புதன், 16 ஜனவரி, 2013

திருவள்ளுவர் சிலையில் அ.தி.மு.க. பங்கு

பேருந்துகளில் திருக்குறளை அழித்துவிட்டு த் தன் வாசகங்களை எழுதிய கருணாநிதி வள்ளுவர் சிலைக்காகப் போராடுகிறாராம்! முதல்வர் கேள்வி



காலத்தால் அழியாத திருக்குறளை பேருந்துகளில் இருந்து அழித்துவிட்டு, தன்னுடைய வாசகங்களைப் போட்டுக் கொண்ட கருணாநிதி, வள்ளுவர் சிலைக்காகப் போராட்டம் நடத்துகிறாராம்..! என்று முதல்வர் ஜெயலலிதா திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்துள்ளார்.
இன்று தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பகுதியில் பென்னி குயிக் நினைவு மணி மண்டபத்தை திறந்து வைத்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, திருவள்ளுவர் சிலை விவகாரத்தில் கருணாநிதியை விமர்சனம் செய்து பேசினார்.
அவருடைய உரையில் இருந்து...

இன்று திருவள்ளுவர் தினம்.  மனிதவாழ்வுக்கு திருக்குறள் மூலம் நல்வழி காட்டியவர் திருவள்ளுவர்.  நாடு, மதம், மொழி கடந்து நல்வழி காட்டும் உலகப் பொதுமறை நூலாக திருக்குறள் விளங்குகிறது.  அறம், பொருள், இன்பம் என்ற வாழ்வின் அடிப்படையான கருத்துகளுக்கு விளக்கம் அளிப்பதே திருக்குறள்.  இரண்டே வரிகளில் இருந்தாலும், அதனுள் உலகையே அடக்கி நிற்கும் ஆற்றல் படைத்தது திருக்குறள். திருக்குறளில் திருவள்ளுவர் கூறிய கருத்துகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாக விளங்குகின்றன. இதனால் தான், “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று பாடினார் மகாகவி பாரதியார்.
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய  திருவள்ளுவர் தின நன்னாளில், எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள் என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, முல்லைப் பெரியாறு அணையினை உருவாக்கிய கர்னல் பென்னிகுயிக்கின் மணிமண்டபத்தை திறந்து வைத்ததில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்த ஜான் பென்னிகுயிக் நினைவைப் போற்றும் வகையில், தற்போது தேனி நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு “கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையம்” என்று பெயர் சூட்டப்படும் என்பதை அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் திருவள்ளுவரின் காலத்தால் அழியாத திருக்குறளை அழித்துவிட்டு, தன்னுடைய வாசகங்களை எழுத வைத்த  கருணாநிதி, கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை சரியாக பராமரிக்கப்படவில்லை என இல்லாத ஒன்றைக் கூறி, அதற்காக போராட்டம் நடத்தப் போவதாக கூறி இருந்தார். நான்  கருணாநிதிக்கு ஒன்றைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருவள்ளுவர் பெயரில் விருதை அறிமுகப்படுத்தியது அதிமுக அரசு.  திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானத்தை இயற்றியது அதிமுக அரசு. திருவள்ளுவர் பெயரில் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது அதிமுக ஆட்சிக் காலத்தில்தான்.
இன்னும் சொல்லப்போனால், கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவுப் பாறைக்கு அருகிலுள்ள பாறையில் திருவள்ளுவர் சிலை ஒன்றினை நிறுவ முடிவெடுத்து, அப்போதைய பாரதப் பிரதமர்  மொரார்ஜி தேசாயால், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் 15.4.1979 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர், பாறையின் தன்மை, சிலையின் வடிவமைப்பு, அதை நிறுவுவது பற்றிய திட்டங்கள், மதிப்பீடு போன்ற பல்வேறு அம்சங்களை விரிவாக ஆராய்ந்து ஓர் அறிக்கையினை சமர்ப்பிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டதும் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தான். எனது முதல் ஆட்சிக் காலத்தில் 1 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இந்த சிலை அமைக்கும் பணிகளுக்காக விடுவிக்கப்பட்டது.  இதனை வைத்து, கணபதி ஸ்தபதி ஓரளவு பணிகளை அப்போதே மேற்கொண்டார். உண்மை நிலை இவ்வாறிருக்க, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறப்பதற்கு தான் மட்டுமே காரணம் என்று  கருணாநிதி கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. இவ்வாறு அண்டப் புளுகு புளுகுவதற்கு, தன்னை விஞ்சியவர் வேறு யாருமில்லை என்பதை கருணாநிதி மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசுவது என்பது நான்கைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதாகும். முதன் முதலாக, எனது ஆட்சிக் காலத்தில் 2004 ஆம் ஆண்டு 
இப் பணி நடைபெற்றது. பின்னர் 2008 ஆம் ஆண்டு ரசாயனக் கலவை பூசப்பட்டது. தற்போது இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.  உண்மை நிலை இவ்வாறிருக்க, 2011 ஆம் ஆண்டு ஆட்சி மாறிய பிறகு, ஒன்றரை ஆண்டுக் காலமாக இந்த ரசாயனக் கலவை பூசப்படவில்லை என்று  கருணாநிதி கூறுவது விஷமத்தனமானது. திருவள்ளுவரைப் பற்றிய அக்கறை கருணாநிதியைவிட எனக்கு அதிகம் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
“பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்”.
அதாவது, பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள் என்ற வள்ளுவரின் வாய்மொழியை  கருணாநிதிக்கு இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
- இவ்வாறு முதல்வர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக