திங்கள், 21 அக்டோபர், 2019

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, ஈரோடு 2020

அகரமுதல

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, ஈரோடு 2020
1330 திருக்குறளையும் மலையிலே கல்வெட்டில் பதித்துக் குறள் மலையை உருவாக்க, குறள் மலைச் சங்கமும்,   ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியும்  இணைந்து நடத்தும் மாபெரும் அனைத்துலகத் திருக்குறள் மாநாடு.

மாநாடு நடைபெறும் நாள் :

மார்கழி 20 & 21-தி.பி.2050; 3.1. 2020 & 4.1. 2020.
மாநாடு நடைபெறும் இடம் : வேளாளர் மகளிர் கல்லூரிதிண்டல்ஈரோடு.

மாநாடு முடிந்தவுடன் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை குரல் மலையைப் பார்வையிட அனைவரும் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

மாநாட்டின் நோக்கம்:

திருக்குறள் வேறு தமிழ் வேறு அல்ல. திருக்குறளைப் போற்றுவதும் தமிழைப் போற்றும் ஒன்றுதான். அந்தவகையில் உலகத்தின் பொது மறையாகத் திகழும் திருக்குறளைத் தற்போது மலையிலே பதித்து குறள் மலையை உருவாக்குவதற்கும், திருக்குறள் யுனெசுகோவால் உலக நூல் அங்கீகாரம் பெற்று, அதன் பிறகு உலக நூலாக மலையிலே எழுதுவதற்கும், நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. 
உலக நூல் என்ற அங்கீகாரம் பெறப்பட்டு விட்டால் அதன் மகத்துவமே தனியாக உலகத்தோர் அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கும். ஆகவே திருக்குறளை உலக நூல் அங்கீகாரம் பெற வேண்டி, இந்தத்  தொடர் மாநாடு நடத்தப்படுகிறது. 
இந்த மாநாட்டில் ஏறத்தாழ 11 நாடுகளைச் சேர்ந்த மொழியியல் வல்லுர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டில் சிறப்பான திருக்குறளின் மேன்மையைப் போற்றும் திருக்குறளின் ஆய்வுகளையும் கோட்பாடுகளையும் கூறும் ஆய்வு நூல் ஒன்று வெளியிடப்பட இருக்கிறது.
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் இந்த ஆய்வு நூலை வெளியிட, யுனசுகோவின் இயக்குநர் அதைப் பெற்றுக் கொள்கிறார்.
மேலும் ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் கலந்து கொள்ளக்கூடிய ஒரு மாநாடாக இந்த மாநாடு அமைய இருக்கிறது.
குறிப்பாக ஆத்திரேலியா, தென்மார்க்கு முதலான நாடுகள் தங்கள் அரசுச் செலவிலேயே, அந்த நாட்டு  மொழி இயல் வல்லுநர்களை அனுப்பி வைக்க இருக்கிறது. அனைத்து ஐரோப்பிய நாடுகள், கனடா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற பல்வேறு நாடுகளிலிருந்தும் பெருவாரியான மொழியியல் வல்லுநர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்

இதை வாசிக்கும் ஒவ்வொரு தமிழர்களும் தமிழ்ப் பற்று கொண்டவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பு சேர்க்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
ஆய்வுக் கட்டுரைகளை ஐப்பசி 29, தி.பி.2050 / நவம்பர் 15, 2019ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டும்விவரங்களை வலைத்தளத்தில் அல்லது பின்னுள்ள அழைப்பிதழில் காண்க!
மாநாடு தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ள
www.thirukkuralmalai.org என்ற வலைத்தளத்தைப் பார்க்கவும்.
பா.இரவிக்குமார், நிறுவனர் / P.Ravikumar, Founder
9543977077 ; 9382677177  / www.thirukkuralmalai.org        

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா? – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா?
போர்க்காலத்தின் பொழுது இரு படைத்தரப்பிற்கும் இடையில் நடுநிலையாகச் செயல்பட்டு இரு தரப்பிற்கும் உணவு, மருந்து, பிற உதவிகள் வழங்குவதை இன்றைக்குச் செஞ்சிலுவைச் சங்கத்தினர் செய்கின்றனர். ஆனால்,  இப்பணிகளை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் வேந்தர்கள் ஆற்றி வந்துள்ளனர். அதற்கு ஒரு சான்றுதான் சேரலாதன், ஐவருக்கும் நூற்றுவருக்கும் இடையே நிகழ்ந்த போர் ஒன்றில்  இரு தரப்பாருக்கும் பெருஞ்சோறு வழங்கிய நிகழ்வு.  இதில் குறிப்பிடும் ஐவரும் நூற்றுவரும் பஞ்ச பாண்டவரும் கெளரவர் நூறு பேருமா? அல்லது வேறு மன்னர்களைக் குறிக்கினறதா? ஆராய்ந்து முடிவெடுப்போம்!
‘பெருஞ்சோறு வழங்குதல்’ என்றால் போர் வீரர்கள் படைக்குப் புறப்படும் முன்னர், இறந்த போர் வீரர்களை நினைந்து போற்றி, இருக்கின்ற வீரர்களை உற்சாகப்படுத்தி மகிழ்விக்கும் வகையில் அனைவருக்கும் விருந்து வழங்குவதே! தமிழ் ஈழப் போரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் இவ்வாறு விருந்து வழங்கிய செய்தியை நாம் படித்திருக்கிறோம். இது வழி வழி வந்த தமிழர் பண்பாடே.  மூத்தோரையும் இறந்த முன்னோரையும் வணங்குவது தமிழர் பண்பாடு.
போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தவர்களைப் போற்றி நினைவு கூரும் வழக்கம் எல்லா நாடுகளிலும் காணப்படுவதே. ஆனால், பழந்தமிழர், இறந்த வீரர்களைப் புதைத்து அவ்விடத்தில் கல்நட்டு, அக்கல்லில் அவர்களுடைய பெயர்களையும் புகழ்ச்செயல்களையும் பொறித்து வைப்பர். இம்முறையைப் பின்பற்றியே பிற நாட்டுக் கல்லறைகளிலும் இறந்தவர் பெயர் விவரங்களுடன் குறிப்பையும் பொறிக்கும் வழக்கம் வந்திருக்கலாம்.
 ஆனால், அவர்களை வழிபட்டுப் பெருஞ்சோறு வழங்குவது தமிழர் பண்பாடாகும்.
துறக்கத்திற்குச் – சொர்க்கத்திற்குச் -சென்ற வீரர்கள் நினைவைப் போற்றுவது வெற்றிக்கு வழி வகுக்கும் என்பது ஒரு நம்பிக்கை. எனவே, போரில் வாகை சூடுவோம் என்ற நம்பிக்கையை போர்க்களம் புகும் வீரர்கள் பெறுகிறார்கள். நடுகற்களை வணங்குவதன் மூலம் நாளை நாமும் வணங்குதற்குரிய நிலையை அடைய வேண்டும் என்ற வீர உணர்வை வணங்கும் வீரர்கள் பெறுகிறார்கள்.
பெருஞ்சோறு வழங்குவதைத் தமிழ் இலக்கணம் வஞ்சித்திணையின் உட்துறையாக வகுத்துள்ளது. இதனைப் ‘பெருஞ்சோற்று வஞ்சி’ என்றும் குறிப்பர். நமக்குக் கிடைத்த மூத்த இலக்கணமாம் தொல்காப்பியம்,  இதனைப் ‘பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை’ என்று குறிப்பிடுகிறது.
வெற்றியை ஈட்டித் தருவர் என வாழ்த்தி வீரர்களுக்குப் பெருஞ்சோறு வழங்குவதைப் புறப்பொருள் வெண்பாமாலை (58),
திருந்தார் தெம்முனை தெறுகுவர் இவரெனப்
பெருஞ்சோறு ஆடவர் பெறுமுறை வகுத்தன்று
எனக் கூறுகிறது.
எடுத்துக்காட்டுஆக
இயவர் புகழ எறிமுரசு ஆர்ப்பக்
குயவரி வேங்கை அனைய – வயவர்
பெறுமுறையான் பிண்டம்கோள் ஏவினான் பேணார்
இறும் முறையால் எண்ணி இறை
என்னும் பாடலையும் தருகிறது.
இயவர் என்றால் கருவியிசைக் கலைஞர்கள். அவர்கள் இசைத்துப் புகழும்படியும் கொட்டும் முரசு ஆர்ப்பரிக்கும்படியும் வரிப்புலி போன்ற வீரர்கள் பெறத்தகும் முறைப்படி மன்னன் பெருஞ்சோறு வழங்கினான் என்பதாகும்.
எனவே, பெருஞ்சோறு வழங்குவது என்பது பொதுவான பண்பாட்டுப்பழக்கமாக இருந்துள்ளது.
துறக்கம் எய்திய தொய்யா நல்இசை
முதியர்ப் பேணிய உதியன் சேரல்
பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை
என்னும் பாடல் வரிகள் (மாமூலனார், அகநானூறு  233 அடிகள் 7-9) பெருஞ்சோறு கொடுக்கும் வழக்கத்தை நமக்குத் தெரிவிக்கிறது.
இறந்த வீரர்கள் அருள் புரிந்து துணை நிற்பார்கள் என்பதும் ஒரு நம்பிக்கை. எனவே, வெற்றி அல்லது வீர மரணம் என்னும் துணிவை வீரர்கள் பெறுகின்றனர். படை வீரர்களுக்கு விருந்து அளிக்கும் வேந்தன் தானும் அவர்களுடன் விருந்துண்டு மகிழ்கிறான். முதல் நிலை படைத்தலைவர் முதல் கடைநிலை வீரன் ஈறாக அனைவரையும் மதித்து உண்டு உரையாடுகிறான். நாட்டு மன்னருடன் உண்ணும் சமன்மைச் சிறப்பு வீரர்களுக்குப் பெருமிதத்தை அளிக்கிறது. இதனால் வாழ்வின் பயனைப் பெற்றதாக எண்ணி உற்சாகம் கொள்கிறார்கள்.
ஐவருக்கும் நூற்றுவருக்கும் இடையே போர் நிகழ்ந்த பொழுது இரு தரப்பார்க்கும் பெருஞ்சோறு வழங்கிய மன்னன் உதியன் சேரலாதன்.  தன் நாட்டுப்படை வீரர்களுக்குப் பெருஞ்சோறு வழங்கியதாகக் குறிப்பிடப்படும் வேந்தன் சேரல். இவன் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்டவன். எனவே, இருவரும் வெவ்வேறு என உரை விளக்கத்தில் நாவலர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களும் மாமூலனார் பாடல் ஆராய்ச்சியில் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களும் கூறியுள்ளனர். எனவே, இங்கே குறிப்பிடப்படும் பெருஞ்சோறு வழங்கல் பிற நாட்டுப்போர்க்களத்தில் வழங்கப்பட்டதல்ல எனத் தெளியலாம்.
அரும்படைத் தானை யமர்வேட்டுக் கலித்த
பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்து
(சிலப்பதிகாரம்,26: 48-49)
என இளங்கோ அடிகள் குறிப்பிடுகிறார். இங்கேயும் படைமறவர்களுக்கும் படைத்தலைவர்களுக்கும் அளிக்கும் பெருஞ்சோற்று விருந்துதான் கூறப்பட்டுள்ளது.
பெருஞ்சோறு பயந்த திருந்துவேற் றடக்கை
(சிலப்பதிகாரம், 23 : 55)
என்னுமிடத்திலும் இளங்கோ அடிகள் பொதுவான பெருஞ்சோற்று விருந்தையே குறிப்பிடுகிறார்.
இப் படையல் பழக்கத்தைத்தான் பின்னால் வந்த ஆரியர்கள், தங்களிடம் அரிசி, காய்கனி, பணம், செல்வம் முதலானவற்றைச் சேர்த்தால் முன்னோர்களிடம் சேர்ப்பதாக ஏமாற்றும் மூடப்பழக்கத்தைப் புகுத்தி விட்டனர். இப்பழக்கத்தை நிறுத்தும் காலம் எப்பொழுது வருமோ?
தம் நாட்டு வீரர்களுக்குப் பெருஞ்சோறு வழங்குதலையே பிற நாடுகளுக்கிடையே நடந்தபோரில் இரு தரப்பாருக்கும் உணவு வழங்கும் கொடைச்செயலாகவும் பின்பற்றி உள்ளனர். அதைக் கூறுவதுதான்,
அலங்கு உளைப்புரவி ஐவரொடு சினைஇ
 நிலந்தலைக்கொண்ட பொலம் பூந்தும்மை
 ஈரைம்பதின் மரும்பொருது களத்து ஒழிய
 பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
(முரஞ்சியூர் முடிநாகனார், புறநானூறு 2, அடிகள் 13-16)
என்னும் பாடலடிகள்.
இதனையே இளங்கோ அடிகளும்,
ஓரைவ ரீரைம் பதின்மர் உடன்றெழுந்த
போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த
சேரன்
என்கிறார்.
இப்பாடல்களில் குறிக்கப் பெறும் ஐவரையும் ஈரைம்பதின்மர் – அஃதாவது நூற்றுவரையும் பஞ்ச பாண்டவராகவும் கெளரவர் நூற்றுவராகவும் உரையாசிரியர்கள் தொடக்கத்தில் கருதி வந்துள்ளனர். பின்னர் வந்த ஆராய்ச்சியாளர்கள் இதனை மறுத்துள்ளனர். இப்பாடலடிகளுக்கான வெவ்வேறு கோணங்களைப் பார்ப்போம்.
ஐவர் = பஞ்ச பாண்டவர்
ஈர் ஐம்பதின்மர் = நூற்றுவர் = துரியோதனன் ஆதியர்
 சேர அரசன் உதியன் இந்த ஐவரும் நூற்றுவரும் போரிட்டுக் கொண்டபோது இந்தச் பெருஞ்சோறு வழங்கினான் என்பதே முதல் கோணம்.
ஐவர் = பஞ்சவர் = பாண்டியர்
நூற்றுவர் = சதகர்னர் (சதம் = நூறு)
பாண்டியர்க்கும் சதகர்ணியர்க்கும் நடந்த போரில் இருபால் படையினருக்கும் பெருஞ்சோறு வழங்கிப் பேணினான். இது மற்றொரு கோணம்.
சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவன் வட நாடு சென்றபொழுது நூற்றுவர் கன்னர் என்னும் பெயர் கொண்ட மன்னனும் அவன் படைகளும் கங்கையாற்றைக் கடக்க உதவி புரிந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதகர்ணி என்னும் சமசுகிருதப் பெயரே நூற்றுவர் கன்னர் எனத் தமிழாக்கப்பட்டுள்ளது. இவர்கள், ஏறத்தாழக் கி.மு. 235 முதல் கி.பி.220 வரையில் நடு இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டவராவர் எனத் தெரிவிக்கப்படுகின்றனர். இந்நூற்றுவர் கன்னரைத்தான் குறிப்பிடுவதாக மற்றொரு சாரார் குறிக்கின்றனர். குறிப்பிட்டுள்ள பாடலடிகள் மூலம் இரு தரப்பு மன்னர்களும் இறந்துவிட்டனர். எனவே, சிலப்பதிகாரத்தில் துணை புரிந்ததாகக் கூறப்படும் மன்னர்கள் அதற்கு முன்னரே இறந்துவிட்டதாகக் கூறுவது பொருத்தமாக இல்லை. எனவே, இக்கருத்து ஏற்கும் படி இல்லை.
வளைவு வலைப்பூத் தளத்தில் வேறு செய்தி கூறப்பட்டுள்ளது. “சதைத்தல் > சாத்துதல் = நூறுதல் = நொறுக்குதல் என்ற வினையால், “நூற்றுவர்” என்பதற்கு தமிழ்முறைப்படி ”எதிரிகளை நொறுக்குபவர்” என்றே பொருள் சொல்லமுடியும். சிலம்பும் அப்படித்தான் மொழிபெயர்க்கிறது. சடைத்தல், சதைத்தல் என்பது நொறுக்குதல்/நூறுதல் என்ற பொருட்பாடுகளைக் குறிக்கும். “அவனைப் போட்டுச் சாத்திட்டான்” என்று இன்றைய தமிழ் வழக்கிலும் சொல்லுகிறோம் அல்லவா?  …..  ஆகச் சதவா என்பதன் உட்கருத்து தமிழே. பலரும் எண்ணுவது போல் அவர் 100 பேர் அல்லர், நூற்றுவர் (=சதைப்பவர்). ”நூற்றுவர்” என்பது கன்னர் குடியினருக்கோர் அடைமொழி, அவ்வளவுதான்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐவர் என்பதையும் பகையரசரான மகத அரசராகவே இருக்க முடியும் என இவ்வலைப்பூ தெரிவிக்கிறது. எனவே, மேற் குறித்தவாறு இவ்வடிகள், சேரன் செங்குட்டுவனுக்கு உதவிய மன்னர்கள் நூற்றுவர் கன்னரைக் குறிப்பிடவில்லை என்பதற்கு இவ்வாய்வுக் குறிப்பு உறுதிப்படுத்துகிறது.
அப்படியானால் ஐவரைப் பஞ்ச பாண்டவராகவும் நூற்றுவரைக் கெளரவர் நூறு பேராகவும் கருதுவதில் என்ன தவறு என்ற வினா எழுகிறதா? பாரதப்போர் என்பது கற்பனையே! இக்கற்பனைக் கதை அடிப்படையில் வரலாற்றுச் செய்தியைத் திரிக்கக்கூடாது என்பதுதான் வரலாற்று ஆய்வர்கள் கருத்து.
வாதத்தற்காகப் பாரதப்போர் நடைபெற்றது உண்மை என்றே கொள்வோம்.  கற்பனைக் கதையின் காலத்தையும் கற்பனையாகக் கி.மு. 3000 என்பதுபோல் காலத்தை முன்னுக்குத் தள்ளிக் கூறுகின்றனர். உதியன் சேரலாதன் காலத்துடன் ஒப்பிடும் பொழுது  இக்காலம் பொருந்தி வரவில்லை. கி.மு.400இற்குப்பிந்தையதே பாரதக் காலம் என்கின்றனர். இவ்வாறு பார்த்தாலும் பொருந்தி வரவில்லை. எல்லாவற்றிலும் முதன்மையானது பாரதப்போரில் பாண்டவர்களின் பிள்ளைகள் அனைவரும் இறந்தாலும் பாண்டவர்கள் ஐவரும் இறக்கவில்லை. கெளரவர்கள் நூறுபேரும் இறந்துள்ளனர். மேற்குறித்த பாடலடிகளில் இரு தரப்பும் பொருது போர்க்களத்தில ஒழிந்ததாகக் குறிக்கப் பெற்றுள்ளது. அவ்வாறிருக்க உயிரோடு இருந்த பாண்டவரை எப்படி இந்த அடிகள் குறித்ததாகும்?
எனவே, பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் உணவு வழங்கியது பாரதப் போரில் அல்ல என்பதும் பெருஞ்சோறு வழங்கல் தமிழ் மன்னர்களின் பொதுவான பண்பாடு என்பதும் தெளிவாகின்றன.
– இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி, 20.12.2019