வெள்ளி, 4 செப்டம்பர், 2015

இலக்குவனார் தமிழுக்காக வாழ்ந்தவர் – முனைவர் கா.மாரிமுத்து

Ilakkuvanar_nadai_payanam01

தமிழை நினைந்து தம்மை மறந்தவர்

  இலக்குவனார் செய்த தமிழ்ப்பணி, தனியொருவர் செய்திட முடியாத செயற்கரிய பெரும் பணி; எழுச்சியும் உணர்ச்சியும் மிக்க பேராசிரியராய்த், துறைத்தலைவராய், கல்லூரி முதல்வராய், நூலாசிரியராய், இதழாசிரியராய், இலக்கண இலக்கிய ஆய்வாளராய், மொழி பெயர்ப்பாளராய், மேடைப் பேச்சாளராய் சிறந்த கவிஞராய் மொழிப் போர்த் தளபதியாய் விளங்கியவர் இலக்குவனார். இவரால் தமிழுணர்வு ஊட்டப் பெற்று இவரிடம் பயின்றவர்களும், அமைச்சர்களாய், கட்சித் தலைவர்களாய், இவரைப் போன்றே மொழி ஆற்றல் பலவுடையராய்ச், சிறப்புற்றிருக்கிறார்கள் என அறிய முடிகிறது. இவர் தமிழுக்காக வாழ்ந்தவர், தனக்கென வாழ்ந்திலர். தம்மை நினைந்து தமிழை மறவாது, தமிழை நினைந்து தம்மை மறந்தவர். இவர் எழுதிய தன் வரலாறுகளால் அறிவுறுத்தப்படும் கருத்துகள் எக்காலத்திலும் மக்களுக்குப் பயன்தரத் தக்கவாய்க் கருதப் படுகின்றன
– முனைவர் கா.மாரிமுத்து



புரட்சிப் பேராசிரியர் இலக்குவனார் – நா.காமராசன்


ilakkuvanar+05

புரட்சிப் பேராசிரியர் இலக்குவனார்

  பேராசிரியர் இலக்குவனார்விருந்தோம்புதலில் மிக்க விருப்பமுடையவர்; எல்லாரிடமும் எளிமையாக இனிமையாக உரையாடுவார்; தன் கருத்துகளை எதிர்ப்பு வந்தபோதும் ஆணித்தரமாக அஞ்சாது எடுத்துரைப்பார்; பதவியைப் பெரிய வாழ்வு எனக் கருதும் இவ்வுலகில் மொழியின் வாழ்வே தம்முடைய வாழ்வு எனக்கருதி உழைத்த அறிஞராவார்.
  கல்லூரிப் பேராசிரியர்களிடையே இவர் முற்றிலும் வேறுபட்டவரெனலாம். சைவ சித்தாந்தம், கம்பராமாயணம் போன்றவற்றைப் பற்றிப் பேசிவந்த நேரத்தில் சங்கஇலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள் மீது ஈடுபாடு கொண்டு மாணவர்களுக்கு எடுத்துக்காட்டி விளக்குவார். தொல்காப்பியத்தில் ஆழ்ந்த புலமை பெற்றவர். பேராசிரியர் என்ற பதவிக்கு அண்ணா ஓர் உவமை சொன்னார்.
 “ஆழமான புலமையுடையவராக இருத்தல் வேண்டும். அப்புலமையும் இலட்சியத்திற்காக இருக்க வேண்டும்.அதற்கு இலக்கணமாக விளங்குபவர் இலக்குவனார். பேசும்போது கூடப் பிற மொழிச் சொற்கள் கலக்காமல் பேசுவார். ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர். தொல்காப்பிய ஆய்வின் ஆங்கிலப் பகுதியை அவரே எழுதினார். தொல்காப்பிய உரை ஆசிரியர்களின் உரையைத் திறனாய்வு செய்து விளக்குவார்.
 தத்துவம் வரலாறு பற்றிய கருத்துகளைக் சொல்வார் நாட்டு வரலாற்றில் மிகுந்த ஈடுபாடுஉடையவர். பாவேந்தர் பாதிதாசன், மறைமலை அடிகள், திரு.வி.க. மீது மிகுந்த பற்றுடையவராய் இருந்தார். தொல்காப்பியத்தைச் சமூகநூல் என்று கூறியவர். வேறு எந்த மொழியிலும் இது போல் இல்லை என்று கூறினார்.
-கவிரயசு நா.காமராசன்
na-kamarasan01



முதன் முதலாக மொழிப் போராட்டப் பயணம் மேற்கொண்டவர் இலக்குவனார்


Ilakkuvanar+01

முதன் முதலாக

மொழிப் போராட்டப் பயணம் மேற்கொண்டவர்

இலக்குவனார்


  மொழிப்போராளி  பேராசிரியரி சி.இலக்குவனார் பகுத்தறிவு நோக்கில் பெரியாரைப் பின்பற்றினார்; மொழிநோக்கில் மறைமலை அடிகளாரைப் பின்பற்றினார்; இந்தி எதிர்ப்பில் நாவலர் சோமசுந்தர பாரதியாரைப் பின்பற்றினார்; வறுமையிலும் செம்மையுடையவராக விளங்குவதில் சங்கப்புலவர் பெருஞ்சித்திரனாரைப் பின்பற்றினார்; புறநானூற்றில் வருகின்ற வேலைக் கையிலெடுப்பது போலத் திண்மையோடு (வலிமையோடு) வாழ்ந்து காட்டினார்; வன் தொடர்களை மிகுதியாகப் பின்பற்றினார்; வல்லினப் பேராசியராய் விளங்கி இளைய சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டாக இருக்கின்றார்.
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் போன்றோர் பக்திக்காகப் பயணம் செய்தனர். பக்திக்காகப் பயணம் செய்த தமிழ்நாட்டில் முதன் முதலாக மொழிப் போராட்டப் பயணம் மேற்கொண்டவர் இலக்குவனார். புதிய நெறியை உண்டாக்கியவர். தமிழ் வழியில் மாணவர் கற்க வேண்டுமென்ற நெறியைப் பரப்பியவர். தமிழ்ப் பயிற்றுமொழிக் கழகம் தோற்றுவித்தவர். இருபது ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் வழிக்கல்விக்கு ஆக்கம் தேடியவர் வள்ளுவர் நெறியே வையகத்திற்குச் சிறந்தது என்று குறள்நெறிகூறி இதழ் நடத்தியுள்ளார்.
–   உவமைக்கவிஞர் சுரதா (21.7.87)
suratha02