சனி, 19 ஜனவரி, 2013

முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலத் தேர்ச்சி வினாத்தாள் கூடாது - மரு.இராமதாசு

  நல்ல அறிக்கை. தலைப்பை, முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலத் தேர்ச்சி வினாத்தாள்  கூடாது என்பதற்கு முதன்மை அளித்துத் தலைப்பிட்டிருக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
துணை ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளுக்கான போட்டி தேர்வில் மாற்றம் கூடாது:   மரு.இராமதாசு அறிக்கை
துணை ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளுக்கான போட்டி தேர்வில் மாற்றம் கூடாது: டாக்டர் ராமதாஸ் அறிக்கை
சென்னை, ஜன.19-

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு துறைகளில் மாவட்ட துணை ஆட்சியர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வணிக வரித்துறை உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பணிகளுக்கு 25 பேரை தேர்வு செய்வதற்கான முதல் தொகுதி முதனிலை (குரூப் 1 பிரிவினர்) போட்டித் தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அடுத்த மாதம் 16-ந்தேதி நடத்த உள்ளது.

முதல் தொகுதி முதனிலை மற்றும் முதன்மை தேர்வு முறையில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் சில மாற்றங்களை செய்திருக்கிறது. அதன்படி முதனிலைத் தேர்வுக்கான விடைத் தாட்களில் பொது அறிவு வினாக்கள் தவிர மாணவர்களின் பகுப் பாய்வு திறனை சோதிப்பதற்கான 50 “பொது ஆப்டிடியூட்” வினாக்களும் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர முதன்மை தேர்வில் 300 வினாக்கள் கொண்ட தாள் புதிதாக சேர்க்கப்பட்டிருப்பதுடன், அதில் மாணவர்களின் ஆங்கில புலமையை சோதிக்கும் வகையில் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுதல், சுருக்கி எழுதுதல், பத்தியை படித்து வினாக்களுக்கு விடையளித்தல் ஆகிய பிரிவுகளும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கல்வியாளரிடமும், மனித வள வல்லுனர்களிடமும் கருத்து கேட்காமல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தன்னிச்சையாக எடுத்துள்ள இம்முடிவு போட்டித் தேர்வு எழுதும் முதல் தலைமுறை ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களை கடுமையாக பாதிக்கும்.

தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக தமிழ் நீடிக்கும் நிலையில் அரசுப்பணிக்கு ஆங்கில புலமை அவசியம் என்று நிபந்தனை விதிப்பது கண்டிக்கத்தக்கது. ஒருபுறம் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் இடங்களை ஒதுக்கீடு செய்துவிட்டு இன்னொரு புறம் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிப்பது முரண்பாடான ஒன்றாகும். தமிழ்நாட்டில் தமிழ் மொழியே தெரியாத இந்திய ஆட்சிப்பணி ஆதிகாரிகள் பலர் பணியாற்றும் நிலையில் முதல் தொகுதி பணிகளில் சேர விரும்புபவர்கள் ஆங்கில மொழித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதை பார்க்கும் போது, இதன் பின்னணியில் ஏதோ சதி இருப்பதாக தோன்றுகிறது.

இதை ஏற்றுக் கொள்ள முடியாது. தேர்வாணையம் கொண்டு வந்துள்ள இத்தகைய மாற்றங்களால் தனிப்பயிற்சி நிலையங்களில் படித்தால் மட்டும்தான் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியும் நிலை ஏற்படும். நகர்ப்புற பணக்கார மாணவர்கள் தனிப்பயிற்சி நிலையங்களில் படித்து எளிதாக வெற்றி பெற்று விடுவார்கள். ஆனால் கிராமப்புற ஏழை மாணவர்களால் லட்சக்கணக்கில் செலவழித்து தனிப் பயிற்சி நிலையங்களில் படிக்க முடியாது என்பதால் அவர்களுக்கு இத்தகைய அரசு வேலைகள் எட்டாக்கனியாகி விடும். அதுமட்டுமின்றி நேர் முகத் தேர்வுக்கான மதிப் பெண்கள் 80-லிருந்து 120 ஆக உயர்த்துவது முறைகேடுகளுக்கே வழி வகுக்கும்.

புதிய முறைப்படி நேர்முகத் தேர்வை நடத்துபவர்கள் நினைத்தால், எழுத்து தேர்வில் முதலிடம் பிடித்தவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு தங்களுக்கு பிடித்தவர்களை முன்னுக்கு கொண்டு வந்து வேலை வழங்க முடியும். எனவே முதல் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வில் புதிய முறையை ரத்து செய்துவிட்டு பழைய முறையிலேயே தேர்வுகளை நடத்த வேண்டும். மாணவர்களை பாதிக்கும் இது போன்ற விபரீத சோதனை முயற்சிகளில் ஈடுபடுவதை விட்டு விட்டு தேர்வாணையத்தில் நடைபெறும் முறை கேடுகளை களைவதில் அதன் நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக