தமிழகத்தில் ஒரே ஆண்டில் பிறந்த இருவரில் ஒருவர் உணர்ச்சிக் கவிதைகளை உருவாக்குவதில் வல்லவராகத் திகழ்ந்தார். மற்றொருவர் கலைகளை ரசிப்பதிலும், அவற்றை வளர்ப்பதிலும் சிறந்தவராக விளங்கினார். ஆம், 1882-ம் ஆண்டில் பிறந்த அவர்களில் ஒருவர் எட்டையபுரம் தந்த சுப்பிரமணிய பாரதி. மற்றொருவர் ரசிகமணி என அழைக்கப்படும் டி.கே. சிதம்பரநாத முதலியார். பாரதியைவிட 4 மாதங்கள் வயதில் மூத்தவர். திருநெல்வேலி மாவட்டத்தில் தீத்தாரப்ப முதலியார்-மீனம்மாள் அண்ணி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் டி.கே.சி. தென்காசியில் திண்ணைப் பள்ளியில் பயின்ற இவர், பின்னர் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் 1905-ம் ஆண்டில் சேர்ந்து பயின்றார். கல்லூரிக் காலத்திலேயே தமிழ் மேல் பற்றுக்கொண்டு திருக்குறள், பெரியபுராணம், காஞ்சிப்புராணம் உள்ளிட்ட நூல்களைக் கற்று அதுகுறித்து மாணவர்களிடம் எடுத்துரைக்கும் பழக்கத்தையும் டி.கே.சி. வைத்திருந்தார். 1908-ம் ஆண்டு பிச்சம்மாள் அண்ணியைத் திருமணம் செய்து இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார். வழக்கறிஞராகப் பதிவு செய்திருந்தாலும், அப் பணியைத் தொடராமல் தமிழுக்காகவே வாழ்ந்த டி.கே.சி. திருநெல்வேலியில் 1924-ம் ஆண்டு "இலக்கியச் சங்கம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்புத்தான் பிற்காலத்தில் "வட்டத்தொட்டி' எனப் பெயர் பெற்றது. இந்த வட்டத்தொட்டி இலக்கிய அமைப்பு 1924-ல் இருந்து 1927 வரையும், பின்னர் 1935-ல் இருந்து சில ஆண்டுகளும் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. இந்த அமைப்புக்கு வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார், எஸ். வையாபுரிப் பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, சக்கரபாணி நம்பியார், வித்வான் அருணாசலக் கவுண்டர், பி.ஸ்ரீ. ஆச்சார்யா, மீ.ப. சோமு, தொ.மு. பாஸ்கரத்தொண்டைமான், ஆ. சீனிவாசராகவன் உள்ளிட்ட அறிஞர்கள் நிரந்தரமாக வரும் பழக்கம் உடையோராக இருந்திருக்கின்றனர். ராஜாஜி, கல்கி கிருஷ்ணமூர்த்தி, அப்புசாமி ஐயர், பாலசுப்பிரமணிய ஐயர் உள்ளிட்டோர் வட்டத்தொட்டிக்கு அவ்வப்போது வந்து கலந்துகொள்வோரில் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழால் அறிவியல் மட்டுமன்றி அனைத்துக் கலைகளையும், இயல்களையும் கற்க முடியும் என முழக்கமிட்ட டி.கே.சி. தமிழ்க் கவிதையில் மறைந்து கிடந்த கருத்துகளை எல்லாம் வெளிக்கொணர்ந்த காரணத்தால் "ரசிகமணி' என பெயர் சூட்டி அவரைத் தமிழுலகம் பாராட்டியது. இலக்கியம் கூறுவதை நயம்பட விளக்கும் தன்மையுடைய டி.கே.சி.யால் தமிழின் சுவையை உணர்ந்தவர்கள் ஏராளம். உரைநடை மட்டுமல்லாது, கடிதங்கள் மூலமும் தமிழை உணர வைத்தவர் டி.கே.சி. கடிதத்தின் வாயிலாக தமிழ்க்கலை, தமிழ்ப் பண்பாடு, தமிழிசை உள்ளிட்டவற்றை வளர்த்தவர் அவர். "கடித இலக்கியம்' என்ற புதிய இலக்கியச் சுவையை அறிமுகப்படுத்தியவர். தமிழை முழுமையாக அனுபவித்த டி.கே.சி. தேவகோட்டையில் 1941-ம் ஆண்டு நடைபெற்ற தமிழிசை மாநாட்டில் தலைமையேற்று தமிழிசையின் மேன்மையை எடுத்துரைத்தார். இவ்வாறு அனைத்துக் கலைக்கும் தொண்டாற்றிய டி.கே.சி. 1927-ம் ஆண்டு சென்னை மேல்சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கும் அவர் சங்கத்தமிழ் குறித்து முழக்கமிட்டார். 1930 முதல் 1935 வரை சென்னை மாகாண இந்து அறநிலையப் பாதுகாப்பு ஆணையராகப் பணியாற்றிய அவர், கோயில்களில் தமிழ்நாட்டு பழங்கலைகளை நிகழ்த்தி அக் கலைகளைச் செழிக்கச் செய்தார். இதய ஒலி, கம்பர் யார் உள்ளிட்ட அவரின் நூல்களும், முத்தொள்ளாயிரம், கம்பராமாயணம் ஆகிய பதிப்புகளும் டி.கே.சி.யின் சிறப்பைத் தெளிவுபடுத்தும். வட்டத்தொட்டி நாயகர், வளர்தமிழ் ஆர்வலர், ரசிகமணி, குற்றால முனிவர் எனப் பல்வேறு பெயர் பெற்ற டி.கே. சிதம்பரநாத முதலியார் 1954-ம் ஆண்டு மறைந்தார். அவர் மறைந்தாலும் அவரது பணியை மறக்காது இன்றளவும் திருநெல்வேலி பகுதியில் ரசிகமணிக்கு விழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல இவ்வாண்டும் (வெள்ளிக்கிழமை செப். 11) திருநெல்வேலி மாவட்டம், மேலகரத்தில் இவரது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
-------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------
போற்றதலுக்குரியவர்தான் இரசிகமணி. என்றாலும் கம்பரின் பாடல்களின் எண்ணிக்கையைக் குறைத்து இவை மட்டுமே கம்பரின் இராமாயணம் என இருந்தால் போதும் என்பது போல் பரப்புரை செய்ததால் தமிழறிஞர்களின் கண்டனத்துக்கு ஆளானார். அதுபோல் வட்ட தொட்டிக் கூட்டம் ஒன்றில், கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்; சங்கத் தமிழை வங்கக் கடலில் எறிவோம் என ஒருவர் பேசியதாலேயே பேராசிரியர் சி.இலக்குவனார் கிளர்ந்தெழுந்து சங்கத் தமிழ் புகழ் பேசித் தங்கத் தமிழ் வளர்ப்போம் என முழங்கிச் சஙக்கத்தமிழைப் பாமரரும் அறியச் செய்தார். -- இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக