திங்கள், 7 செப்டம்பர், 2009

எதிர்பார்த்த பயன்களைத் தராத நல வாரியங்கள்



சென்னை, செப். 6: அமைப்புசாரா தொழிலாளர்களின் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட நல வாரியங்களில் முறையான செயல்பாடுகள் இல்லாததால் எதிர்பார்த்த பயன்கள் கிடைக்கவில்லை.
இந்தியாவின் மொத்தத் தொழிலாளர்களில் சுமார் 88 சதவீதம் பேர் அமைப்பு சாரா தொழிலாளர்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அவர்களின் பங்களிப்பு சுமார் 40 சதவீதம். நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றும் அத்தொழிலாளர்களின் சமூக, பொருளாதார நிலையோ மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளது.
எனவேதான் அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாட்டில் 1982-ல் "தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சட்டம்' இயற்றப்பட்டது. அச்சட்டத்தின்படியே 1999-ம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம் உருவாக்கப்பட்டது.
உடலுழைப்புத் தொழிலாளர் சட்டம் இயற்றப்பட்டு 27 ஆண்டுகளும், நல வாரியம் உருவாக்கப்பட்டு 10 ஆண்டுகளும் முடிந்து விட்டன. ஆனால் இதுவரை உடலுழைப்புத் தொழிலாளர் சட்டத்தில் கூறப்பட்ட உரிமைகள், சலுகைகள் தொழிலாளர்களுக்குக் கிடைக்கவில்லை.
கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் 1994-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர ஆட்டோ தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள், பனைமரத் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்காக 12 நல வாரியங்கள் உள்ளன. நல வாரியச் செயல்பாடுகள் முடங்கிப் போனதற்கு, நிதி வருவாய்க்கான ஏற்பாடு இல்லாதது முதல் காரணமாக உள்ளது. இப்போது கட்டுமானத் தொழிலாளர் வாரியத்தில் மட்டும் நிதி வருவாய் உள்ளது.
புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான திட்ட அனுமதி வாங்கும்போதே, கட்டட மதிப்பீட்டில் 0.3 சதவீதம் நல வாரிய நிதிக்காக வசூலிக்கும் ஏற்பாடு உள்ளது. இதன் மூலம் இப்போது அந்த வாரியத்தில் சுமார் ரூ.216 கோடி நிதி உள்ளதாகக் கூறப்படுகிறது.
மற்ற நல வாரியங்கள் அரசின் நிதி ஒதுக்கீட்டை எதிர்பார்த்து நிற்கும் நிலையே உள்ளது. இதனால் பணப் பலன் கேட்டு விண்ணப்பிக்கும் நல வாரிய உறுப்பினர்களில் எல்லோருக்கும் தொகையை அளிக்க முடியாத நிலை உள்ளது. திருமண உதவி கேட்டு விண்ணப்பித்து, 2 வருடங்கள் வரைகூட பலர் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அரசின் நிதி ஒதுக்கீடு: நல வாரியங்களுக்காக கடந்த 2008-2009-ல் மாநில அரசு அளித்த மானியத் தொகை ரூ.45 கோடி. அந்த ஆண்டில் சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.60.65 கோடி பணப் பலன் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் விண்ணப்பித்தவர்களில் 30 சதவீதம் பேருக்கே இத்தொகை கிடைத்ததாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
""வணிக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள் முதலான இடங்களில் அவற்றின் ஆண்டின் மொத்த வர்த்தகத் தொகையில் 1 சதவீதத்தை, அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் இடம்பெற்றுள்ள நல வாரிய நிதிக்காக வசூலிக்க வேண்டும் என கோரி வருகிறோம். ஆனால் அரசு இதை செவிமடுத்துக் கேட்கவில்லை'' என்கிறார் ஏ.ஐ.டி.யூ.சி. மாநிலச் செயலாளர் டி.ஆர்.எஸ். மணி.
இவ்வாறு தனியார் நிறுவனங்களிடம் நல வாரிய நிதி வசூலிக்க 1982-ம் ஆண்டின் சட்டம் வகை செய்கிறது. அவ்வாறு வசூலிக்கப்படுமானால், ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கு மேல் நல வாரியங்களுக்கு நிதி கிடைக்கும். நல வாரியங்கள் அரசின் நிதி ஒதுக்கீட்டை எதிர்பார்க்காமல், சுயச் சார்பாக இயங்க முடியும்.
இது குறித்து சி.ஐ.டி.யூ. மாநிலப் பொதுச் செயலாளர் ஏ. செüந்தரராசன் கூறும்போது, ""கட்டாயம் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய துறைகளில் கூட, "அரசு - தனியார் கூட்டு' வேண்டும் எனக் கூறும் நம் ஆட்சியாளர்கள், தொழிலாளர்கள் நலனைக் காக்க தனியார் நிறுவனங்களில் நல நிதி வசூலிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டவில்லை'' என குற்றஞ்சாட்டுகிறார்.
கிராம நிர்வாக அதிகாரியால் தாமதம்: நல வாரியத்தில் தொழிலாளர்கள் அளிக்கும் உறுப்பினர் பதிவு மற்றும் பணப் பலன் கோரும் விண்ணப்பங்கள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, சரி பார்க்கும் பணிக்காக அனுப்பப்படுகின்றன.
அந்த அலுவலர்களுக்கு ஏற்கெனவே கடும் பணிச் சுமை உள்ளது. இதனால் சரிபார்ப்புப் பணி உடனடியாக நடைபெறுவதில்லை. எனவே பதிவு அட்டை மற்றும் பணப் பலன் பெற பல மாதங்கள் ஆவதாகத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது போன்ற பல காரணங்களால் நல வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. அவற்றால் எதிர்பார்த்த பயன்கள் கிடைக்காத நிலையே இப்போது உள்ளது.


கருத்துக்கள்

உண்மை. நாட்டுப்புறக் கலஞர்கள் நல வாரியம் முதலான எலலா நல வாரியங்களையுமே குறிப்பிடலாம். சரியான நோக்கம். ஆனால், சரியான செயல்பாடின்மை. சுட்டிககாட்டும் வி.தேவதாசனுக்கும் தினமணிக்கும் பாராட்டுகள். அரசிற்கு இனியேனும் கலையட்டும் உறக்கம்! நன்றாகச் செயல்படட்டும் நலவாரியங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/7/2009 3:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக