வியாழன், 17 ஜனவரி, 2013

மெய்சிலிர்க்க வைத்த அலங்காநல்லூர் ஏறு தழுவும் விழா

மெய்சிலிர்க்க வைத்த அலங்காநல்லூர் சல்லிக்கட்டு: 36 வீரர்கள் காயம் 


அலங்காநல்லூர்,: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில், சீறிப் பாய்ந்த முரட்டுக் காளைகளை அடக்கப் பாய்ந்த காளையர், 36 பேர் காயமுற்றனர். காளைகளை அடக்கிய வீரர்கள், தங்கக் காசு, லேப்டாப், பிரிஜ், வாஷிங் மெஷின், எல்.சி.டி., "டிவி' போன்ற பொருட்களை அள்ளிச் சென்றனர்.சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி, ஜல்லிக்கட்டு விழாவை, நேற்று காலை, 7:55 மணிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ரவீந்திரன் துவக்கினார். வாடிவாசல் வழியாக, கோயில் காளை முதலில் விடப்பட்டது. அதை, வீரர்கள் பிடிக்கவில்லை. ஒரு நிமிடத்திற்கு ஒரு காளை என, காளைகள் அடுத்தடுத்து விடப்பட்டன. மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட, 473 காளைகளை அடக்க, 361 வீரர்கள், வாடிவாசலில் தயாராக நின்றனர்.
நின்று விளையாடிய காளைகள்
சில காளைகள், ஆடுகளத்தில் நின்று, போக்கு காட்டின. நின்று விளையாடிய காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கக்காசு, வாஷிங் மெஷின் பரிசுகளாக வழங்கப்பட்டன. சீறிப் பாய்ந்த காளைகள் மீது, மொத்தமாக விழுந்தும், வாலைப் பிடித்து இழுத்தும், விதி மீறிய, 22 வீரர்கள், களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். காளையின் திமிலைப் பிடித்து திமிரை அடக்கிய வீரர்கள், பரிசு மழையில் நனைந்தனர். நிகழ்வுகள், வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.
உசுப்பேற்றிய விழாக் குழு
மதுரை பி.ராஜசேகரனின் காளைகள் வந்தபோது, "பிடித்துப் பார்... காளை பிடிபட்டால் தங்கக் காசு உனக்கு' என, விழாக் குழுவினர் உசுப்பேற்றினர். அக்காளைகள், வீரர்களிடம் பிடிபடாமல், லாவகமாக தப்பின. சில வீரர்கள் மட்டும், நான்கைந்து காளைகளை பிடித்து பரிசுகளை வென்றனர்.
36 பேர் காயம்
காளைகளை பிடித்த, 36 வீரர்கள் காயமுற்றனர். வேடிக்கை பார்த்து, காயமுற்ற இரண்டு பேர், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மதியம், 2:00 மணிக்கு ஜல்லிக்கட்டு முடிந்ததால், நூற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்கவில்லை. எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பரிசுகளை குவித்த இன்ஜினியர் ரஞ்சித்

மதுரை முடக்கத்தான் இன்ஜினியர் ரஞ்சித், 30. இவர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மூன்று காளைகளை அடக்கி பரிசுகளை குவித்தார். அவர் கூறுகையில், ""பெற்றோர் ஆசிரியர்களாக உள்ளனர். விவசாய குடும்பத்தை சேர்ந்த எனக்கு காளைகளை அடக்கவும் தெரியும், அன்பு காட்டவும் தெரியும்,'' என்றார்.

மெய்சிலிர்க்க வைத்த "ஜல்லிக்கட்டு': சுற்றுலா பயணிகள் "குஷி'

"அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மெய் சிலிர்க்க வைத்தது. இதை பார்க்க ஆண்டு தோறும் வருவோம்' என, வெளிநாட்டு பயணிகள் உணர்ச்சி வசப்பட்டனர்.பிரான்ஸ் லூசியானா: ஸ்பெயினில் தேசிய விளையாட்டாக எருது விளையாட்டு உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, மெய் சிலிர்க்க வைத்தது. கோபத்துடன் வரும் காளையும், விவேகத்துடன் காத்திருக்கும் வீரர்களும், ஆக்ரோஷமாக மோதுவதை இங்கு பார்க்கிறேன். ஜல்லிக்கட்டு பார்க்க, ஆண்டுதோறும் அலங்காநல்லூர் வருவேன்.டென்மார்க் பிளோயான் மற்றும் லூனா: நாங்கள் திருச்சி கல்லூரியில் மொழியியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல் முறையாக பார்க்கிறோம். இதை மறக்க முடியாது. வாய்ப்பு கிடைத்தால் அடுத்தாண்டும் கண்டிப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வருவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக