சொல்கிறார்கள்
சாவுக்கு அல்ல; வாழ்வுக்கானது பறை இசை!
"கும்கி' திரைப்படத்தின், "சொய்ங்... சொய்ங்...' பாடல் பாடியுள்ள, மகிழினியின் கணவரும், "புத்தர் கலைக் குழு'வை நடத்தி வருபவருமான, மணிமாறன்: பறை இசை, தமிழருடைய ஆதி கலை வடிவம். சாவுக்கு மட்டுமே இசைக்கக் கூடிய, அமங்கலமான விஷயங்களுக்கு மட்டும் என, இது மாறி விட்டது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் தான் இசைக்க வேண்டும் என, நிர்பந்திக்கப்பட்ட ஒன்றாக மாற்றப்பட்டு விட்டது. ஆனால் இது, நம் வாழ்க்கையின், கொண்டாட்டத்தின், வெற்றியின், நல்ல செய்தியைச் சொல்ல பயன்படுத்தும் இசை. ஒரு முறை இதன் சுவையை அனுபவித்தவர்கள், இதை உளமார நேசிக்கத் துவங்கி விடுவர். இதை, அனைவருக்குமான கலையாக, தமிழர்களின் இசையாக மாற்றுவது தான், எங்கள் குழுவின் நோக்கம். பறையிசையில், சாவுக்கு ஒரு தாளம், திருமணத்துக்கு ஒரு தாளம், மாடு பிடிக்கு ஒரு தாளம் என, தனித் தனி தாளம் உள்ளது. தமிழ் இசையில் இசைக் குறிப்புகள் இருப்பது போல, பறையிசைக்கும் இசைக் குறிப்புகளை உருவாக்கி உள்ளோம். குடிப் பழக்கம் தான், பறையிசைக் கலைஞர்களை, இத்தனை ஆண்டுகளும் அடிமையாக, சமூகத்தில் எந்த அங்கீகாரமும் இல்லாதவர்களாக வைத்திருந்தது. அதை மாற்ற வேண்டும்; பறையிசைக் கலைஞர்கள், கல்வி கற்க வேண்டும் என்பது, எங்கள் நோக்கம். இறந்தவர்களை வழியனுப்ப பறையிசைக்க வேண்டியது தான். ஆனால் அதை, தலித் சமூகத்தினர் மட்டும் தான், காலம் காலமாக செய்கின்றனர். கல்வியில்லாமல் குடியில் மூழ்கி, இதையே தொழிலாகச் செய்து, எந்த முன்னேற்றமும் இன்றி இருக்கின்றனர். இதை உணர்ந்த பிறகு தான், சாவுக்கு பறை வாசிப்பதில்லை என, முடிவெடுத்தோம். கோவில், திருவிழாக்களில், குடும்ப நிகழ்ச்சிகளில், கட்சி நிகழ்ச்சிகளில், அரசியல் கூட்டங்களில், பறை இசைக்கிறோம். எல்லா மேடைகளிலும், "எம் பறை ஒலி, சாவுக்கானது அல்ல; வாழ்வுக்கானது! எம் பறை முழக்கம், சாமிகள் ஆடுவதற்கல்ல; ஆதிக்கம் ஆட்டம் காண்பதற்கு! ஓங்கி அடிப்பதில் கிழியட்டும்... பறைகள் அல்ல, இந்திய ஜாதிகள்!' என, சொன்ன பிறகு தான், நிகழ்ச்சியை தொடங்குவோம்.இந்த பறையின் மூலமாக, ஜாதி வேறுபாடுகளை அகற்றணும். அது தான் எங்களுடைய இப்போதைய இலக்கு.
"எண்ணெய் தேய்த்துக்குளியுங்கள்!':ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஆயூர்வேத
கல்லூரி டீன், ஆயுர்வேத டாக்டர் சுவாமிநாதன்: கடுமையான வேலை, டென்ஷனுக்குப்
பின், நம்ம உடம்பை ரிலாக்ஸ் பண்றதுக்கு ஒரு சிறந்த தீர்வு, எண்ணெய்
தேய்ச்சுக் குளிக்கறது தான். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, வெயில்
காயணும்; தண்ணீர் காயணும்; சீயக்காய் சுடுதண்ணியில கரைச்சு வெதுவெதுப்பா
இருக்கணும்.சூரிய வெளிச்சம் வர்றதுக்கு முன்னாடியே, எண்ணெய் குளியல்
எடுக்கக் கூடாது. சூடு எண்ணெயின் வீரியத்தால், உடம்பின் உட்புற குழாய்களில்
உள்ள, அழுக்குகள் நெகிழும். சுடுதண்ணீரை உடம்பில் ஊத்தும் போது, அது
கரைந்து, மலம், சிறுநீர், வியர்வை மூலமா, வெளியேறத் தொடங்கும்.இரும்புக்
கரண்டியில் நல்லெண்ணெயுடன், மிளகு, சீரகம் போட்டு பொரித்து, அந்த மிளகு,
சீரகத்தை, அப்படியே வாயில் போட்டு மென்று, எண்ணெய் வெதுவெதுப்பாக
இருக்கும்போதே தேய்க்கணும். இரும்புடன் எண்ணெய் சேரும் போது, நரம்புகளை
வலுப்படுத்தும் தன்மை அதிகரிக்கும். உச்சி முதல் பாதம் வரை, எண்ணெயை ஊற
வைத்து, 20 நிமிடம் வரை, மசாஜ் பண்ணலாம். அதிகபட்சம், 45 நிமடங்கள் வரை,
எண்ணெய் ஊறலாம்.எண்ணெய் தேய்க்கும் போது, மேலிருந்து கீழாக தேய்ப்பதே
சரியான முறை. சில பேருக்கு வயிற்றில், வாயுத் தொல்லை இருக்கும். அவர்கள்
வலது பகுதியில் இருந்து, இடது பகுதிக்கு உருட்டி உருட்டி, தேய்க்க
சரியாகும். இடுப்பு வலி இருந்தால், விளக்கெண்ணெய் சூடு பண்ணி, அந்த
பகுதியில் தேய்த்துக் குளிக்கலாம். மலச் சிக்கலும் போகும்.தலையில்
நல்லெண்ணெயை அரக்கித் தேய்க்கும் போது, மூளை நரம்புகள் வலுப் பெறும்.
மூளையில் உள்ள ஹைபோதாலமஸ், பிட்யூட்டரி கிளாண்ட் சரியாய் இயங்கும்.
பிட்யூட்டரி சீராய் இயங்க, உடம்பில் அத்தனை சுரப்பிகளும் சீராகும். ஆனால்,
முடி கொட்டுறவர்கள் தலையை அரக்கித் தேய்க்க கூடாது. அது முடி உதிர்தலை
மேலும் அதிகரிக்கும். அவங்க எண்ணெயை பஞ்சில் முக்கி உச்சந்தலையில் வைக்க,
எண்ணெயோட வீரியம் அப்படியே தலையில் இறங்கும். அதுவே அவர்களுக்கு
போதுமானது.மாதவிடய் காலங்களில், உடம்பில் ஏகப்பட்ட ஹார்மோன்ஸ் மாற்றங்கள்
இருக்கும். அன்று, எண்ணெய் குளியல் கூடவே கூடாது. எப்போதும் குளித்த பிறகு,
தலைக்கு எண்ணெய் தடவக் கூடாது. அப்படி தடவினால், கை, கால் வலி வர
வாய்ப்புண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக