Last Updated :
போராளிகள் இந்தியாவின் ஆதரவை ஆரம்பக் காலத்திலிருந்தே, அதாவது 1983-ஆம் ஆண்டிலிருந்தே விரும்பினார்கள். அதன்படியே இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் பயிற்சியும், தொடர்ந்து ஆயுத உதவிகளையும் அவர்கள் பெற்றனர். தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் இலங்கை மீது இந்தியா ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியபோதுகூட விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் தங்களுக்கு ஆயுத உதவி செய்தால் போதும் என்றுதான் கூறி வந்தார்கள்.இந்தச் சமயத்தில் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 27.10.1983-ஆம் நாளன்று சட்டமன்றப் பேரவையில் கூறியதை இங்கே குறிப்பிடலாம்:""விடுதலைப் புலிகள் கூட இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று கேட்கவில்லை. மாறாக, எங்களுக்கு உதவி செய்யுங்கள்; முடிந்தால் ஆயுதம் கொடுங்கள் என்றுதான் கேட்டு வருகிறார்கள். தாங்களே அந்த இயக்கத்தை நடத்தத்தான் அவர்கள் விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தனி ஈழம் வேண்டும் என்று முடிவு செய்வதோ, கேட்பதோ அங்கு வாழும் தமிழ் மக்களே தவிர நாம் அதை முடிவு செய்துவிட முடியாது. ஈழத் தமிழர்களோ விடுதலைப் புலிகளோ மற்ற இலங்கைத் தமிழர் தலைவர்களோ படை அனுப்புங்கள் என்று கேட்கவில்லை (தினமணி 28.10.1983). அப்போது, இலங்கை மீது இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கூறியதையொட்டி எம்.ஜி.ஆர். அளித்த விளக்கம் இது: இந்நிலையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தமானது இலங்கைத் தமிழர்கள் மீதும், போராளி அமைப்புகள் மீதும் திணிக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், பின் நாளில் இதனைத் தமிழ் மக்களும் - அமைப்புகளும் ஏற்கிற சூழ்நிலையே உருவாயிற்று. இந்நிலைக்கு மாறாக, இலங்கையின் தென் பகுதியில் இந்திய எதிர்ப்பு என்பது மிக வேகமாகத் தலைதூக்கிற்று. இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் தொடங்கிய போராட்டம் பின்னர் வன்முறையில் முடிந்தது. சிங்களத் தீவிரவாத கட்சியான ஜே.வி.பி. வெகு உக்கிரமாக இயங்கியது. ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாளில் தங்காலை நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.வி.பி.யால் கொல்லப்பட்டார். கலவரங்களை அடக்க வடக்கில் இருந்து ராணுவத்தினரை தெற்குப் பகுதிக்கு அனுப்பிய அதே நேரத்தில், இந்தியாவில் இருந்து "அமைதிப் படை' பலாலி விமான நிலையத்தில் வந்து (ஜூலை 30, 1987) இறங்கியது. சிங்கள ராணுவத்தினரின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற்ற நிலையில் இருந்த யாழ் மக்கள், இந்திய ராணுவத்துக்கு மாலை சூட்டி, பூர்ணகும்பம் எடுத்து வரவேற்றனர். இந்திய ராணுவ வருகை என்பது அவர்களின் "மீட்பர்' போன்று கருதப்பட்டது, உண்மை. அவர்களுக்கு இந்நிகழ்வு மகிழ்ச்சியை அளித்த அதேநேரத்தில், பிரபாகரனை, தில்லி அசோகா ஹோட்டலிலேயே அடைத்து வைத்திருப்பது சங்கடத்தையும் அளித்தது. பலாலியில் இந்திய ராணுவம் தங்கியிருந்த பகுதிகளை நோக்கிச் செல்லும் சாலையில் மக்கள் அமர்ந்து, தடையை ஏற்படுத்தி, பிரபாகரனை உடனே விடுவித்து இலங்கைக்கு அனுப்பும்படி குரல் கொடுத்தனர். இதற்கு என்ன பதில் சொல்வது என்ற உத்தரவை ராணுவத்தினர் மேலிடத்திலிருந்து பெறவில்லை. எனவே சாலைகளில் அமர்ந்திருந்த மக்களைப் பார்த்தார்கள். அவர்களது நோக்கம் என்னவென்று கேட்டுச் சென்றார்கள். அமைதிப் படையாக இலங்கைக்கு வந்த ராணுவம், போராளி இயக்கங்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிப்பதில் இறங்கியது. விடுதலைப் புலிகள் அமைப்போ ஒப்பந்தப்படி ஆயுதம் கையளிக்க வேண்டுமானால் பிரபாகரன் யாழ்ப்பாணம் திரும்பியாக வேண்டும் என்றும் அவரது அனுமதி இல்லாமல் ஆயுதங்களைத் திருப்பிக் கொடுப்பதில்லை என்றும் தீர்மானமாக மறுத்துவிட்டன. 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி இன்னொரு முக்கிய நாளாகும். அன்றைய தினம் இந்திய-இலங்கை ஒப்பந்தப் பிரதிகளை மதுரையில் பழ.நெடுமாறனும், சென்னையில் கி.வீரமணியும் எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தி பெருவாரியான தொண்டர்களுடன் கைதானார்கள். அன்றைய தினமே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, ஒப்பந்தம் நிறைவேற்றிய ராஜீவ் காந்திக்குப் பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. சென்னை கடற்கரையில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் ராஜீவ் விருப்பப்படியே அமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பாராட்டு விழா கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆரும் கலந்துகொள்ள வேண்டும் என்று ராஜீவ் விரும்பினார். ஆனால் அவர் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி தவிர்த்து விட்டார். அந்த நாளில் அவர் அமெரிக்காவில் இருக்கும்படியாகத் திட்டமிருந்தபடியால், ஜூலை 31-இல் அவர் பயணப்பட்டு, அமைச்சர்களும் அவரது இல்லத்துக்கு வழியனுப்ப வந்துவிட்டார்கள். தொண்டர்களோ சென்னை விமான நிலையத்தில் கூடியிருக்க, விமானம் புறப்பட வேண்டிய நேரம் கடந்தும் எம்.ஜி.ஆர். வராததால் தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர். இந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் அமெரிக்கப் பயணம் ரத்தானதாக அங்கிருந்து ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. பாராட்டு விழாவுக்கு முன்தினம் எம்.ஜி.ஆர். புறப்பட்டுச் சென்றால், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் அவருக்கு விருப்பமில்லை என்று தற்போது நிலவிவரும் தகவல் உண்மையாகிவிடும். எனவே, அவரின் அமெரிக்கப் பயணத்தை ஒத்திவைத்து, ஒருநாள் தள்ளிப் போகச் செய்ய வேண்டும் என்று புலனாய்வு அதிகாரிகள் ராஜீவ் காந்தியை வற்புறுத்தி, அவரைச் செயல்பட வைத்தார்கள் என்ற தகவல் கூடவே வெளியாயிற்று. இதுகுறித்து 1999-இல் பதிப்பிக்கப்பட்ட "எம்.ஜி.ஆரும் ஈழத்தமிழரும்' என்கிற நூலில் புலவர் புலமைப்பித்தன் கூறியதாகத் தகவல் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பதிவில், புலமைப்பித்தன் கூறுவதாவது, ""தமிழீழம் விடுதலை பெற்று விடும் என்கிற ஒரு முழுமையான நம்பிக்கை உருவாகிற சூழ்நிலையில், தமிழீழம் விடுதலை பெறுவது, தங்களுக்கு மிகவும் கெடுதலான காரியமாக அமைந்துவிடும் என்று நம்பினார்கள், இந்திய அரசுத் தரப்பினர். ""இலங்கை அமைச்சரவையில் ஜெயவர்த்தனாவிடத்தில் அதுலத் முதலி உள்ளிட்டோர் ஆரம்பத்தில் தமிழர் பிரச்னைக்கு முடிவு கட்டும்படி வற்புறுத்தியபோது கேட்டனர். ஜெயவர்த்தனா சொன்ன பதில் என்ன தெரியுமா? "என்னை பிரபாகரன் காலில் விழச் சொல்கிறீர்களா?' என்றார். அப்படியென்றால் என்ன பொருள் என்றால், இந்திய அமைதிப் படை வராமல் இருந்தால் பிரபாகரன் காலில் விழ வேண்டிய நிலை ஜெயவர்த்தனாவுக்கு ஏற்பட்டிருக்கும் என்பதாகும். ஜெயவர்த்தனா அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவர் ரோனி டி மெல். என்பவரும், அதே அமைச்சரவைக் கூட்டத்திலேயே சொன்னார். ""இலங்கை-இந்திய ஒப்பந்தம் மட்டும் கையெழுத்து ஆகாமல் இருந்திருக்குமானால் ஆறு மாதத்தில் தமிழீழம் விடுதலை பெற்று போயிருக்கும். இந்தியாவுடனான ஒப்பந்தம் நாட்டைப் பாதுகாப்பதற்கான ராஜதந்திர முயற்சி. அதைக் குறை சொல்லக்கூடாது. ""எம்.ஜி.ஆரின் ஆதரவுடன் தமிழீழம் மிகப்பெரிய அளவில் முன்னேறி வந்துவிடும்'' என்கிற காரணத்தினாலேயேதான் இந்தியத் துணை கண்டத்திலிருந்து அந்த ஒப்பந்தத்தைப் போட்டார்கள். அப்போது அந்த ஒப்பந்தத்தை எம்.ஜி.ஆர். ஆதரிக்கவில்லை. மைய அமைச்சராக இருந்த நட்வர்சிங் ஒருமுறை ராமாவரம் தோட்டத்திற்கு இந்த ஒப்பந்தச் செய்தியைப் பற்றிப் பேச வந்தபோது, இதை என்னிடத்தில் பேசவே கூடாது எனக் கடுமையாகவும், கோபமாகவும் சொல்லி அனுப்பி வைத்துவிட்டார். ""இந்தத் தவறான ஒப்பந்தத்திற்கு நானும் உடந்தையாக இருந்துவிடக் கூடாது'' என்கிற எச்சரிக்கை உணர்வில், சென்னை கடற்கரையில் ""ராஜீவ் காந்தி பாராட்டு விழாவில் பங்கேற்கக் கூடாது என்றும், விடுதலைப் புலிகள் கையெழுத்திடாத ஒப்பந்தத்திற்கு நடக்கும் பாராட்டு விழா இங்கு நடக்கிறது. இதில் நான் கலந்து கொள்ளக் கூடாது'' என்றும் எம்.ஜி.ஆர். நினைத்தார். ""31-ஆம் தேதி மாலை 5 மணிக்கு அமெரிக்கா புறப்படத் தயாரானபோது, தில்லியிலே இருந்து ஹாட்லைனிலே எம்.ஜி.ஆருடன் தொடர்பு கொண்ட ராஜீவ் காந்தி, "நீங்கப் போகக் கூடாது' என்றார். அவர் அமெரிக்கா செல்ல அனுமதிக்கப்படவில்லை. எம்.ஜி.ஆரையும் ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றுதான் அவர்கள் விரும்பினார்கள்'' ""அதோடு அந்த விழாவில் ராஜீவ் காந்தி, அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்களின் கையை வலுக்கட்டாயமாகத் தூக்குகிறார்- அந்தப் படம் தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஏடுகளில் வந்திருக்கிறது. அப்போது எம்.ஜி.ஆர். அவர்களின் முகத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும். ஒப்பந்த உடன்பாட்டை அவர் ஏற்கவில்லை என்பதை (பக்.133-136) என்றும் குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தையே பழ.நெடுமாறனும் தனது நூலொன்றில் பதிவு செய்கையில், "வேண்டா வெறுப்பாகவும் வேறு வழியில்லாமலும் எம்.ஜி.ஆர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
By Arun
9/9/2009 2:48:00 AM
By Kanak
9/9/2009 2:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *