வெள்ளி, 24 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 49: சீமான் அரசியலுக்குப் பிராபகரன் பொறுப்பா?

 

ஃஃ       24 March 2023      அகரமுதல (தோழர் தியாகு எழுதுகிறார் 48 தொடர்ச்சி)

அன்பர் சத்தியசீலனுக்கு என் மறுமொழி:

சீமான் அரசியலுக்குப் பிராபகரன் பொறுப்பா?

“எனது நோக்கம் விடுதலைப் புலிகளை- பிரபாகரனை இழிவுபடுத்துவது அல்ல!” என்று நீங்கள் அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.  “அவர்கள் மீதான மதிப்பை நான் மாற்றிக் கொண்டதாகவும் நான் எங்கும் குறிப்பிடவில்லை” என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால், சரி. ஆனால் உங்கள் முதல் மடல் எனக்கு மட்டுமல்ல, தாழி அன்பர்கள் சிலருக்கும் கூட அந்த எண்ணத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இருந்தது. உங்கள் இப்போதைய விளக்கத்தை அவர்கள் பார்வைக்கும் முன்வைக்கிறேன்.

இடதுசாரி அறிஞர்கள் புலிகளைக் குற்றாய்வு செய்கிறார்கள் என்றால், செய்யட்டும். சரியான குற்றாய்வு என்றால் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்! தவறானது என்றால் மறுக்க வேண்டியதுதான்! இதை நான் கடந்த காலத்தில் செய்துள்ளேன். பிழையாப் பெருமை (infallibility) எவர்க்கும் இல்லை. தவறு செய்யாமலிருக்க ஒரே வழி எதுவும் செய்யாமலிருப்பதுதான்!

இனவாதிகள் பிரபாகரனைப் போற்றிக் கொண்டே பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் கடுமையாகச் சாடுகின்றனர் என்று வருத்தப்பட்டுள்ளீர்கள். மணியரசனும் சீமானும் ஒரு காலத்தில் பெரியாரைப் போற்றிக் கொண்டிருந்தவர்கள்தாம்! இப்போது மாற்றிப் பேசுகின்றார்கள் என்றால் அதை அம்பலமாக்குவோம். ஆனால் “நீ பெரியாரை ஏசினால் நாங்கள் பிரபாகரனை ஏசுவோம்” என்று சிலர் கிளம்பியிருப்பதும், அவர்களது முயற்சியை “தடுத்தாடுதல்” “அடித்தாடுதல்” என்றெல்லாம் சிலர் மெருகிட்டுப் பேசுவதையும் எப்படி ஏற்க முடியும்?

சீமானை முதலமைச்சர் ஆக்கினால் ஈழம் பெற்று விடலாம் என்று சிலர் மயங்கிக் கிடந்தால் அவர்களைச் சாடுங்கள். ஆனால் இந்த மயக்கத்துக்குப் புலிகளோ ஈழத் தமிழர்களோ எப்படிப் பொறுப்பாவார்கள்? “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்ற சீமான் வசனத்தைப் புலிகளா எழுதிக் கொடுத்தார்கள்? தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவி பற்றி பிரபாகரன் என்ன கருதினார் என்று தெரிந்து கொண்டால், சீமான் பேச்சு எவ்வளவு அபத்தம் என்று விளங்கும். கலைஞர், எம்ஞ்சிஆர் யாராயினும் தமிழக அரசு இறைமையற்றதே என்பதால், அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை எதிரொலிக்கும் அறப் பொறுப்பு (தார்மிகக் கடமை) கொண்டவர்களாக இருந்தால் போதும் என்று பிராபகரன் ஒரு செவ்வியில் தெளிவாக்கினார். அப்படியானல் சீமான் முதலமைச்சராகி ஈழம் பெற்றுக் கொடுப்பார் என்று புலிகளோ அவர்களின் தலைமையை ஏற்ற ஈழத் தமிழர்களோ எப்படி நினைப்பார்கள்?

புலிகளின் அரசியல் மீது உங்களுக்கு ஐயப்பாடு வருவதில் தவறில்லை. ஆனால் அந்த ஐயப்பாட்டுக்கு சரியான அடிப்படைகள் இருக்க வேண்டுமே!

இனவாதிகளின் நடவடிக்கைகளுக்குப் பொருளாதாரப் பின்புலமாக “ஈழத்துச் சொந்தங்கள்” இருக்கிறார்கள் என்று நீங்கள் நம்பினால் யார் அந்த ஈழத்துச் சொந்தங்கள் என்று தெளிவுபடுத்துங்கள். ஈழத் தமிழர்களில் சீமானை ஆதரிப்பவர்களும் இருக்கலாம். அது அவர்களின் குடியாட்சிய உரிமை! ஆதரிப்பது தவறு என்று சுட்டிக்காட்டுவது உங்கள் உரிமை! என் உரிமை! ஒருசிலரின் சொல்லையும் செயலையும் வைத்து எல்லா ஈழத்தமிழர்கள் மீதும் பழி போடுவதும், அந்த அடிப்படையில் புலிகளின் அரசியல் கொள்கைகளை ஐயுறுவதும் நியாயம் இல்லைங்க!

நீங்கள் என்ன எழுதியிருக்கின்றீர்கள்? என்பதை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்:

“அவர்களை வீழ்த்தி சீமானை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்து, (முன்பு கூவினார்களே- இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று அதுபோல்) ஈழத்தைப் பெற்றுவிடலாம் என்று குறுக்கு வழியில் யோசிக்கிறார்களோ என்றுதானே கருதவேண்டியிருக்கிறது!

“மக்கள் எவ்வழி மகேசன் அவ்வழி” என்பதுபோல் இத்தகைய சிந்தனை உடைய மக்களின் தலைவரான பிரபாகரன் அவர்களையும் நாம் ஐயுறவேண்டியிருக்கிறது – அவர் மக்கள் தலைவராக விளங்கியிருக்கும் பட்சத்தில்!”

இது நீங்கள் எழுதியிருப்பதன் நேர்க் கூற்று! நான் எதையும் மாற்றவில்லை.

சீமான் நாம் தமிழர் கட்சி தொடங்குவதற்கு முன்பே தலைவர் பிரபாகரன் இறுதிப் போர்க் களத்தில் வீரச் சாவடைந்து விட்டார், தெரியும்தானே? சீமானின் “நானே முதலமைச்சர்” அரசியலுக்கோ, அதன் மீது சிலருக்குள்ள பாமர மயக்கத்துக்கோ பிரபாகரனைக் குறை சொல்வது உங்கள் வாதுரையின் சா முரண்பாடு! புரிகிறதா?

[சா முரண்பாடு = fatal contradiction]

சீமானைக் கடுமையாகக் குற்றாய்வு செய்யும் ஈழத் தமிழர்கள் பலர் உண்டு. அவர்கள் யாரும் உங்கள் கவனத்துக்கு வரவில்லை எனத் தோன்றுகிறது. சீமானுக்குப் பொருளாதாரப் பின்புலமாகப் புலம்பெயர் தமிழர்கள் இருப்பதாக நம்பச் சொல்வது பெரும்பாலும் ஒரு மாயத்திரை! உண்மையான பொருளாதாரப் பின்புலத்தை மறைக்கும் முயற்சி! அவர்கள் இல்லை என்றால், வேறு யார்? பிறகு சொல்கிறேன்.

இனவாதிகளின் அவதூறுகளை நீங்கள் ஏற்க வேண்டா. ஆனால் ஈழம் தொடர்பான திமுக அதிமுக நிலைப்பாட்டில் உங்கள் திறனாய்வு என்ன? சிந்தித்துச் சீர்தூக்கி உவத்தல் காய்தல் இல்லாமல் சொல்லுங்கள்.

உரையாடலைத் தொடர்வோம்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 32

தோழர் தியாகு எழுதுகிறார் 48: சொல்லடிப்போம், வாங்க! (6)

 

     23 March 2023     அகரமுதல(தோழர் தியாகு எழுதுகிறார் 47 தொடர்ச்சி

சொல்லடிப்போம், வாங்க! (6)

பேராசிரியர் சிவகுமார் எழுதுகிறார்:

தோழர்

வணக்கம்.

என்னுடைய மின்னஞ்சல் செய்திக் குவியலால் இயங்கவில்லை.

சிலவற்றை நீக்கியபின் உங்கள் தாழி மடல்கள் பெற முடிந்தன.

‘சொல்லடிப்போம்’ வாங்க ரசித்துப் படிக்கிறேன். தாராளியம்

சிறப்பான விளக்கம்.

நீண்ட கட்டுரைகளைத் தவிருங்கள்.

நல்லது. சுருக்கமாகவே எழுத முயல்கிறேன்.

பேராசிரியர் சிவக்குமார் கலைச் சொல்லாக்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். சொல்லடிக்கும் பணியில் அவரும் தொடர்ந்து பங்கேற்க வேண்டுகிறேன். தாழி மடல் எடுத்துள்ள பணிகளில் சொல்லாக்கமும் ஒன்று. எனக்கு விருப்பமானது என்பதால் மட்டுமல்ல, சரியான அரசறிவியல் புரிதலுக்கும் சொல்லாக்கம் இன்றியமையாதது என்பதாலும்தான் இந்தப் பணியை முகன்மையாக நினைக்கிறேன். இது எதற்கு என்று கருதக் கூடியவர்கள் இருப்பின், விட்டு விட்டு மற்றவற்றைப் படியுங்கள், அவை குறித்து உரையாடுங்கள்!

தாழி அன்பர் சத்தியசீலன் மா. எழுதுகிறார்: 

முதற்கண் நன்றியுடன் என் வணக்கத்தைச் சொல்லிக்கொள்கிறேன். என் மடலைக் கண்டு உடனே அலைபேசியில் உரையாடியதற்கும், விரைந்து மறுமடல் வரைந்து எதிர்வினை ஆற்றியதற்கும் மிக்க மகிழ்ச்சி!

என் உளக்கருத்தை- வெளிப்படுத்திய ஐயத்தைத் தாங்கள் தவறாகப் புரிந்துகொண்டதற்கு மிகவும் வருந்துகிறேன்; என் கருத்தோட்டத்தைச் சரியாக வெளிப்படுத்தவில்லையோ என ஐயுறுகிறேன்; பரவாயில்லை.

நான் மீண்டும் எனது ஐயப்பாட்டை விளக்குகிறேன்!

எனது நோக்கம் விடுதலைப் புலிகளை – பிரபாகரனை இழிவுபடுத்துவது அல்ல!

அவர்கள் மீதான மதிப்பை நான் மாற்றிக் கொண்டதாகவும் நான் எங்கும் குறிப்பிடவில்லை; அவர்களின் அரசியல் மீதான எனது ஐயப்பாட்டையே நான் தங்களிடம் கேள்விகளாக முன்வைத்தேன்- தாங்கள் களப்போராளி என்பதால் உலகின் விடுதலைப் போராளிகளைப்பற்றி – சிறப்பாக விடுதலைப் புலிகளைப் பற்றி –  மேலும் கூடுதலான செய்திகளைத் தங்களிடமிருந்து பெறவேண்டியே அக்கடிதம்!

நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி இடதுசாரிகள்- அறிஞர்கள் (அ.மார்க்குசு, எசு.வி.ஆர்., மருதையன் போன்றோர்) ஏன் புலிகளின் அரசியலைக் குற்றாய்வு செய்கிறார்கள்!

மாறாகப் பெரியாரியலாளர்கள் பிரபாகரன்- புலிகளைப் போற்றுகிறார்கள்; மறுபுறம் இனவாதிகள் (தங்களைப் போன்ற மெய்யான தமிழ்த் தேசியவாதிகளை ஈண்டு நான் குறிப்பிடவில்லை) பிரபாகரன் பதாகையைத் தாங்கிக் கொண்டு பெரியாரை – திராவிட இயக்கத்தைக் கடுமையாகச் சாடுகின்றனர்.

அவர்கள் யாவர் என்பதை அனைவரும் அறிவோம் – இருப்பினும் வெளிப்படையாகவே கூறுகின்றேன்: நாம் தமிழர் கட்சியினரும் பெ.மணியரசன் போன்றோரும்தாம்!

புலிகள் எவ்விடத்திலும் திராவிட இயக்கத்தைச் சாடியதாக நான் குறிப்பிடவில்லை – மாறாக அவர்களின் புகழ்பாடிக் கொண்டே அவர்கள் செய்யாத செயலை இவர்கள் ஏன் செய்ய வேண்டும்!

அவ்வாறு புலிகளுக்கு மாறுபாடான ஒரு நடவடிக்கையில் இவர்கள் ஈடுபடும் சூழலில் இவர்களின் பொருளாதாரப் பின்புலமாகத் திகழும் ‘ஈழத்துச் சொந்தங்கள்’ அதைக் கண்டிக்க- மறுக்க- தடுக்க எத்தனிக்க வேண்டாவா!

அவ்வாறெனில் நாம் எவ்வாறு அவர்களைப் புரிந்து கொள்வது!

சீமான் செய்வது சரி; திராவிட இயக்கம் – பெரியார் துரோகிகள்!

அவர்களை வீழ்த்தி சீமானை முதலமைச்சர் நாற்காலியில் அமரவைத்து, (முன்பு கூவினார்களே – இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று அதுபோல்) ஈழத்தைப் பெற்றுவிடலாம் என்று குறுக்கு வழியில் யோசிக்கிறார்களோ என்றுதானே கருதவேண்டியிருக்கிறது!

“மக்கள் எவ்வழி மகேசன் அவ்வழி” என்பதுபோல் இத்தகைய சிந்தனை  உடைய மக்களின் தலைவரான பிரபாகரன் அவர்களையும் நாம் ஐயுறவேண்டியிருக்கிறது – அவர் மக்கள் தலைவராக விளங்கியிருக்கும் பட்சத்தில்!

ஒருவேளை அவரும் அவர் தம் இயக்கமும் அரசியல் இயக்கமாக அல்லாமல் வெறும் இராணுவவாதப் பார்வையுடையோராய் இருந்திருந்தால் இக்கேள்வி எனக்கு எழப்போவதில்லை.

எப்படியோ, நீங்கள் குறிப்பிட்டபடி எனது வினாக்களுக்கு – தெளிவான விளக்கங்கள் அளிப்பீர்கள் அடுத்த மடலில் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன், மீண்டும் ஒருமுறை என் பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 32

தோழர் தியாகு எழுதுகிறார் 47: நானும் தேச விரோதி!- மருதமுத்து

 
(தோழர் தியாகு எழுதுகிறார் 46 தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

அம்பேத்துகரைக் காவிச் சிமிழுக்குள் அடைக்க இந்துத்துவக் கயவர்கள் செய்யும் முயற்சி கண்டு வெகுண்டெழுந்து பேராசிரியர் மருதமுத்து அவர்கள் அம்பேத்துகர் நினைவு நாளில் எழுதியுள்ள முகநூல் இடுகையை இன்றைய தாழி மடலில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்:

நானும் தேச விரோதி!

ஆம், மருதமுத்துவாகிய நான் அழுத்தந்திருத்தமாக அறிவிக்கிறேன்—

நானும் தேசவிரோதி!

இன்று வரை இந்துத்துவா வாதிகள் எல்லோரும் தந்தை பெரியாரைத்  தேச விரோதி என்கிறார்கள், வெள்ளைக்காரனின் கைக்கூலி என்கிறார்கள். (எச்சு.இரசாவின் நம் ஒளியலைப் பேச்சு)

நேற்றுவரை தந்தை அம்பேத்துகரையும் தேசவிரோதி என்றார்கள், வெள்ளைக் காரனின் கைக்கூலி என்றார்கள். (அருண் சோரியின் ஆய்வு நூல்)

இன்று அம்பேத்துகரை சனாதன இந்துவாகச் சித்திரித்துக் காட்டுகிறார்கள்.

இந்த அக்கிரமத்தை எதிர்க்கும்,  தோழர் திருமா உட்பட அனைவரையும்,தேச விரோதிகள் என்று தூற்றுகிறார்கள்.

“திருமாவளவா, உன்னை அடிக்கிற அடியிலே உன் வாயாலேயே “வந்தேமாதரம், செய் இந்து!” என்று சொல்ல வைக்கலே நாங்க இராணுவம் கிடையாதுடா!” என்று இந்துவெறி தலைக்கேறிய குருமூர்த்தி மிரட்டுகிறான் காணொளி மூலம்.

(“அடிக்கிற அடியிலே” என்பதை மட்டும் சொல்லாமல் சொல்லியிருக்கிறான் இந்த ம.சே.கா.ப./CRPF காவிக் கயவன். திருமாவளவன் அடிக்குப் பயந்து தன் கொள்கையை மாற்றிக் கொள்பவர் என்பது இதன் பொருள்)

இதுதான் இனி இந்தியா என்றால், இது அம்பேத்துகரின் முத்திரை தாங்கிய சனநாயக, மதச் சார்பற்ற, சமூக நீதிக்கு இடமளிக்கும் இந்தியா அல்ல. அல்லவே அல்ல! 

இப்படிப்பட்டதாகத்தான் இந்தியத்தேசம் நீடிக்கும் என்றால்—

பெரியார், அம்பேத்துகர் வழியில் நானும் தேசவிரோதியே!

அதாவது–

நானும் இந்துத்தேச விரோதியே!

தந்தை அம்பேத்கர் நினைவு நாளில் அவர் முழக்கத்தை நினைவூட்டுகிறேன்—-

“சாதி என்பது தேசவிரோதமானது” (“CASTE IS ANTI-NATIONAL”)

—————————————————————–

ஆம் நண்பர்களே,

சாதிய சனாதனம் தேச மக்கள் அனைவர்க்கும் முதன்மையான எதிரி.

அதைப் போதித்த தந்தை அம்பேத்துகரையே நீ சனாதன வாதியாகச் சித்தரித்தால்—-

இனி,

நானும் தேசவிரோதி!!!!!!!

இதை வாசிக்கும் அனைவரும் அவ்வாறே மாறுங்கள் என்று பணிவோடு கோருகிறேன்.

இதைத் தவறாமல் பகிருங்கள், பரப்புங்கள்!

அன்புடன்,

மருதமுத்து

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல்  32

செவ்வாய், 21 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 46: சொல்லடிப்போம் வாங்க! (6)

 (தோழர் தியாகு எழுதுகிறார் 45 தொடர்ச்சி)

சொல்லடிப்போம் வாங்க! (6)

பொன்முருகு கவிமுருகு எழுதுகிறார்:

இயம்இசம்இயல் எல்லாமே கொள்கை அல்லது தத்துவம்  என்பதற்கான சொல்லாட்சிதானே தோழர்?

தாராளியம் என்பது எப்படி அமைப்பையும்தத்துவத்தையும் குறிக்கிறதுஎன்பதை விளக்கப்படுத்துங்கள்.

இசம் என்று எழுதுவது ism என்று ஆங்கிலத்தில் சொல்வதன் ஒலிப்பெயர்ப்பு. இயல் என்பது அமைப்பாகவும் இருக்கலாம், கொள்கையாகவும் இருக்கலாம். அரசியல் (politics), பொருளியல் (economics), புவியியல் (geography) என்னும் சொற்கள் இடம் பொருள் ஏவலைப் பொறுத்து வாழ்க்கைத் துறைகளையோ அறிவுத் துறைகளையோ குறிக்கும்.

இசம் என்பதற்கு மாற்றாகச் சிலர்  இயலைப் பயன்படுத்துகின்றனர். காட்டாகப், பெரியாரியல் என்பது பெரியாரியம் என்ற பொருளில் ஆளப்படுகிறது. நுட்பமாகப் பார்த்தால் இரண்டுக்கும் வேறுபாடுள்ளது. Marxism என்பது மார்க்குசியம். இது மார்க்குசியக் கொள்கையமைப்பைக் குறிக்கும். இது மார்க்குசிய மெய்யியல், மார்க்குசியப் பொருளியல், மார்க்குசிய அரசியல் ஆகிய மூன்று கூறுகளாலானது. ஆனால் Marxology வேறு. இதை மார்க்குசியல் எனலாம். இது மார்க்குசைப் பற்றிய ஆய்வுத்  துறை. மார்க்குசியம் மார்க்குசின் ஆய்விலிருந்து கிடைத்தது. மார்க்குசியல் மார்க்குசைப் பற்றிய ஆய்விலிருந்து கிடைத்தது. Geography புவியியலைக் குறிக்கும்.  ஆனால் historiography வரலாற்றெழுதியல் ஆகும். History வேறு, historiography வேறு. சிலர் இதனை வரலாற்றியல் என்று சொல்வோருண்டு. வரலாறு என்றால் வந்த வழி. வரலாறு எழுதும் முறை வரலாற்றியல் அல்லது வரலாற்றெழுதியல் ஆகும்.

இயம் என்பது இசம் என்பதன் தமிழ் வடிவமாக இருக்க வேண்டியதில்லை, இயைபு (composition), இயல்பு (nature) என்பவை தூய தமிழ்ச் சொற்கள். இயைதல் என்பதும் தமிழே. எனவே இயைந்து அமையும் அமைப்பு இயம் என்ற பின்னொட்டைத் தருகிறது. இது இடம் பொருள் ஏவலைப் பொறுத்து கருத்தமைப்பாகவும் இருக்கலாம். குமுக அமைப்பாகவும் இருக்கலாம்.

முதலியம் (முதலாளியம்) என்பது முதல்சார் கருத்தமைப்பாகவும் இருக்கலாம். முதல்சார் பொருளாக்க அமைப்பாகவும் இருக்கலாம். Liberalism என்பதும் அப்படித்தான். தமிழில் தாராளியம் அல்லது தாராளவியம் என்பது இரண்டு பொருளிலும் பயன்படும். பொருள் (அருத்தம்) என்பது மட்டுமல்ல, பொருட்சாயல் (shade அல்லது அருத்தச் சாயல்) என்ற ஒன்றும் உண்டு. Liberalism என்பது இரு பொருட்சாயல்கள் கொண்டது என்றால், தாராளியம் (தாராளவியம்) இடம் பொருள் ஏவலைப் பொறுத்து இரண்டில் எந்தச் சாயலையும் குறிக்கலாம். ஆனால் ‘தராளவாதம்’ ஒரு பொருளாக்க முறைமை என்ற சாயலைக் காட்டிலும் ஒரு கருத்தியல் என்ற சாயலையே கூடுதலாகச் சுட்டுவதாக நினைக்கிறேன். நவ-தாராளவாதம், புதுத் தாராளியம் இரண்டையும் சொல்லிப் பாருங்கள். தமிழ் நாவிற்கு எது பொருத்தம்? என்று எண்ணிப் பாருங்கள்.

Ism என்பது செயலை அல்லது தொழிலைக் குறிக்கும் இடங்களும் உண்டு. காட்டாக, terrorism, journalism.

சொல்லாக்கம் என்பது சுவையான விளையாட்டு. பள்ளிப் பருவத்தில் விளையாட்டுகளில் பங்கேற்க முடியாத ஏக்கம் எனக்குண்டு. மாற்றாக அப்பா எனக்குச் சொல்லிக் கொடுத்த விளையாட்டு சொல் விளையாட்டு. Concise Oxford Dictionary  மொத்தமான புத்தகத்தைக் கையில் கொடுத்து சொல்- அதன் சமன் – சமனின் சமன் என்று தேடச் சொல்வார். READERS DIGESTஇல் சுவையான ஒரு பகுதி சொல் விளையாட்டு (WORDPLAY). ஆங்கில நாளேடுகளின் cross words பக்கம் செல்ல நேரமில்லை.

இரா. கிருட்டிணய்யாவோடு ஒருசில சொல்லாக்கங்கள் தொடர்பாக நிறைய சமர் செய்திருக்கிறேன். அவர் சொல்வார்: சொற்கள் நம் குழந்தைகள், விட்டுக் கொடுக்க முடியாது அல்லவா?

ஒரு சொல், அதற்கு ஒரு பொருள் என்று முடிவாக அமைந்து விட்டால், சொல்லாக்கத்தில் சிக்கலே இருக்காது. ஆனால் உலகம் (வாழ்க்கை)  சிக்கலானதாக இருப்பதால் உலகை விளக்கப்படுத்தும் சொல்லாக்கமும் சிக்கலானதாகிறது. பொருட்களின் பல்வகைமைக்கு எல்லையில்லை என்பதால்,  சொற்கள், அவற்றின் பொருட்கள், பொருட்சாயல்களின் பல்வகைமைக்கும் எல்லையில்லை.

வாழ்க்கையிலிருந்தும் இலக்கியத்திலிருந்தும் நம் அறிவுத் தேவைகளை நிறைவு செய்வதற்கான சொற்களைப் பெற முடியும். அவை போதாத போது நாமே நம் மொழியின் இலக்கணத்துக்கும் ஒலியமைதிக்கும் இசைவாகச் சொல்லடிக்கலாம். வேறு வழியில்லாத போது, அயல்மொழிச் சொற்களை நம் மொழியின் ஒலியமைதிக்குப் பெயர்த்தும் பயன்படுத்தலாம்.

பொன்முருகு கவின்முருகு எழுதுகிறார்:

குற்றாய்வு குறித்த விளக்கத்திற்கு நன்றி தோழர்.”

நல்லது. குற்றம் என்பது கடுமையாக இருப்பதால் வேறு மென்மையான சொல்லடிக்க முயலலாம் என்று தாழி அன்பர் தமிழ்க் காப்பர் இலக்குவனார் திருவள்ளுவன் சொல்கிறார். சரி, சிந்திப்போம்.

தாராளவியம் என்பதற்குச் சிபி சொல்லும் இலக்கண விளக்கம் சரியானது என்கிறார் இலக்குவனார் திருவள்ளுவன்.

தாராளம் + இயம் தாராளவியம்தான். இதை தாராள் + இயம் எனக் கொண்டால் மட்டுமே தாராளியம் என முடியும். தாராள இயம், தாராள் இயம் ஆகுமா? ஆழக் கடல் ஆழ்கடல் ஆவது போல்!

தாராளிகம் என்று சொல்லாய்வறிஞர் அருளியார் சொல்வதையும் கருத்தில் கொள்வோம்.

இந்த உரையாடல் தொடரும்.

சத்தியசீலன் கேட்கிறார்:    

தாராளவாதம் அல்லது தாராளவியம் (Liberalism) என்பதும் தாராளமயம் (Liberalisation) என்பதும் ஒன்றா அல்லது வேறு வேறானவையா?

வேறு வேறுதான். தாராளவியம், தாராளவாதம் (liberalism) பற்றி முன்பே விளக்கி விட்டேன். அதன் வரலாறும் பார்க்கப் போகிறோம். தாராளமயம் அல்லது தாராளமயமாக்கம் (liberalization) என்பது தாராளியத்தின் செயலாக்கம். அதன் பரவலாக்கம். Nationalism, nationalization இரண்டும் வேறு வேறுதானே?

இனிய அன்பர்களே!

தாழி அன்பர் சத்தியசீலன் என் நேற்றைய மடலுக்கு மறுமொழி இட்டுள்ளார். அதே பொருள் குறித்து சிபி, நலங்கிள்ளி மடல்களும் வந்துள்ளன. இரோசிமா நாகசாகி தொடர்பான அன்பர் இயூபருட்டு மடலும் வந்துள்ளது. நாளை அந்த உரையாடலைத் தொடர்கிறேன். இன்று அரசியல் வகுப்புக்கு அணியமாக வேண்டும். நாளை சந்திப்போம் – தாழியில்தான்!

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல்  31

திங்கள், 20 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 45: பெரியாரா? பிரபாகரனா?

 
(தோழர் தியாகு எழுதுகிறார் 44 தொடர்ச்சி)

பெரியாரா? பிரபாகரனா?

தாழி 20, 21 மடல்கள் குறித்து அன்பர் மா. சத்தியசீலன் எழுப்பியுள்ள வினாக்களை இம்மடலில் எடுத்துக் கொள்கிறேன்.

தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களைப் பற்றிய ‘தீரன் திண்ணியன் தேசத் தலைவன்’, தமிழீழ மாவீரர் நாள் பற்றிய ‘மாவீரர்களின் பெயரால்’ ஆகிய கட்டுரைகளையே சத்தியசீலன் குறிப்பிடுகின்றார்.

முதலாவது கட்டுரையை மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். பிராபகரனை நான் எப்படிப் பார்க்கிறேன்? அவரது வரலாற்று வகிபாகம் பற்றிய என் புரிதல் என்ன? என்பதை அவ்வுரையில் தெளிவாக்கியுள்ளேன். உங்கள் வினாக்களுக்கான விடைகள் பெரும்பாலும் அங்கேயே கிடைத்து விடும். 

புலிகள் மீதும் தலைவர் பிராபகரன் மீதும் மாபெரும் நன்மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த அன்பர் சத்தியசீலனின் பார்வையில் மாற்றம் வருமானால் வரட்டும். ஆனால் அந்த மாற்றம் என்ன அடிப்படையில் வர வேண்டும்? பிரபாகரனும் புலிகளும் தங்கள் மீதான நன்மதிப்பையும் மரியாதையையும் கெடுத்துக் கொள்ளும் வகையில் ஏதேனும் செய்திருந்தால், அந்த அடிப்படையில் மாற்றம் வந்திருந்தால் சொல்ல வேண்டும். அது பற்றி வாதுரைக்கத் தடையில்லை.

ஆனால் சத்தியசீலன் சொல்லும் காரணம் என்ன? தமிழ்நாட்டில் அண்மைக் காலமாகத் தமிழ்த் தேசியம் எனும் பெயரால் திராவிட இயக்கத்தையும் தந்தை பெரியாரையும் இழிவுபடுத்தி விட்டனர் என்றும், திராவிட இயக்கங்கள்-கட்சிகளின் தலைவர்களை சாதி அடிப்படையில் ‘தமிழர் அல்லாதோர்’ என்றும் திராவிடர்களை இனப்பகைவர் என்றும் சாதிய அடிப்படையில் இனவாத அரசியலைக் கட்டமைக்கின்றனர் என்றும் சத்தியசீலன் காரணமுரைக்கின்றார்.

சத்தியசீலன் சொல்வதனைத்தும் உண்மையென்றே கொண்டாலும் இதற்குப் பிரபாகரனும் புலிகளும் எப்படிப் பொறுப்பாவார்கள்? அவர்கள் திராவிட இயக்கத்தையும் தந்தை பெரியாரையும் எப்போதாவது இழிவுபடுத்தியதுண்டா? திராவிட இயக்கத் தலைவர்களைச் சாதி அடிப்படையில் ‘தமிழரல்லாதோர்’ என்று கூறியதுண்டா? திராவிடர்களை இனப் பகைவர் என்று தூற்றியதுண்டா? புலிகள் சாதிய அடிப்படையில் இனவாத அரசியலைக் கட்டமைத்ததுண்டா?

புலிகள் செய்யாதவற்றுக்கெல்லாம் அவர்களைப் பொறுப்பாக்கி அந்த அடிப்படையில் அவர்கள் மீதான நன்மதிப்பையும் மரியாதையையும் மாற்றிக் கொள்வது நியாயம்தானா? அண்மைக் காலமாகத் தமிழ்த் தேசியத்தின் பெயரால் பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் இழிவுபடுத்துகிறவர்கள் என்றால்? தொன்மைக் காலமாக அல்ல! அண்மைக் காலமாக! அதாவது முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்குப் பின்! சரிதானே? இந்த அண்மைக் காலத்தில் புலிகளும் பிரபாகரனும் இருந்தார்களா? நந்திக் கடலுக்குப்பின் பிரபாகரன் உயிர்த்தெழுந்து வந்து பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் இழிவுபடுத்தினாரா? சிங்கள இன வெறியர்களால் வதைத்துக் கொல்லப்பட்ட புலிப்படைத் தளபதிகள் மேலுலகிலிருந்து பெரியாரை இழிவுபடுத்தி அறிக்கை வெளியிட்டார்களா?

“பெரியாரின் பகுத்தறிவு – பார்ப்பன எதிர்ப்புக் கருத்துகள் மீதும் திமுகவின் இந்தி எதிர்ப்பு – தமிழின அரசியல் மீதும் எனக்கு மிகுந்த பேரார்வம் உண்டு” என்கிறார்  அன்பர் சத்தியசீலன். எனக்கும் அப்படித்தான்! பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளையும்  பார்ப்பன எதிர்ப்புக் கருத்துகளையும் நானும் மதித்துப் போற்றுகிறேன். இதை வெளிப்படையாகவே சொல்கிறேன்.   

“இந்தத் தமிழினவாத அரசியல்வாதிகள் திமுக – திராவிட இயக்கங்களின் மீது அவதூறுகள் பரப்பிக் கொண்டுள்ளனர்” என்கிறார் சத்தியசீலன். அவர் இப்படி நம்புவாரானால் தமிழினவாதிகள் யார்? அவர்கள் எப்படி அவதூறு பரப்புகிறார்கள்? என்பதை வெளிப்படையாகச் சொல்லி “இந்தத் தமிழினவாத அரசியல்வாதிகளின்” முகத்திரையைக் கிழித்தெறியுங்கள்! விடுதலைப் புலிகளும் இவ்வாறு அவதூறு பரப்புகின்றனர் என்றால் அவர்களையும் விட்டு வைக்காதீர்கள். திமுக – திராவிட இயக்கங்களின் மீதான அவதூறுகளை மறுத்து வாதிடுவதற்கு மாறாக, இவர்கள் பரப்பும் அவதூறுகளுக்குப் புலிகள் மீது பழிபோடுவதில் பகுத்தறிவு வழிப்பட்ட ஏரணம் இல்லையே!  

“இவர்களுக்குத் திராவிட இயக்கத்தின் மீது வன்மம்” என்கிறார் சத்தியசீலன். எவர்களுக்கு? புலிகளுக்கா? பிரபாகரனுக்கா? புலிகளுக்குத் திராவிட இயக்கத்தின் மீது வன்மம் இருக்குமானால் திராவிட இயக்கத் தலைவர்களான கி. வீரமணி, கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன், வைகோ போன்ற தலைவர்கள் இன்றளவும் பிரபாகரனையும் புலிகளையும் போற்றிக் கொண்டிருப்பார்களா?

 “பெரியாருக்கு எதிராகப் பிரபாகரனை நிறுத்துகின்றனர்” என்று சத்தியசீலன் சொல்வது யாரை? பிரபாகரன் என்றைக்காவது பெரியாருக்கு எதிராகத் தன்னை நிறுத்திக் கொண்டாரா? வீரமணி, கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன், வைகோ இவர்களில் யாராவது பெரியாருக்கு எதிராகப் பிராபகரனை நிறுத்தியதாகக் காட்ட முடியுமா? தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புலிகளின் வரலாற்று வகிபாகத்தை அறிந்தேற்றுப் போற்றும் என்னைப் போன்ற யாராவது பெரியாருக்கு எதிராக பிரபாகரனை நிறுத்தியதுண்டா?

அப்படி யாராவது பெரியாருக்கு எதிராகப் பிரபாகரனை நிறுத்தினால் என்ன செய்ய வேண்டும்? இது ஒரு கால வழு! கள வழு! என்பதை எடுத்துரைக்க வேண்டும். இருவரின் காலத்திலும் களத்திலுமான வேறுபாட்டை மறந்து இருவரையும் ஒப்பிட்டு மோத விட்டு வேடிக்கை பார்க்கும் அறிவிலிகளின் மனம்பிறழ்ந்த  விளையாட்டைக் காரண காரியத்தோடு புறந்தள்ள வேண்டும். இப்படிச் செய்யாமல், “நீ பெரியாரை அவதூறு செய்தால் நான் பிராபகரனைப் பழிப்பேன்” என்று வரிந்து கட்டுவது சரிதானா?

நமக்கு – தமிழ்த் தேசிய இன மக்களாகிய நமக்குப் பெரியாரும் வேண்டும், பிரபாகரனும் வேண்டும். இருவரின் வரலாற்றுப் பங்களிப்பையும் அறிந்தேற்று, கொள்வன கொண்டு அல்லன தள்ளி முன்னேறிச் செல்லும் முதிர்ச்சி வேண்டும்.

“தமிழ்நாட்டுத் தமிழர்கள் அதிகம் நன்மையடைந்தது பெரியாராலா பிரபாகரனாலா? பிரபாகரனா தமிழ்நாட்டில் தில்லிக்கு எதிராகவும் பார்ப்பனர்க்கு எதிராகவும் போராடினார்?” என்ற கேள்வி அவதூற்று ஆசான்கள் விரித்த வலையில் அன்பர் சத்தியசீலன் தானாகப் போய் விழுவதைத்தான் காட்டுகிறது. “தெரியாமல்தான் கேட்கிறேன்” என்று அவரே சொல்கிறார். தெரிந்தால் கேட்க மாட்டார். தமிழ்நாட்டில் தில்லிக்கு எதிராகவும் பார்ப்பனர்க்கு எதிராகவும் போராடியவன் நானே என்று பிராபாகரன் எப்போதாவது சொல்லிக் கொண்டாரா? அல்லது புலிகளை ஆதரிக்கும் தலைவர்கள் யாராவது அப்படி வாதிட்டதுண்டா?

இதற்குப் பதிலாக “தமிழீழத் தமிழர்கள் அதிகம் நன்மையடைந்தது பிரபாகரனாலா? பெரியாராலா? பெரியாரா தமிழீழத்தில் சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராகப் போராடினார்?” என்று கேட்டால் எப்படியிருக்கும்? இரண்டு கேள்விகளுமே பிழையானவை! வரலாற்றுப் பார்வையற்றவை! இப்படிக் கேட்பதே குற்றம்!

தந்தை பெரியார் குறித்து நான் இப்படி எழுதினேன்:

______தமிழினத்தின் தன்மான அடித்தளம்

சமூகநீதிப் புத்தமைப்பின் உலைக்களம்

தந்தை பெரியார் —

விடுதலைச் சிந்தையின் விளைநிலம்_____

இன்றளவும் இதில் எந்த மாற்றமும் இல்லை. என்னுடைய “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” படித்துள்ளீர்களா?

பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவரே தவிர தமிழ்நாட்டின் தேசியத் தலைவர் அல்லர். ஒவ்வொரு தேசமும் தனக்கான தலைமையைப் போராட்ட வழியில் வார்த்தெடுக்கும், விடுதலைப் போராட்டம் என்பது ஏற்றுமதிச் சரக்கோ இறக்குமதிச் சரக்கோ அன்று. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனைப் போற்றுவது ஈழப் போராட்டத்தின் தலைவராகத்தானே தவிர எமதியக்கத்தின் தலைவராக அல்ல. அந்த இடம் வெற்றிடம் இல்லை. எங்களுக்கென்று கொள்கையும் குறிக்கோளும் வழிமுறையும் உண்டு. அந்த அடிப்படையில் எமது தலைமையை யாமே வளர்த்தெடுப்போம்.

பிராபகரனை இயேசு கிறித்து என்றோ திருமுருகன் என்றோ யாம் நம்பவில்லை. அவரது போராட்ட வரலாற்றில் வெற்றிகளும் உண்டு, தோல்விகளும் உண்டு என்பதை அறிவோம். வெற்றிகளிலிருந்து வீரம் பெறுவோம்! தோல்விகளிலிருந்து பாடம் பெறுவோம்!

நானெல்லாம் 1960களின் இறுதியில் புரட்சிக்கு வந்த புதிதில் “சீனத்தின் தலைவர் எமது தலைவர்! சீனத்தின் பாதை எமது பாதை!” என்று முழங்கியதுண்டு. அது பெரும்பிழை என்பதைப் பட்டுணர்ந்து விட்டோம். இப்போது “ஈழத்தின் தலைவர் எமது தலைவர்” என்று சிந்திக்கவோ சொல்லவோ செயல்படவோ எப்படி ஒப்புவோம்?

“பிரபாகரன் வழியே எங்கள் வழி” என்று சொல்லிக் கொண்டு நானே முதலமைச்சர் என்று பிதற்றிக் கொண்டிருப்பவர்கள் மீதான சீற்றத்தைப் பிரபாகரனுக்கு எதிராகத் திருப்புவது நியாயமில்லை, தோழர்மாரே!

பெரியார் ஆனாலும், பிரபாகரன் ஆனாலும், வேறு எவர் ஆனாலும் வரலாற்றின் திறனாய்வுக்கு உட்பட்டவர்களே! “விமர்சனம்” என்ற ஒன்றுக்கு அப்பாற்பட்டவர்கள் எவருமில்லை. ஆனால் பெரியாரையும் பிரபாகரனையும் மோத விட்டு “சேவல் சண்டை” விளையாட்டு நடத்தும் சூதர்களின் கெடுமுயற்சியைப் புறந்தள்ளத் தயங்காதீர்கள்!

ஈழப் போராட்டத்தில் திமுக அதிமுக நிலைப்பாடு, இனவாதிகளின் கருத்துகளில் புலம்பெயர் ஈழத் தமிழர் பங்கு, விடுதலைப் புலிகளின் அரசியல் அறிவு, புலிகள் மீது இடதுசாரிகளின் குற்றாய்வு … என்று அன்பர் சத்தியசீலன் எழுப்பியுள்ள மற்ற மற்ற வினாக்களை அடுத்தடுத்துப் பார்ப்போம்!

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல்  30

ஞாயிறு, 19 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 44: சொல்லடிப்போம் வாங்க! (5)

      19 March 2023      அகரமுதல (தோழர்தியாகுஎழுதுகிறார் 43 தொடர்ச்சி)

சொல்லடிப்போம் வாங்க! (5)

தாழி அன்பர் பொன்முருகு கவின்முருகு கேட்கிறார்:

குற்றாய்வு என்ற சொல் விமர்சனம் என்பதற்கான தமிழ்ச் சொல்லா?

ஆமாங்க. விமர்சனம் என்பதில் இரு வகையுண்டு: (1) திறனாய்வு [review] (2) குற்றாய்வு [criticism]. Criticism and self-criticism = குற்றாய்வும் தற்குற்றாய்வும்.

இன்னுஞ் சிறந்த மாற்று இருப்பின் அன்பர்கள் எழுதலாம்.

நவ-தாராளவாதமா? புதுத் தாராளியமா? என்ற சிக்கலில் நவ-தாராளவாதம் ஒழிந்து, தாராளியமா? தாராளவியமா? தாராளிகமா? என்ற சிக்கல் மட்டும் தொடர்கிறது. அறிஞர்தம் கருத்துக்காகக் காத்துள்ளேன். இந்தச் சிக்கலை முடித்துக் கொண்டு தாராளியத்தின் வரலாற்றைப் பார்ப்போம்.

இதற்கிடையில் அடுத்த சிக்கலாக ‘ஏகாதிபத்தியம்’ (imperialism) என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம்.

ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம் [Imperialism, Highest Stage of Capitalism] என்பது மா இலெனின் எழுதிய புகழார்ந்த நூல். பொதுமை இயக்கத் தலைவர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் மட்டுமல்ல, அறிஞர் அண்ணாவும் தில்லி ஏகாதிபத்தியம் பற்றிப் பேசியுள்ளார். (அண்ணாவுக்குப் பின் யாரும் பேசினார்களா, தெரியாது.)

ஆனால் imperialism என்பதை முதலில் யார் ஏகாதிபத்தியம் என்று தமிழாக்கினார்களோ, தெரியவில்லை. இரண்டுக்கும் என்ன பொருத்தம் என்று கேட்க வேண்டியுள்ளது.

ஏகாதிபத்தியம் = ஏகம் + ஆதிபத்தியம். ஏகம் என்றால் ஒன்று. ஆதிபத்தியம் என்றால் அதிகாரம் அல்லது தலைமை. இது எப்படி imperialism ஆகும்?

ஏகாதிபத்தியம் தமிழ்ச் சொல் இல்லை என்பது மட்டுமல்ல. அதற்கு imperialism என்ற பொருளும் இல்லை.

Empire என்பதே அடிச்சொல். பேரரசு என்று பொருள். Imperialism வட மொழியில் சாம்ராச்சியம். மலையாளத்தில் சாம்ராச்சியவாதம் என்று நினைக்கிறேன். நல்ல தமிழில் பேரரசியம் எனலாம். ஆனால் பேரரசியத்தில் ஒரு நேர்நிறைத் தொனி இருப்பதால்

imperialism = வல்லரசியம்

என்பதில் போய் நிற்கிறோம். வல்லரசியம் ஒழிக! வல்லரசியம் எதிர்ப்போம்!

சொல்லாராய்ச்சியாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. வரலாற்று நோக்கில் imperialism = வல்லரசியம் எவ்வாறு உருவானது? மா இலெனின் அவரது நூலில் இதனை எப்படி விளக்கினார் என்பதையும் பார்க்க வேண்டும். பார்ப்போம்.  

தாழி மடல் மின்னஞ்சல் முகவரி கொடுத்து உள்பெட்டியில் பெற்றுப் படிக்கும் அன்பர்கள் குறைவாகவே உள்ளனர் என்ற மனக்குறை எனக்கும் தோழர்களுக்கும் உண்டு. ஆனால் நேரடியாக வரப்பெறாமலே தாழி மடல் படிப்பவர்கள் நிறைய உண்டென்பதை பெங்களூருவில் தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி! அன்பர்கள் நேராக மின்னஞ்சலில் பெற்றுப் படிப்பது நம் உரையாடலுக்குக் கூடுதல் பொருத்தமாய் இருக்கும் என்பது என் நம்பிக்கை. தாழி மடல் செய்திகளை எல்லா வழிகளிலும் பரப்புங்கள். ஆர்வமுள்ளவர்களிடம் மின்னஞ்சல் முகவரிகள் திரட்டித் தோழர் மகிழனுக்கு அனுப்புங்கள். அறிவின் ஒளி படரத் துணை செய்யுங்கள்!

தாழி மடலுக்கு அன்பர்கள் எழுதுவது ஊக்கமளிக்கிறது. தாழி அன்பர் சத்தியசீலனிடமிருந்து சற்றே நீண்ட மடல் ஒன்று வந்துள்ளது. அதனை அப்படியே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

அன்பர் சத்தியசீலன் மா. எழுதுகிறார்:

ஐயா, வணக்கம். தங்களின் மடல்கள் கருத்துக் கருவூலங்களாக- அழகுத் தமிழில் என்னைப் போன்ற பலர் அறியாத -ஆனால் அறியவேண்டிய அரிய தகவல்களுடன் வருகின்றன; மிக்க மகிழ்ச்சி!

தாழி-20, 21 மடல்கள் குறித்தான சில ஐயப்பாடுகளைத் தெளிவுப்படுத்திக் கொள்ளவே இம்மடலை தங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பற்றியும் அவர்தம் இயக்கத்தைப் பற்றியும் என்னைப் போன்ற பலருக்கும் மேலதிகமான புரிதல் தேவைப்படும் எனக் கருதுகிறேன்; அதனைக் குறித்தே இக்கடிதம்.

எனது பள்ளிப் பருவத்திலிருந்து 2009 மாபெரும் இனவழிப்பு நடந்தேறிய வரை புலிகளின் மீதும் அதன் தலைவர் பிரபாகரன் மீதும் மாபெரும் நன்மதிப்பையும் மரியாதையையும் வைத்திருந்தேன்; ஆனால் அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியம் எனும் பெயரால் திராவிட இயக்கத்தையும் தந்தை பெரியாரையும் இழிவுபடுத்தியும் திமுக உள்ளிட்ட திராவிட இயக்கங்கள்- கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்களை அவர்தம் சாதிகளின் அடிப்படையில்  ‘தமிழர்அல்லாதோர்’ என்றும் ‘திராவிடர்கள்’ என்போரை இனப் பகைவர் என்றும் சாதிய அடிப்படையிலான இனவாத அரசியலைக் கட்டமைக்கின்றனர்.

பெரியாரின் பகுத்தறிவு – பார்ப்பன எதிர்ப்புக் கருத்துகள் மீதும் திமுகவின் இந்தி எதிர்ப்பு – தமிழின அரசியல் மீதும் எனக்கு மிகுந்த பேரார்வம் உண்டு. 

விடுதலைப் புலிகளின் அரசியலை தமிழகத்தில் என்னைப் போன்ற பலர் பரவலாக அறிய வந்தது திராவிட இயக்கமும் திமுகவும் ஈழ விடுதலை ஆதரவுப் பரப்புரையின் மூலம்தான் என்பதை அவர்கள் அறிவார்களா?

திமுக தலைவர் கலைஞர் வெளிப்படையாக வி.பு.க்களையும் பிரபாகரனையும் ஆதரிக்கவில்லை எனினும் அக்கட்சியினர் பலர் – அடிமட்டத் தொண்டர் வரை வெளிப்படையாக புலிகளை ஆதரித்து வந்தனர் என்பதை அனைவரும் அறிவோம். ஏனெனில் கலைஞர் புலிகளின் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தார்.

ஆனால் அதிமுகவின் நிலைப்பாடோ இதற்கு நேரெதிரானது; அதன் தலைவர் எம்ஞ்சியார் பிரபாகரனை ஆதரித்து வந்தார். ஆனால் அவரைத் தவிர அவரது கட்சியினர் வேறெவரும் புலிகளை ஆதரித்ததாக எந்தவொரு தகவலும் எனக்குத் தெரிந்து இல்லை.

திமுகவின் ஈழ நிலைப்பாட்டில் சற்று மாற்றம் ஏற்பட்டது என்பது இந்திய முன்னாள் பிரதமர் இராசீவு காந்தி படுகொலைக்குப் பின்னரே. அதுவும் அப்படுகொலையினால் அதிகம் பாதிக்கப்பட்டோர் திமுகவினரும் – திகவினருமே ஆவர் என்பதனாலும் அப்படுகொலையை நிகழ்த்தியது புலிகள்தான் என்ற அனைத்திந்தியப் பரப்புரை எடுபட்டதும்தான்.

நிலைமை இவ்வாறு இருக்கையில் இந்தத் தமிழினவாத அரசியல்வாதிகள் திமுக – திராவிட இயக்கங்களின் மீது அவதூறுகள் பரப்பிக் கொண்டுள்ளனர். இத்தனைக்கும் இவர்கள் எவரும் ஈழ விடுதலை அரசியலுக்காகக் களத்தில் நிற்கவோ சிறை செல்லவோ இல்லை.

பிறகு ஏன் இவர்களுக்குத் திராவிட இயக்கத்தின் மீது வன்மம்; இவர்களுக்குப் பின்னிற்பது யார் அல்லது எந்த ஆற்றல்! திராவிட இயக்கம் வீழ்ந்துபட்டால் அதனால் ஆதாயம் பெறுவது வலதுசாரி – இந்துத்துவா பாசிட்டுகளாகத்தான் இருக்க இயலும்.

இந்த இனவாதப் பிழைப்புவாதிகளுக்குப் பொருளாதார அடித்தளமாக இருப்பது மேலைநாடுகளில் வசிக்கும் ஈழ ஏதிலியரே!

அவர்கள் ஏன் இவர்களை ஆதரிக்க வேண்டும் – அரசியல் அறிவற்று ஆதரிக்கிறார்களா இல்லை தெரிந்தேதான் ஏதேனும் உள்நோக்கத்துடன் ஆதரிக்கிறார்களா!

அவர்களின் நோக்கம்தான் என்ன! இவர்கள் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரம் பெற்று ஈழத்தைப் பெற்றுத் தந்து விடுவார்கள் என்று நிசமாகவே நம்புகிறார்களா? – அந்தளவுக்கு அறிவற்றவர்களா?

இத்தகைய அரசியல் அறிவைத் தான் இவர்களின் தலைவரான பிரபாகரன் இவர்களுக்குப் போதித்திருக்கிறாரா?

அப்படி எனில் விடுதலைப் புலிகளின் அரசியல் அறிவின் மீதே எனக்கு அய்யம் எழுகிறது!

பெரியாருக்கு எதிராக பிரபாகரனை எதிர் நிறுத்துகின்றனர்; நான் தெரியாமல்தான் கேட்கிறேன் – தமிழ்நாட்டுத் தமிழர்கள் அதிகம் நன்மையடைந்தது பெரியாராலா பிரபாகரனாலா? பிரபாகரனா தமிழ்நாட்டில் தில்லிக்கு எதிராகவும் பார்ப்பனர்க்கு எதிராகவும் போராடினார்?

அது மட்டுமல்ல, பெரும்பாலான இடதுசாரிகள் (மகஇகவினர் உள்ளிட்ட) – அறிவுசீவிகள் பலரும் புலிகளைக் குற்றாய்வு செய்து வருகின்றனர்! ஆனால் தங்களைப் போன்ற ஒரு சில இடதுசாரி அரசியலர்களும் பெரியாரியலாளர்களும் (பெரியாருக்கு நிகராகவே) ஆதரிக்கின்றனர்!

இதுதான் என்னைப் போன்றோருக்கு கருத்து மயக்கத்தை

ஏற்படுத்துகிறது. ஆகவே விரைவாகத் தங்களிடமிருந்து இதுகுறித்து தெளிவான விளக்கம் பக்கச் சார்பற்று – எனக்குப் புரிதல் ஏற்படுத்தும் அளவில் வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்; 

நன்றி!

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல்  29