வாழ்த்து மடல் வந்த வரலாறு!
இந்தப் புதுவழக்கம் வரவேற்கத்தகுந்தது. தமிழறிஞர்கள் ஒருவருக்கொருவர் தம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள நல்ல வழி. தமிழர்கள் அனைவரும் இதனைப் பின்பற்ற வேண்டும்'' என்று பாராட்டி, தமிழர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தவர் "தமிழ்த்தென்றல்' திரு.வி.க.
"அது என்ன புதுவழக்கம், அதனை ஏன் தமிழர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்?' என்று அறிந்துகொள்ள வேண்டுமெனில், 1928-ஆம் ஆண்டுக்குப் போகவேண்டும். வாழ்த்து அட்டைகள், படங்கள் அனுப்பும் வழக்கம் தமிழுக்கு வந்ததை அறிந்துகொள்வது ஒரு சுவையான வரலாறு.
1928-ஆம் ஆண்டு, சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள், ஒன்றுகூடி நிறுவிய தமது சங்கத்தில் அடிக்கடி கூட்டங்கள் நடத்தி ஆக்கப்பூர்வமான பணிகளையும் மாற்றங்களையும் ஏற்று நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பது வழக்கம். அச்சங்கத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் காரசாரமான விவாதம் ஒன்று நடைபெற்றது. அதில் ஒருவர் எழுந்து, ""ஆண்டுதோறும் மலரும் கிறிஸ்துமஸ் விழாக்காலத்தில் வாழ்த்து மடல்கள் அனுப்புகிறார்கள். அதுபோல் தமிழர் திருநாள் ஆகிய "பொங்கல்' நன்னாளுக்கு வாழ்த்து அனுப்ப வேண்டும்'' என்று வலியுறுத்திப் பேசினார்.
உடனே ஒரு சிலர் இதனை மறுத்தனர். "எடுத்ததற்கெல்லாம் மேல்நாட்டவரின் வழக்கத்தைப் பின்பற்றுவது அடிமைத்தனம். இது கூடாது' என்று காரணம் கூறினர். வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு, விருப்பமுள்ளவர்கள் "பொங்கல்' வாழ்த்து அனுப்பலாம் என்று முடிவு செய்யப்பட்டது. உடனே, பொங்கல் வாழ்த்து அனுப்பும் கருத்தை முன்மொழிந்த மாணவர், முதல் பொங்கல் வாழ்த்து மடலை தமிழ் மரபுப்படி உருவாக்கத் தொடங்கினார். தமிழுக்குத் தன்னையளித்த பனை ஓலையில் ஒரு குருத்தோலையைக் கொண்டுவந்து, அதை அழகாகக் கத்திரித்து, வண்ண மைகளைக் கொண்டு அழகுசெய்து பொங்கல் வாழ்த்து நன்மொழிகளை எழுதினார்.
அதைத் தமிழறிஞர்களாகிய, கா.நமச்சிவாய முதலியார், திரு.வி.க., கல்கி மற்றும் தமது நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பி மகிழ்ந்தார். அதனைக் கண்ணுற்ற திரு.வி.க. தான் இப் புதுமரபை வரவேற்று அனைவரும் பின்பற்ற வலியுறுத்தி மகிழ்ந்தார். இன்றைக்கு உலக முழுதும் வாழும் தமிழர்கள் "பொங்கல் வாழ்த்து' அனுப்பும் வழக்கம் உருவானது 85 ஆண்டுகளுக்கு முன்னர்தான்.
இந்தப் புது வழக்கத்தை அனைவருக்கும் பழக்கப்படுத்தி, நடைமுறைப்படுத்திய பெருமை நூற்றாண்டு கண்ட பேரறிஞர் ம.பெரியசாமித்தூரனையே சாரும்.
நூற்றாண்டு கடந்த "கம்பன் அடிப்பொடி' சா.கணேசனின் பொங்கல் வாழ்த்துக் கவிதையையும் அது தொடர்பான ஆங்கில விளக்கத்தையும் அவர் கையெழுத்திலேயே, கம்பன் கழகச் செயலர் பழ.பழனியப்பனின் உதவியோடு காண்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக