சனி, 12 செப்டம்பர், 2009

கிளிநொச்சியில் வீடுகளை இடித்து
இராணுவத்தினருக்கு நினைவிடங்கள்?


கொழும்பு, செப்.11- கிளிநொச்சியில் வீடுகள் மற்றும் கட்டடங்களை இடித்து போரில் உயிரிழந்த ராணுவத்தினருக்கு நினைவிடங்கள் கட்டப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.,யும், அதன் நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான சம்பந்தன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அவசரகாலச் சட்டத்தை நீட்டிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.''தமிழர்கள் ஏராளமான துன்பங்களை அனுபவித்துவிட்டனர். ராணுவத்தின் இருப்பு அவர்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது. இதனôல், அவர்கள் அடிமைகளை போல வாழ்கிறார்கள். வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து ராணுவத்தினரை திரும்பப் பெற வேண்டும். அப்போது தான் தமிழர்களால் அங்கு சுதந்திரமாக வாழ முடியும். வவுனியா முகாம்களில் உள்ள மக்களை உடனடியாக அவர்களின் சொந்த இருப்பிடங்களில் குடியமர்த்த வேண்டும. ஆனையிறவு எல்லையில் புத்த மடாலயம் கட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. கிளிநொச்சியில் வீடுகள், கட்டடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அங்கு ராணுவத்தினருக்கான நினைவிடங்கள் கட்டப்படுகின்றன'' என்று அவர் பேசியதாக அந்த இணையதளங்கள் தெரிவித்துள்ளன.


எரிகுண்டுகள், கொத்துக் குண்டுகள், உயிரோடு கூட்டம் கூட்டமாகப் புதைத்தல் முதலான கொடுமைகளில் இருந்தும் தப்பிய ஈழத் தமிழர்கள் வதை முகாம்களில்தான் உள்ளனர். உணவு, குடிநீர், மருத்துவம், வதைகள் ஆகியவற்றில் இருந்து தப்பிப்போர் சிலராகத்தான் இருப்பர். அவர்களுக்கு எதற்கு வீடுகள்? மேலும் வீடுகள் கட்டினால்தானே தமிழர்களைக் குடியேற்ற வேண்டும் என்று கூக்கூரல் இடுவீர்கள்? இப்பொழுது என்ன செய்வீர்கள்? - என்னும் எண்ணத்தில் அடுக்கடுக்காகத் துன்பங்களைச் சிங்கள அரசு செய்து வருகிறது. இதற்கு எதிராகக் குரல் கொடுக்கக் கூட ஆளுங்கட்சிக்கும் முதன்மை எதிர்க் கட்சிக்கும் நேரமில்லை. மத்திய மாநில ஆட்சியாளர்களோ மகிழ்ச்சிக் களியாட்டத்தில் உள்ளனர். உலகமோ உறங்குவதுபோல் நடித்துக் கொண்டு பாராமுகமாக உள்ளது. நமது குரல்களாவது அவர்களுக்காக ஒலிக்க வேண்டாவா? -- இலக்குவனார் திருவள்ளுவன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக