வெள்ளி, 11 செப்டம்பர், 2009

"ஒரு நிமிடம் சிந்தித்தால் தற்கொலை எண்ணத்திலிருந்து மீளலாம்'சென்னை, செப். 10:தற்கொலை செய்து கொள்ள முயல்பவர்கள், ஒரு நிமிஷ நேரம் சிந்தித்தால் அந்தத் தற்கொலை எண்ணத்திலிருந்து மீள முடியும் என சுகாதாரத் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை, சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை சார்பில் "உலக தற்கொலை முயற்சி தடுப்பு நாள்' நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது: உலகில் ஆண்டுக்கு 10 லட்சம் தற்கொலை மரணங்கள் நடைபெறுகின்றன. ஆனால் தற்கொலை முயற்சிகள் அதைவிட அதிகமாக உள்ளன. உலகில் நடைபெறும் தற்கொலைகளில் இந்தியா, சீனா, இலங்கை, மலேசியா ஆகிய 4 நாடுகளில் மட்டும் 60 சதவீதம் நடைபெறுகின்றன. இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் தற்கொலை மரணங்கள் நடைபெறுகின்றன. தற்கொலை செய்து கொள்வோரில் பெரும்பாலானோர் பெண்களாக உள்ளனர். தற்கொலை செய்து கொள்ள முயல்பவர்கள் கடைசியாக ஒரு நிமிஷம் சிந்தித்தால் அந்த எண்ணத்திலிருந்து மீள முடியும். பொதுமக்களிடம் ஏற்படும் விரக்தி, மன அழுத்தம் ஆகியவற்றால் அவநம்பிக்கை அதிகரித்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வலுப்பெறுகிறது. உரிய மருத்துவ கவுன்சலிங் மூலம் அது போன்றவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். இத்தகைய கவுன்சலிங் அளிக்க வசதியாக எல்லா மாவட்டங்களிலும் மன நல மருத்துவமனைகள் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக 26 மாவட்டங்களில் மன நல மருத்துவமனைகள் அமைக்கப்படும்'' என்றார் அமைச்சர் பன்னீர்செல்வம். நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி. கு. சுப்புராஜ், ""சமூக பிரச்னைகள் அதிகம் உள்ள இடங்களில் தற்கொலை மரணங்களும் அதிகம் நடைபெறுகின்றன. நல்ல பழக்கவழக்கங்கள், நல்ல நூல்களைப் படிப்பது போன்றவற்றின் மூலம் தற்கொலை எண்ணத்தை வெல்ல முடியும்'' என்றார். நிகழ்ச்சியில் பன்றிக் காய்ச்சல் குறித்த விவரங்களை அறிவதற்கான www.swineflutninfo.in என்ற தமிழக அரசின் இணையதளத்தை அமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிர் தப்பிய பெண்கள், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கினர். தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் பி.டபிள்யூ.சி. டேவிதார், சென்னை அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ஜெ. மோகனசுந்தரம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பேசினர்.சென்னையில் நடைபெற்ற உலக தற்கொலை முயற்சி தடுப்பு நாள் நிகழ்ச்சியில், தற்கொலை முயற்சிக்குப் பிறகு சிகிச்சை காரணமாக மறுவாழ்வு பெற்ற பெண்ணுக்கு பூங்கொத்து அளிக்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் (வலது கோடி). இதுபோன்று மறுவாழ்வு பெற்ற மேலும் மூவருக்கும் அமைச்சர் பூங்கொத்து அளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக