சென்னை, பிப்.2: சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று மாற்றக் கோரி வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ் மன்றம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இதுதொடர்பாக, அந்த மன்றத்தின் தலைவர் அய்யாதுரை திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:அப்போதைய மெட்ராஸ் மாகாணத்துக்கு 'மெட்ராஸ் உயர் நீதிமன்றம்' என்று ஆங்கிலேயர்கள் பெயரிட்டனர். இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு 'மெட்ராஸ் மாகாணம்' பிரிக்கப்பட்டு தமிழ்நாடு உருவானது.மெட்ராஸ் மாகாணத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் என்ற பெயர் பொருத்தமானது. ஆனால், தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பிறகு சென்னை உயர் நீதிமன்றம் என்ற பெயர் பொருத்தமற்றதாகும்.எனவே, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயர்மாற்றம் செய்ய வேண்டும்.உயர் நீதிமன்றத்தின் வழக்கு மொழி...சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆன பின்னரும் தமிழ்நாட்டின் தலைமை நீதிமன்றமான உயர் நீதிமன்றத்தில் தமிழ் உள்ளே நுழைய முடியவில்லை.உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக மாற்றக் கோரி தமிழக சட்டப்பேரவையில் 2008-ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று தெரியவில்லை.பெயர்ப் பலகை...கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் உயர் நீதிமன்றங்களின் பெயர்களில் அந்தந்த மாநில மொழிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் இடம்பெறவில்லை. இதற்காக எங்கள் மன்றம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மேற்கண்ட 3 கோரிக்கைகளையும் வலியுறுத்தி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தமிழ் மன்றம் சார்பில் என்.எஸ்.சி. போஸ் சாலையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
By Ilakkuvanar Thiruvalluvan
2/2/2010 3:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*