வெள்ளி, 11 செப்டம்பர், 2009

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 103: இந்தியாவை நேசிக்கிறேன்!



ஒப்பந்த நகல் எரிப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அன்று மாலையே விடுதலை செய்யப்பட்டனர். பழ.நெடுமாறன் சென்னை வந்ததும் அவரிடமும், கி.வீரமணியிடமும், விடுதலைப் புலிகள் ஆலோசகர் ஏ.எஸ்.பாலசிங்கம், நடேசன், பேபி சுப்ரமணியம் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். அதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அனுமதித்ததன் பேரில், ஆகஸ்ட் 4-இல் அவரைச் சந்தித்தனர். எம்.ஜி.ஆரின் உடல்நிலையைப் பார்த்ததும் பதறிப் போனார்கள். அவர் என்ன விஷயம் என்று கேட்டதும், இருவரும் உடன்பாடு பற்றிய தங்களதும், விடுதலைப் புலிகளினதுமான சந்தேகங்களை விவரித்தனர். பிரதமர் ராஜீவ் கூறியதைப் போன்று சொந்தப் பாதுகாப்பு கருதி விடுதலைப் புலிகள் இவ்வொப்பந்தத்தைச் சந்தேகப்படவில்லை என்றும் விளக்கினார்கள். ஆனால் எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் ஜெயவர்த்தனா மதித்து நடைமுறைப்படுத்த மாட்டார் என்பதையும் அவர்கள் கூறினர். இதுகுறித்து பழ.நெடுமாறன் கூறியதாவது: ""திரைப்படத் துறையில் நீங்கள் கொடிகட்டிப் பறந்தீர்கள். உங்களுக்குப் பின்னும் அந்தத் துறையில் பலர் வரலாம். அரசியல் துறையிலும் தமிழகத்திற்கு பல முதலமைச்சர்கள் உங்களுக்கு முன்னும், உங்களுக்குப் பின்னும் வரலாம். ஆனால் அந்த முதலமைச்சர்களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. உங்கள் காலத்தில் ஈழத் தமிழர்கள் விடுதலை பெறப் போராடினார்கள். நீங்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து, தமிழீழம் அமையக் காரணமாக இருந்தீர்கள் என்பதுதான் தமிழர் வரலாற்றில் என்றும் அழியாத இடத்தை உங்களுக்குப் பெற்றுத் தரும். இதைச் சொல்லவே வந்தேன்'' என்று கூறினேன். ""நான் பேசப் பேச அவர் உணர்ச்சிவசப்பட்டார். ஏதோ பதில் கூற முயன்றார். அவரால் முடியவில்லை. எனது கைகளை எடுத்து தனது நெஞ்சில் வைத்துக் கொண்டு, தன் கைகளால் நெஞ்சில் தட்டிக் காட்டினார். இவ்வாறு அவர் செய்யும்போது அவர் கண்களில் இருந்து நீர் கசிந்தது. எனக்கும் வீரமணிக்கும் கூடக் கண்கள் பனித்தன. அவர் என்ன சொல்ல விரும்பினார் என்பது முழுமையாக விளங்காவிட்டாலும், ஓரளவு புரிந்தது. பின்னர் சிற்றுண்டி வரவழைத்தார். எங்களுடன் அவரும் அமர்ந்து உண்டார். நிலைமைகளைத் தெளிவாக உணர்ந்திருக்கிறார் என்ற நிம்மதியில் நாங்கள் திரும்பினோம். இந்த சம்பவத்தை எனது "தமிழீழம் சிவக்கிறது' என்ற நூலிலும் பதிவு செய்திருக்கிறேன்'' என்றார் நெடுமாறன்(நேர்காணல்: 29.8.1987). ஆகஸ்டு அதே 4-ஆம் தேதியன்று, ராஜீவ் காந்தி அழைப்பினை ஏற்று, சுதுமலை அம்மன் கோயில் திடலில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் முன்னதாக வெளியிட்ட அறிக்கையில், ""யாழ்ப்பாணக் குடா நாட்டில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் பிரவேசித்து இந்தியப் பிரதமரின் அழைப்பின் மீதே என்னை ஏற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நான் நாட்டைக் கடந்து மட்டும் செல்லவில்லை. தம் மண்ணிற்காகத் தமது உயிரை அர்ப்பணித்த 615 தியாகிகளின் உடல்களையும் கடந்தே செல்வதாக நினைக்கிறேன்... என் மனச்சாட்சியை நான் விற்க விரும்பவில்லை. பெங்களூர்மகாநாட்டில் கலந்துகொண்டபோது நான் யாழ் மாவட்ட முதலமைச்சராக ஆகியிருக்கலாம். நான் தனி மனிதன். போராட்டத்தில் எத்தனையோ தியாகிகளை இழந்துவிட்டோம். நான் இறப்பது சாதாரண விஷயம். சயனைட்டை நான் கட்டியபின்பே மற்றவர்களும் கட்டியுள்ளனர். மனச்சாட்சிக்கு விரோதமாக நான் ஒருபோதும் நடக்கப் போவதில்லை. இந்திய அரசு எனக்கு மட்டும் அழைப்பு விடுத்திருப்பது மக்களின் பிரதிநிதியாக என்னைக் கருத்தில் கொண்டபடியால்தான். நாம் மக்களுக்குள்ளேயே இணைந்து போராட்டம் நடத்தியதனால்தான் போராட்டம் இந்த நிலைக்கு வளர்ச்சியடைந்துள்ளது. மக்கள் வேறு நான் வேறு அல்ல. முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டவன் நான் அல்லன். நிம்மதியான வாழ்வு மக்களுக்கு அமையவேண்டும் என்பதே என் ஆசை. இன்று கிடைத்த கெüரவம் தமிழ் மக்களுக்குக் கிடைத்த கெüரவமே தவிர, சாதாரண எனக்குக் (பிரபாகரனுக்கு) கிடைத்ததல்ல. இதுவரையில் நான் இந்தியாவினால் இப்படிக் கெüரவமாக அழைக்கப்படவில்லை. இக்கெüரவத்தை தமிழீழ மக்களுக்கும், மற்றைய தியாகிகளுக்கும், இன்னும் களத்தில் உள்ள சக போராளிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன். தீர்வு சரியில்லை என்றால் நாம் மக்களை எச்சந்தர்ப்பங்களிலும் கைவிடப்போவதில்லை. எமது போராட்டம் தொடரும்'' என்று பிரபாகரன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தில்லியில் நடைபெற்றது என்னவென்பதை ஈழ மக்களுக்குத் தெரிவிப்பது வரலாற்றுக் கடமை என்று பிரபாகரன் உணர்ந்தார். தற்போதுள்ள நிலையை விளக்க கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்து, அதில் தெரிவிக்க அவர் விரும்பினார். இந்தக் கூட்டமே அவர் தனது வாழ்நாளில் மேடை ஏறிய முதல் கூட்டமாகும். "இந்தியாவை நேசிக்கிறேன்' என்ற பிரபாகரனின் புகழ்வாய்ந்த அந்தப் பேச்சை சென்னைத் தொலைக்காட்சியும் ஒளிபரப்பியது. தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய உரை வருமாறு: ""இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. திடீரென எமக்கு அதிர்ச்சியூட்டுவது போல, எமது சக்திக்கு அப்பாற்பட்டதுபோல, இந்தத் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதன் விளைவுகள் எமக்குச் சாதகமாக அமையுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். திடீரென மிகவும் அவசரமாக, எமது மக்களையோ, எமது மக்களின் பிரதிநிதிகளாகிய எம்மையோ கலந்தாலோசிக்காமல், இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட ஒப்பந்தம் இப்பொழுது அவசர அவசரமாக அமலாக்கப்பட்டு வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் தில்லி செல்லும்வரை இந்த ஒப்பந்தம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. பாரதப் பிரதமர் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி என்னை தில்லிக்கு அவசரமாக அழைத்துச் சென்றார்கள். அங்கு சென்றதும் இந்த ஒப்பந்தம் எமக்குக் காண்பிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் பல சிக்கல்கள் இருந்தன. பல கேள்விக்குறிகள் இருந்தன. இந்த ஒப்பந்தத்தால் எமது மக்களின் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுமா என்பது பற்றி எமக்குச் சந்தேகம் எழுந்தது. ஆகவே, இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்திய அரசுக்கு தெள்ளத் தெளிவாக விளக்கினோம்'' என்றார், பிரபாகரன். இரு நாடுகளுக்கிடையே இந்த ஒப்பந்தம் உருவானதால் இரு நாடுகளின் நலன்களும் இதில் அடங்கியிருக்கிறது என்பதையும் தனது உரையில் விளக்கினார். அவர் மேலும் பேசுகையில், ""ஆனால், நாம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாது போனாலும் இந்த ஒப்பந்தத்தை அமலாக்கியே தீருவோமென இந்திய அரசு கங்கணம் கட்டி நின்றது. இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து நாம் ஆச்சரியப்படவில்லை. இந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்னையை மட்டும் தொட்டு நிற்கவில்லை. இது பிரதானமாக இந்திய-இலங்கை உறவு பற்றியது. இந்திய வல்லாதிக்க வியூகத்தின் கீழ் இலங்கையைக் கட்டுப்படுத்தும் விதிகளும் இதில் அடங்கியிருக்கின்றன. இலங்கையில் அந்நிய நாசகார சக்திகள் காலூன்றாமல் தடுக்கவும் இது வழி வகுக்கிறது. ஆகவேதான் இந்திய அரசு இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொள்வதில் அதிக அக்கறை காட்டியது. ஆனால் அதே சமயம், ஈழத் தமிழரின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதாகவும் இந்த ஒப்பந்தம் அமைகிறது. ஆகவேதான், எமது மக்களைக் கலந்தாலோசிக்காது, எமது கருத்துகளைக் கேளாது இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதை நாம் கடுமையாக ஆட்சேபித்தோம். ஆனால் நாம் ஆட்சேபித்ததில் அர்த்தமில்லை. எமது அரசியல் தலைவிதியை எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவு செய்திருக்கும்பொழுது நாம் என்ன செய்வது?'' என்றார். ஒப்பந்தம் தங்களைப் பாதிப்பது எவ்வாறு என்பது குறித்து அவர் விளக்குகையில், ""இந்த ஒப்பந்தம் நேரடியாக எமது இயக்கத்தைப் பாதிக்கிறது; எமது அரசியல் லட்சியத்தைப் பாதிக்கிறது; எமது போராட்ட வடிவத்தைப் பாதிக்கிறது; எமது ஆயுதப் போராட்டத்திற்கு ஆப்பு வைப்பதாகவும் அமைகிறது. பதினைந்து வருடங்களாக, ரத்தம் சிந்தி, தியாகம் புரிந்து, சாதனைகள் கட்டி எழுப்பப்பட்ட ஒரு போராட்ட வடிவம் ஒரு சில தினங்களில் கலைக்கப்படுவதென்றால் அதை நாம் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது. திடீரென கால அவகாசமின்றி எமது போராளிகளின் ஒப்புதலின்றி, எமது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமின்றி இந்த ஒப்பந்தம் எம்மை நிராயுதபாணிகளாக்குகிறது. ஆகவே, நாம் ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தோம். இந்தச் சூழ்நிலையில் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி என்னை அழைத்துப் பேசினார். அவரிடம் எமது பிரச்னைகளை மனம் திறந்து பேசினேன். சிங்கள இனவாத அரசில் எமக்குத் துளிகூட நம்பிக்கை இல்லையென்பதையும் இந்த ஒப்பந்தத்தை அவர்கள் நிறைவேற்றப் போவதில்லை என்பதையும் இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்தேன். எமது மக்களின் பாதுகாப்புப் பிரச்னை பற்றியும் அதற்கான உத்தரவாதங்கள் பற்றியும் அவரிடம் பேசினேன். பாரதப் பிரதமர் எமக்கு சில வாக்குறுதிகளை அளித்தார். எமது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்தார். பாரதப் பிரதமரின் நேர்மையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரது உறுதிமொழிகளில் நம்பிக்கை இருக்கிறது. சிங்கள இனவாத அரசு மீண்டும் தமிழர் இன அழிப்பு நடவடிக்கையில் இறங்க இந்தியா அனுமதிக்காது என நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையில்தான் நாம் இந்திய சமாதானப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்தோம்'' என்றார். ஆயுத ஒப்படைப்பால் ஏற்படப் போகும் ஆபத்து குறித்து அவர் விளக்குகையில், ""நாம் எமது மக்களின் பாதுகாப்பிற்காக எத்தனை அளப்பரிய தியாகங்களைப் புரிந்தோம் என்பதை நான் இங்கு விளக்கிக் கூறத் தேவையில்லை. எமது லட்சியப் பற்றும், தியாக உணர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை எமது மக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்களது பாதுகாப்பிற்காக, உங்களது விடுதலைக்காக, உங்களது விமோசனத்திற்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து, எமது மக்களாகிய உங்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம். ஈழத் தமிழரின் ஒரே பாதுகாப்பு சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை. இந்திய அரசு எம்மிடமிருந்து பெற்றுக்கொள்வதிலிருந்து எமது மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தைத்தான் குறிக்கிறது'' என்றார். அவர் தனது உரையில், இந்தியாவுக்குத் தாங்கள் எதிரிகளல்ல என்றும் விளக்கினார், ""நாம் ஆயுதங்களைக் கையளிக்காது போனால் இந்திய ராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. இந்தியாவை நாம் நேசிக்கிறோம். இந்திய மக்களை நாம் நேசிக்கிறோம். இந்திய வீரனுக்கு எதிராக நாம் ஆயுதங்களை நீட்டத் தயாராக இல்லை. எமது எதிரியிடமிருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய ராணுவ வீரர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நாம் ஆயுதங்களை அவர்களிடம் கையளிப்பதிலிருந்து ஈழத் தமிழன் ஒவ்வொருவரது உயிருக்கும் பாதுகாப்பிற்கும் இந்திய அரசுதான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை நான் இங்கு இடித்துக் கூற விரும்புகிறேன்'' என்றார். தொடர்ந்து பேசுகையில், ""இந்தியாவின் இந்த முயற்சிக்கு நாம் ஒத்துழைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் அவர்களுக்கு வழங்குவோம். ஆனால் இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுமென நான் நினைக்கவில்லை. சிங்கள இனவாதப் பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கி விடும் காலம் வெகுதூரத்தில் இல்லை'' என்றும் அவர் குறிப்பிட்டார். பிரபாகரன் தொடர்ந்து பேசுகையில், ""தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. தமிழீழ லட்சியத்திற்காகவே நான் தொடர்ந்து போராடுவேன் என்பதையும் நான் இங்கு திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன். போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எனது போராட்ட லட்சியம் மாறப் போவதில்லை. எமது லட்சியம் வெற்றி பெறுவதானால் எமது மக்களாகிய உங்களின் ஏகோபித்த ஆதரவு என்றும் எமக்கு இருக்க வேண்டும்''. ""தமிழீழ மக்களின் நலன் கருதி இடைக்கால அரசில் பங்குபெற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்துக்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபெறப் போவதில்லை. முதலமைச்சர் பதவியையும் ஏற்கப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்'' ""புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'' என்று பிரபாகரன் கூறித் தனது உரையை அவர் முடித்தார். உரையாற்றும்போது, பிரபாகரன் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தார். பேச்சும் அவ்வாறே இருந்தது. மக்களும் அதே மனநிலையில் இருந்தனர். லட்சக்கணக்கில் திரண்ட மக்களிடையே இந்திய-இலங்கை ராணுவ அதிகாரிகள், உள்நாட்டு, வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிறுவனத்தினரும் கலந்துகொண்டனர்.நாளை: அமைதிப்படையும் ஆயுதக் கையளிப்பும்!

கருத்துக்கள்

தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உரையில் இருந்து அவர்களின் தன்னலமற்றச் செயல்பாடுகளையும் இந்திய அரசின் வஞ்சகச் செயல்பாடுகளையும் நன்கு புரிந்து கொள்ளலாம். அவர் தொலை நோக்கு உணர்வுடன் தெரிவித்தவாறு அந்தப் பாழாய்ப் போன மூன்றாம் தரப்பு ஒப்பந்தத்தால் ஈழத் தமிழர்களும் அவர்களது நலன்களும வஞ்சிக்கப்பட்டன. இந்நிலை இன்றும் தொடரவே செய்கின்றன. கட்சித் தலைமைகளின் போலியான உரைகளைப் பொருட்படுத்தாமல் அவர்களைத் தூக்கி எறிந்து விட்டு நாம் தமிழர் என ஒன்று கூடி மனித நேயர்கள் என வென்று காட்டுவோம்! ஈழத் தமிழர்களின் வெற்றிக்கு வழி வகுப்போம். வெல்க தமிழ் ஈழம்! வாழ்க ஈழ-உலக நட்புறவு!

வீர வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/11/2009 2:41:00 AM

Prabakaran was a true Leader. May his soul rest in peace.

By Vennila
9/11/2009 1:59:00 AM

This clearly shows how much great the great leader prabakaran had been. India had made its biggest blunder by abetting all the atrocities of the sinhala thugs. Its soon going to reap the produce.

By True tamil
9/11/2009 1:46:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக