சனி, 29 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 85 - அருளியார்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 84 தொடர்ச்சி)

அருளியார்: எப்போதும் என்னுடன்!

அருளியாருடன் உரையாடி முடித்து விடைபெறும் போது “விடாப்பிடியாக உங்கள் பணிகளைச் செய்யுங்கள், நீங்கள் அப்படிச் செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்றார். சிரித்துக் கொண்டே “நாம் செய்வோம்” என்று சொல்லி விடைபெற்றேன். அவர் முதன்முதலாக இப்படிச் சொன்னதை நான் மறக்கவில்லை, அவரும் மறக்கவில்லை.

1986-87-88? சரியாக நினைவில்லை. தஞ்சாவூரில் என் கல்லூரிக் கால ஆங்கிலப் பேராசிரியர் சேசாத்திரி அவர்களைப் பார்க்க நண்பர் மோகன் (அமரன்)  என்னை அழைத்துப் போயிருந்தார். கிட்டத்தட்ட இருபது ஆண்டு இடைவெளிக்குப் பின் பார்த்த போதிலும் உடனே தெரிந்து கொண்டு பேசினார். (இவருடன் எனக்கு நடந்த வகுப்பறை மோதல்கள் பற்றி முகநூலில் எழுதியுள்ளேன்.) இப்போது தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பணி செய்து கொண்டிருந்தார். தமிழ் பல்கலைக்கழகம் பற்றியும், அங்கே அவரது பணி பற்றியும் சொன்னார். சங்கத் தமிழ் இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது பற்றிச் சொன்னார். என் பணிகளைப் பற்றிக் கேட்டறிந்தார்.

இடையில் அந்தக் கேள்வியைக் கேட்டார்: “தியாகராசா, உனக்கு அருளியாரைத் தெரியுமா?” “தெரியாது” என்றேன். அருளியாரின் உழைப்பு, தமிழறிவு, ஆய்வுத் திறன், சோர்வின்மை பற்றியெல்லாம் வியந்து சொன்னார். “நீ அவசியம் அவரைப் பார்க்க வேண்டும்” என்றார்.

அருளியாரை முதன்முதலாக எப்போது பார்த்தேன்? தஞ்சையில் காவிரி உரிமைக்கான போராட்டம், எங்களோடு அவரும் கலந்து கொண்டு தளைப்பட்டுப் பச்சைத்துண்டுடன் காவல்துறை வண்டியில் ஏறிய போதாக இருக்கலாம். நின்ற படி உணர்ச்சி பொங்க முழக்கம் எழுப்பிக் கொண்டே வந்தார்.

1993இல் தாய்த் தமிழ் கல்விப் பணி நிறுவி, அதன் சார்பில் அம்பத்தூரில் ஆலமரம் அருகே தமிழ்நாட்டின் முதல் தாய்த் தமிழ் பள்ளி நிறுவிய போது “தாருங்கள் ஆளுக்கு ஒரு உரூபாய் நன்கொடையாக” என்று ஒரு உரூபாய் முத்திரை விற்றுப் பொருள் திரட்டிக் கொண்டிருந்தோம். இதற்காகவே புதுவை சென்றிருந்தேன்.

அருளியார் அப்போது தஞ்சையில் பணி செய்து கொண்டிருந்தார், விடுமுறை நாட்களில் புதுவை வந்து விடுவார். நண்பர்கள் என்னை அருளியாரிடம் அழைத்துப் போனார்கள். அவர் எங்களை அன்புடன் வரவேற்றுத் தேநீர் வாங்கிக் கொடுத்து அமரச் சொல்லி நான் தந்த அறிக்கையை வாங்கிப் படித்தார். என்னைப் பார்த்துச் சொன்னார்:

“வேறு யாராய் இருந்தாலும் இதெல்லாம் வீண் வேலை என்றுதான் சொல்லியிருப்பேன். ஆனால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள், ஏனென்றால் வெற்றி பெறாமல் விட மாட்டீர்கள் என்ற உறுதியான நம்பிக்கை எனக்குள்ளது. விடா முயற்சி செய்து வெற்றி பெறச் செய்யும் உங்கள் பண்பினை அறிவேன்” என்று சொல்லி ஐம்பதோ நூறோ முத்திரைகள் எண்ணி வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தார்.

தமிழியக்கம் என்பது நான்கு சுவர்களுக்கு நடுவில் சொல்லாய்வு முயற்சிகளோடு முடிந்து விடுவதில்லைதமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் தொடங்கிய போது ‘மிகையான’ ஊக்கத்துடன் துள்ளி வந்து நின்ற அருளியாரைக் கண்டேன். அரசியல் தலைவர்களை இந்த அளவுக்கு நம்ப வேண்டுமா என்ற கேள்விதான் எழும். இந்த முயற்சி தோற்று அடுத்த முயற்சி எடுத்தால் அப்போதும் வந்து நிற்பார். அருளியாரின் விடாப்பிடி அத்தகையது. 

மூலமுதல், பொதுமையறிக்கை முதலான செவ்வியல் மார்க்குசிய நூல்களைத் தூய தமிழில் மீளாக்கம் செய்ய முடிவெடுத்த போது அருளியாரிடம் சொன்னேன். “உங்கள் விடாமுயற்சி வெற்றி தரும்” என்று வாழ்த்தினார். சோசலிசம் என்பதைக் குமுகியம் என்று தமிழாக்கம் செய்வதாகச் சொல்லி அதற்கான காரணங்களை விளக்கிய போது ஏற்று ஊக்கம் கொடுத்தார். இடையில் ஒரு முறை புதுவைப் பயணத்தின் போது சொற்களின் நீண்ட பட்டியலோடு நானும் இளந்தமிழகம் செந்திலும் அவர் இல்லம் சென்றோம். தேன்மொழியம்மாவும் அருளியாரும் தாய் தந்தை போல் அன்பைப் பொழிந்து தட்டு நிறையத் தின்பண்டமெல்லாம் கொடுத்து உண்ணச் செய்தது கண்டு கூசிப் போனேன். விருந்தோம்பல், அருந்தோம்பல் செய்து எங்கள் ஐயங்களையெல்லாம் தெளியச் செய்து அனுப்பினார்.

‘சுய நிர்ணய உரிமை’ பற்றிய விவாதத்தை அவருக்கும் சொன்னேன். ‘தன்-தீர்வுரிமை’தான் சரி என்று ஏற்றுக் கொண்டார். நான் முதலில் தந்தீர்வு (தன் + தீர்வு) என்று எழுதிக் கொண்டிருந்தேன். பிறகு தன்றீர்வு என்று புணர்ச்சி நெறி வழுவாமல் எழுத முற்பட்டேன். [தம்+தீர்வு = தந்தீர்வு. தன்+தீர்வு = தன்றீர்வு]. வேண்டா, அது கடினமாக இருக்கும், ஆங்கிலத்தில் போலவே இடையில் ஒரு சிறு கோடு (hyphen) போட்டுக் கொண்டால் போதும் என்றார். இப்படித்தான் தன்-தீர்வுரிமை இறுதியாயிற்று.

மக்கள் தொலைக்காட்சியின் சங்கப் பலகையில் அவரை அழைத்து அமர்த்திச் சொல்லாய்வு பற்றிப் பேசக் கேட்டு மகிழ்ந்தேன். கண்டோர் மகிழ்ந்தனர். சுவைஞன் (இரசிகன்) எப்படி விசிறி ஆனான்? எள்+நெய் = எண்ணெய். அது ஏன் நல்லெண்ணெய் எனப் பெயர் பெற்றது? அவர் கொடுத்த விளக்கங்கள் ஊணுறக்கம் பாராமல் உழைத்து ஆய்வுச் சுரங்கத்தில் வெட்டியெடுத்த வைரங்களது ஒளிவீச்சின் சிற்சில சிதறல்களே! அவரது சொல்லாய்வு பற்றிப் பேசினால் பேசிக் கொண்டே இருக்கலாம். அவர் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

(தொடரும்)

தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 52

வெள்ளி, 28 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 84: தாராளவியமா? தாராளியமா? தாராளிகமா?

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 83 தொடர்ச்சி)

சொல்லடிப்போம் வாங்க! (9)

தாராளவியமா? தாராளியமா? தாராளிகமா?

இனிய அன்பர்களே!

நவ தாராளவாதமா? புதுத் தாராளியமா? என்பதிலிருந்து இந்த உரையாடல் தொடங்கியது நினைவிருக்கும். நவ தாராளவாதம் வேண்டா என்று தொடக்கத்திலேயே தள்ளி விட்டோம். அதுதான் வேண்டும் என்றோ, அதுவே இருக்கட்டும் என்றோ யாரும் கட்சி கட்டவில்லை. ‘நவ’ என்பது புது எனப் பொருள் தரும்.

கலைச் சொல்லாக்கத்தில் பாதி தமிழாகவும் பாதி வேற்று மொழியாகவும் இருக்கலாகாது. நவ என்ற வடமொழிச் சொல்லை தாராளம் என்ற தமிழ்ச்சொல்லோடு சேர்க்க முடியாது, சேர்த்தால் அது இயல்பான தமிழாக இருக்காது. முன்பெல்லாம் self-expansion என்பதை சுயபெருக்கம் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். இரா. கிருட்ஷ்ணையா அவர்கள்தான் “சுயமும் பெருக்கமும் ஒட்டாது” என்று சொல்லி அதனைத் “தற்பெருக்கம்” என்று மாற்றச் செய்தார்.

தன் + பெருக்கம் = தற்பெருக்கம். ஆனால் முன்னொட்டாக ‘தற்’ சேர்ப்பது எல்லா இடத்திலும் ஒத்து வராது. தற்காலம் என்ற சொல் தொடர்ந்து தவறாகவே ஆளப்படுகிறது. என் எதிரில் கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி இருக்கிறது. இந்தத் தற்காலம் தன்+காலம் அன்று, தத்+காலம்  தான். ‘தத்’ என்றால் வட மொழியில் அந்த என்று பொருள். தற்காலம் என்றால் அந்தக் காலம் என்றாகிறது. இந்தக் காலத்தை மனத்திற்கொண்டு அந்தக் காலம் என்பதைக் குறிக்கும் தற்காலம் என்று எழுதுவது முரண் அல்லவா? Modern என்பதைத்தான் தற்காலம் என்று தவறாக எழுதுகின்றனர். இதற்கு நல்ல தமிழ்ச் சமன் புதுமக் காலம் என்பதே. புதுமக் காலத்துக்கு ஏற்ற புதுத் தமிழ்ச் சொல்லாக்கம் தேவை. தனித் தமிழ் அல்லது தூய தமிழ் என்பது பழந்தமிழ் என்றும் புதுத் தமிழ் என்றால் ஆங்கிலம் அல்லது சமற்கிருதம் கலந்த தமிழ் என்றும் கருதிக் கொள்வது வெறும் மயக்கமே. பழங்கவிதை என்றால் தூய செந்தமிழ் என்றும் புதுக் கவிதை என்றால் கலப்படத் தமிழ் என்றும் கருதிக் கொள்வதும் அப்படித்தான்.

சொல்லாக்கத்தில் வேற்றுமொழிச் சொல்லை அல்லது சொற்றொடரை அப்படியே ஒலிபெயர்த்துத் தமிழில் எழுத வேண்டிய கட்டாயம் இருக்கும் போது அப்படிச் செய்யலாம். ஆக்சிஜன், ஐட்ரஜன், மீத்தேன்  என்றெல்லாம் எழுதலாம், அறிவியல் தமிழ் அவற்றை ஏற்றுக் கொள்ளும், பாதி தமிழ், பாதி வேற்றுமொழி என்று எழுதுவதுதான் மோசம். அறிவியலுக்கு மொழி பெரிதில்லை என்பது பிதற்றலே. சரியான மொழியில்தான் சரியான அறிவியல் பழகும்.

சரி, தாராளவியமா? தாராளியமா? என்ற வினாவிற்குத் திரும்புவோம். இரண்டு விதமாகவும் ஆளலாம் என்று இலக்குவனார் திருவள்ளுவன் சொல்லியிருந்தார். புணர்ச்சி இலக்கணப்படி தாராளவியம்தான் சரி என்று சிபி சுட்டிக் காட்டினார். சிபி சொல்லும் இலக்கணம் சரியானதே என்று இலக்குவனார் திருவள்ளுவனார் ஏற்றுக் கொண்டார். ஆனால் தாராளியம் என்று பழகியிருந்தால் அதிலும் தவறில்லை என்றார். ஆக, தாராளவாதத்துக்கு விடை கொடுத்தனுப்பிய பிறகும், தாராளியமா? தாராளவியமா? என்ற கேள்வி எஞ்சியிருந்தது. எந்நேரமும் என் அருகில் அருங்கலைச்சொல் அகரமுதலியாக அமர்ந்திருக்கும் சொல்லாய்வறிஞர்  அருளியாரைக் கேட்டேன். தாராளிகம் என்றார். இது என்னய்யா புதிய சிக்கல்? தொலைப்பேசியில் சிக்கலைச் சொல்லி வைத்தேன். உடனே அவர் ஒன்றும் சொல்லவில்லை. காத்திருந்தேன். அவரிடமே கேட்க வேண்டும், அவர் சென்னை வந்தால் கேட்டு விடலாம்  எனக் காத்திருந்தேன். வரவில்லை. புதுவைக்கே சென்று கேட்டு வரலாமா? என்று கூட எண்ணிக் கொண்டிருந்தேன். நேற்று தொலைப் பேசியில் அழைத்து அவரே விளக்கமாகப் பேசினார்:

தாராளம் என்ற சொல் எப்படி வந்திருக்கக் கூடும்? என்று பாவாணர் ஆராய்ந்தார். தார் என்றால் படை. ஆள் என்றால் படைத் தலைவன். (அல்லது படையாளாக கூட இருக்கலாம்) இந்தத் ‘தாராள்’ என்ன செய்தாலும் யாரும் தட்டிக் கேட்க மாட்டார்களாம். அவனது போக்கு தாராளம் எனப்பட்டது. தாராளம் என்பதன் வேர்ச்சொல் தாராள் ஆகையால் தாராள் + இயம் எனக் கொண்டால் தாராளியம் பெறப்படும். தாராளியம் என்பதில் தவறில்லை. தாராளம் + இயம் என்று பிரித்தால் தாராளவியம் என்றும் சொல்லலாம். நீங்கள் தாராளியம் என்று சொல்லிப் பழகியிருந்தால் அவ்வாறே தொடருங்கள்! தாராளமாகத் தொடருங்கள் என்றார்.

அப்படியானால், தாராளிகம் என்று அகரமுதலியில் கூறியுள்ளீர்களே? அப்படிச் சொல்வது தமிழ் மரபுக்கு உகந்ததே! வாணியத்தை வாணிகம் என்று சொல்வதில்லையா?

நாகரிகம் போல் தாராளிகம் எனக் கொள்ளலாம். நான் தாராளியம் என்றே எழுதியும் பேசியும் வருகிறேன். புதுத் தாராளியம் எதிர்ப்போம்! பழந்தாராளியத்தின் வரலாறு படிப்போம்! ஊழியர் கொள்கையில் மாவோ சொல்லும் தாராளியப் போக்குகளைக் களைவோம்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 52

வியாழன், 27 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 83: இன ஒதுக்கல்

      27 April 2023      அகரமுதல



(தோழர் தியாகு எழுதுகிறார் 82: கடற்கோள் நினைவுகள் தொடர்ச்சி)

இது துயருற்ற மக்களுக்கு எதிரான விலக்கல்! இன ஒதுக்கல்!!”

இனிய அன்பர்களே!

‘பொருளியலில் நலிந்த பிரிவினர்’ (பொநபி) என்று சொல்லி இடஒதுக்கீடு வழங்கும் அரசமைப்பு 103ஆம் திருத்தச் சட்டம் செல்லுமா? என்ற வழக்கில் செல்லாது என்று சிறுபான்மைத் தீர்ப்பு வழங்கிய நீதியர் எசு. இரவீந்திர பட்டு அவர்களது தீர்ப்பினைச் சுருக்கித் தமிழாக்கம் செய்யும் வேலையை ஒருவழியாக முடித்துள்ளேன். இந்தத் தீர்ப்பின் சில பகுதிகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் முன்பே உங்கள் பார்வைக்குப் படைத்திருந்தேன். சட்ட நோக்கிலும் சமூக நீதி நோக்கிலும் இரவீந்திர பட்டு செய்துள்ள அலசல் நம் அனைவரின் கவனத்துக்கும் உரியதொன்று. மீண்டும் அதன் முகன்மைப் பகுதிகள் சிலவற்றை அக்கறையுள்ள தாழி அன்பர்களுக்காக முன்வைக்கிறேன்:

இதற்கெல்லாம் நேர் எதிர் நிலையில் முதல் முறையாக அரசமைப்பாக்க அதிகாரம் சமூக அநீதியால் பாதிப்புற்றவர்களுக்கு எதிரான விலக்கலைக் கடைப்பிடிக்கத் துணைக்கழைக்கப்பட்டுள்ளது – இவர்களும் இந்த நாட்டில் ஆகப் பெரும் வறியவர்களே என்ற போதிலும்! இது அனைவருக்குமான சமநீதி, சமூகநீதிக் கொள்கையோடு அப்பட்டமாக முரண்படுகிறது.

+++

அட்டவணைச் சாதிகள் / அட்டவணைப் பழங்குடிகள் / ஏனைய பிற்பட்ட வகுப்புகள் ஆகிய சமுதாயங்களின் சமத்துவத்தை ஊக்கப்படுத்தவும் அவர்கள் சந்திக்கும் நூற்றாண்டுக் கணக்கிலான தீமைகளையும் தடைகளையும் வெல்லவும் இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன என்ற உண்மை அறிவுக்குகந்த வகைப் படுத்தலுக்குக் காரணமாக இருக்க முடியுமா? அது வகைப்படுத்தலின் அடிப்படை ஆக முடியாது என்பது என் கருத்தாகும். இப்போதுள்ள இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் ஏற்படுத்தியுள்ள முக்கிய விளைவுகளால் அட்டவணைச் சாதிகள் / அட்டவணைப் பழங்குடிகள் / ஏனைய பிற்பட்ட வகுப்புகளில் பெரும்பாலார் அவர்களின் ஒதுக்கலுக்கும் வறுமைக்கும் காரணமான அல்லது அவற்றை முற்றச்செய்த நிலைமைகளிலிருந்து மேலே உயர்ந்து விட்டனர் என்று நியாயம் சொல்லி இந்த வகையினங்களை வறுமை அல்லது பொருளியல் அளவைகளின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்ற கருத்து ஏதும் இவ்வழக்கில் பதிவேற்றப்பட்டுள்ள சான்றுகள் எதிலும் சொல்லப்பட வில்லை. பொருளியல் அளவைகளின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் பயனைப் பெறத் தகுதியுடையோராய் இருந்தும் நாட்டின் மக்கள்தொகையில் (அட்டவணைச் சாதிகள் / அட்டவணைப் பழங்குடிகள் / ஏனைய பிற்பட்ட வகுப்புகள் சேர்ந்து) 82 விழுக்காடாகிற இந்தப் பெரும் பிரிவினரை வெளியே நிறுத்துவது பொருளியலில் நலிந்த பிரிவுகளின் குறிக்கோளை முன்னெடுக்க எப்படி உதவும் என்ற விளக்கமே இல்லை.

[Can the fact that SC/ST and OBC communities are covered by reservations to promote their equality, to ensure that centuries old disadvantages and barriers faced by them (which are still in place, and is necessary to ensure their equal participation) be a ground for a reasonable classification? In my opinion, that cannot be the basis of classification. None of the materials placed on the record contain any suggestion that the  SC/ST/OBC  categories should be excluded from the poverty or economic criteria-based reservation, on the justification that existing reservation policies have yielded such significant results, that a majority of them have risen above the circumstances which resulted in, or exacerbate, their marginalization and poverty. There is nothing to suggest, how, keeping out those who qualify for the benefit of this economic-criteria reservation, but belong to this large segment constituting 82% of the country s population (SC, ST and OBC together), will advance the object of economically weaker sections of society.]

+++

கூடுதலாக ஒரு தகவல்: நாட்டிலுள்ள 766 மாவட்டங்களில் 45 மாவட்டங்கள் முழுமையாகவும் 64 மாவட்டங்கள் பகுதியளவுக்கும் ஐந்தாம் அட்டவணைப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் பெரும்பான்மையாக வசிப்பவர்கள் அட்டவணைப் பழங்குடிகளைச் சேர்ந்தவர்கள். சின் ஃகோ குழுவின் கருத்துப்படி, அனைத்துப் பழங்குடிகளிலும் 48,4% பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள். இது 4.25 கோடி மக்கள்தொகை ஆகும். இவ்வாறு விலக்கி வைத்தல் கூடுதலாகப் புவியியல்சார்ந்தும் செயல்பட்டு, இந்தப் பகுதிகளில் வாழும் வறியவர்களிலும் வறியவர்களான பழங்குடிகளுக்கு ஏழைகளுக்காகவே வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டின் பயனை மறுக்கிறது.

[As an aside, it may also be noted that according to the figures available, 45 districts are fully declared, and 64, partially declared, as Fifth Schedule areas, out of 766 districts in the country. Majority of the population of these areas are inhabited by members of scheduled tribes. According to the Sinho Committee, 48.4% of all Scheduled Tribes are in the BPL (below poverty line) zone. This is 4.25 crores of the population. In this manner, the exclusion operates additionally, in a geographical manner, too, denying the poorest tribals, living in these areas, the benefit of reservation meant for the poor.]

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 51

புதன், 26 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 82: கடற்கோள் நினைவுகள்

 




(தோழர்தியாகுஎழுதுகிறார்  81 தொடர்ச்சி)

கடற்கோள் நினைவுகள்

இனிய அன்பர்களே!

அன்பர் இயூபருட்டு நேற்று முதல் வேலையாகக் கடற்கோளை(ஆழிப் பேரலையை) நினைவு கூர்ந்து எழுதியிருந்தார்.

பதினெட்டாண்டு முன்பு கடந்த 2004 திசம்பர் 26ஆம் நாள் ஊருக்குள் கடல் நுழைந்து உயிர்களைச் சுருட்டிச் சென்ற அந்த நாளை எண்ணிப் பார்க்கிறேன். என் சொந்த நினைவுகள் சுருக்கமாக:

திசம்பர் 26 மாலை திருவாரூரில் தமிழர் தன்மானப் பேரவை சார்பில் தந்தை பெரியார் நினைவுக் கருத்தரங்கம் – அதில் தோழர் ஏ.சி.கே.யுடன் நானும் பேச வேண்டும். தோழர் காமராசுதான் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தார்.

அன்று காலையிலேயே அம்மா அப்பாவைப் பார்ப்பதற்காகக் குடந்தை வழியாகச் சந்திரசேகரபுரம் சென்று விட்டேன். பகலுணவு முடிந்த பின் அப்பா அவர் வழக்கப்படி “சரி, சரி, புறப்படு, வந்த வேலையைப் பார், தாமதம் வேண்டா” என்று அனுப்பி வைத்தார்கள். அங்கிருந்து வலங்கைமான் சென்று குடந்தை வழியாகவோ நீடாமங்கலம் வழியாகவோ திருவாரூர் செல்லலாம்.

நான் மன்னார்குடிப் பேருந்தேறி நீடாமங்கலம் சென்று விட்டேன். அங்கு இயல்பான சூழல் இல்லை எனத் தோன்றியது. மக்கள் கூட்டம் கூட்டமாக எதிர்த் திசையில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.  சாலையில் பேருந்துகள் பெரும்பாலும் தென்படவில்லை. நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகளிடம் கேட்டேன்.

திருவாரூர், நாகப்பட்டினம் போவதற்குப் பேருந்து இல்லை. இனி வராது என்றார்கள். ஏன்? ஊருக்குள் கடல் புகுந்து விட்டது என்றனர். என்ன? கடலா? ஊருக்குள் புகுந்ததா? எந்த ஊருக்குள்? எப்படி? யாரிடமும் தெளிவான விளக்கம் இல்லை. அப்போது மதியம் 2-3 இருக்கலாம். மாலை நிகழ்ச்சிக்குத் திருவாரூர் போயாக வேண்டுமே? எப்படியாவது போய்விடுவது என்பதில் உறுதியாக இருந்தேன்.

பேருந்து இல்லை. தொடர்வண்டி? அதுவும் இல்லை. அவ்வளவு தொலைவு நடந்து நிகழ்க்சிக்குப் போய்ச் சேர முடியுமா? அம்பாசடர்  சீருந்து ஒன்று வந்து நின்றது. எல்லாரும் அதை நோக்கி ஓடினர். நானும் ஓடிப்போய் ஓட்டுநரிடம் “திருவாரூர் போக வேண்டும்” என்றேன். நிறைய பேர் நெருக்கியடித்து ஏறினார்கள். ஆளுக்கு இருபதோ முப்பதோ கட்டணம்.

விரைந்து கொண்டிருந்தது அம்பாசடர்! முன்னிருக்கையில் அடித்துப் பிடித்து உட்கார்ந்திருந்தேன். கடல் ஊருக்குள் புகுந்த கதைதான் பேச்சு. எதிர்த்திசையில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தனர். சிலர் இருசக்கர ஊர்தியிலும் சிலர் வண்டிகட்டிக் கொண்டும்… ‘என்ன நடந்திருக்கும்?’ சிந்தனையைக் கலைத்தது ஒரு ‘டமால்’ ஓசை. பார்த்தால் முன்பக்க மூடி திடீரென்று திறந்து பார்வையை மறைத்துக் கொண்டிருந்தது. சாலை தெரியவில்லை. ஓட்டுநர் உட்பட யாருக்கும் தெரியவில்லை. ஆனால் வண்டியைத் திடீரென்று நிறுத்தி விடாமல் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைத்துக் கொண்டிருந்தார். அப்பாடா! எதுவும் நடக்க வில்லை. இறங்கிச் சரி செய்து கொண்டு பயணம் தொடர்ந்தோம்.

திருவாரூர் கமலாலயம் வடகரையில் அந்தத் திருமண மண்டபத்தில் மக்கள் வர வர காமராசு உள்ளிட்ட பேரவைத் தோழர்கள் பந்தி போட்டு உணவு படைத்துக் கொண்டிருந்தனர். பின் பக்கம் சமையல் நடந்த வண்ணம் இருந்தது. ஏ.சி.கே. எங்கே என்று வினவினேன். நாகைக் கடற்கரையில் நின்று பாதிப்புற்ற மக்களுக்கு உதவும் பணிகளை முன்னின்று செய்து கொண்டிருக்கிறார் என்றனர். நானும் மக்களோடு உட்கார்ந்து வயிறார உண்டு அவர்கள் சொன்ன அதிர்ச்சிக் கதைகளையும் கேட்டுக் கொண்டேன்.

2010 தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம் சென்ற போது கடற்கோள் ஏற்படுத்திய அழிவு பற்றிக் கடலோரவாழ் மீனவர்களிடம் நிறைய தெரிந்து கொண்டேன். திருமரைக்காட்டில் (வேதாரண்யத்தில்) கடற்கோளில் சிக்கி உயிர்பிழைத்த இளைஞர் ஒருவரைச் சந்தித்தேன். எப்படி? எப்படி? “ஓர்  அலை வந்து தூக்கிக் கொண்டு போனது. இன்னோர் அலை தூக்கி வந்து கரையில் வீசியது..”

கடற்கோள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இலங்கையிலும் இந்தியப் பெருங்கடலின் கரையில் இன்னும் பல நாடுகளிலும் நெய்தல் மக்களிடம் படிந்து விட்ட மாறாத் துயரம்! ஈரம் காய இன்னும் பல காலம் ஆகும்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 51

செவ்வாய், 25 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 81: வெண்மணியும் பெரியாரும் 2



(தோழர்தியாகுஎழுதுகிறார்  80 தொடர்ச்சி)

வெண்மணியும் பெரியாரும் 2

திமுக ஆட்சி இந்தச் சம்பவத்தை எப்படி எதிர்கொண்டது?

அண்ணாவால் இந்தச் சம்பவத்தை நினைத்திருந்தாலும் தடுத்திருக்க முடியாது. இது அவருக்குத் தெரிந்து நடந்தது என்றோ அவர் காவல்துறையை அனுப்பினார் என்றோ சொல்ல முடியாது. ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் “உழவர் காவல்துறை” ஆரம்பிக்கப்பட்டது. ஒருமுறை சட்ட மன்றத்தில் அண்ணா பேசும்போது, “உங்கள் தோழர்களில் சிலர் “பகலில் மார்க்குசியர்கள், இரவில் நக்சலையர்கள்” என்றே சொல்லியிருக்கிறார். வேளாண் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஏ.சி.கே., மீனாட்சிசுந்தரம் போன்றவர்களைத்தான் அவர் அப்படிச் சொல்லியிருக்கிறார்.

தொழிலாளர்களின் சார்பாக நின்று அந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண்பது; மக்களிடம் நேரடியாகச் சென்று அந்தச் சிக்கலை அணுகுவது, காவல்துறை அடக்குமுறையைத் தவிர்ப்பது என்றெல்லாம் கொள்கை இல்லாமல், அதிகாரவருக்கம் எடுத்த முடிவுகளுக்கு இடம்கொடுத்துவிட்டபோது அண்ணா மீது குற்றச்சாட்டு வரத்தானே செய்யும்!

முதலமைச்சர் என்ற முறையில் வெண்மணிக்கு அண்ணாவை அரசியல் பொறுப்பாக்குவதில் தவறில்லை.

பெரியாரைப் பொறுத்தவரை கூலி உயர்வுப் போராட்டங்களின் மீதே அவருக்கு நம்பிக்கையில்லை. தன்னிடமிருந்து விலகிப்போனவர்கள் மீதான கோபமும் திமுக ஆட்சி மீதான பரிவும் சேர்ந்துகொண்டன. பெரியார் நிலைப்பாட்டை ஏற்க முடியாதுதான்!

அரசு என்ன செய்திருக்க வேண்டும்?

‘செவ்வாழை’ சிறுகதையில் நிலப் பிரபுக்களின் கொடுநெஞ்சை சித்திரித்த அண்ணாவால் இப்போது காலம்காலமாய் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரபுத்துவத்தின் கோர முகத்தைக் காண முடியவில்லை. இந்தச் சிக்கலை மக்களுக்கு இடையிலான மோதலாகவோ அமைதிக் குலைவாகவோதான் அவரது அரசால் பார்க்க முடிந்தது. ஆக, காங்கிரசு அரசுக்கும் திமுக அரசுக்கும் வேறுபாடு இல்லாமல்போனது. அதே அதிகாரிகள்.. அதே காவல்துறைக் கொள்கை!

கேரளத்தில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தபோது தொழிலாளர் போராட்டத்தில் காவல்துறை தலையிடாது என்ற கொள்கையை எடுத்தார்கள். ஆனால், காவல்துறைக் கொள்கையில் திமுக எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. வெண்மணியில் படுகொலைக்குக் காரணமானவர்கள், தொழிலாளர்கள் என்று இரு தரப்பினர் மீதும் வழக்கு போடப்பட்டது.

நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு மாநில அரசு கலைக்கப்படாமலிருந்த இடைக்காலத்தில் கட்சி சார்பில் அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டன. வெண்மணி நிகழ்ச்சிக்கு முன் நடந்த கொலை தொடர்பாகச் சிறையிலிருந்த தோழர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் பிணைவிடுதலை பெற உதவ வேண்டும் என்ற கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டார்.

அவர்கள் விடுதலை பெற்று வெளியே சென்றார்கள். அதைப் போல வெண்மணி நிகழ்ச்சிக்குக் காரணமான கோபாலகிருட்டிண நாயுடுவுக்குப் பிணையை நீக்கி சிறையிலடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட்டது. அவரும் பாலு நாயுடுவும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். திமுக ஆட்சி கலைக்கப்பட்ட( ‘டிசுமிசு’ ஆன) பிறகுதான், அவர்களைப் பிணையில் வெளியே எடுக்க முடிந்தது.

வெண்மணி நிகழ்ச்சிக்குப் பிறகு பொதுவுடைமைக் கட்சி ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் என்ன?

இது வெறும் கூலிக்கான போராட்டம் அல்ல. எடுத்துக் காட்டாகத், தொழிற் சாலைகளில் முதலாளி உயர்ந்தவர், தொழிலாளர்கள் தாழ்ந்தவர்கள் என்று யாரும் சொல்வதில்லை. ஆனால், வேளாண் தொழிலாளிகள் அப்படிக் கிடையாது. கூனிக் குறுகி, அடிபணிந்து வாழ்ந்த மக்களுக்கு முதலில் மான உணர்ச்சி ஊட்ட வேண்டியிருந்தது. பண்ணைகளுக்குக் காரியக்காரர்களாக இருந்தவர்கள், வேளாண் தொழிலாளர்களைக் கடுமையாக ஒடுக்கினார்கள். ஊருக்குள் என்ன சிக்கல் என்றாலும், அது கணவன் – மனைவி சண்டையாகவே இருந்தாலும்கூட, அவர்களைக் கையைக் கட்டி பண்ணையார்களின் முன்பாக நிறுத்திவிடுவார்கள்.

பொதுவுடைமைக் கட்சி இவற்றையெல்லாம் மாற்றியமைத்தது. மாதம் ஒருமுறை அமாவாசை அன்று வேலைக்குப் போகாமல் கூட்டம் நடத்துவார்கள். அங்கு அத்தனை பேரும் கூடிச் சிக்கல்களை யெல்லாம் பேசித் தீர்த்துக்கொள்வார்கள். தொழிலாளர்களிடம் தன்னம்பிக்கையும் தன்மதிப்பு உணர்ச்சியும் உருவாகின.

பண்ணையார்களின் நிலைப்பாட்டில் மாற்றம் வந்ததா?

இப்படியான சூழல் உருவானதைத் தொடர்ந்து, கூலி ஒரு சிக்கலில்லை,  முதலில் சங்கத்தைக் கலையுங்கள் என்று பண்ணையார்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள். உண்மையில், வெண்மணிச்சிக்கலுக்கு அடிப்படைக் காரணமே இதுதான்: ‘நெல் உற்பத்தியாளர் சங்க’க் கொடிகளை ஏற்ற வேண்டும் என்ற கட்டளையை ‘விவசாயத் தொழிலாளர் சங்க’ நிருவாகிகள் மறுத்தார்கள். மறுப்பவர்களுக்கு அபராதம் போடப்பட்டது. அபராதத்தைக் கொடுக்க மறுத்தவர்கள் கடத்தப்பட்டார்கள். அப்படித்தான் வெண்மணியில் தகராறு முற்றியது.

ஆகச், சங்கம் வைக்கிற உரிமை இருக்கிறதா இல்லையா என்பதுதான் சிக்கலே. சங்கம் வைத்தால் என்ன கிடைக்கும் என்பதற்குக், கீழத் தஞ்சை வேளாண் தொழிலாளர்களுக்கு என்று இயற்றப்பட்ட குறைந்த அளவுக் கூலிச் சட்டமே சான்று. வேளாண் தொழிலாளர்கள் என்ற முறையில், பொதுவுடைமை இயக்கம் தீவிரமாக இருந்தது. குறிப்பாக, மா.பொ.க.(சிபிஎம்.) அந்தப் பகுதியில் வலுவாக இருந்தது. திமுகவைச் சேர்ந்த மன்னை நாராயணசாமி போன்ற சிலரும் வேளாண்த் தொழிலாளர்களின் கோரிக்கையை ஆதரித்தார்கள். பேச்சுவார்த்தையில் வேளாண் தொழிலாளர்களின் சார்பில் அவர்களும் கலந்துகொண்டார்கள்.

இவற்றில் கிடைத்த பலன்களைப் பற்றிச் சொல்லுங்கள்

நீ மனிதன், நீ இன்னொருவனுக்கு அடிமை கிடையாது என்ற உணர்வைத் தொழிலாளர்களிடம் ஊட்டி வளர்த்தெடுத்தது பொதுவுடைமை இயக்கம். அதுபோல், வேளாண் தொழிலாளியின் உழைப்புக்கேற்ற ஊதியத்தைக் கொடுக்க வேண்டும், போதிய ஓய்வு வேண்டும், வயலில் வேலை பார்க்கும் தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டும் உரிமை வேண்டும் என்ற உரிமைகளையெல்லாம் வென்றெடுத்தது.

கீழத் தஞ்சையில் வென்றெடுத்த முக்கியமான உரிமை ‘விழுந்த கூலி’. அதற்கு முன்னர் அற்றக் கூலிதான் கொடுக்கப்பட்டது. அற்றக் கூலியைப் பொறுத்தவரை, ஒரு நாள் உழைப்புக்குக் கூலியாக நெல்லோ பணமோ கொடுக்கப்பட்டது. அற்றக் கூலிக்கு விடிவதற்கு முன்பே வயலுக்குச் செல்ல வேண்டும், மாலை அந்தி சாய்ந்த பிறகுதான் கரையேற முடியும்.

விழுந்த கூலியின்படி, ஒரு கலத்துக்கு இத்தனை படி நெல் கொடுக்க வேண்டும். இரண்டாவதாகக், கலத்துக்கு இத்தனை படி, கலத்துக்குள்ளேயே அளப்பதா அல்லது வெளியே அளப்பதா என்ற சிக்கல் வந்தது. அந்தப் போராட்டமும் வெற்றி பெற்றது. இன்றைக்கு வெண்மணியைச் சுற்றியுள்ள சிற்றூர்கள் வெவ்வேறு கட்சிகளுக்கு மாறிவிட்டன. வெண்மணி ஊர் மட்டும் மாறவில்லை. இன்னும் அங்குச் செங்கொடிதான் பறந்து கொண்டிருக்கிறது.

இன்றைய சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

காவிரித் தண்ணீர் இல்லாமல் போனதால், பழைய வருக்க உறவுகளே மாறிவிட்டன. வேலைக்கு ஆட்கள் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். இப்போது கூலி முக்கியமான சிக்கல் இல்லை. கூலி உயர்வுக்காக இவ்வளவு ஈகங்கள் செய்து, காவல்துறையினரையும் அடியாட்களையும் எதிர்கொண்டு கொலைகளுக்கும் சாவுகளுக்கும் நடுவில் நின்று வெற்றிபெற்ற ஓர் இயக்கம், ஏன் காவிரி உரிமைகளை இழந்தபோது மெளனமாக இருந்தது? அந்த உரிமைகளை மீட்பதற்கு என்ன செய்தது? நிலம் இருப்பவன், இல்லாதவன் என எல்லோருக்குமான உயிர்நாடி காவிரிதானே.

நிலம் உள்ளவர்கள் மாற்று வழிகளைத் தேடிக்கொள்ளலாம். நிலமற்றவர்கள் அகதிகளாகத் திருப்பூருக்கும் கோவைக்கும் பெங்களூருக்கும் இடம்பெயர்ந்து போக வேண்டியிருக்கிறதே! கல்வி, வேலைவாய்ப்புகளுக்குப் பிறகு வேளாண் வேலைகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையும் இல்லை. எனவே, நடுத்தர வயதுள்ளவர்கள் மட்டும்தான் அந்த ஊர்களில் உழவு வேலைகள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

வேளாண் தொழிலாளர்கள் என்ற உரிமையை வென்று கொடுத்துச், சங்கங்களை உருவாக்கிய பொதுவுடைமை இயக்கம் தமிழர்களே என்று அவர்களை ஒருநாளும் அழைக்கவில்லை. தொழிலாளியாகக் கூலி உரிமையை இழக்கும்போது போராடிய இயக்கம், தமிழக உரிமைகள் சார்ந்து அவர்களைப் பயிற்றுவிக்கவே இல்லை. அகில இந்தியப் போராட்டத்தில் இவர்களும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்துவார்கள்.

ஆனால், இவர்களின் மாநில உரிமை என்னும் தேசிய இன உரிமை மறுக்கப்படும்போது இவர்களுக்காக யாரும் வர மாட்டார்கள். அந்த இடத்தில் ‘தமிழா இன உணர்வு கொள்’ என்று சொல்லும் திராவிட இயக்கம் வளர்ந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இன உணர்வு என்பதைத் தேசிய இன உணர்வாக முழுதாக அடையாளப்படுத்தவே இல்லை. அது அவர்களுக்குத் தேர்தல்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு பொழுதுபோக்கு!

+++

அன்பர் துரை கேட்கிறார்…  

தேசியம் தேசம் போன்ற வார்த்தைகள் தமிழா?

ஆம், தேயம் தமிழ்தான். அது மருவி தேசம் ஆயிற்று. தேசத்திலிருந்து தேசியம் வந்தது.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 50

திங்கள், 24 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 80: வெண்மணியும் பெரியாரும் 1

 




(தோழர் தியாகு எழுதுகிறார்  79 தொடர்ச்சி)

வெண்மணியும் பெரியாரும் 1

கீழவெண்மணி குறித்துப் பெரியார் மேல் எனக்கே குற்றாய்வுகள் உண்டு. பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். ஆனால் சுயசாதிப் பற்று என்பது இழிவான அவதூறு. பெரியாரைக் கனவிலும் அப்படி எண்ணிப் பார்க்க முடியாது. 2017 திசம்பரில் ‘இந்து’ தமிழ் ஏட்டுக்கு வெண்மணி குறித்து நான் தந்த செவ்வியிலேயே பெரியார் பற்றிய குற்றாய்வு உள்ளது. இதோ அந்தப் பேட்டி:—

“வெண்மணி வெறும் கூலிக்கான போராட்டம் அல்ல!” – தியாகு பேட்டி

வெண்மணி படுகொலைச் சம்பவத்தின் காரணமாகக், கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டுப் பொதுவாழ்வுக்குத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர் தியாகு. அவரது வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால், ‘வெண்மணியின் குழந்தை’. வேளாண் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டங்களில் ஈடுபட்டவர். சிறைப்பட்டிருந்த ஆண்டுகளில் ‘மூலதனம்’ நூலை மொழிபெயர்த்தவர். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினராகவும் ‘உரிமைத் தமிழ்த் தேசம்’ ஆசிரியராகவும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் தியாகு, வெண்மணி நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

கீழத் தஞ்சையில் வேளாண் கூலித் தொழிலாளர்களின் போராட்டம் எப்போது தொடங்கியது?

அப்போது காவிரித் தீரம் என்பது முப்போகம் விளையக் கூடிய பகுதி. வேளாண் தொழிலாளர்களில் கணிசமானவர்கள் ஒடுக்கப்பட்ட(தலித்து) மக்கள். வருக்கச் சுரண்டலும் சாதிய ஒடுக்குமுறையும் கடுமையாக இருந்தன. சாணிப்பால், சவுக்கடி என்று மிகக் கொடூரமான ஒடுக்குமுறைகள் இருந்தன. இவற்றுக்கு எதிரான போராட்டங்களை ‘30-கள் தொடங்கிப் பொதுவுடைமை இயக்கத்தினர் நடத்தியிருக்கிறார்கள்.

வெண்மணி படுகொலை நிகழ்வு பற்றிய ஆய்வின் போது இந்தப் பகுதியில் பொதுவுடைமை இயக்கம் எப்போது வந்தது என்று விசாரித்தேன். “எங்கள் ஊர்களில் ‘60-களில்தான் கட்சியைக் கொண்டுவந்தோம். ஆனால், வெண்மணியைச் சுற்றியுள்ள பகுதியில் மட்டும் எங்களுக்கு முன்பே கட்சி இருந்தது. எனக்கே அது முழுமையாகத் தெரியவில்லை” என்று என்னிடம் சொன்னார் ஏ.சி.கத்தூரிரங்கன். அந்தப் பகுதியில் ஒரு முக்கியமான தலைவராக இருந்த அவர், அதற்கு முன்பு திராவிட இயக்கத்தில் இருந்தவர்.

வெண்மணி வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக ருந்த இராமையா என்ற பெரியவரிடமும் இதே கேள்வியைக் கேட்டேன். இந்தப் பகுதியில் மணலூர் மணியம்மை ஊர் ஊராகச் சென்று இயக்கப் பணிகளைத் தொடங்கினார் என்று அவர் சொன்னார். பேராயக் குமுகியக்(காங்கிரசு சோஷலிசுட்டு) கட்சியில் இருந்த மணியம்மை, நிலச்சுவான்தாரர்களுக்குத் தெரியாமல் இரவோடு இரவாகச் சென்றுதான் அந்த வேலைகளைச் செய்திருக்கிறார். சின்னக்குத்தூசியின் நண்பர் அவர். அப்போது சின்னக்குத்தூசி திராவிட இயக்கத்தில் இருந்தார். மணியம்மை பொதுவுடைமை இயக்கத்தில் பணியாற்றி செங்கொடிச் சங்கங்களை அமைத்தார். இரண்டு இயக்கமும் ஒரே காலகட்டத்தில் இந்தப் பகுதிகளில் வளர்ந்தன.

திராவிட இயக்கத்தின் பங்கைப் பற்றிச் சொல்லுங்கள்

ஒரு பகுதி ஒடுக்கப்பட்ட(தலித்து) மக்கள் ‘திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம்’ என்ற பெயரில் இயங்கினார்கள். ஏ.சி.கே., பாச்சா போன்ற தலைவர்கள் அந்தச் சங்கத்திலிருந்து உருவானவர்கள்தான்.

1967-க்குப் பிறகு இந்தப் போராட்டங்கள் மிகவும் தீவிரமடைந்த காலக்கட்டத்தில், கூலி உயர்வால் பலனில்லை; தேவையில்லாத வன்முறைகள் நடக்கின்றன என்று சொல்லி இந்தப் போராட்டங்களைப் பெரியார் தவிர்த்தார். அப்போது பலர் அவரை விட்டு விலகி பொதுவுடைமை இயக்கத்துக்கு வந்துவிட்டார்கள். இப்போதும்கூட, அந்தப் பகுதியில் ‘திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம்’ இயங்கிவருகிறது. ஏ.சி.கே. பிற்காலத்தில் மார்க்குசியப் பொதுவுடைமைக் கட்சியிலிருந்து விலகி மீண்டும் அந்த அமைப்பில் இணைந்து மாநிலப் பொறுப்பாளரானார்.

முக்கியமாக, ஒடுக்கப்பட்ட மக்களை அடிப்படையாகக் கொண்ட இயக்கமாக இருந்ததால், பொருளாதாரரீதியாகக் கூலி உயர்வுக்குப் போராடுவது மட்டுமே போதவில்லை. ஒன்றாகச் சேர்ந்தால் வலிமையாக இருக்கலாம் என்ற எண்ணத்தை அவர்களிடம் ஏற்படுத்தக் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அதன் காரணமாக அந்தப் பகுதியில் சாதியக் கொடுமைகள் தணிந்தன.

வெண்மணி சிக்கல் எப்படித் தீவிரமானது?

1967 பொதுத் தேர்தல் முடிவுகள் மக்கள் மத்தியில் ஒரு பெரும் மாறுதலை ஏற்படுத்தின. மார்க்குசியக் கட்சி திமுகவுடன் கூட்டணியில் இருந்ததால், ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. வெண்மணி நிகழ்வுக்கு முன்பாகவே வேளாண் தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கு என்றே ‘உழவர் காவல் துறை ‘ என்று ஒரு பிரிவைத் தொடங்கினார்கள். நாகப்பட்டினம் வட்டத்தின் பல சிற்றூர்களில், அந்தக் காவலர்கள் முகாமிட்டிருந்தார்கள். நிலச்சுவான்தாரர்களின் இடங்களில்தான் அந்த முகாம்கள் அமைக்கப்பட்டன.

ஊர்களில் புகுந்து ஆடு, கோழிகளைத் திருடுவது,  மக்களைத் தெருவில் மண்டிபோடச் சொல்வது, ‘பி.ராமமூர்த்தி ஒழிக’ என்று முழக்கம் போடச் சொல்வது என்று அந்தக் காவலர்கள் பல அக்கிரமங்களைச் செய்தனர். மறு பக்கம் நிலச்சுவான்தாரர்கள் ‘நெல் உற்பத்தியாளர்கள் சங்க’த்தை ஏற்படுத்தி, எந்த ஊரிலும் செங்கொடி ஏற்றக் கூடாது என்ற கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தார்கள். அவர்களது சங்கத்தின் வெள்ளைக் கொடியைத்தான் ஏற்ற வேண்டும், இல்லையென்றால், அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என்று நெருக்கடி தந்தார்கள்.

கோபாலகிருட்டிண நாயுடு நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். அவருடைய மாமா பக்கிரிசாமி நாயுடுதான் அவரை ஆட்டிப் படைத்தவர் என்று சொல்வார்கள்.

காவலர்கள் துப்பாக்கிச் சூட்டில் பூந்தழங்குடி பக்கிரி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு நாள் இரவு ஏ.சி.கே.வைக் கொலைசெய்யக் காத்திருந்தவர்கள் அவருக்கு முன்பாக வந்த சிக்கல் பக்கிரியைக் கொன்றுவிட்டார்கள். நாகை வட்டம் முழுக்கப் பதற்றமாக இருந்தது. வெண்மணி உள்ளடங்கிய தேவூர் பகுதியில் நிலக்கிழார்களின் அடியாட்கள் குடிசைகளைக் கொளுத்தும் ஆபத்து இருப்பதாக மார்க்குசியக் கட்சி சார்பில் அரசுக்கு எச்சரிக்கை தரப்பட்டது. ஆனால், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

1968 திசம்பர் 25 முன்னிரவில் மிராசுதாரர்களின் அடியாட்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் இருகூர் பக்கிரி கொல்லப்பட்டார். அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என எல்லாரும் பயந்துகிடந்தார்கள். பக்கத்து ஊருக்குச் சென்று உதவி கேட்பதற்காக இளைஞர்கள் எல்லாம் ஊரை விட்டுச் சென்றிருந்தார்கள். அதனால்தான் இரவு அந்த நிகழ்ச்சி நடந்தபோது ஊரில் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள், வயோதிகர்களே இருந்தார்கள்.

நிகழ்ச்சி நாளன்று தினத்தன்று என்ன நடந்தது?

அன்று இரவு தொழிலாளர் குடியிருப்புக்குள் நீல நிறக் காவல் ஊர்தி போய் நின்றது. அதிலிருந்து இறங்கியவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே சென்றார்கள். கோபாலகிருட்டிண நாயுடுதான் அவர்களை வழிநடத்திச் சென்றார். இராமையாவின் குடிசை அந்த ஊரின் கடைசியில் இருந்தது. அந்தக் குடிசையைத் தாண்டியும் போக முடியாது.

அங்கு பதுங்கிக்கொண்டால் விட்டுவிடுவார்கள் என்றுதான் தொழிலாளர் குடும்பத்தினர் நினைத்திருப்பார்கள். குடிசையையே கொளுத்துவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. நிகழ்ச்சி நடந்து சில நாட்கள் கழித்து, நான் அங்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த தென்னை மரங்களில் தோட்டாக்கள் பாய்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது.

வேளாண் சங்கத் தலைவர்கள் யாருமே அப்போது ஊரில் இல்லை. கேரளத்தில் மா.பொ.க.(சி.பி.எம்.) கட்சியின் அகில இந்திய மாநாடு நடந்து கொண்டி ருந்ததால், தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள் எல்லாரும் அங்கே இருந்தார்கள். ஏ.சி.கே. மீது ஒரு வழக்கு இருந்ததால், அவர் தலைமறைவாக இருந்தார். நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட பிறகுதான் அவர்கள் வந்துசேர்ந்தார்கள். பி.ராமமூர்த்தி வந்த பிறகுதான் காவல் துறை முற்றுகையை மீறி ஊருக்குள்ளேயே நுழைய முடிந்தது.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 50