறுகிய காலத்திற்கு பங்குகளை வாங்கி விற்கிற நிறுவனம், அதற்காக அமெரிக்காவிலிருந்து இரண்டு பேர் புறப்பட்டு மும்பைக்கு வந்து வாங்க வேண்டியதில்லை. திரும்பி மும்பை சந்தையில் அவர்கள் விற்பதற்காக இங்கு வர வேண்டிய தேவை இல்லை. இருந்த இடத்தில் குளிர்ப்பதனம் செய்த அறைக்குள் உட்கார்ந்தபடி பல கோடிகள் பரிமாறப்படுகின்றன. இது மூலமுதலுக்கு இருக்கிற வாய்ப்பு. இதே வாய்ப்பு மறுமுனையில் இருக்கிற தொழிலாளிக்கு இருக்கிறதா என்றால் இல்லை.

 அவனுடைய உழைப்பு அமெரிக்காவிற்குப் போக வேண்டும் என்றால் அந்த உழைப்பாளியே அமெரிக்காவிற்குப் போக வேண்டும் மும்பையில் போய் உழைப்பை செலுத்த வேண்டும் என்றால் மும்பைக்கு நீங்களே புறப்பட்டுச் செல்ல வேண்டும். அதனுடைய விளைவு என்ன?  சுரண்டுகிற முதலீடு எங்கு வேண்டுமானாலும் பறந்து பறந்து செல்கிறது சுரண்டப்படுகிறவன் வெயில்  மழையில் நடந்து நடந்துதான்  போக முடியும்.  அப்படியிருந்தும் போகிறார்கள் என்றால் என்ன காரணம்?  

சார்கண்டிலே பழங்குடி மக்களுக்காகப் போராடி இந்த அரசினால் பொய் வழக்குப் போடப்பட்டு சிறையிலேயே நிறுவனப் படுகொலை செய்யப்பட்ட இசுடேன் சுவாமி எழுதுகிறார். இந்தத்  தமிழ்நாட்டிலே பிறந்தவர்.  அவர் பழங்குடியின மக்களுக்குத் தொண்டு செய்வதற்காக சார்கண்டு போகிறார்.  நான் தமிழ்நாட்டில் இருந்த காலத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள்  என்று படிக்கிற போது அந்தச் செய்தியைப் பெரிதுபடுத்தியதே இல்லை. ஆனால் அந்த  சார்கண்டு பழங்குடி மக்களை பார்த்த போது அதனுடைய பொருள் புரிந்து, எனக்கு வலித்தது என்று அவர் சொல்கிறார்.  ஆக யாரும் விரும்பித் தேர்ந்தெடுத்து வரவில்லை. வறுமையால் துரத்தப்பட்டு வருகிறார்கள். இங்கே இருக்கின்ற வாய்ப்புகள் கூட அவர்களுக்கு இல்லை, அதனுடைய விளைவு என்ன? அரசாங்கம் அக்னிபத்து என்கிற ஒரு திட்டத்தைக் கொண்டுவந்து பட்டாளத்தில் கிடைக்கிற வேலைவாய்ப்பையும் சுருக்கிய போது அதற்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு கிடைக்கிற ஒரே ஒரு வேலைவாய்ப்பு அதுதான்.  

 இந்தச் சூழ்நிலையில், இப்படி யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போகலாம், அவரவர் தாயகம் என்பது எப்படி வேண்டுமானாலும் தொலையட்டும் என்பதல்ல நாம் சொல்ல வருவது. இதைத் தடுப்பதற்கு என்ன வழி என்பதை நன்றாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதானியினுடைய முதல் மும்பையிலே இருந்து கொண்டு அமெரிக்காவிற்கும் ஆத்திரேலியாவிற்கும் போவதற்குச் சட்டம் தடையற்ற வாய்ப்பை வழங்குகிறது அவர்களுக்கு ஒரு தடையும் இல்லை. 1990க்கு முன்பு முதலீட்டை வெளியேற்றுவதற்கு, இலாபத்தை எடுத்துப் போவதற்கெல்லாம் சில கட்டுப்பாடுகள் இருந்தன.  அதேபோல் அயல் நாட்டு முதலீடு செய்வதற்கும் சில வரம்புகள் இருந்தன – இந்த விழுக்காட்டிற்கு மேல் போகக்கூடாது என்று. இன்றைக்கு அதெல்லாம் ஒன்றுமே இல்லை. எந்தப்  பெரிய மீன்களும் சிறிய மீன்களை விழுங்கலாம், முடிந்தால் சிறிய மீன் திருப்பி பெரிய மீனை விழுங்கிக் கொள் என்று சவால் விடுகிறது.   

காட்டுச் சட்டம் நாட்டுச் சட்டம் ஆகி விட்டது. ஆனால் தொழிலாளிக்கு அப்படி இல்லை. ஏன் வட மாநிலத் தொழிலாளி தமிழ்நாட்டிற்கு வருகிறார். சிங்கப்பூருக்குப் போகலாமே! வேலைவாய்ப்பு இருக்கிறதா என்று மலேசியாவில் போய்த் தேடலாமே! இல்லை, அந்த அரசுகள் எங்கே கடவுச்சீட்டு? எங்கே நுழைவுச்சீட்டு என்று கேட்கின்றன.  நீங்கள் கடவுச்சீட்டு இல்லாமல் எங்கள் நாட்டைத் திறந்து விட்டுள்ளோம் என்று சொல்வதற்கு ஒரு நாடும் இல்லை. கனடா அரசு தாராளமாக நடந்து கொள்கிறது, தமிழர்களுக்கெல்லாம் இடம் கொடுத்து இருக்கிறது நீங்கள் கனடாவிற்குப் போய் பிழைக்கலாமா என்று முயன்றால் நீங்கள் அனுமதி கேட்கிற விண்ணப்பத்தில் அந்த நாட்டில் இல்லாத ஓர் உழைப்புத் திறன் உனக்கு இருக்கிறதா என்று திருப்பிக் கேட்கிறது. அது இல்லை என்றால் நீங்கள் போக முடியாது.

(தொடரும்)
தோழர் தியாகு, தாழி மடல்

வெள்ளி, 9 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 126 : சீமான் ‘தமிழவாளரா’ ?

 

(தோழர் தியாகு எழுதுகிறார் 125 : நாற்றங்கால் – தொடர்ச்சி)

சீமான் ‘தமிழவாளரா?

திமுக ஏற்கெனவே அதற்குரிய வழியில் பாசகவை வீழ்த்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் அதிகாரத்தைத் தீர்மானிக்கிற வரை தேர்தல் போராட்டமும் அதில் குடியாட்சியம் பெறுகிற வெற்றியும் முகன்மையானவை. ஆர்எசுஎசு ஏவலின் படி மோதியும் அமித்துசாவும் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பாசக ஆட்சியை நீக்கமற நிறுவ எல்லா முயற்சியும் செய்து கொண்டிருக்கும் நிலையில் அந்த முயற்சிக்குத் தடையாக எந்தக் கட்சி இருந்தாலும் அந்தக் கட்சி பாசிச எதிர்ப்பு அணியில் இடம்பெறுவது ஒரு புறஞ்சார் உண்மை. அகஞ்சார்ந்து அக்கட்சி இதை உணர்ந்து ஏற்றாலும் ஏற்கவில்லை என்றாலும் இந்தப் புறஞ்சார் உண்மையைக் கணக்கில் கொள்ளத் தவறுவது குடியாட்சியத்தை நலிவுறுத்தும்.

இவ்வாறு புறஞ்சார்ந்து பாசக எதிர்ப்பு அணியில் இடம்பெறும் மற்றக் கட்சிகளுக்கும் திமுகவுக்கும் ஓர் அடிப்படை வேறுபாடுள்ளது. திராவிட இயக்கத்தின் அரசியல் விளைச்சல் என்ற முறையில் திமுக பாசிச எதிர்ப்புக்குக் கூடுதல் தகுதி பெறுகிறது. தந்தை பெரியார் தொடங்கி, திராவிட இயக்கம் நடத்தியுள்ள பார்ப்பனிய எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு இயக்கம் சமூகப் பண்பாட்டுத் தளத்தில் ஆற்றியுள்ள பணியின் தாக்கம் (அரசியலில் பல விட்டுக் கொடுப்புகள் இருந்த போதிலும்) இன்றளவும் பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான கருத்தியல் அரணாகத் திகழ்கிறது.

பெரியாரும் திராவிட இயக்கமும் ஆற்றியுள்ள அடிப்படையான சமூகநீதிப் பணியை உணர்ந்தேற்று ஆக்கவழியில் திறனாய்வு செய்து அதன் மீது புதிய சூழலுக்கேற்பத் தமிழ்த் தேசியச் சமூக நீதிக் கருத்தியலையும் அரசியலையும் கட்டியெழுப்புவதுதான் நம் கடன். தோழர் பெ. மணியரசனைப் போன்றவர்கள் இந்தக் கடமையைச் செய்யத் தவறி விட்டார்கள். அவர்கள் திமுக அரசியல் மீதான எதிர்ப்பைப் பெரியார் எதிர்ப்பாகவும் திராவிட இயக்க எதிர்ப்பாகவும் மாற்றி மலினப்படுத்தி விட்டார்கள்.

சீமானை இந்தக் கணக்கில் நான் சேர்க்கவே இல்லை. அவர் நிலையான கொள்கை இல்லாத குழப்பவாதி. அறிவியல் பார்வையற்றவர். குடியாட்சியப் பண்பில்லாதவர்.

பாண்டேக்கு நன்றி தெரிவித்ததாலேயே சீமானை ஆரியத்துவவாளர் போல் பேசக் கூடாது என்கிறார் சிபி. இடதுசாரிகளை முன்பொரு முறை இந்தியாவாளர்கள் என்று எழுதியிருந்தார். சீமான் ஆரியவாளரோ இந்தியவாளரோ அல்லவென்றால் தமிழவாளரா? தமிழ் குறித்து அவர் கட்டும் மீப்புனைவியத் தோரணங்கள் அவரைத் தமிழ்த் தேசியர் ஆக்கி விட மாட்டா.

சீமானின் சொல்லும் செயலும் அவரைப் போலித் தமிழ்த் தேசியராகவே நமக்கு உணர்த்தி நிற்கின்றன. அவருக்குத் தத்துவ முலாம் பூசுகிறார் பெ. மணியரசன். தமிழ்த் தேசிய உணர்வு பெற்ற – உணர்வு மட்டும் பெற்ற – பல்லாயிரம் இளைஞர்களின் தன்னளிப்பு மிக்க உழைப்பை வீணாக்கி வருகிறார் சீமான் என்ற உண்மையை அன்பர் சிபி போன்றவர்கள் விரைவில் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

இனிய அன்பர்களே! 

சென்ற பிப்பிரவரி 14 நாள் மாலை தாம்பரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்ற வடவர் வருகையும் தமிழ்நாடும் என்ற தலைப்பில் என் உரையின் சுருக்கம் உங்கள் பார்வைக்கு:

“வடவர் வருகையும் தமிழ்நாடும்”

தமிழ்நாட்டில்  வடவர் வருகை என்பது ஒரு பெரிய சிக்கலாகியிருக்கிறது.  இது மக்கள்தொகை இயைபை மாற்றக் கூடிய அளவிற்குச் சென்று விடும் என்ற அச்சத்தை பலரும் தெரிவித்து வருகிறார்கள். தொடர்வண்டிப் போக்குவரத்தின் வழியாக அன்றாடம் ஏராளமானவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். தேநீர்க் கடை முதல் பெரிய தொழிற்சாலைகள் வரை அரசின் தொடர்வண்டித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் கிடைக்கக் கூடிய வேலைகளுக்காக அவர்கள் போட்டியிடுகிறார்கள்.

 வேலை கொடுக்கிற இடத்தில் இருப்பவர்கள் அரசு நிறுவனங்களானாலும் தனியாரானாலும்  கூலியைக் குறைப்பதற்கு உழைப்புச் சந்தையில், வழங்கல் (சப்ளை) மிகையாகி வேலையில்லாப் பட்டாளம் பெருகுவதைத்  தங்களுக்கு ஆதாயமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  நாம் இந்த உண்மையை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். கண்ணுக்குப் புலப்படும் நிகழ்வுகளை மட்டும் பார்த்து, அடியாழத்தில் மறைந்துள்ள மூல காரணங்களைக் காணத் தவறினால் தீர்வு நாட முடியாது.

 வடவர் வருகை என்று சொல்கிற போது இந்திய நாட்டினுடைய வட பகுதிகளில் இருந்தும் வருகிறார்கள்; வேறு சில மாநிலங்களில் இருந்தும் வருகிறார்கள் இங்கு எனக்கு முன்பு ஒரு தோழர் சுட்டிக் காட்டியது போல்  இங்கிருந்து வடக்கே மேற்கே மற்றப் பகுதிகளுக்கு வேலைக்குச் செல்லக் கூடியவர்களும் இருக்கிறார்கள். அது புலம்பெயர் தொழிலாளர் சிக்கல் என்பதை மகுடை (கொரோனா) பெருந்தொற்றுக் காலத்தில் நாம் கண்கூடாகப் பார்த்தோம். தொழில் வளர்ச்சிக்கும் சந்தை விரிவாக்கத்திற்கும் என்று சொல்லி அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகள், நாற்கரச் சாலைகள்  ஏழை எளிய மக்கள் வெறுங்காலோடு கொடும் வெயிலில் நூற்றுக்கணக்கான அயிரைப் பேரடி (கிலோமீட்டர்), ஆயிரம் அயிரைப் பேரடி  நடந்தே செல்வதற்குரிய சாலைகளாக மாற்றப்பட்டன. சின்னஞ்சிறு குழந்தைகள் கால்களில் செருப்பு கூட இல்லாமல் கொதிக்கும் வெயிலில் அனலால் துடிக்க துடிக்கச்  சென்ற காட்சிகளை எல்லாம் அந்த நேரம் பார்த்தோம் 

ஏன் இப்படி?  இந்த ஊரிலே பிறந்து வாழ்கிற இளைஞன் எங்கே வேலை வாய்ப்பைத் தேடுவான்?  இந்த ஊரிலேயேதான் தேடுவான்.  அல்லது பக்கத்தூரிலேயே தேடுவான். இதுதான் மனித இயற்கை. வெளியிடங்களுக்குப் போனாலும் போய் விட்டுத் திரும்பி வந்து விடத்தான் விரும்புவார்கள் பறவைகள் கூட இரை தேடி சென்றதற்குப் பிறகு இரவு கூடு திரும்பத்தான் ஆசைப்படுகின்றன. அவை கூடு திரும்புவதற்குத் தடை இல்லை என்றால் மனிதர்கள் கூடுதிரும்புவதற்கு மட்டும் தடை உள்ளதே என்று வருந்திப் பாடுகிறோம்.

(தொடரும்)
தோழர் தியாகு, தாழி மடல்

வியாழன், 8 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 125 : நாற்றங்கால்

  (தோழர் தியாகு எழுதுகிறார் 124: நம்ப முடியுமாதொடர்ச்சி)

நாற்றங்கால்

தாழி நூறு கண்டதை ஒட்டி வாழ்த்துக் கூறியுள்ளார் அன்பர் இலக்குவனார் திருவள்ளுவன்:

நூறாவது மடல் பன்னூறாயிரமாகத் தொடர வாழ்த்துகள்.

0

நன்றி அன்பரே! தொடர்ந்து 100 நாள் – ஒருநாள் கூட விடாமல் தாழி மடல் எழுதியுள்ளேன். தொடங்கும் போதே எடுத்துக் கொண்ட உறுதிதான்: என் இறுதி நாள் வரை தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பேன்.

ஒருசிலர் மட்டும்தான் தொடர்ந்து படிக்கின்றீர்கள் என்பது எனக்குத் தெரியும். வேறு சிலர் படிக்க நேரமில்லை என்கின்றனர். பிறகு படிப்பதற்காகச் சேர்த்து வைத்திருப்பதாகவும் சொல்கின்றனர். சேர்த்து வைத்துப் படிப்பதா? படித்து விட்டுச் சேர்த்து வைப்பதா? என்பது அவரவர் முடிவு. ஆனால் இப்படிச் சொல்கிறவர்கள் பெரும்பாலும் படிக்கப் போகின்றவர்களே அல்லர். இன்று நேரமில்லை, நாளை படிக்கிறோம் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம். மொத்தமாக எல்லாவற்றையும் சேர்த்து வைத்துப் படிப்பதாகச் சொல்வதை நம்புவதற்கில்லை. அதனால் பெரிய பயனும் இல்லை. ஆறிய கஞ்சி பழங்கஞ்சிதான்.

இயக்கத் தோழர்களிலும் கூட தாழி மடல் படிப்பது, அதில் வரும் உரையாடல்களில் பங்கேற்பது என்பதில் அக்கறை இல்லாமல் முகநூலில் வேறு எதெதற்கோ நேரம் செலவிட்டுக் கொண்டிருப்பவர்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். தாழியில் எழுதியதைப் படிக்காமல் அதே பொருள் குறித்து என்னிடம் தொலைபேசியில் ஐயந்தெளியும் முயற்சி எனக்கு எரிச்சலூட்டவில்லை. இனிமேலாவது படியுங்கள் என்றுதான் பொறுமையாக எடுத்துச் சொல்கிறேன். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக உரையாடித்தான் தெளிவுண்டாக்க வேண்டுமென்றால் தாழி எதற்கு?

தாழி என் அரசியல் முயற்சிகளின் இறுதிக் களம். படிக்கவும் புதிதாக ஒருசிலவற்றைக் கற்கவும் விரும்புகிறவர்களுக்காகத்தான் எழுதுகிறேன். பொழுது போகாமல் இந்த வேலையைச் செய்யவில்லை. பொழுதுபோக்கிற்காகப் படிக்கிறவர்களுக்கும் தாழி பொருத்தமில்லை. கொல்லன் பட்டறையில் வண்ணத்துப் பூச்சிகள் பறப்பதில்லை.     

நான் கேட்க விரும்புவது: எனக்கு எழுத நேரம் கிடைக்கிறது. உங்களுக்குப் படிக்க நேரமில்லையா? தோழர் சமந்தாவுக்கு நாள்தவறாமல் எழுத நேரம் கிடைக்கிறது. தாழி அணியில் என்னோடிருந்து உழைக்கும் தோழர்கள் மகிழனுக்கும் தமிழ்க் கதிருக்கும் நேரம் கிடைக்கிறது. உங்களுக்குப் படிக்க நேரமில்லையா?

எவ்வித உணர்ச்சிக்கும் ஆட்படாமல் உங்களுக்கு ஓர் உண்மையைச் சொல்ல வேண்டும்: “நான் நிரந்தரமானவன் எனக்கு மரணமில்லை” என்று கண்ணதாசனைப் போல் என்னால் பாட முடியாது. பாரதியைப் போல் காலனை அருகில் கூப்பிட்டு எட்டி உதைக்கவும் என்னால் முடியாது. உயிருள்ள வரை, உடலில் தெம்புள்ள வரை என் கடமையை ஆற்ற வேண்டும் என்றுதான் மீண்டு வர முடியாத தாழிக்குள் என்னை அமர்த்திக் கொண்டு வேலை செய்கிறேன். இந்த உழைப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், இப்போதே பயன்படுத்திக் கொள்ளுங்கள். இப்போது இல்லையேல் எப்போதுமில்லை ()NOW OR NEVER. இல்லையேல் பிறகு ஒரு நாள் “இவன் வாழ்ந்த போது பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டோம்” என்று வருந்தும் நிலை உங்களில் ஒருசிலருக்காவது வரும்.

தாழி மடல் அனுப்புங்கள் என்று கேட்டு மின்னஞ்சல் முகவரி கொடுத்தவர்களுக்கு மட்டும்தான் அனுப்புகிறோம். படிப்பதில் ஆர்வமில்லாதவர்கள் இந்தப் பட்டியலிலிருந்து விலகிக் கொள்ளலாம். சும்மாதானே கிடைக்கிறது? வரட்டுமே! என்ற மனநிலை வேண்டா.

தாழி மடலைப் படித்து இலட்சம் பேர், ஏன், ஆயிரம் பேர் சரியான நிலைப்பாடுகளுக்கு வந்து சேருவார்கள் என்ற மயக்கம் எனக்கு இல்லை. ஒரு நூறு பேர், அல்லது பத்துப் பேராவது தாழி படித்துக் குமுக உணர்வும் குமுக அறிவும் பெற்று நம் தமிழ்க் குமுகத்தையும் அதன் வழி உலகையும் மாற்றுவதற்கு அறிவும் துணிவும் ஈக உணர்வும் பெறுவார்கள் என்றால் அதுவே தாழியின் வெற்றியாக அமையும்.

வயல் பெரிது என்றாலும், நாற்றங்கால் சிறிதே

நான் மக்களை நம்புகிறேன். வரலாற்றின் ஏரணத்தை நம்புகிறேன். இந்த நம்பிக்கையோடும் தெளிவோடும் இணைந்து செல்ல முன்வருகிறவர்களுக்காக உழைக்கிறேன். எஞ்சிய வாழ்நாளெல்லாம் உழைக்கவும் காத்துள்ளேன். “கடை விரித்தேன் கொள்வாரில்லை” என்று வருந்தும் நிலை ஒருநாளும் எனக்கு வந்ததில்லை, இனியும் வராது.

என் சிறைவாழ்க்கை உங்களில் சிலருக்காவது தெரிந்திருக்கும். தனிமைக் கொட்டடியிலும் நான் தனிமைப்பட்டதில்லை. நடைமுறையில் தனிமைப்படுத்தப்பட்டதுண்டு. கருத்தியலில் ஒருபோதும் இல்லை.     

மக்களிடம் குற்றமில்லை, அவர்களுக்கு உண்மைகளை உணர்த்தும் நமது முயற்சியில்தான் குறை உள்ளது என்று அரை நூற்றாண்டுக்கு மேல் மனம் பயின்றுள்ளேன்.   

தொடர்வோம் தாழி! முதல் நூறு முடிந்தது என்று ஓய்வு கொள்ளப் போவதில்லை. நீருக்கு மேல் அழகாகவும் அமைதியாகவும் மிதந்து செல்லும் வாத்தின் பாதத் துடுப்புகள் நீருக்கடியில் விரைந்து இயங்கிக் கொண்டேயிருக்கும். இல்லையேல் மூழ்க நேரிடும்.       

என்ன செய்யலாம்?

(தொடரும்)
தோழர் தியாகு, தாழி மடல், 102

புதன், 7 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 124: நெடுமாறனையும் காசி ஆனந்தனையும் நம்ப முடியுமா?

 


(தோழர் தியாகு எழுதுகிறார் 123: அதானியை எதிர்த்து மூன்று முழக்கங்கள் – தொடர்ச்சி)

நெடுமாறனையும் காசி ஆனந்தனையும் நம்ப முடியுமா?

இனிய அன்பர்களே!

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் திரு பழ,நெடுமாறன் கொடுத்துள்ள செய்தியைப் பற்றி என்னிடம் பலரும் கேட்டு வருகின்றனர். அஃதாவது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடனிருப்பதாக அவர் சொல்வது உண்மைதானா? என்று கேட்கின்றனர். உண்மையா? என்று தெரியாது. உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி என்பதுதான் என் விடை.

பிரபாகரன் இறுதிப் போர்க் களத்தில் வீரச்சாவடைந்து விட்டார் என்று ஏற்கெனவே நான் சொல்லி வருகிறேன். எனக்குக் கிடைத்த செய்திகள் அடிப்படையில்தான் பெருமாவீரன் பிரபாகரனுக்கு வீர வணக்கம் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதி விட்டேன். பிரபாகரனுடன் இறுதி வரை களத்தில் நின்ற வீரர்கள் எனக்குச் சொன்ன செய்தி இதுதான். குறிப்பாக பிரபாகரனின் மெய்க்காவல் படையில் இருந்த ஒருவர் – போரில் ஒரு காலை இழந்தவர் – எமதியக்கப் பாதுகாப்பில் இருந்த போது இதை உறுதி செய்தார்.

பிரபாகரன் சாகவில்லை என்று தொடக்கத்திருந்தே சொல்லிக் கொண்டிருப்பவர் நெடுமாறன். பிரபாகரன் உயிருடனில்லை என்று சொல்கிறவர்களை எல்லாம் துரோகிகள் என்று சொல்லி மறுதலித்து வந்தார் என்பதை அறிவேன். நெடுமாறன் தன் உள்மன விருப்பத்தையே மெய்ம்மையாக நம்பி முன்வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் என் கருத்தாக இருந்தது. ஈழப் போருடன் ஆழ்ந்த அறிமுகம் கொண்ட தமிழ்நாட்டுத் தலைவர்கள் சிலரிடம் பேசியதில் புதிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. நெடுமாறன் சொல்கிறார், உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி! என்பதோடு நிறுத்திக் கொண்டனர். தோழர் கொளத்தூர் மணி மட்டும் எனக்கு ஒரு புதிய வெளிச்சம் தந்தார்.

2009 மே முள்ளிவாய்க்காலுக்குப் பின் அட்டோபர் 11ஆம் நாள் சென்னையில் தமிழினப் பாதுகாப்பு மாநாடு நடத்தினோம். அந்த மாநாட்டுத் தீர்மானங்களில் முன்வைத்த கோரிக்கைகளில் சில:

·        வதைமுகாம்களிலிருந்து தமிழீழ மக்களைச் சிறைமீட்க…

·        தமிழீழ மக்கள் துயர்துடைப்புக்கு ஐநா மன்றமே பொறுப்பேற்க…

·        தமிழீழத் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்க…

·        பொதுசன வாக்கெடுப்பு நடத்தித் தமிழீழத்தின் அரசியல்

வருங்காலத்தை முடிவு செய்ய…

·        தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத் தீவைச் சிங்கள ஆதிக்கத்திலிருந்து மீட்க…

·        தமிழக மீனவர் தற்காப்புப் படை அமைத்திட…

இந்தக் கோரிக்கைகளைத் தமிழ்நாடெங்கும் பரப்புரை செய்வதற்காகப் பல ஊர்களில் பொதுக் கூட்டம் நடத்தினோம். விழுப்புரத்தில் அப்படி ஒரு கூட்டத்தில் பேசி முடித்து விட்டு இரவு விடுதியறையில் நானும் தோழர் கொளத்தூர் மணியும் தங்கியிருந்த போது நான் அவரிடம் கேட்டேன்: தலைவர் பிரபாகரன் குறித்து உங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கும் என்பது என் நம்பிக்கை. நெடுமாறன் சொல்லிக் கொண்டிருப்பது உண்மையா? அவர் சொன்னார்: உண்மையில் தெரியாது தோழர். ஆனால் தலைவர் பிரபாகரன் உண்மையிலேயே களத்திலிருந்து வெளியேறியிருந்தால் என்ன செய்திருப்பார் எனபது மட்டும் உறுதியாகத் தெரியும்.  

போர் எப்படி முடியும் என்று கணித்து, பிரபாகரன் அதற்கு வீரர்களை அணியமாக்கிக் கொண்டிருந்தார் என்பது நானும் கேள்விப்பட்ட செய்திதான். 300 என்றொரு படத்தை அனைவர்க்கும் காட்டி இறுதி வரை களத்தில் நின்று உயிரீகம் செய்த 300  பாருட்டா நகர(Spartans) வீரர்களின் நிலை நமக்கும் ஏற்படலாம் என்று சொல்வாராம்.

போரின் இறுதிக் கட்டத்தில் புலிப் படை ஒரு குறுகலான நிலப்பரப்பில் முற்றாகச் சுற்றிவளைக்கப்பட்ட பின் தப்பிச் செல்ல வாய்ப்பே இல்லை எனபதுதான் மெய்யான கள நிலவரம். தப்பிச் செல்வதுதான் சரி என்றால் இறுதிக் கட்டத்துக்கு முன்பே தப்ப முயன்றாவது இருக்கலாம்.

ஆனால் எது வரினும் இறுதிவரை களத்தில் நிற்பதுதான் போராட்டத்தின் எதிர்காலத்துக்கு நல்லது என்பதுதான் புலிப்படைத் தலைமையின் முடிவு. வெளியேறுவதுதான் போராட்டத்துக்கு நல்லது என்று பிரபாகரன் கருதியிருப்பாராயின் வீரர்களுக்கும் மக்களுக்கும் ஒரு செய்தி விடுக்காமல் அவர் வெளியேறியிருக்க மாட்டார் என்று தோழர் கொளத்தூர் மணி எனக்கு விளக்கினார். ஒளி ஒலிப் பதிவாகவோ, எழுத்து வடிவிலோ தான் வெளியேறும் முடிவை விளக்கிச் சொல்லாமல் தலைவர் பிராபகரன்  தப்பியோடுவார் என்பது நம்ப முடியாததாக உள்ளது என்றார். தோழர் மணியின் விளக்கம் எனக்கும் பொருத்தமாகவே பட்டது.

இந்த நாட்டிலோ அயல் நாடுகளிலோ விவரமறிந்தவர்கள் என்று நான் சந்தித்த யாரும் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நம்பவில்லை. தலைவருக்கு வீர வணக்கம் சொல்லி விட்டு அவர் பெயரால் மீளுறுதி ஏற்றுப் போராட்டத்தைத் தொடர்வதே அவருக்குச் செய்யும் மரியாதை என்றனர். இதைத் தடுக்கிறவர்களில்  சிலர் விடுதலைப் போரின் சமூக அறிவியலே தெரியாமல் இதை மக்களின் போராட்டமாகப் பார்க்காமல்  தலைவரின் போராட்டமாகவே பார்த்துப் பழகியவர்கள். அவர்களைப் பொறுத்த வரை தலைவர் இல்லையேல் போராட்டமே இல்லை. இன்னும் சிலர் இயக்கத்துக்குச் சொந்தமான, ஆகவே நாட்டுக்குச் சொந்தமான செல்வத்தைக் கையில் வைத்துக் கொண்டு யாருக்கும் தர மாட்டார்கள். “தலைவர் வந்து கேட்டால் தந்து விடுகிறோம்” என்று சொல்லி அவர் வர மாட்டார் என்று சொல்லி விடுவார்கள். வர மாட்டார் என்ற நம்பிக்கைதான்!

பிரபாகரன் வீரச் சாவடைந்து விட்டார் என்று உறுதியாக நம்பி அவருக்கு முதலில் வீரவணக்கம் செலுத்திய “குலம்” என்ற மூத்த விடுதலைப் புலி சுவிட்சர்லாந்தில் இருக்கிறார். 2010 மாவீரர் நாளுக்காக நான் அங்கே போயிருந்த போது என் ஓம்புநர்கள் அவர் என்னைச் சந்தித்து விடாமல் பார்த்துக் கொண்டனர். நாட்டின் சொத்தைத் தேட்டை போடவே வீரச் சாவடைந்து விட்ட தலைவரை உயிருடனிருப்பதாகக் கதை விடுகின்றனர் என்பது குலத்தின் குற்றச்சாட்டு.

இப்போது நெடுமாறனின் இந்த அறிவிப்புக்குப் பிறகும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நான் நம்பவில்லை. அவர் சொல்வதற்கு – ஏமாறவோ ஏமாற்றவோ இல்லை என்பதற்கு – சரியான சான்றை அவர்தான் இந்த நாட்டுக்குத் தர வேண்டும். பிரபாகரனைப் பார்த்ததாகவோ அவர் பேசக் கேட்டதாகவோ நெடுமாறன் இப்போதும் சொல்லவில்லை. சொன்னாலும் சரியான சான்றுடேன் சொல்ல வேண்டும். (பிரபாகரன் குரலில் பேசுவது பெரிய காரியமில்லை என்பதால் அவர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.)

நெடுமாறன் அறிவிப்பு குறித்து “இருந்தால் மகிழ்ச்சி” என்றுதான் தமிழகத் தலைவர்கள் கூறியுள்ளனர். ஆனால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மட்டும் “ஈழ விடுதலைப் போர்க்களத்தில் நின்ற போராளிகள்  சிலர் இன்னமும் உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர்; என்னிடம் தொடர்பில் இருக்கும் அத்தகைய போராளிகள் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள செய்தியை உறுதிப்படுத்தவில்லை” என்று கூறியிருப்பதை (இன்றைய இந்து தமிழ் பக்கம் 2) முகன்மையாகக் கருதுகிறேன்.

உண்மை ஒருநாள் வெளியாகும் என்று ஒதுக்கி விட்டு ஆகவேண்டியதைச் செய்வோம். பிரபாகரன் உயிருடனிருப்பது பற்றிய தகுநிலை 2009க்குப் பிறகான போராட்டச் சூழலில் எவ்வித அடிப்படைத் தாக்கமும் கொள்ளவில்லை. இனியும் அதே நிலைதான் தொடரும். அவர் உயிருடனிருந்து இந்த நிலைமைகள் குறித்து இவ்வளவு நீண்ட காலம் மௌனம் சாதித்திருப்பார் என்றால் அதற்கு அவர்தான் விளக்கம் சொல்ல வேண்டியிருக்கும். இப்போதுதான் காலம் கனிந்தது என்று நெடுமாறன் சொல்லும் விளக்கம் ஏற்புடைத்தன்று. பிரபாகரனின் பார்வையும் இதுதான் என்றால் நம்ப முடியவில்லை.

ஊக அடிப்படையில் இந்த உரையாடலை வளர்த்திக் கொண்டிராமல் நன்கு தெரிந்த உண்மைகளின் அடிப்படையில் நம் பணிகளைத் தொடர்வோம்.

மறுபுறம், நெடுமாறன் கொடுத்த செவ்வியை விடவும் அவர் ஊடகங்களுக்குக்  கொடுத்த அச்சிட்ட செய்திக் குறிப்புதான் இந்த அறிவிப்பு குறித்து நம்மை ஐயங்கொள்ளச் செய்கிறது. இதோ அந்தக் குறிப்பு:

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களைப் பற்றிய உண்மை அறிவிப்பு

I. சருவதேசச் சூழலும்இலங்கையில் இராசபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும்தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

2. இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும்ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்.

3. தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும்உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம்.

4. விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எனதயும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும்எந்தக் காலகட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாகக் காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும்இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்துஅதனைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம்.

5. இந்த முக்கியமான காலக்கட்டத்தில் தமிழக அரசும்தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும்தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குத் துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.

அன்புடன்

நாள்: 13.02.2023 – திங்கள்

(பழ நெடுமாறன்)

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், தஞ்சாவூர்

இந்த அறிவிப்பில் நான்காவது பத்தியைக் கவனமாகப் படித்துப் பாருங்கள் தெற்காசியாவில் இந்திய-சீன ஆதிக்கப் போட்டியில் தமிழீழ மக்களையும் தமிழ்நாட்டு மக்களையும் இந்திய வல்லரசின் பகடைகளாக மாற்ற விரும்புகிறார்கள் நெடுமாறனும் காசி ஆனந்தனும். அதற்கு நம்மிடம் சீனப் பூச்சாண்டி காட்டுகின்றார்கள்.

இந்தியா, சீனா இரண்டு வல்லரசுகளுமே தமிழினவழிப்பில் சிங்களப் பேரினவாதத்துக்கு உடந்தையாக இருந்ததையும், இன்றளவும் இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி பெற விடாமல் தடுத்து வருவதையும் மறைக்கின்றார்கள். ஐயோ இராசதந்திரமே!

இந்தியப் பாதுகாப்புக்குத் தமிழீழ விடுதலையை ஆதரிக்க வேண்டும் என்று மோதிக்கு எடுத்துச் சொல்ல பிராபகரன்தான் வர வேண்டுமென்பதில்லை. இந்தியா ஈழத்தில் கால் வைத்த போது அந்தக் காலை ஒடித்து அனுப்பியவர் பிராபகரன் என்பதை மறவாதீர். சிறிலங்காப் படை தவிர தமிழ்மக்களைக் கொன்று குவித்த மற்றொரு படை இந்தியப் படைதான் என்பதைத் தமிழீழ மக்களும் தமிழக மக்களும் உலகத் தமிழர்களும் ஒருநாளும் மறவோம்!

இந்தியப் பாதுகாப்பு என்ற பெயரிலும் சீன எதிர்ப்பு என்ற பெயரிலும் நரேந்திர மோதியின் இந்துத்துவ பாசிசப் பேராசைக்குத் தமிழீழ மக்களை இரையாக்கும் முயற்சிக்கு எப்போதோ காசி ஆனந்தன் துணை போய் விட்டார். இப்போது நெடுமாறனும் சேர்ந்திருக்கிறார். ஒரே ஒரு கேள்விதான்: இந்தியப் பாதுகாப்பில் இவர்களும் தமிழ் மக்களின் நீதியில் அண்ணாமலை – செய்சங்கர் – மோதியும் மெய்யாகவே அக்கறை கொண்டவர்கள் என்றால் முதலில் இந்திய அரசு தமிழீழ இனவழிப்பு உண்மை என்று ஒப்புக் கொள்ளட்டும். கனடா ஒப்புக் கொண்டது போல் ஒப்புக் கொள்ளட்டும். ஒப்புக் கொண்டு வெளிப்படையாக அறிவிக்கட்டும். ஐநாவிலே போய்ச் சொல்லட்டும். இப்படி ஒரு கோரிக்கை – வேண்டுகோளாவது – முன் வைப்பீர்களா? அல்லது இதற்கும் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டுமா?

 நெடுமாறன் அவர்களின் அறிவிப்பை இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கும் போது ஒரு கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை:

நெடுமாறனையும் காசி ஆனந்தனையும் நம்ப முடியுமா?

(தொடரும்)
தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 97

செவ்வாய், 6 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 123: அதானியை எதிர்த்து மூன்று முழக்கங்கள்

 


(தோழர் தியாகு எழுதுகிறார் 122 : குசராத்து இசுலாமியர் இனக்கொலை 2002 தொடர்ச்சி)

அதானியை எதிர்த்து மூன்று முழக்கங்கள்

அதானியுடன் தரவு மையப் புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் தமிழக அரசு கையொப்பமிட்ட கடந்த காலச் செய்தி ஒன்றின் படி, அதானி என்டர்ப்பிரைசசுஎல்&டிஎசுடிடிசுடிசி,சிடிஆர்எல்எசு, பாரதி ஏர்டெல்லுக்குச் சொந்தமான  நெக்சுட்டிரா ஆகிய பெருநிறுவனங்கள் தமிழக அரசுடன் தமிழ்நாட்டில் தரவு மைய மேம்பாடுகளுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் ஒப்பமிட்டுள்ளன.

தரவு மையம் (இரண்டாம் கட்டம்) எனும் இத்திட்டத்துக்காகச் சென்னையில் அதானி எண்டர்ப்பிரைசசு  2,500 கோடி உரூபாய் (336 மில்லியன் தாலர்) முதலீடு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் அதானி குழுமத்திடம் இந்திய அரசு ஒப்படைத்திருக்கும் திட்டப் பணிகள்தமிழ்நாடு அரசு ஒப்படைத்திருக்கும் திட்டப்பணிகள்இரு அரசுகளும் சேர்ந்து ஒப்படைத்திருக்கும் திட்டப்பணிகள் ஆகியவை பற்றிய எல்லாச் செய்திகளையும் திரட்டுங்கள்.

அதானி எனும் மோசடிக் குற்றவாளிக்குத் தமிழ்மண்ணில் இடமிருக்கக் கூடாதுநாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் அதானியை எதிர்த்துத் தீவிரமாக முழங்கியுள்ள நிலையில்திமுக நடத்தும் தமிழக அரசு அதானி பெருங்குழுமத்துடனான கூட்டு முயற்சிகளை அறவே முறித்துக் கொள்வதுதான் நியாயமானது.

உத்தரப் பிரதேச மாநில அரசுக்குச் சொந்தமான மத்தியாஞ்சல் வித்யுத்து விக்கிராம் 5,400 கோடி உரூபாய் மதிப்பில் திறன் மின்னளவைகள் வாங்குவதற்கான அதானி குழும நிறுவனத்தின் ஒப்பந்தப் புள்ளியை திடீரென்று நீக்கியிருப்பது தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி.

1)      மோதியின் கூட்டாளி மோசடிக் குற்றவாளி அதானியைக் கைதுசெய்!

2)      அதானி குழுமத்தின் சொத்துகளைப் பறிமுதல் செய்!

3)      தமிழக அரசேஅதானியுடனான எல்லா ஒப்பந்தங்களையும் கிழித்தெறி!

இவை தமிழ்நாட்டு பாசிச எதிர்ப்பு ஆற்றல்களின் முழக்கங்கள்!  

(தொடரும்)
தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 97