வெள்ளி, 11 செப்டம்பர், 2009

பாரதியின் இறுதிப் பேருரைதேசியக் கவிஞர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், தேசபக்தர், அமைப்பாளர், ஆய்வாளர், செயல்வீரர், கதாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனும் பன்முகப் பேராளுமை கொண்ட சுப்பிரமணிய பாரதியார் சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்துள்ளார். 1921-ம் ஆண்டின் மத்தியில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இருந்த பழக்கப்பட்ட யானைக்குத் திடீரென மதம் பிடித்து, வழக்கம்போல் பழங்கள் கொடுக்க வந்த பாரதியை எதிர்பாராத விதத்தில் தனது துதிக்கையால் பிடித்து இழுத்து, கீழே கிடத்திவிட்டது. யானைக்கடியில் கிடந்த பாரதியை அங்கிருந்தோர் பாய்ந்து சென்று இழுத்து வந்து காப்பாற்றினர். இந்தத் திடீர் தாக்குதலால் உருவான அதிர்ச்சியும், ஏற்பட்ட காயங்களால் விளைந்த சுகவீனமும் தொடர் சிகிச்சையால் விடுபட்டது. குணமடைந்த நிலையில், ஈரோடு கருங்கல்பாளையத்திலிருந்த பாரதியின் அன்பரும், தேசபக்தருமான வழக்குரைஞர் தங்கபெருமாள் பிள்ளையின் அழைப்பின்பேரில், அவர் நடத்திய வாசகசாலையின் ஐந்தாம் ஆண்டு விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்துவதற்காக ஈரோடு சென்றார் பாரதி. சுதேசமித்திரன் இதழில் "என் ஈரோடு யாத்திரை' என்ற தலைப்பில் தனிக்கட்டுரை வெளியிட்டார் பாரதி. ""இந்தச் சபையின் வருஷோத்ஸவக் கூட்டத்திற்கு நான் போய்ச் சேர்ந்தேன். என்னை ஒரு பிரசங்கம் பண்ணச் சொன்னார்கள். எனக்கு ஒரு விஷயம்தான் முக்கியமாகத் தெரியும். அதையே அங்கும் எடுத்துப் பேசினேன். அதாவது இந்த உலகத்தில் மானுடர் எக்காலத்திலும் மரணமில்லாமல் இருக்கக் கூடுமென்ற விஷயம்'' என்று தனது கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடுகிறார் பாரதி. தனது ஈரோடு சொற்பொழிவையே சுதேசமித்திரனின் இன்னொரு இதழில் கட்டுரை வடிவில் எழுதி வெளியிட்டுள்ளார் பாரதி. ""மரணமில்லாமல் வாழ்வது குறித்த என்னுடைய கொள்கையைப் பெரிய மகான்கள் கூடியிருக்கிற இச்சபையில் தர்க்கம் செய்யவே வந்திருக்கிறேன். எனது கொள்கையைத் தக்க ஆதாரங்களுடன் ருஜுப்படுத்தி உங்களுடைய அங்கீகாரம் பெறவே உங்கள் ஊருக்கு வந்திருக்கிறேன்'' என்று உரையைத் தொடங்கியதாக அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார் பாரதி. ஹிரணியன், தன் மகன் பிரகலாதனிடத்தில் ""சொல்லடா ஹரியென்ற கடவுளெங்கே'' என்று கேட்டதையும், அதற்குப் பிரகலாதன் ""நாராயணன் தூணிலும் உள்ளான், துரும்பிலும் உள்ளான்'' என்று பதில் கூறியதையும் குறிப்பிட்டுவிட்டு, அதையொட்டிய தனது கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தார் பாரதி. ""வல்ல பெருங்கடவுளில்லா அணுவொன்றில்லை. மஹாசக்தியில்லாத வஸ்துமில்லை. சுத்த அறிவே சிவமென்றுரைக்கும் வேதம். வித்தகனாம் குரு சிவமென்று உரைத்தார் மேலோர்...'' என்று அடுக்கடுக்காக ஆதாரக் கருத்துகளை எடுத்துரைத்து ""அத்வைத நிலைகண்டவருக்கு மரணமேது? பார் மீது யார் சாகினும் நான் சாகாதிருப்பேன் காண்பீர்'' என்று தனது பேச்சின் முதல் பகுதியில் குறிப்பிட்டுள்ளார் பாரதி. "நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை அச்சத்தை, வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்' என்று சித்தரெல்லாம் உரைத்திட்டார். இதனையே ஐரோப்பிய ஸயன்ஸ் சித்தாந்தங்களும் தெளிவுபடுத்துகின்றன. சினத்தை முன்னே வென்றிடுவீர், மேதினியில் மரணமில்லை. சினங்கொள்வார் தம்மைத் தாமே தீயாற் சுட்டுச் செத்திடுவாருக்கு ஒப்பாவார். சினம் கொண்டோர் பிறர் மேற்கொண்டு கவலைப்பட்டுத் தாம் செய்தது எண்ணித் துயர்க் கடலில் வீழ்ந்து சாவர். எனவே சினம் காரணமாகக் கவலையும், கவலையினால் சாவும் நேரிடுகின்றன'' என்று சாவிற்கான இன்னொரு காரணத்தை விளக்குகிறார் பாரதி. ""அறக்கடவுள் புதல்வன் என்னும் உதிட்டிரனும் இறுதியில் பொறுமை நெறி தவறி இளையாருடன் பாரதப் போர் புரிந்தான். பாரத நாட்டைப் போர்க்களத்தே அழித்துவிட்டுப் புவியின் மீது வறுமையையும் கலியினையும் நிறுத்தி வானம் சேர்ந்தான். போரினால் புவியிலுள்ள உயிர்கள் எல்லாம் அநியாய மரணமெய்தல் கொடுமையன்றோ?'' என்று போரில்லா உலகம் பற்றி அக்கூட்டத்தில் போதித்தார் பாரதி. ""நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்? என்று விஞ்ஞானியாகிய ஜகதீச சந்திர வசு கூறுகின்றான். ஞானானுபவத்தினாலும் இதுதான் முடிவு. கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்: கொடுங்கோபம் பேரதிர்ச்சி; அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்; கவலையினால் நாடியெல்லாம் தழலாய் வேகும். எனவே கோபத்தை வென்றிடவே பிறவற்றைத் தான் கொல்வதற்கு வழியென நான் குறிக்கிறேன்'' என்று ஒரு ஞானிக்குரிய இலக்கணத்துடன் இக்கூட்டத்தில் எடுத்தியம்பினார் இந்த சுப்பிரமணியக் கவிராயர். ""மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வமென்றால் மனையாளும் தெய்வமன்றோ? பெண்ணுக்கு விடுதலை நீரில்லையென்றால் பின்னிந்த உலகிலே வாழ்க்கையில்லை... வீட்டிலுள்ள பழக்கமே நாட்டிலுண்டு. வீட்டினில் தமக்கடிமை பிறராம் என்பவன் நாட்டினில் பிறரை அடிமைப்படுத்த நாடோறும் முயன்று நலிந்து சாவான்'' என்று பெண்ணடிமை புரிவோருக்கு எதிராகப் பிரகடனம் செய்கிறார் பாரதி. ""எல்லா மதங்களின் சாரமும் இதுதான். பூமியிலே கண்டமைந்த மதங்கள் கோடி; யாவினுக்கும் உட்புதைந்த கருத்து ஒன்றே. ஈரமில்லா நெஞ்சுடையார் சிவனைக் காணார்'' என்று மானுட ஒற்றுமையை வலியுறுத்தி "அன்பே அடிநாதம்' என்ற பொருள்பட தனது அன்றைய உரையை அமைத்துக் கொண்டார் மகாகவி. ஈரோடு நகரில் அன்று நிகழ்த்தப்பட்ட "மனிதனுக்கு மரணமில்லை' என்ற தலைப்பிலான இந்த உரை அன்று கூடியிருந்தோரை உரக்கச் சிந்திக்க வைத்ததாக அவ்வுரை கேட்டோர் எடுத்தியம்பியுள்ளனர். தமிழகத்தின் கீர்த்தி மிக்க தேசபக்தக் கவிஞர்களில் சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த ச.து. சுப்பிரமணிய யோகியும் ஒருவர். பாரதியின் ஈரோடு உரையைக் கேட்டவர் அவர். பாரதியின் இவ்வுரை குறித்துக் கூறும் யோகியார், ""நெருப்புத் தெய்வத்தை நெஞ்சிலே கொண்ட அவர் பேசும்போது உலகமே "கிடுகிடு' என்று நடுங்குவதுபோல் தோன்றும். மகா காளியே ஆணுருவம் தாங்கி நம்முன் மகா தாண்டவம் செய்வது போலிருக்கும்'' என்று சொல்லிக் கொண்டே வந்து "மூட எண்ணங்கள், முட்டாள் கொள்கைகள், மொண்டி ஞானங்கள், சண்டித் தனங்கள், குற்ற நினைப்புகள், குறுகிய நோக்கங்கள் இவற்றின் மேலெல்லாம் சீறி விழுவார். சள்ளெனக் கடிப்பார். சினத்தோடு சிரிப்பார். வெறி கொண்டவர் போல் குதிப்பார்'' என்று அணுஅணுவாக அனுபவித்து வர்ணிக்கிறார். பாரதி பேசத் தொடங்கும் முன் நிலவிய சூழல் குறித்தும், பேச அழைக்கப்பட்ட பின்னர் நிகழ்ந்தவை குறித்தும் தனது கட்டுரையில் ஓவியமாகத் தீட்டியுள்ளார் யோகியார். ""மூன்று மணி நேரம் பண்டிதர்களின் மூச்சுமுட்டும் முக்கடித் தமிழ்; அதுவரையில் பாரதி ஆடவில்லை- அசையவில்லை. சுவாஸம் விட்டாரோ என்னவோ, அது கூடச் சந்தேகம். ஏதோ ஒரு சிற்பி செதுக்கிய ருத்ரன் சிலை அமர்ந்திருப்பதுபோல் தோன்றியது; மீசைமுறுக்கும் போதன்று வேறு யாதொரு சலனமும் கிடையாது. ஆனால் அவர் முறை வந்தது; எழுந்தார்... எழுந்தார் என்பது தவறு... குதித்தார். நாற்காலி பின்னே உருண்டது. பேச்சோ? அதில் வாசகசாலையைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கிடையாது. பண்டிதர்களின் மூன்று மணி நேரப் பிரசங்கங்கள் முக்கால் நிமிஷ முடிவுரை கூடப் பெறவில்லை. எடுத்த எடுப்பிலேயே "நான் மனிதனுக்கு மரணமில்லை என்கிறேன்' என்றார். அவ்வளவுதான். பாடலானார். அடாடா! அவர் பாடும் போது கேட்க வேண்டும். அது என்ன மனிதன் குரலா? இல்லை இடியின் குரல், வெடியின் குரல், "ஓ ஹோ ஹோ' வென்றலையும் ஊழிக்காற்றின் உக்ர கர்ஜனை; ஆனால் அவைகளைப் போல் வெறும் அர்த்தமில்லாத வெற்றோசையல்ல; அர்த்தபுஷ்டி நிறைந்த அசாதாரண வீர்யத்தோடு கூடிய வேதக் கவிதையின் வியப்புக்குரல்"" என்று வியந்து வியந்து கண்ட காட்சியை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் யோகியார். 1921-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி நடைபெற்ற இக்கூட்டத்தில் பாரதியின் உரையைக் கேட்ட சான்றோர்கள் தாம் கூறிய கருத்துகள் குறித்து விவாதித்து ஏகோபித்து அங்கீகரித்ததாகவும், பாரதியாரே பிறகு எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் பாரதியின் உரையைக் கேட்ட பெரிய வித்துவான்கள், பண்டிதர்கள், தேச பக்தர்கள் யாவரும் அதே ஈரோடு நகரில் உள்ள வாய்க்கால் கரையில் அடுத்தநாள் இன்னொரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்வதாகவும், அதிலும் பாரதியார் வந்து உரையாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். பாரதியாரும் அதற்குச் சம்மதித்து அக்கூட்டத்தில் "இந்தியாவின் எதிர்கால நிலை' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். ஈரோடு நகரில் நடைபெற்ற இந்த இரண்டு உரைகளுக்குப் பின்னர் சென்னை சென்ற பாரதியார் வயிற்றுக் கடுப்பு நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டு பெரும் துன்புற்றார். மேலும் மேலும் நலிவடைந்து செப்டம்பர் 11-ம் தேதி பின்னிரவு 1 மணியளவில் பாரதியின் உயிர் பிரிந்தது. ஈரோடு நகரில் ஆற்றிய உரைதான் பாரதியின் இறுதிப் பேருரை! இந்தியாவின் எதிர்கால நிலையைப் பற்றியே எண்ணி எண்ணி வாழ்ந்த இம்மாபெரும் மனிதனுக்கு மரணமென்பதே இல்லை!(இன்று மகாகவி பாரதியின் நினைவு நாள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக