சனி, 20 ஆகஸ்ட், 2016

மறக்க முடியாத அந்த நாள் 17.5.1999.: பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! பாகம் – 08

தலைப்பு-பேரறிவாளன்,தொடரும்வலி08 : thalaippu_peraraivalan_thodarumvali_08தலைப்பு-சாகப்போகிறேன், பேரறிவாளன் : thalaippu_saakapokiren_perarivalan

மறக்க முடியாத அந்த நாள் 17.5.1999.:

பேரறிவாளன் குறிப்பேடு

– தொடரும் வலி! பாகம் – 08

(வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!)
  ‘மரணம்’ – ஒவ்வொரு மனிதனும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத் தருணம் என்பதை அறிவேன்.
  ஆனால், வாழ்வைத் தொடங்கும் முன்பே திடீரென ஒரு நாள் அது என் முன்பு எதிர்நிற்கும் என நான் கற்பனையிலும் கண்டதில்லை. துறக்கம்(சொர்க்கம்), அளறு(நரகம்), முற்பிறவி, மறுபிறவி ஆகியவற்றில் நான் நம்பிக்கையற்றவன் என்பதை முன்பே அறிவீர்கள்.
  மத, இறை நம்பிக்கையற்ற பெற்றோரால் வளர்க்கப்பட்டதால் எனது வாழ்வில் அவை குறித்து நினைத்துப் பார்த்ததும் இல்லை.
  எந்தக் கருத்தும் சரியானதுதானா என்பது குறித்து அவை குறித்த ஏரண(தருக்க)முறையிலான வாதங்களில் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை.
  மாறாக, உரிய  ஆய்வுக் களத்தில் (Testing Field) மட்டுமே இறுதி செய்யப்படுகிறது என்ற நம்பிக்கை உடையவன். எனக்கான  ஆய்வுக் களமும் வந்தது.
  ப.சீ.த. (‘தடா’) சிறப்பு நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் எனக்கும் பிற மூவருக்கும் உறுதி செய்துவிட்டது.
  உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்ட பிறகு, உயிர் தப்ப அடுத்த வாய்ப்பு ஏதும் இல்லை.
தமிழக ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோருக்குக் கருணை மனு அளிப்பதுதான் நான் உயிர்தப்ப உள்ள ஒரே வாய்ப்பு என அப்போது சொல்லப்பட்டது.
  ‘கருணை மனு’ என்பது குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கோருவது என்பதே எனச் சிறை காவலர்களால் அவர்கள் அறிந்த அளவில், எனக்கு கருத்துக் கூறப்பட்ட நிலையில்,  குற்றமற்றவனான நான் அதில் உடன்பாடற்று இருந்தேன்.
  அவ்வாறு குற்றத்தை ஒப்புக்கொண்டாலும்  இராசீவு கொலையில் மன்னிப்பெல்லாம் கிடைக்குமா என்பது ஐயமே எனக் கூடுதலான ஒரு தகவலையும் சொல்லி வைத்தார்கள்.
இந்திரா காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சதிக்குற்றவாளி என உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை பெற்ற கெகர் சிங்கு (Keher Singh) கருணை மனு குறித்து தொடுத்த வழக்கில் தனது கருணை மனுவில்  குற்றமற்றவன் என்பதற்கான வாதங்களை முன்வைக்கலாம் எனவும் உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு மாறாகக் குடியரசுத் தலைவர், ஆளுநர் மனுதாரரை  குற்றமற்றவன் எனக் கூறி விடுதலை செய்யலாம்’ எனவும் உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் அரசியல் அமர்வு அளித்த தீர்ப்பு குறித்து அறியாத தருணம் அது.
  1971- இல் பிறந்த நான்  ஓர் இயல்பான இளைஞனுக்கு உள்ள கனவுகளோடுதான் வளர்ந்தேன். மிகச் சிறந்த படிப்பாளி அல்ல.
  இருப்பினும், பெற்றோருக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தும் அளவுக்கு கல்வியில் தாழ்ந்ததுமில்லை.
 ஒழுக்கக் குறைவானவன் என ஒரு நாளும் என்னைப் பற்றி எனது பெற்றோரிடம் எவரும் முறையிடும் அளவுக்கு நான் வாழ்ந்ததும் இல்லை.
  மிகவும் அன்பான இரண்டு  உடன்பிறந்தாள்களைப் பெற்றதால் பாசத்துக்குப் பஞ்சமில்லை. எனது தாய், தந்தை என இரு வீட்டாரிலும் நானே மூத்த ஆண் மகன் என்பதால், இரு வீட்டாரின் அன்புக்கு அளவில்லை.
  இங்ஙனம் வளர்க்கப்பட்ட என்னிடம் அன்பைத் தவிர்த்து வேறு எந்தக் குணமும் குடிகொண்டிருக்கவில்லை.
 இராசீவு காந்தியை மட்டுமல்ல, என் வாழ்நாள் முழுமைக்கும் எவரையும் காயப்படுத்த நான் எண்ணவில்லை.
  அப்படியான நான் 19  அகவையில் கைது செய்யப்பட்டுப் பொய்யாகக் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை பெற்றாலும் இறுதியில் நீதி வெல்லும் என்ற நம்பிக்கையோடு இருந்த நிலையில், அனைத்தையும் பொய்யாக்கி உச்ச நீதிமன்றத்தாலும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு வாழ்வின் இறுதிக்கட்டத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டேன்.
  பரந்த உலகம் ஒன்றில் ஒரு பறவையைப்போல் சுற்றித் திரிந்த நான், 6 அடி அகலமும் 10 அடி நீளமும் கொண்ட அகண்ட சுவர்களால் சூழப்பட்ட அறை ஒன்றுக்குள் தனிமைப்படுத்தப்பட்டேன்.
  உறவுகளின் கூட்டத்தாலும் அவர்களின் அளவற்ற அன்பாலும் சூழப்பட்டிருந்த என் உலகத்தில் தனிமை தவிர்த்து எதுவுமே இல்லாமல் போனது.
  தனிமை என்றால்  இயல்பான தனிமை அல்ல – 24 மணி நேரமும் என்னையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் (எனக்குப் பாதுகாப்பாய்!) காவலர் முன்புதான், பகலை விஞ்சும் வெளிச்சத்தைப் பீய்ச்சும் விளக்கொளியில்தான், எந்த மறைப்பும் இன்றி எனது காலைக்கடன்களை முடித்திடவும் உண்ணவும் உறங்கவுமான தனிமை அது.
  எப்போதும் ஒரு வெள்ளைக் கால்சட்டை, கைச்சட்டை. உள்ளாடை அணிய  இசைவு கிடையாது.    (இலங்கோடு எனக் கோமணத்துணி ஒன்றைத் தருவார்கள்). கால் செருப்பு அணிய முடியாது.
  பகல் நேரங்களில் பக்கத்தில் அடைபட்டிருக்கும் எனது வழக்கின் நண்பர்கள் தவிர, எனது துன்பம் பகிர மனிதர் எவரும் இல்லை.
  என்னைப்போலவே துன்பத்தில் இருக்கும் அவர்களிடம் எனது துன்பத்தை எப்படிப் பகிர்வது?
  வாரம் ஒரு முறை வரும் எனது தாயாரிடமும் எப்போதாவது வரும் பிற உறவுகளிடமும் காவலர் புடைசூழப் பேசுகிற நேர்காணலில் எந்தத் துன்பத்தை நான் சொல்வது?
  அப்போது நான் சேலம் நடுவண் சிறையில் உள்ள உயர் பாதுகாப்புத் தொகுதியில் அடைக்கப்பட்டுக் கிடந்தேன்.
  எல்லாம் முடிந்து போனது – முடிவுக்கு வந்துவிட்டது. என் சாவுக்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது.
 மனத்தளவில் என்னால் எதிர்கொள்ள முடியாத பெரும் சுமை அது என்பது தெரியும். உள்ளம் மொத்தமும் வேதனையும், உறக்கம் தொலைத்த இரவுகளுமாகக் கழிந்த நாட்கள் அவை.
  குற்றமேதும் செய்யாத எனக்குக் கொலைத் தண்டனையா? போன பிறவியில் செய்துவிட்ட தவறுக்கான தண்டனை என்றோ இந்தப் பிறவியிலேயே செய்துவிட்ட வேறு ஏதேனும் குற்றத்துக்கான தண்டனை இது என்றோ என் பகுத்தறிவு மனம் ஏற்கத் தயாராக இல்லை.
  விதி என்று சொல்லியும் என்னால் விட்டு ஒதுங்க முடியவில்லை. அது சொல்ல முடியாதத் தவிப்பு, சொல்லில் அடங்காப் பெருந்துன்பம்.
  அப்போதுதான் முதன்முறையாகப் புரியத் தொடங்கியது – அவ்வளவு எளிதில் மீளவே முடியாத பெரும் சூழ்ச்சியில் சிக்க வைக்கப்பட்டு விட்டேன் என்பது.
  அரசியல் சூழ்ச்சியில் பலியாகிப்போன எத்தனையோ அப்பாவி மனிதர்களில் நானும் ஒருவனாகிச் சாகப் போகிறேன் என்பதை நினைக்க நினைக்க நெஞ்சம் விம்மியது.
  இதனை எதிர்க்க எனக்கு வழியுமில்லை – வலிவுமில்லை. மரணத்தை எதிர்கொள்வதைத் தவிர வேறு மார்க்கம் ஏதும் என்னிடம் இல்லை.
  சாவைச் சந்திப்பதற்கு முன்பாக  ஓர் எளிய மனிதனாக எனக்கு நானே கட்டிவைத்திருந்த எனது எதிர்காலக் கனவுக் கோட்டையைச் சிதைக்க வேண்டும்.
அதுவே, எனக்குச் சாவை எதிர்கொள்வதைக் காட்டிலும்  அறைகூவலாக இருந்தது. எனது மரணம் பரிதாபத்துக்குரியதுதான். இருப்பினும், எந்த நிலையிலும் அழுதுவிடக் கூடாது – கண்ணீர் சிந்திவிடக் கூடாது என்பதில் உறுதியுடன் இருந்தேன்.
  அந்தச் சிறையின் சிறை அலுவலர் அறைக்குப் பின்புறம்தான் தூக்குமேடை அமைந்திருந்தது. அந்த அறையின் சன்னல் வழியே அதைப் பார்க்க முடியும்.
  என்னைப் பலியிடப்போகும் அந்த பலிபீடத்தைப் பழக்கப்படுத்திக்கொள்வது இறுதி நிமிடங்களில் பதற்றத்தைத் தவிர்க்கும் எனக் கருதி அதைப் பார்த்துவைத்தேன்.
  அந்தச் சிறையில் இறுதியாகத் தூக்கிலிடப்பட்டவரின் இறுதி நிமிடங்கள் எப்படிக் கழிந்தன எனக் காவலர்களிடம் கேட்டறிந்தேன்.
  28  அகவையில் வாழ்க்கையைப்பற்றிய புரிதலே எனக்கு முழுமையடையாதபோது, மரணத்தை எங்ஙனம் புரிந்துகொள்வது? அந்தத் துணிவைத் தருவதற்கு எனக்கு ஒரு துணை தேவைப்பட்டது.
  ஆத்திகர்களுக்கு உள்ள விதி, தலையெழுத்து, பிறவிப் பயன் என்ற பெயர்களில் தேடுதலுக்கும் வழியில்லை, ஆண்டவனிடம் அழுது முறையிட்டு ஆறுதல்படவும் வாய்ப்பில்லை.
  இந்த 25 ஆண்டுக்கால என் நீதிக்கான போராட்டத்தில் இதுவரை எத்தனையோ இந்து, கிறித்தவர், இசுலாமியர் எனப் பாகுபாடு இல்லாமல் உண்மையான பாசத்தோடும் மனிதத்தோடும் தங்களது அன்பை, ஆதரவைச் செலுத்தி வருகின்றனர்.
  அவர்களின் அன்பு இல்லையென்றால், இன்று நான் இல்லை. அவர்களின் மனிதம் போற்றத்தக்கது.
  நீதிக்கான அவர்களது குரலே என்  வலிமை. இருப்பினும், என்னை முழுமையான நாத்திகனாக உணர்ந்த அந்தத் தருணத்தைப் பதிவுசெய்வது எனது கடமை.
  எனக்கு ஆறுதலும் தேறுதலும் கூறி மரணத்தை எதிர்கொள்ளும் துணிவைத் தந்தவர் வள்ளுவர். ‘இடுக்கண் அழியாமை’ அதிகாரத்தின் ஒவ்வொரு குறளையும் “உறங்குவது போலும் சாக்காடு’’ என்ற  தொடரையும் எத்தனை முறை வாசித்திருப்பேன் என்பது எனக்கே தெரியாது.
  அவைதான் எனக்கு வாழ்வு, மரணம் ஆகியவற்றின் ஆழ அகலத்தை அறிமுகம் செய்தது. வள்ளுவம் தந்த தெளிவுதான், குற்றமற்ற எவரையும் கொல்லத் தயாராக இருக்கும் இந்த நீதி அமைப்பு முறை குறித்த புரிதலைத் தந்தது.
  மரணத் தண்டனை என்ற போலியானதும், ஏற்றத்தாழ்வு மிக்கதுமான தண்டனை வடிவம் குறித்து ஆராயும் உணர்வை உண்டாக்கியது.
  எல்லாம் சரி, மரணத்தை எதிர்கொள்ளும் மன உறுதியை வள்ளுவம் தந்து விட்டது.
  எட்டு ஆண்டு உழைப்பும் வீணாகி எனக்காகவே தன் வாழ்வை  ஒப்படைத்துவிட்ட என் தாயாரின் முகத்தைப் பார்க்கும் துணிவை மட்டும் எனக்கு எந்த நூலும் வழங்கவில்லை.
  அந்த உணர்வை வேறு ஒரு சமயம் எழுதுவேன்.
  மற்றபடி வைகாசி 26, 2030 / 09.06.1999 அன்று அதிகாலை தூக்கிலிடப்படுவதாக நாள் குறிக்கப்பட்ட செய்தியை எனக்கு முறைப்படி அறிவித்த – எத்தனையோ படிப்பினைகளைக் கொடுத்துச் சென்ற மறக்க முடியாத அந்த நாள் வைகாசி 03, 2030 / 17.5.1999.
(வலிகள் தொடரும்)
–பேரறிவாளன்
 இளைய விகடன் 20.07.16
அட்டை, இளைய (சூனியர்)விகடன் சூலை20,2016 ;attai_ju.vi._july20_perarivalan_kurippedu08
தலைப்பு-பெருந்துன்பம், பேரறிவாளன் : thalaippu_perunthunbam_perarivalan

வள்ளுவர் கல்வி அனைவர்க்கும் பொது என்றார்! – சி.இலக்குவனார்





தலைப்பு-கல்வி அனைவர்க்கும் பொது, வள்ளுவர், சி.இலக்குவனார் ; thalaippu_kalvipodhu_S.Ilakkuvanar

வள்ளுவர் கல்வி அனைவர்க்கும் பொது  என்றார்!

  மக்களில் கல்விப்பேறு அடைதற்குரியவர் சிலரே என்றனர். சில நாடுகளில் படிப்பவர் வேறு, உழைப்பவர் வேறு என்று வகைப்படுத்தினர். உயர்ந்தோரே படித்தல் வேண்டும், உழைப்பவர் படித்தல் வேண்டா என்றும விதியாக்கினர். ஆனால், வள்ளுவர் கூறியது என்ன? கல்வி அனைவர்க்கும் பொது; கண்கள் அனைவர்க்கும் இயல்பாக உரியன; அதுபோலக் கல்வியும் எல்லார்க்கும் உரியதாகும். கண்களோடு பிறத்தல்போலக் கல்வியோடு வளர்தல் வேண்டும். கண்ணில்லாது வாழ முடியாததுபோல் கல்வியில்லாதும் வாழ முடியாது. கல்வி பெறாதிருத்தல் பெருங்குற்றம். பெறமுடியாது தடுத்தல் அதனினும் பெருங்குற்றமாகும்.
  கல்வியைப் பறிப்பது கண்ணைப் பறிப்பது போலாகும் என்று கல்வி, கல்லாமை என்னும் இயல்களில் தெளிவுறக் கூறியுள்ளார்.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
என்று கூறுவதில் ஒரு புரட்சியையும் செய்துள்ளார். கல்வி என்றால் வெறும் காப்பியங்களை மட்டுமோ இலக்கண நூல்களை மட்டுமோ கற்றல் அன்று. அறிவியலை(எண்)யும் கலை(எழுத்து)களையும் ஒருவர் கற்றால்தான் முழுமைக் கல்வியாகும் என்கிறார். பிறர் மாக்களாகி விடுவர் என முன்னறிவிப்பு கொடுத்துள்ளார். இன்று கல்லூரிகளில் வள்ளுவர் கருத்துக்கேற்பக் கலையும்(Arts)அறிவியலும்(Science) சேர்த்துக் கற்பிக்கத் திட்டம் வைத்திருப்பினும் செம்மையான முறையில் செயல்படவில்லை.
–  பேராசிரியர் சி.இலக்குவனார்,
திருவள்ளுவர் – தமிழகத்தின் முதல் புரட்சியாளர்
  குறளமுதம் : பக்கம் 519 – 520

Tamil graduates in East sidelined

Tamil graduates in East sidelined in education sector employments for 2016

[TamilNet, Thursday, 18 August 2016, 23:40 GMT]
The Secretary of Provincial Public Service Commission (PPSC) in the Eastern Province, H.E.M.W.G. Dissanayake has issued a notice in Sinhala and Tamil languages, inviting graduates from the three districts of Ampaa’rai, Batticaloa and Trincomalee to attend for ‘Open Competitive Examination’ to fill vacancies of Provincial Schools in the Eastern Province. Except Tamil, History and certain Information Communication Technology related vacancies are in the medium of Sinhala language, complain Tamil teachers from Batticaloa. While side-lining Tamil-medium positions for Arts, Religion, Agriculture in all the three districts getting only four of thirteen subjects, Trincomalee district is allocated with all 13 subjects.

The discrimination in filling vacancies for the graduate teachers is taking place while the Minister of Education in the Eastern Province is a Tamil person, Singaravelu Thandauthapani, who represents the Tamil National Alliance.

The Secretary of PPSC is a Sinhalese.

In the meantime, the Head of Batticaloa District Graduate Association, T. Krishanth, said there is also a systematic neglect of employing Tamil graduates from Batticaloa district to vacant public positions in the district.

While there are 1,500 unemployed graduates in Batticaloa, almost all public positions allocated since 2012 have gone to Sinhalese from outside provinces, Mr Krishanth said.

While the Colombo-centric unitary State system is appointing Sinhalese to public positions under its control, the Eastern Provincial Council has also been manipulated by the Colombo-centric system to adhere to the same agenda, Tamil public sector employees in Batticaloa complain. They also added that the discrimination coming though the provincial system proved that the system is wrong.

UNP's Batticaloa District Organiser, Mr Aloysius Masilamani, who is also a retired Deputy Director of Education from the district and a former Councillor of the EPC, has also questioned what the Education Minister has brought for Tamils in the province. Mr Masilami in a recent video interview to TamilNet said there is no denying that UNP was responsible on the accountability for 1983 anti-Tamil pogrom. He has also gone on record stating that Batticaloa was still under the clutchers of Rajapaksa-installed administrative structure.

The following is the formula published by the PPSC on the recruitment of graduate teachers to fill vacancies of provincial schools in the Eastern Province in 2016 with a deadline falling on Wednesday next week.
Tamil advertisement for ‘Open Competitive’ Examination of ‘Sri Lanka’ Teachers Service

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

வள்ளுவர் வகுக்கும் உழைப்பு நெறியே உயர்வானது – இலக்குவனார் திருவள்ளுவன்




தலைப்பு-திருவள்ளுவர்,உழைப்புநெறி -இலக்குவனார் திருவள்ளுவன் :thalaippu_uzhaippuneri_ilakkuvanar_thiruvalluvan

வள்ளுவர் வகுக்கும் உழைப்பு நெறியே உயர்வானது

  அறநெறிகளைத் தொகுத்துத் தரும் திருவள்ளுவர், உயர்வுதாழ்வு கற்பிக்கும் தீய முறைக்கு எதிரானவற்றையும் ஆங்காங்கே பதியத் தவறவில்லை. இதன் காரணம், தன்னலம் கருதாது பிறர் நலம் பேணும் பெற்றிமை மிகுந்த தமிழ் மக்கள் உதவிக்கும் உரிமைக்கும் உள்ள வேறுபாட்டினை மறக்கக் கூடாது என்பதற்காகத்தான். இடர்களையவும் துணைநிற்கவும் வேண்டும். கைம்மாறு கருதாமல் உதவுவது என்பது வேறு. உழைப்பின் பயனை அடுத்தவர் ஏய்த்துத் துய்க்க, நாம் ஏமாளியாய் அடிமையாய் இருப்பது என்பது வேறு. முன்னதைக் கைம்மாறு வேண்டா கடப்பாடாகத் திருவள்ளுவரும் வலியுறுத்துகிறார்.
 பயன்நோக்கில் உழைப்பது சரியா? தவறா? ஈண்டு அனைவராலும் சிறப்பாகக் கூறப்படும் கீதையின் வரியை நினைவு கூர்வோம்.
  “கடமையைச் செய் பயனை எதிர்பாராதே’ என்பதுதான் அது. ஆனால் உண்மையில் கீதை கூறுவது என்ன? அஃது எற்புடையதா? என்றால் கீதை கூறுவது முற்றிலும் தமிழ் அறத்திற்கு முரணானது என்பதே உண்மையாகும்.
… …. மேலும், தமது வருணம், ஆசிரமம் இவற்றிற்கேற்ப சாத்திரங்களில் விதிக்கப்பட்ட   கடமைகளை ஆற்ற வேண்டும். இதற்குப் பயனைத் தியாகம் செய்ய வேண்டும் (5, 12, 2.1, 12.11, 18, 11.,) என்றும் சில இடங்களில் பற்றைத் தியாகம் செய்ய வேண்டும் (3., 19, 6.4) என்றும் சில இடங்களில் பயன், பற்று இரண்டையும் தியாகம் செய்ய வேண்டும் (2, 47., 48., 18., 6, ஈ9) என்றும் கீதையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தத்தம் வருணத்திற்குரிய கடமைகளைச் செய்து அவரையே வழிபட வேண்டும் (18.40) என்றும் அவருடைய ஆணையின்படி பகவானுடைய “திருப்தி’க்காகவே சாத்திரங்களில் விதிக்கப்பட்ட கடமைகள் ஆற்றப் பெறுகின்றன. (3.30, ஈ 12.6., 18) என்றும் எந்த வருணத்துக்கு எந்த கடமை விதிக்கப்பட்டதோ அதை அந்த வருணத்தவரே கடைப்பிடிக்க வேண்டும்; மற்றவர் செய்யக்கூடாது என்றும் விளக்கப்படுகின்றன.
  ஆகக் கடமையைச் செய் என்பது மாந்தருக்குரிய பொதுவான கடமையைக் குறிப்பிடவில்லை. அவரவர் சாதிப் பாகுபாட்டிற்கேற்ற தொழிலைச் செய்ய வேண்டும் என்பதையே குறிக்கிறது.
  திருவள்ளுவர், உழைப்பு உயர்விற்குரிய கருவியேயன்றி, செய்யும் பணியின் அடிப்படையில் உயர்வு தாழ்வு இல்லை என வலியுறுத்துகிறார்.
எனவே, திருவள்ளுவர் வகுக்கும் உழைப்புநெறியே உயர்வானது. உலகெங்கும் ஏற்பதற்குரியது. என்றென்றும் பின்பற்றுவதற்குரியது.
வாழ்க வள்ளுவம்.
  – இலக்குவனார் திருவள்ளுவன்,
திருவள்ளுவர் காட்டும் நெறிகள்:
உழைப்பு நெறி
அட்டை- வள்ளுவர் காட்டும் நெறிகள் : attai_valluvarkaattum_nerikal