செவ்வாய், 15 ஜனவரி, 2013

மத்திய அரசை க் கண்டித்து வீடுகளில் கறுப்புக்கொடி


மத்திய அரசை க் கண்டித்து வீடுகளில் கறுப்புக்கொடி

 
திருச்சி: காவிரி நீர் பிரச்னையில், தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து, திருச்சியில், விவசாயிகள் பொங்கல் பண்டிகையை புறக்கணித்து, வீடுகளில் கறுப்புக் கொடியேற்றியிருந்தனர்.காவரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, நடுவர் நீதிமன்றம் வெளியிட்ட இறுதி தீர்ப்பை, மத்திய அரசு இதுவரை கெஜட்டில் வெளியிடவில்லை. நடப்பாண்டு, பருவமழை பொய்த்ததாலும், காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்காததாலும், டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், சம்பா பயிர்களும் கருகி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுதியது.இந்நிலையில், திருச்சி மாவட்டம், அதவத்தூர் பஞ்சாயத்துக்குட்பட்ட அல்லித்துறை பகுதியில், விவசாயிகள் பொங்கல் பண்டிகை புறக்கணிப்பு போராட்டம் நேற்று நடத்தினர். மேலப்பேட்டையில் உள்ள, 500 குடும்பத்தினர், மத்திய அரசை கண்டித்து, வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றினர்.இது குறித்து, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சின்னதுரை கூறியதாவது:காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, அமைக்கப்பட்ட காவிரி நடுவர் நீதிமன்றம், 2007ம் ஆண்டு இறுதித்தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்பை இதுவரை, மத்திய அரசு கெஜட்டில் வெளியிடாமல் உள்ளது. உச்சநீதிமன்றத்தில், 2012 டிசம்பர் மாதம் இறுதிக்குள் காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பை கெஜட்டில் வெளியிடுவதாக, மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை வெளியிடவில்லை.தற்போது தான், ஆய்வுக்காக மத்திய சட்ட வல்லுனர் குழுவுக்கு அந்த தீர்ப்பை பரிந்துரைத்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இது முழுக்க முழுக்க தமிழக மக்களையும், விவசாயிகளையும் வஞ்சிக்கும் செயல். இதனால், டெல்டா விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்தும், தற்கொலை செய்து கொண்ட விவசயிகளுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலும், பொங்கல் பண்டிகையை புறக்கணித்து, வீடுகளில் கறுப்புக் கொடியேற்றி அமைதியான முறையில் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக