திங்கள், 14 ஜனவரி, 2013

பொங்கல் திருநாள்: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

பொங்கல் திருநாள்: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

பொங்கல் திருநாளையொட்டி ஆளுநர் கே.ரோசய்யா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த்,காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கே.ரோசய்யா: "பொங்கல் நன்னாளில் என் இதயபூர்வமான வாழ்த்துகளை தமிழர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க இந்த நாளில் உறுதியேற்போம். அறுவடை நாளில் நாட்டில் அமைதியும்,முன்னேற்றமும், செழிப்பும் அடைய அனைவருக்கும் என் வாழ்த்துகள்.'
கருணாநிதி: "தைத் திங்கள் முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டு - பொங்கல் திருநாள். இந்நன்னாளில் தமிழ் மக்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துகள்.
அதிமுக அரசின் அணுகுமுறைகளால் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்கவில்லை. திமுக அரசு தொடங்கிய வல்லூர், வடசென்னை, மேட்டூர் அனல் மின்நிலையப் பணிகளை விரைவுபடுத்திச் செயல்பாட்டுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் பம்பு செட்டுகளுக்கு மின்சாரம் கிடைக்காமல் விவசாயிகள் முற்றிலும் முடங்கி வேதனையில் மூழ்கிக் கிடக்கின்றனர். இந்த நிலையை எண்ணும்போது இதயம் விம்முகிறது. எனினும், புலரும் புத்தாண்டு அவர்களுக்கு கைகொடுக்கும். புதிய வாழ்வு உதயமாகும்.'
விஜயகாந்த்: "மின்வெட்டு முதல் ரயில் கட்டணம், பஸ் கட்டணம் வரை மத்திய-மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு மக்களை வாட்டி வதைக்கின்றன. இதன் காரணமாகவே இந்தப் பொங்கலைக் கறுப்புப் பொங்கல் என்று சொன்னேன். எனினும் வரும் ஆண்டாவது கஷ்டங்கள் நீங்கி நல்ல எதிர்காலம் தமிழகத்துக்கு அமைய வேண்டும்.'
பி.எஸ்.ஞானதேசிகன்: "உழைத்த உழைப்புக்குப் பலன் பெற்று வெற்றிக்குத் துணையாக இருந்த மண்ணுக்கும், விண்ணுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கிற நாள் தை திருநாள். காவிரி நீரை எதிர்பார்த்து காத்திருக்கும் டெல்டா விவசாயிகளின் துயர் போகவும், தமிழகம் முழுவதும் மத்திய அரசு தீட்டும் திட்டங்கள் செம்மையாகச் சென்றடைந்து தமிழக மக்கள் வாழ்வு உயரவும், இத் தைத் திருநாளில் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.'
ஜி.கே.வாசன்: "இயற்கை பொய்த்துப் போனதாலும், காவிரியில் தண்ணீர் வராததாலும் தமிழக விவசாயிகள் பெரும் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர். புதிய விடியலையும், நம்பிக்கையும் அளித்து, வறுமை நீங்கி வளம் பெருகவும், வளமான தமிழகம், வலிமையான பாரதம் அமைந்திடவும் அனைவருக்கும் என் மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்.'
வைகோ: "ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்கள் கொண்டாடி வரும் பொங்கல் நாளில் காரிருளுக்குப் பின்னர் வெளிச்சம் உதிக்கும் என்ற நியதியின்படி தை பிறந்துவிட்டது. இனியாவது நமக்கு ஒரு வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு தமிழ் மக்கள் தங்கள் இல்லத்தில் பொங்கலைக் கொண்டாடட்டும். மது மற்றும் இலவசத்தின் போதையில் சிக்கியுள்ள தமிழகம் அதிலிருந்து மீண்டும் பெருமையை நிலைநாட்டும் காலம் மலரும்.'
ராமதாஸ்: "உழவர் திருநாள் எனப்படும் பொங்கல் கடந்த சில ஆண்டுகளாகவே உற்சாகம் அளிக்கும் வகையில் அமையவில்லை. இந்த ஆண்டாவது பொங்கல் இனிப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உழவர்களின் துயரங்கள் அனைத்தும் மார்கழி மாதத்து பனி போல விலக வேண்டும். உலகின் மூத்த குடியான தமிழ்க்குடி அனைத்து நலமும், வளமும் பெற்று வாழ வேண்டும்.'
பொன்.ராதாகிருஷ்ணன்: "நதி நீர் பெருக்கெடுத்து மணல் கொள்ளை அகலவும், வான் மழை பொய்யாது பெய்து மண் வளம் சிறக்கவும், பொன்விளையும் பூமி அன்னையின் விளை நிலம் விலை நிலமாய் மாறாதிருக்கவும், உழுதவர் வாழ்வை உயர்த்தும் நல் அரசு அமையவும் அன்னை சக்தியின் அருள் இம்மியும் குறையாது தை பொங்கல் முதல் தமிழர்களுக்குக் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.'
ஜி.ராமகிருஷ்ணன்: "பன்முகப் பண்பாட்டால் நம்முடைய இந்தியா நிமிர்ந்து நிற்கிறது. மக்களின் ஒற்றுமையை, மதச் சார்பின்மையைக் கெடுக்க முயலும் குறுகிய நோக்கம் கொண்ட மதவெறி சக்திகளை முறியடிக்க வேண்டும். அநீதிக்கெதிராக, அக்கிர மத்திற்கெதிராக, மக்கள் வாழ்வை நாசம் செய்யும் தீய கொள்கைகளுக்கு எதிராக பொங்கிட இந்த பொங்கல் நாளில் உறுதியேற்போம்.'
திருமாவளவன்: "பொங்கலைக் கொண்டாடும் உழைக்கும் தமிழ்ச் சொந்தங்கள் யாவருக்கும் என் வாழ்த்துகள். சாதி-மத ஆதிக்கத்தை வேரறுக்கவும், ஆணாதிக்க ஆணவத்தைத் தகர்த்தெறியவும் உழைக்கும் மக்களாய் இணைவோம், ஒன்றாய் வாழ்வோம்.'
ஆர்.சரத்குமார்: "காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிடாததால் தஞ்சை பகுதி விவசாயிகள் மனநிறைவோடு கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர். அதேவேளையில் தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் பெறும் வகையில் அமைச்சர்கள் அடங்கிய ஆய்வுக்குழுவை அனுப்பி நடவடிக்கை எடுத்து வருகிறார். இனி வரும் காலங்களில் விவசாயிகளின் வாழ்க்கை உயர்த்திட வேண்டும் என்று பிரார்த்திப்போம்.'
பாரிவேந்தர்: "விவசாயக் குடும்பங்கள் வறட்சியாலும், கடனாலும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளன. இனி வரும் காலம் விவசாயிகளுக்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சி பொங்கும் காலமாக இருக்க வேண்டும்.
முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம், புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஒய்.ஜவஹர் அலி, மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் சேதுராமன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக