சனி, 12 செப்டம்பர், 2009

மறைந்தும் மறையாத கேள்விஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மறைந்து பத்து நாள்கள் ஆன பிறகும் மனதில் மறையாமல் நிற்கும் ஒரு கேள்வி: "இவர் மறைவுக்காக தமிழகத்தில் ஏன் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது?'மாநில முதல்வரின் மரணம் என்பதால் ஆந்திர மாநிலத்தில் அரசு விடுமுறை என்பது ஏற்கக்கூடிய ஒன்று. அண்டை மாநில முதல்வர் ஒருவரின் அகால மரணத்துக்காக இரங்கல் தெரிவிப்பது இயல்பான ஒன்று. மற்ற மாநிலங்களும்கூட இதைத்தான் செய்துள்ளன. ஆனால் தமிழகத்தில் வழக்கத்துக்கு மாறாக, இப்படியான அரசு விடுமுறை என்பது புரியாத புதிராக இருக்கிறது.தமிழக முதல்வர் அரசு விடுமுறையாக அறிவித்ததையும், திமுக மூன்றுநாள் துக்கம் அனுஷ்டிக்கும் என்று சொன்னதையும் கேட்டவுடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுக்கே வெட்கமாய்ப் போய்விட்டது. உடனே எல்லா மாவட்டத் தலைவர்களுக்கும் தொலைபேசியில், எல்லா ஊர்களிலும் ரெட்டியின் படத்துக்கு மாலை போட்டு பத்திரிகையாளர்களை அழைத்து படம் பிடிக்கச் செய்தார்கள். காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் எதிலும் ரெட்டியின் படம் இல்லை. ரெட்டியின் படத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, அட்டைகளில் ஒட்டி வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இரங்கல் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் அன்பர்களுக்கு ரெட்டி ஒரு கிறிஸ்தவர் என்பதே தெரிந்திருக்கவில்லை.முதல்வர் கருணாநிதி இந்த அறிவிப்பைச் செய்திருக்காவிட்டால், சத்தியமூர்த்தி பவனில் மட்டுமே வெறும் சடங்காக ஒரு இரங்கல் கூட்டம் நடந்திருக்கும். மாநிலத் தலைவரின் இரங்கல் செய்தியோடு முடிந்துபோயிருக்கும்.அதனால்தான் இந்தக் கேள்வி மறையாமல் எழுகிறது.தமிழகத்தில் எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கியதைப் போலவே என்.டி. ராமாராவ் ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கினார். தொடங்கியதிலிருந்து, காங்கிரஸ் கட்சி வலுவிழந்தது. மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் உள்கட்சிப் பூசலால் வீழ்ச்சி அடைந்தது.2004-ல் ராஜசேகர ரெட்டி நடத்திய நடைப்பயணத்தால் காங்கிரஸ் கட்சியில் புத்துணர்ச்சி ஏற்பட்டது. அதன்பிறகு ஆட்சி பீடத்தை காங்கிரஸ் கைப்பற்றியது. ரெட்டி முதல்வரானார்.முதல்வரானவுடன் ராஜசேகர ரெட்டி மீது நிறைய ஊழல் புகார்கள். அனைத்தையும் ஈநாடு நாளிதழ் முதல்பக்கச் செய்தியாக வெளியிட்டு வந்தது.அதன்காரணமாகவே, அந்த நிறுவன உரிமையாளர் நடத்தி வந்த மற்றொரு நிறுவனமான மார்க்கதரிசி நிதிநிறுவனத்தின் மீது சேறு வாரி இறைக்கப்பட்டது. திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டன. அந்த நிறுவனத்தின் பெயரைக் களங்கப்படுத்தி, ஈநாடு பத்திரிகைக்கும் அதன் சுழல்நிதிக்கும் தட்டுப்பாடு உருவாக்கப்பட்டது.அதுமட்டுமல்ல, "ஈநாடு'க்குப் போட்டியாக "சாட்சி' என்ற பத்திரிகையை ஒரு நாளில் ஆந்திரத்தின் அனைத்து மூலை முடுக்கிலும் கிடைக்கும்படியாக பத்து லட்சத்துக்கும் அதிகமான பிரதிகளை அச்சிட்டு வெளியிடச் செய்தார். விலை ரூ. 2 தான்.அத்தோடு, சாட்சி என்ற பெயரில் தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பையும் தொடங்கினார்.சத்யம் கணினி நிறுவனத்தின் கற்பனை லாபக் கணக்குகளின் பின்னணியில் ஆந்திர முதல்வர் ரெட்டி இருக்கிறார் என்ற புகார்களும் எழுந்தன.எம்ஜிஆரின் வழியொற்றி என்டிஆர் கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்ததால், ரெட்டி எப்போதும் தமிழக அரசியலைக் கூர்ந்து கவனித்து வந்தார். நடந்துமுடிந்த தேர்தலில், ராஜசேகர ரெட்டி தமிழக அரசியல் உத்தியைக் கையாண்டார். தமிழகத்தில் அதிமுகவுக்கு கிராமங்களில் உள்ள எம்ஜிஆர் வாக்குகள் சிதறும்படியாக, எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தி நடிகர் விஜயகாந்தின் தேமுதிக உருவாகியதைக் கண்டார். ஆந்திரத்திலும் அதற்கான வேலைகளைப் பின்னணியில் செய்தார். ஆந்திர கிராமங்களில் இன்னமும் கட்டுக்கோப்போடு இருக்கும் என்.டி.ஆர். மீதான அபிமான வாக்குகள் அனைத்தும் தெலுங்கு தேசத்துக்குக் கிடைக்காமல் இருக்க, என்டிஆருக்கு இணையான இன்னொரு நடிகர் யாராவது கட்சியைத் தொடங்கினால்தான் முடியும் என்பதால் அதற்கான தூண்டுதல்களை உருவாக்கினார். விளைவு? நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம்.ராஜசேகர ரெட்டிக்கு எதையும் பொடிவைத்துப் பேசத் தெரியாது. "சந்திரபாபு நாயுடுவைத் தோற்கடிக்க, பிரஜா ராஜ்யத்துடன் கூட்டணி வைப்பீர்களா?' என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது அவர் வெளிப்படையாகவே சொன்னார்: ""பிரஜா ராஜ்யம் கட்சி களத்தில் இறங்கிவிட்டதால் காங்கிரஸ் வெற்றி நிச்சயம். ஆந்திரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் 40 சதவீத வாக்குகள் நிரந்தரமாக உண்டு. தெலுங்கு தேசத்துக்கு கிடைக்கக் கூடிய என்டிஆர் வாக்குகள் பிரஜா ராஜ்யத்துக்குப் போய்விடும். ஆகவே வெற்றி காங்கிரஸýக்குத்தான். அப்படியிருக்க ஏன் பிரஜா ராஜ்யத்துடன் கூட்டணி வைக்க வேண்டும்?''அடடா, என்ன அரசியல் தந்திரம்! கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாகத்தான் வந்தது.வாரிசு அரசியலிலும் அவர் பின்தங்கியவர் அல்ல. தன் மகனை கடப்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிட வைத்தார். மகனை மற்ற தலைவர்களும் ஏற்றுக்கொள்ளுபடியான நெருக்கடியையும் தந்தார். "ஜகன் அரசியல் பேசட்டும். ஆனால் அதற்கு முன்பாக தெலுங்கை ஒழுங்காகப் பேசட்டும்' என்று கேலி பேசுகிற நிலையும் கட்சியில் ஏற்பட்டது.ஜகன் பேச்சில் தெலுங்கு வார்த்தைகளைவிட ஆங்கில வார்த்தைகளே அதிகமாக இருக்கும். ஆனாலும் தனது மகனை முன்னிலைப்படுத்துவதை அவர் நிறுத்தவில்லை.கடப்பாவை அடுத்துள்ள அவரது சொந்த கிராமம் புலிவேந்தலாவில் 20 கி.மீ. சுற்றளவுக்கு சொத்துகளை விரிவுபடுத்தியுள்ளதாக கடப்பா வாழ் தமிழர்களே சொல்கிறார்கள்.இப்படியொரு அண்டை மாநில முதல்வரின் அகால மரணத்துக்குத் தமிழகத்தில் அரசு விடுமுறை அறிவித்ததால் யாருக்குப் பயன்? அரசு ஊழியர்களும் ஆசிரியப் பெருமக்களும் நன்றிப் பெருக்கோடு வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாள் விடுமுறையைக் கொண்டாடினர்.
-------------------------------------------

1/2 ) ஆந்திர முதல்வரும் அவர் குழுவினரும் மோதல் நேர்ச்சியால்- விபத்தால்- அகால மரணம் உற்றது உண்மையிலேயே வருத்தத்தை அளிக்கின்றது. ஆனால் இதற்காகத் தமிழ் நாட்டில் விடுமுறை அளிப்பதும் தனியார் நிறுவனங்களையும் விடுமுறை அளிக்குமாறு வலியுறுத்துவதும் முறையன்று. தமிழ் நாட்டு நலனுக்காகவோ தமிழ் மக்களுக்காகவோ ஆந்திராவில் வசிக்கும் தமிழர் நலனுக்காகவோ குறிப்பிடும்படியான உருப்படியான செயல் செய்தவரன்று. அணுவியல் அறிஞர் பாபா தான் மறைந்தாலும் பாபாஅணுமின் நிலையம் இயங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததற்கேற்ப அவர் வானூர்தி மோதலால் அகால மரணமுற்றபோது அணுவகத்திற்கு விடுமுறை விடப்படவில்லை. மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் தலைவர்களின் மறைவிற்கு விடுமுறைகள் விடப்படுவதைக் கட்டுப்படுத்தியுள்ளது.தமிழ் நாட்டில் பிற மாநிலம் தொடர்பான விடுமுறைகள் இருக்க, பிற மாநிலங்களில் பூர்வீகக் குடயினராகத் தமிழர்கள் இருப்பினும் தமிழ் மக்கள் தொடர்பான விடுமுறைகள் விடப்படுவதில்லை. தொடர்ச்சி காண்க. -- இலக்குவனார் திருவள்ளுவன்

2/2 (1/2 இன் தொடர்ச்சி) அரசு 1 வாரத் துக்கம் கடைப்பிடிக்கலாம். அரசு அலுவலகங்கள் காலையில் அமைதி கடைப்பிடித்துத் தம் பணியைத் தொடங்க அல்லது மாலை அமைதியைக் கடைப்பிடித்துக் கலைந்து போக வழி வகுத்திருக்கலாம். காங்.கின் கால்களைக் கழுவக் கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என விடுமுறை விடுவது மிகவும் தவறு.

. எனவே விடுமுறை விடும் முறையற்ற போக்கைக் கண்டிக்குமாறு அனவைரையும் வேண்டுகிறேன். (உடன் மறைந்த திரு சுப்பிரமணியம் தமிழரோ?) எதிர்பாராமல் இறப்பைத் தழுவியவர்களின் குடும்பத்தினருக்கு நம் ஆழ்நத இரங்கல்கள். விடுமுறை விடும் தமிழக அரசின் போக்கிற்குக் கண்டனங்கள். -- இலக்குவனார் திருவள்ளுவன்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக