கருத்துகள் - views
திங்கள், 8 ஆகஸ்ட், 2022
வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022
தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 13, 14 & 15: இணைய அரங்கம்
தமிழ்க்காப்புக்கழகம்
ஆளுமையர் உரை 13, 14 & 15: இணைய அரங்கம்
ஆடி 22, 2053 ஞாயிறு , 07.08.2022, காலை 10.00
“தமிழும் நானும்”
உரையாளர்கள்:
கலைமாமணி குத்தாலம் மு.செல்வம்
பரதக் கலாலயப் பள்ளி
திருபுவனம் ஆத்துமநாதன்
இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை
கலைச்சுடர் மணி சசிரேகா
கனகசபை பரதநாட்டியப் பள்ளி
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?
pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை: தமிழாசிரியை (உ)ரூபி
தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்
தொகுப்புரை: தோழர் தியாகு
நன்றியுரை: எழுத்தாளர் இ.பு.ஞானப்பிரகாசன்
புதன், 3 ஆகஸ்ட், 2022
செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022
பதினோராம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூர், மே 2023

பதினோராம்
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு,
சிங்கப்பூர், மே 2023
பத்தாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படைத்த ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய முதல் தொகுப்பு சூலை 26, 2022 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. எளிமையாகவும் சீரிய முறையிலும் நடைபெற்ற இந்த வெளியீட்டு விழாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் முனைவர் பொன்னவைக்கோ தலைமையில், மன்றத்தின் துணைத்தலைவர் திரு. முனைவர். சுந்தரமூர்த்தி, செயற்குழு அலுவலர்கள் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்கள் திரு.கோ.விசுவநாதன் (வேந்தர், வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்) ,தொழிலதிபர் திரு. வி.சி. சந்தோசம் ஆகியோர் வெளியிடச் சிங்கப்பூரைச் சார்ந்த பேராயிரமாண்டுத் தமிழர்கள் (The Millennial Tamils) அமைப்பின் தலைவர் திரு. மணியம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
பதினோராம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்த மாநாடு சிங்கப்பூர் நகரில் வரும் ஆண்டு வைகாசி 12-14, 2054 / 26-28.05.2023 வரை நடைபெறும். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்துடன் சிங்கப்பூரைச் சார்ந்த ‘பேராயிரமாண்டுத் தமிழர்கள்’ (The Millennial Tamils)அமைப்பு இணைந்து இந்த மாநாட்டை நடத்தவுள்ளது.
11ஆவது மாநாட்டின் இணையத் தளம் : https://icsts11.org ; http://iatrofficial.org.
‘வஃகியாய் வந்த வசந்தம்’ நூல் வெளியீட்டுக் காணொளி

வஃகியாய் வந்த வசந்தம்’ நூல் வெளியீட்டுக் காணொளி
வஃகியாய் வந்த வசந்தம் – பொற்கிழிக் கவிஞர் இளையான்குடி மு. இதாயத்துல்லா அவர்களின் நான்காவது நூலாகும். நற்குணத் தாயகமாம் நபிகள் நாயகம் அவர்களுடைய வாழ்வும் வாக்கும் அவரது நாடி நரம்புகளிலெல்லாம், உணர்வுகளிலெல்லாம் இரண்டறக் கலந்து ஆளுமை செய்கிறதென்றே கூறலாம்.அதன் அடிப்படையில் உருவானதே இந்த நூல் ஆகும்.. இந்நூலின் வெளியீட்டு நிகழ்ச்சியின் காணொளி :
https://www.youtube.com/watch?v=fsZGz0MXF0I
நூலுக்கான இந்திய இணைப்பு :
https://www.amazon.in/dp/B0B5GZPBKB
நூலுக்கான பன்னாட்டு இணைப்பு :
https://www.amazon.com/dp/B0B5GZPBKB
முதுவை இதாயத்து
துபாய்
00971 50 51 96 433
திங்கள், 1 ஆகஸ்ட், 2022
திங்கள், 25 ஜூலை, 2022
ஆங்கில விளம்பரங்களை நிறுத்து! – தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் வலியுறுத்தல், தாய் இதழ்
ஆங்கில விளம்பரங்களை நிறுத்து!
தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் வலியுறுத்தல்
44ஆவது சதுரங்கப் பெருவிழாவில் ஆங்கில விளம்பரங்களே எங்கும் காணப்படுகின்றன.
இது குறித்து ஆட்சித் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக மேற்கொண்டு சில விவரங்களை அவரிடம் கேட்டோம்.
அந்த நேர்காணல் இதோ…
வணக்கம் ஐயா
வணக்கம்.
ஐயா, நீங்கள் சதுரங்க உலகப் போட்டி தொடர்பாகச் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளீர்கள். அது குறித்து மேற்கொண்டு சில விவரங்களைக் கேட்கலாமா?
கேளுங்கள். சொல்கிறேன்.
நடைபெறும் சதுரங்கப் போட்டியை ஆங்கிலத்தில் குறிப்பிடாமல், 44 ஆவது சதுரங்க ஞாலப்போட்டி என்று அழைக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்தில் விளம்பரங்கள் செய்து வருவது தமிழை அகற்றும் செயல் என்றும் தெரிவித்துள்ளீர்கள். இவ்வளவு குறுகிய காலத்தில் ஆங்கில விளம்பரங்களை அகற்றித் தமிழில் விளம்பரம் செய்ய இயலுமா?
அரசு நினைத்தால் முடியாதது என்ன உள்ளது? இனி தரும் விளம்பரங்களையும் போட்டி நடைபெறும் இடம், மேடை முதலிய இடங்களிலும் தமிழிலேயே விளம்பரம் செய்ய வேண்டும்.
மேடையில் மட்டும் முதலில் தமிழில் 5 பங்கு அளவிலும் அடுத்து ஆங்கிலத்தில் 3 பங்கு அளவிலும் போட்டி விவரங்களைக் குறிப்பிட வேண்டும். பேருந்து விளம்பரங்களைத் தமிழ் விளம்பரமாக மாற்ற வேண்டும்.
இதனால் வீண் செலவாகாதா?
வீண் செலவாகும் என்றால் ஆங்கிலத்தில் விளம்பரப் படுத்தியவர்களுக்குக் காரணமாக இருந்தவர்களிடமிருந்து அந்தச் செலவுத் தொகையைத் திரும்பப் பெற வேண்டியதுதான். அப்பொழுதுதான் அவர்களும் பிறரும் இனி ஆங்கிலத்தைப் புகுத்தித் தமிழை அகற்ற அஞ்சுவார்கள்.
நீங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பூசி மெழுகுவதுபோல் சொல்வதாகத் தெரிகிறதே! அரசை நேரடியாகக் கண்டிக்காமல் அதிகாரிகளைக் கண்டிப்பது ஏன்?
அரசின் கருத்தைச் சரியாகச் செயற்படுத்தாமல் திசை திருப்புபவர்களாக அதிகாரிகள்தான் இருக்கிறார்கள். இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. சரியாக வழிகாட்ட வேண்டிய அதிகாரிகள், தமிழை அகற்றுவதற்குச் செயற்பட்டால் அவர்களைக் கண்டிக்க வேண்டியதுதானே முறை.
ஒருவேளை,
தமிழ்ப்பாட்டு பாடு
இல்லையேல் ஓடு
எனப் பாரதிதாசன் கூறுவதுபோல்,
தமிழில் விளம்பரப்படுத்து
இல்லையேல் விழாவை நிறுத்து
எனச் சொல்ல வேண்டும் என்கிறீர்களா?
ஆம். அப்படிச் சொல்லியிருக்கலாமே!
அதற்குத் தேவையில்லை. அங்கிங்கெனாதபடி எங்கும் ஆங்கிலமே காட்சியளிப்பது கண்டு அரசிற்கே குற்ற உணர்ச்சி வந்திருக்கும்.
தமிழை அகற்றுபவர்களை மக்கள் அகற்றுவார்கள் என்னும் தமிழகச் சூழலையும் உணருவார்கள்.
இனித் தவறுகளைச் சரி செய்வார்கள்; தமிழ் விளம்பரங்களைக் காணலாம் என எதிர்நோக்கலாம்.
உங்கள் நம்பிக்கை பொய்க்காமல் இருக்க வாழ்த்துகள்.
நன்றி. வணக்கம்.
ஞாயிறு, 24 ஜூலை, 2022
சிறப்புக் கட்டுரை: சதுரங்கப் பெருவிழாவில் வெட்டப்படும் தமிழ்! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
சிறப்புக் கட்டுரை: சதுரங்கப் பெருவிழாவில் வெட்டப்படும் தமிழ்!
Jul 24, 2022 08:49AMJul 24, 2022 IST :
– இலக்குவனார் திருவள்ளுவன்
சதுரங்க ஞாலப் போட்டி 2022 இற்கு வாழ்த்துகள்!
44 ஆவது சதுரங்க ஞாலப்போட்டி ஆடி 12, 2053 / 28.07.2022 -ஆடி 25, 2053/ 10.08.2022 நாட்களில் நடைபெறுகிறது. சதுரங்க ஞாலப்போட்டிக்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது. நேப்பியர் பாலத்தைச் சதுரங்கக் கட்டங்களாக வண்ணந்தீட்டி விளம்பரப்படுத்துவதிலிருந்து எல்லா வகையிலும் முதல்வர் அவர்கள் அறிவுரைக்கிணங்க அதிகாரிகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள்.
மாநில அளவு விளையாட்டாக இருந்தாலும் இந்திய அளவு விளையாட்டாக இருந்தாலும் உலக அளவு பன்னாட்டு விழாவாக இருந்தாலும் திட்டமிடல், விருந்தோம்பல், செயற்பாட்டுப் பாங்கு முதலிய பலவகையிலும் தொடர்பான ஆர்வலர்களையும் இணைத்துக் கொண்டு சிறப்பாகப் பணியாற்றவும் தொண்டாற்றவும் செய்கிறார்கள். அந்த வகையில் சதுரங்க ஞாலப்போட்டியையும் செவ்வனே நடத்தத் திட்டமிட்டுச் செயலாற்றி வருவதற்குத் தமிழக அரசிற்கும் அதிகாரிகளுக்கும் பாராட்டுகள்!
அதே நேரம் நம் உள்ளத்தை உறுத்தும் பெருங்குறையைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
மத்தியில் இந்தித் திணிப்பு தமிழகத்தில் ஆங்கிலத் திணிப்பு
தமிழ்நாட்டின் புதிய திட்டங்கள் அல்லது முழக்கங்கள் முதலியவற்றில் ஆங்கிலப் பயன்பாடு இருப்பது வேதனையாக உள்ளது. ஒன்றிய அரசு இந்தியைத் திணிக்கிறது என்றால் தமிழக அரசு ஆங்கிலத்தைத் திணிக்கிறது. இந்தித் திணிப்பின் தீமைபோல் ஆங்கிலத்திணிப்பும் நமக்குத் தீமைதான். ஆனாலும் அதிகாரிகளின் ஆங்கில மோகம் ஆங்கிலத்திற்கு இடம் கொடுத்து அங்கு இருக்கும் அல்லது இருக்க வேண்டிய தமிழை அகற்றுகின்றனர். அதற்குச் சில சான்றுகளைக் கூறலாம்.
எனினும் இப்பொழுது நடைபெற உள்ள 44 ஆவது சதுரங்க ஞாலப்போட்டி 2022 தொடர்பானவை குறித்துக் காணலாம்.
பிற நாடுகளில் பன்னாட்டுப் போட்டிகள் நடைபெறும் பொழுது அதன் மூலம் தங்கள் மொழி, இலக்கியம், கலை, பண்பாட்டுப் பரவலுக்கும் வழி வகுக்கும் வகையில் விளம்பரம் செய்கிறார்கள். நம் நாட்டில் ஒன்றிய அரசாக இருந்தால் இந்தி, சமசுகிருதப் பரவலுக்கே முதன்மை அளிக்கிறார்கள். நாமோ ஆங்கிலத்திற்கு முதன்மை அளிக்கிறோம். அப்புறம் எதற்கு “எங்கும் தமிழ் எப்பொழுதும் தமிழ்” என்று சொல்ல வேண்டும்?
44th Fide Chess Olympiad 2022 chennai என நிகழ்வுப் பெயரையும் முத்திரை, சின்னம் முதலியவற்றையும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். அல்லது ஆங்கிலம் கலந்து குறிப்பிட்டுள்ளார்கள்.
Fide என்பது Fédération Internationale des Échecs என்னும் பிரெஞ்சுச் சொல்லின் தலைப்பெழுத்துச் சொல்லாகும். இதன் பொருள் பன்னாட்டுச் சதுரங்கக் கூட்டமைப்பு(International Chess Federation) என்பதாகும். ஒலிம்பியாடு என்பதை ஞாலப்போட்டி எனலாம். எனவே, இதனைத் தமிழில் 44ஆவது ஞாலச் சதுரங்கப் போட்டி 2022 எனலாம்.
இப்படி வைத்திருக்கலாமே!!!

“நம்ம CHENNAI” என எங்கும் விளம்பரம். இது “நம்ம சென்னை நம்ம செஸ் தம்பி” என்றும் விளம்பரப்பதாகைகள், சுவரொட்டிகள், செய்தி விளம்பரங்கள்.
சதுரங்கம் என்பது அனைவரும் அறிந்த சொல்தானே! “நமது சென்னை நமது சதுரங்கம்” என்று சொன்னால் குறைந்தா போய்விடும்? சதுரங்கம் என்பதும் தமிழ்ச்சொல்தான். யானைக்குப்பி என்றும் சொல்வார்கள். வட்டாட்டம் இருப்பதுபோல் கட்டங்களில் ஆடும் இதனைக் கட்டாட்டம் என்றும் சொல்லலாம். எனினும் சதுரங்கம் என்றே பயன்படுத்தலாம். ஆகவே, 44ஆவது சதுரங்க ஞாலப்போட்டி 2022 என்றே குறிப்பிடலாம்.
ஆங்கில மொழிக்கலப்பை அடியோடு நீக்க வேண்டும். ஆங்கில மோகத்தில் இருந்து அதிகாரிகள் விடுபடவில்லையேல் அவர்களை உயர் பொறுப்புகளில் இருந்து அரசு விடுவிக்க வேண்டும். இவர்களின் ஆங்கில மோகத்தால் தமிழ்நாட்டரசிற்கு அவப்பெயர் என்பதை அரசு உணர வேண்டும்.
மாநிலத் தன்னாட்சி கேட்பது தமிழின் தனியாட்சிக்காகத்தான். தமிழ்நாட்டில் தமிழுக்கு இடந்தராமல் தேமதுரத் தமிழோசையை உலகெங்கும் எங்ஙனம் பரப்ப முடியும்?
வரவேற்புப் பாட்டிலும் ஆங்கிலம்!
சதுரங்க ஞாலப்போட்டிக்கான வரவேற்புப் பாடல் தமிழ் கலந்த ஆங்கிலமாக உள்ளது. இயக்கத்திலும் இசை ஆக்கத்திலும் மலையாளிகள் முதன்மை என்பதால், பாடல் இடையில் மலையாள வாடையும் உள்ளது. பாடல் தமிழ் வரிகள் கலந்த ஆங்கிலப் பாடலாகத்தான் உள்ளது. கவிப்பேரரசர் வைரமுத்து, கவிஞர் பழனிபாரதி, கவிஞர் தாமரை போன்றவர்களிடம் பாடல் பொறுப்பை ஒப்படைத்திருந்தால் அழகு தமிழில் அருமையாகப் பாடல் தந்திருப்பார்கள். பாடலின் கீழே உலக மொழிகளில் உரை வரிகளைத் தந்திருக்கலாம. நம் நாடுதான் ஆங்கிலத்தை மூச்சாக உடையவர்களாயிற்றே! அப்புறம் எப்படித் தமிழ்ப்பாடலைக் கேட்டிருப்பார்கள்.
அறிவிப்பு, முத்திரை, சின்னம், விளம்பரம், சட்டை முழக்கம், பாடல் என அனைத்திலும் தமிழை மறந்து செயல்படுவதைத் தடுக்க மாண்புமிகு முதல்வரும் மாண்புமிகு விளையாட்டு அமைச்சரும் மடிதற்று முந்துற வேண்டும்.
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்
(திருவள்ளுவர், திருக்குறள், 954)
தமிழ்க்குடியில் பிறந்தவர் எதைப் பெறுவதாக இருந்தாலும் தமிழைக் குன்றச்செய்யும் செயல்களிலில் ஈடுபடக் கூடாது.
– இலக்குவனார் திருவள்ளுவன்,
மின்னம்பலம், 24.07.2022