ஏழைகளுக்காக ச் சென்னையில் உரூ.1க்கு இட்லி; உரூ.5க்கு ச் சாம்பார் ச் சோறு; உரூ.3க்குத் தயிர்ச்சோறு: முதல்வர் அறிவிப்பு
பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏழைகள், அன்றாடக் கூலி
வேலை செய்பவர்களுக்காக சென்னையில் சிற்றுண்டி உணவகம் திறக்க முதல்வர்
உத்தரவிட்டுள்ளார். இதில், ரூ.1க்கு இட்லி; ரூ.5க்கு சாம்பார் சாதம்;
ரூ.3க்கு தயிர்சாதம் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்த அரசின் அறிவிப்பு:
சென்னையில் குடிசைப் பகுதிகளில் வாழும் பெரும்பாலான ஏழை மக்கள் அன்றாட
கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த
ஊதியத்தில் பணிபுரிபவர்கள் ஆவார்கள். இது தவிர, சென்னைக்கு பணி
நிமித்தமாக வந்து, சிறிது காலம் தங்கி செல்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக
உள்ளது. இவர்கள் அனைவரும் தங்களது குறைந்த வருவாயில் உணவுக்கென அதிகம்
செலவு செய்ய இயலுவதில்லை.
அனைவருக்கும் சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து சலுகை விலையில் தரமான
உணவு வழங்குவதற்காக, சென்னை மாநகராட்சிப் பகுதியில், சென்னை மாநகராட்சியின்
மூலம் 1,000 சிற்றுண்டி உணவகங்களைத் துவக்க அரசு முடிவெடுத்துள்ளது.
இதன்படி, முதற்கட்டமாக சென்னை நகரில் உள்ள ஒவ்வொரு வார்டிலும், ஒரு
சிற்றுண்டி உணவகம் என்ற அடிப்படையில் 200 சிற்றுண்டி உணவகங்களை
தொடங்குவதற்கு முதல்வர் நிர்வாக ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்திற்காக மாதந்தோறும் 500 மெட்ரிக் டன் அரிசியை கிலோ ஒன்றுக்கு
ஒரு ரூபாய் என்ற சலுகை விலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம்
சென்னை மாநகராட்சிக்கு வழங்குவதற்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உணவகங்களில், இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5
ரூபாய்க்கும் மற்றும் தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.
இந்த உணவகங்களின் பணிகளை கண்காணிக்க மாநகர நல அலுவலர் தலைமையில் ஒரு குழு
அமைக்கப்படும்.
இதன் மூலம், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், தள்ளு வண்டி, கை வண்டி
ஒட்டுநர்கள் மற்றும் பாரம் சுமக்கும் தொழிலாளர்கள், ஆட்டோ ஒட்டுநர்கள்
மற்றும் முறைப்படுத்தப்படாத துறைகளைச் சார்ந்த அனைத்து தொழிலாளர்களும் பயன்
அடைவார்கள்.
- இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக