திங்கள், 11 நவம்பர், 2013

எழுத்தாளர் புட்பா தங்கதுரை மரணம்

மருத்துவமனையில் பண்டுவம் பெற்று வந்த 

எழுத்தாளர் புட்பா தங்கதுரை மரணம்

சென்னை
சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார்.
பிரபல எழுத்தாளர்
சென்னையைச் சேர்ந்த பிரபல நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஸ்ரீ வேணுகோபாலன் (வயது 82). இவர் புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் படைப்புகளை எழுதி வந்தார். திருமணம் ஆகாத இவர், சென்னையில் உள்ள தன்னுடைய சகோதரி வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த புஷ்பா தங்கதுரை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மரணம்
கடந்த 2 வாரங்களாக கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புஷ்பா தங்கதுரையின் உடல்நிலை நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென்று மோசமடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் அவர் இறந்தார்.
பின்னர் அவருடைய வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.
2 ஆயிரம் நாவல்கள்
மறைந்த புஷ்பா தங்கதுரை 2 ஆயிரம் நாவல்களையும், ஆயிரம் சிறுகதைகளையும் எழுதி உள்ளார். இவருடைய ஒரு சில படைப்புகள் இந்தியிலும், பிற தென்னிந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. ‘‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’’, ‘‘நந்தா என் நிலா’’ என்ற இரண்டு திரைப்படங்கள் இவருடைய நாவலை தழுவி தயாரிக்கப்பட்டன. டி.வி. தொடர்களுக்கு கதைகள் மற்றும் ஆன்மிக கட்டுரைகளும் எழுதி உள்ளார். இவர் 6 லட்சம் புத்தகங்களை சேகரித்தும் உள்ளார்.

ஞாயிறு, 10 நவம்பர், 2013

காலத்தால் அழியாத தமிழ்நாடன் படைப்புகள்

காலத்தால் அழியாத தமிழ்நாடன் படைப்புகள்

இரத்தின புகழேந்தி
Comment   ·   print   ·   T+  
2
கவிஞர் சேலம் தமிழ்நாடனின் மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவர், தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றியப் பணிகள் குறிப்பிடத்தகுந்தவை. அவரின் இலக்கியப் பணிகள் காலத்தால் அழியாதவை.
சேலம் மாவட்டம் ஏர்வாடியில் 1943 ஆம் ஆண்டு பிறந்த தமிழ்நாடனின் இயற்பெயர் சுப்பிரமணியன். திருமணி முத்தாற்றங்கரையில் அமைந்திருக்கும் அவ்வூரின் எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஆறுமுகம் இருசாயம்மாள் இணையர், இவரின் பெற்றோர்.
சிறுவயதிலேயே பெரிய வாசகரானவர் தமிழ்நாடன். ஆண்டுக்கு ஆயிரம் நூல்களைப் படித்திருக்கிறார். இவர் பள்ளி செல்லும் வழியில்தான் அவ்வூரின் திராவிடர் கழக அலுவலகம் அமைந்திருந்தது. அங்கு வரும் 'விடுதலை' செய்தித்தாளைப் படித்து விட்டுதான் பள்ளிக்குச் செல்வார். அப்போது அவருக்கு வயது 10. "அவன்கிட்ட முதல்ல குடுங்க படிச்சிட்டு பள்ளிக்கூடம் போகட்டும்" என்று கூறி பெரியவர்கள் இவரின் ஆர்வத்தை ஊக்கப்படுத்தியிருக்கின்றனர்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பள்ளி மலரில் வெளியான கவிதைதான் அச்சில் வந்த முதல் படைப்பு. அப்போதே தமிழ்நாடன் என்ற பெயரில்தான் எழுதியிருக்கிறார்.
பள்ளிப் பதிவேடுகளில் பெயரை மாற்ற விரும்பியும் இவரின் தந்தையின் ஒப்புதல் கிடைக்காமையால் நேற்று முந்தினம் வரைசுப்பிரமணியன் என்ற பெயரில்தான் ஓய்வூதியம் பெற்றுள்ளார்.
கடந்த 1960இல் கல்லூரிப் படிப்பை முடித்ததும் வேளாண் துறையில் ஓர் ஆண்டு பணி, அது பிடிக்காமல் ஆசிரியர் பயிற்சி முடித்து பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். கல்லூரி, பல்கலைக் கழகங்களில் பணியாற்ற முயற்சித்தபோது இவர் மார்க்சியவாதி என்ற காரணத்திற்காக பணிவாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக அவர் கவலைப்படவில்லை.
பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். ஆனால் திராவிட இயக்கங்கள் மீது விமர்சனத்தைக் கூறவும் தயங்காதவர். திராவிடக் கட்சிகள் தமிழ் இலக்கியத்தைப் பிரச்சாரத்திற்கு கையில் எடுத்துக் கொண்டன. ஆனால் தமிழ் இலக்கியத்தை வளர்த்தெடுத்தனவா என்றால் இல்லை என்று கூறிய தமிழ்நாடன், கடவுள் மறுப்புக் கொள்கையில் பெரியாரின் வழித்தோன்றலாகவே திகழ்ந்தார்.
கலை, இலக்கியம் யாவும் மக்களுக்காகவே என்ற கருத்துடையவர் வானம்பாடி இயக்கத்தை உருவாக்கியதில் ஒருவர். வானம்பாடி கவிஞராக அறியப்பட்டவர்.
எழுபதுகளில் மார்க்சிய கவிதைகளைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். 'மாவோ 'என்ற பெயரைச் சொன்னாலே முதுகெலும்பை முறிக்கிற சூழல் நிலவிய ஒரு கால கட்டத்தில் மாவோவின் கவிதைகளை மொழிபெயர்த்தவர் தமிழ்நாடன்.
சேலத்தில் கல்வி அலுவலராகப் பணியாற்றிய 'அனந்த பல்ப்' என்பவருடன் நட்பு ஏற்பட, அவரிடம் மாவோ பற்றிய புத்தகங்கள் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அவர் நம்பூதிரிபாட்டை (அப்போதைய கேரள முதல்வர்) பார்க்கச் சொல்லி கடிதம் கொடுத்திருக்கிறார் (அனந்தப் பல்ப்பும் நம்பூதிரிபாட்டும் நண்பர்கள்). தமிழ்நாடன் நம்பூதிரிபாட்டை சந்திக்கச் சென்றபோது அவரின் நூலகத்தைத் திறந்து விட்டு "என்ன வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் தோழர்'' என்றாராம்.
தமிழ்நாடனின் மொழிபெயர்ப்புகளில் குறிப்பிடத் தகுந்தது "மனுதர்மம்' ஆகும். நாம் எவ்வாறு அடக்கி ஆளப்படுகிறோம் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே மனுதர்மத்தை மொழிபெயர்த்ததாகக் கூறினார்.
"அம்மா அம்மா' என்ற இவரது கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்டைப் பற்றியது. நூல் வெளிவந்த போது மிகுந்த வரவேற்பினையும் பாராட்டையும் பெற்ற படைப்பு.
தமிழ்நாடன் கவிதைகள் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்ப்பவை மட்டுமன்று பொதுவுடைமைப் போராளிகளுக்கு வலுச் சேர்ப்பவையாகவும் அமைந்துள்ளன.
"மண்ணின் மாண்பு' நூலிலுள்ள கவிதைகளைப் போராட்ட காலங்களில் சுவர் எழுத்தாகப் பயன்படுத்தியுள்ளனர் தோழர்கள். அதனால் காவல் துறை நெருக்கடிகளைச் சந்தித்தவர் கவிஞர் தமிழ்நாடன். அதனால் ஏற்பட்ட மனச் சோர்வினால் இலக்கியத்திலிருந்து சற்று காலம் விலகி உள்ளூர் வரலாறுகளை ஆய்வு செய்யத் தொடங்கி பத்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை நண்பர்களோடு இணைந்து வெளியிட்டவர். சேலம் மாவட்டத்தைப் பற்றி மூன்று ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார்.
பாரதிதாசனின் "குமரகுருபரன்' நூலின் கையெழுத்துப் படியைப் பழைய புத்தகக் கடையில்கண்டு பிடித்து பல அலைக்கழிப்புகளுக்குப் பிறகு அதனை நூலாக வெளியிட்டுள்ளார். அந்நூல் பெங்களூர் பல்கலைக் கழகத்தில் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. சேலத்தின் பழமைகளை மீட்டெடுக்கும் நோக்கில் 1973ஆம் ஆண்டு இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் எழுத்தாளர் ஓவியர் மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கி அதன்மூலம் சேலத்தில் அருங்காட்சியகம் தொடங்கினார்.
இதுதான் இந்திய அளவில் மக்களால் தொடங்கப்பட்ட முதல் அருங்காட்சியகம். மேலும் இந்த அமைப்பின் மூலம் பத்துக்கும் மேற்பட்ட ஓவியக் கண்காட்சிகள் நடத்தியதோடு பத்துக்கும் மேற்பட்ட நூல்களும் வெளியிட்டுள்ளனர். இன்றும் இவ்வமைப்பு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு இலவச ஓவியப் பயிற்சியும் அளித்து வருகின்றனர். முப்பத்தைந்து ஆண்டுக்காலம் ஆசிரியராகப்
பணியாற்றி ஓய்வு பெற்ற தமிழ்நாடன் நம் தமிழ்நாட்டு கல்வித்துறை மீதும் பள்ளிப் பாடநூல்கள் குறித்தும் கவனிக்கத்தக்க விமர்சனங்களை வல்லினம் இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் முன் வைத்துள்ளார்.
தமிழ்நாடனின் 'சாரா' நாவல் ஒரு புதிய மாதிரியில் எழுதப்பட்டது. "சாரா நாவல் உலக அளவில் அங்குமிங்கும் விரிந்து செல்கிறது. தமிழில் உலகளவில் விரிந்த பரப்பைத் தனக்குள் கொண்டுள்ள நாவல் என்று இதைத்தான் சொல்லமுடியும். பல்வேறு வரலாற்று
நிகழ்ச்சிகள், அனுபவங்கள் நாவலில் இடம்பெறுகின்றன. அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் எப்படி ஒழித்துக் கொல்லப்பட்டார்கள், நியூயார்க் ஹார்லெம் சேரியில் நடந்த கலவரம் எவ்வளவு பிரம்மாண்டமானது.
அரபு மக்களின் புரட்சிகரப் போராட்டம், தமிழகத்தின் அரசியல், திராவிடர் இயக்கம், சோவியத் புரட்சி, லெனின் காலம் என்றெல்லாம் பலதிசை வரலாற்று அனுபவங்கள் நாவலுக்குள் வந்திருக்கின்றன. தமிழகத்து இளைஞர்கள் இப்படிச் சில வரலாற்று அனுபவங்களை இந்த நாவல் மூல மேனும் கற்றுக் கொள்ள முடியும்'' என்பார் கோவை ஞானி.
தமிழ்நாடனின் "சேலம் திருமணிமுத்தாறு' என்ற நூல், ஓர் ஆற்றைப் பற்றி கூறுவதற்கு இவ்வளவு தகவல்களா என்ற வியப்பில் ஆழ்த்துகிறது. பல்வேறு வரலாற்றுச் சான்றாதாரங் களையும் நூலோடு இணைத்து அளித்திருப்பது ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகும்.
தமிழின் முதல் அச்சு நூலையும் வெளியுலகிற்கு அடையாளம் காட்டியவர் தமிழ்நாடன்தான். இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்த ஏழு கார்ட்டூன்களும் ஒரு வண்ண ஓவியமும் என்ற நூல் 2000ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றது.
தமிழ் எழுத்தாளர்கள் சாகித்ய அகாதெமியின் வரலாற்றைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்ற ஆர்வத்தினால் "சாகித்ய அகாதெமி தமிழ் விருதுகள் சில விவரங்கள், விசாரங்கள்' என்ற நூலை எழுதியுள்ளார்.
கவிதை, கதை, கட்டுரை, ஆய்வு, மொழி பெயர்ப்பு, ஓவியம் எனப் பல தளங்களில் சிறப்பாக இயங்கும் பன்முக ஆளுமை கொண்ட தமிழ்நாடன் படைப்புகள் காலத்தால் அழியாதவை.
இரத்தின புகழேந்தி - தொடர்புக்கு rathinapugazhendi@gmail.com

தி.க. பொருளாளர் சாமிதுரை மறைவு

தி.க. பொருளாளர் சாமிதுரை மறைவு

திராவிடர் கழகத்தின் பொருளாளர் கோ. சாமிதுரை (81) சென்னையில் சனிக்கிழமை காலமானார்.

கடந்த சில மாதங்களாக அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் பிறந்த அவர் படிக்கும் காலத்திலேயே திராவிடர் கழகத்தில் தீவிர ஈடுபாட்டுடன் பணியாற்றினார்.

வழக்குரைஞரான சாமிதுரை திராவிடர் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். அவருக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். அவரது உடல் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் சனிக்கிழமை பிற்பகல் வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கட்சியின் பேரவைக் குழுத் தலைவர் ஏ. சௌந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சாமிதுரையின் இறுதிச்சடங்குகள் அவரது சொந்த ஊரான கள்ளக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.