புதன், 16 ஜனவரி, 2013

நடனமாடிய வெளிநாட்டுப் பயணிகள்: மதுரையில் "கலகல'


நடனமாடிய வெளிநாட்டு ப் பயணிகள்: மதுரையில் "கலகல'


மதுரை:திருமங்கலம் அருகே மேலக்கோட்டை கிராமத்தில், மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் நடந்த பொங்கல் விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாய் நடனமாடி மகிழ்ந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும், சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்கும், பொங்கல் விழா கிராமங்களில் நடத்தப்படுகிறது. இந்தாண்டு அதிக எண்ணிக்கையில் 175 வெளிநாட்டுப் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றனர். இதில், அமெரிக்கா பயணிகள் அதிகம்.மேலக்கோட்டை ஊர் நுழைவுப் பகுதியில், கிராம மக்கள் சார்பில், வெளிநாட்டினர் ஒவ்வொருவருக்கும் மாலை அணிவித்து, திலகமிட்டு வரவேற்றனர்.மேளதாளம் முழங்க, ஊர்வலமாக அழைத்துவரப்பட்ட அவர்கள், நாகயசாமி பாண்டியர் ஜமீன் அரண்மனையை பார்வையிட்டனர். பின், குருநாதசாமி கோயில் முன் பாரம்பரிய கலைவிழா நடந்தது.கரகாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, தேவராட்டம், ஒயிலாட்டம், கராத்தே, யோகா என பல கலைநிகழ்ச்சிகள் நடந்தன. உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியாமல், வெளிநாட்டு பயணிகளும் கலைக்குழுவினரோடு ஆடி மகிழ்ந்தனர். பின், கிராமிய சூழலில் அறுசுவை உணவு விருந்தளிக்கப்பட்டன.

அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:
மாணவி ரேச்சல்: 21 நாள் பயணமாக 16 பேர் கொண்ட மாணவர்கள் குழு இந்தியா வந்துள்ளோம். பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றோம். இங்கு நடந்த அத்தனை நிகழ்ச்சிகளும் நெகிழ வைப்பதாக இருந்தது. ஏற்கனவே இது போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கும், என கேள்விப்பட்டிருந்தேன். நேரில் பார்த்த போது வியப்பாக இருந்தது.

ரோஸ் (அக்கவுண்டன்ட்): முதல் முறையாக இந்தியா வந்து, இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். மக்களின் வரவேற்பு முதல் அவர்களின் வாழ்வியல் மற்றும் கலாச்சாரங்களை பார்க்கும் போது புதுமையாக உள்ளது.

பென்மில்ஸ் (சேரிட்டபிள் டிரஸ்ட்): ஆடல், பாடல், இசை எல்லாம் ரசிக்கும் வகையில் இருந்தன. அறிமுகமான அனைவரிடமும் இந்நிகழ்ச்சியின் சிறப்புகள் குறித்தும் தெரிவிப்பேன், என்றனர்.

கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சுற்றுலாத்துறை, கலை பண்பாட்டுத்துறை, ஊராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தன. சுற்றுலா அலுவலர் தர்மராஜ், பஞ்., உதவி இயக்குனர் சுகுமாரன், ஊராட்சி தலைவர் நாகராஜன் மற்றும் பலர் பங்கேற்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக