இலங்கையில் இந்திய அமைதிப்படை
அமைதிப்படை வான் வழியாகவும், கடல் வழியாகவும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தது. அதன் முகாம்கள் யாழ்குடாவில் பலாலி, வவுனியா, திருகோணமலை, யாழ்ப்பாணம் பகுதிகளில் நிலைகொண்டன. மட்டக்களப்பில் அதிக அளவு ராணுவப்படை தேவையில்லை என்ற உத்தரவே முதலில் இடப்பட்டிருந்தது. ஆனாலும் அங்கும் முழு அளவில் அமைதிப்படை ஈடுபடுத்தப்பட்டது. அம்பாறை பட்டியலில் இல்லை; பின்னர் அதுவும் சேர்க்கப்பட்டது.ஐ.பி.கே.எஃப் - என்று அழைக்கப்பட்ட அமைதிப்படையின் பிரிவுகளுக்கு "ஆபரேஷன் பவான்' என்று பெயரிடப்பட்டிருந்தது. "பவான்' என்றால் "சுத்தமான காற்று' என்று அர்த்தப்படுத்தலாம். அனுமனையும் சம்பந்தப்படுத்தலாம். அனுமனுக்கு "பவன்புத்ரா' என்றுதான் பெயர். அதாவது வாயுபுத்ரா-காற்றின் மைந்தன் எனப் பொருளாகும்.அமைதிப்படைக்கு இடப்பட்ட பணிகளை லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர்சிங் கூற்றுப்படி இவ்வாறு பிரிக்கலாம்: 1. இலங்கை - விடுதலைப்புலிகளிடையே நடைபெற்ற போரை முடிவுக்குக் கொண்டு வந்து, போர்நிறுத்தம் ஏற்படுத்துவது-கண்காணிப்பது. 2. விடுதலைப்புலிகள் மற்றும் இதரப் போராளிக்குழுக்களிடமிருந்து ஆயுதங்களைப் பெறுவது. 3. இலங்கை அரசப்படைகள் 1987 மே மாதத்தில் இருந்த நிலைகளுக்குத் திரும்புவதை உறுதிப்படுத்துவது-வற்புறுத்துவது-கண்காணிப்பது. 4. போரினால் வெளியேறிய மக்களை அவர்களின் வாழ்விடங்களில், திரும்ப வந்து வசிக்கச் செய்வது.இதுதவிர, வடக்கு கிழக்குப் பகுதிகளில் காவல் நிலையங்கள் செயல்படாத நிலை. எனவே, சட்டம்-ஒழுங்குப் பணிகளையும் மேற்கொள்ள நேர்ந்தது.லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர்சிங், பலாலி விமானதளத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியதும், அவரை இந்திய அமைதிப்படையின் (பொறுப்பு) மேஜர் ஜெனரல் ஹர்கிரத்சிங் (54-வது பிரிவு தரைப்படை), இலங்கை அரசுப்படையின் கமாண்டர், பிரிகேடியர் ஜெர்ரி.டி. சில்வா சந்தித்தனர்.தீபிந்தர்சிங், யாழ் பகுதிகளைத் தரைவழியாகச் சென்று பார்க்க விரும்பினார். அதற்கு ஹர்கிரத்சிங், சாலை முழுவதும் நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக, சாலைக்காவலில் ஈடுபட்ட அமைதிப்படை சிப்பாயிடம், விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். சிப்பாய் நிலக்கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும்படி கேட்டதும், பிரபாகரன்தான் தங்களுக்கு இதுகுறித்து உத்தரவிடவேண்டும் என்றும், அவர் தில்லி ஹோட்டலில் சிறை வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் வந்தால்தான் உண்டு என்று தெரிவித்திருக்கிறார்கள்' என்றார்.இதுகேட்டு தீபிந்தர்சிங், இது உண்மையா இல்லையா என்கிற ஆராய்ச்சியில் ஈடுபடாமல், பிரபாகரன் யாழ்ப்பாணம் திரும்பவேண்டிய அவசியத்தைத் தலைமைக்கு வலியுறுத்தினார்.பிரபாகரன் யாழ் திரும்புவதற்கு பல்வேறு வகையான நெருக்குதல்கள் இருந்தபோதிலும், இந்தக் காரணமும் அதில் ஒன்றாகச் சேரக்கூடும் என்பதும் உண்மையே.தீபிந்தர்சிங்கும், இலங்கை ராணுவத் தளபதி ஜெனரல் சிரில் ரணதுங்கேயும் பலாலி விமானதளத்தில் உள்ள பார்வைக்கோபுரத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, உலக அளவிலான பத்திரிகையாளர்களில் பெரும்பாலானோர், இலங்கையில் இந்திய அமைதிப்படை எத்தனை காலம் இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதில் அதிக அக்கறை காட்டினார்கள்.தர்மசங்கடமான இந்தக் கேள்விக்கு தீபிந்தர்சிங் "இந்தப் பணி முடியும் வரை' என்று பதிலளித்தார்.பிரபாகரன் யாழ்ப்பாணம் திரும்பியதை அடுத்து, ஆயுதம் கையளிப்பது தொடர்பான ஆலோசனையை அவரிடம் செய்யவேண்டிய அவசியம் தீபிந்தர்சிங்குக்கு ஏற்பட்டது. இதற்கான ஏற்பாடு அவர் தங்கியிருந்த இடத்தினருகே உள்ள விருந்தினர் இல்லத்தில் செய்யப்பட்டிருந்தது. பிரபாகரன், யோகரத்தினம் யோகியுடன் வந்தார். இது தவிர, மேலும் இரு விடுதலைப் புலிகளும் உடன் வந்தனர்.இதுகுறித்து தீபிந்தர்சிங் தனது நூலில், ""அறைக்குள் நுழைவதற்கு முன்பாக பிரபாகரன் தனது காலணிகளை வாசலுக்கு வெளியே கழற்றிவிட்டு உள்ளே வந்தார். அவர் "புஷ்' சர்ட் அணிந்திருந்தார். உயரம் அதிகமில்லை. நல்ல கட்டுமஸ்தான உடம்பு. பார்க்க அழகானவராக இருந்தார். முகம் இறுகினது போல இருந்தது. அவரைப்பற்றிய வீரப்பிரதாபங்கள் பலவற்றைக் கேள்விப்பட்டிருந்த நிலையில், அதில் சில உண்மையாக இருக்கவும் வாய்ப்புண்டு-என்பது எனது கணிப்பாக இருந்தது'' என்று குறிப்பிட்டுள்ளார்.அவர் நூலில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, "டீ சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் இந்தியாவின் வற்புறுத்தலுக்கிணங்க போர்நிறுத்தம் மற்றும் ஆயுதம் கையளிப்புக்கு இணங்கியதாகத் தெரிவித்தபோது, இச்சூழ்நிலை இலங்கை அரசு யாழ்ப்பாணம் மீது ஏற்படுத்திய பொருளாதாரத்தடை மற்றும் ராணுவம் மக்கள் மீது தொடுத்த தாக்குதல்கள் காரணமாகவும், மக்கள் பட்ட துன்பம் காரணமாகவும் எழுந்தது என்று விளக்கினேன். தில்லியில் அவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த பேச்சு எழவில்லை. ஆனால் அவரது பேச்சுகளில் இருந்து இந்திய வெளிவிவகாரத்துறை மற்றும் "ரா' அமைப்பில் உள்ளவர்களின் செயல்பாடுகளால் கோபம் ஏற்பட்டிருக்கிறது என்பதையும், இனி அவர்களது பேச்சை எந்தக் காலத்திலும் நம்பமாட்டார் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்தும் அவரிடம் எதுவும் விவாதிக்கவில்லை. ஆயுதம் கையளிப்பது தொடர்பாகத் தனது தளபதிகளிடம் விவாதித்து முடிவு செய்யப்படும் என்று கூறியது தொடர்பாக, ஞாபகப்படுத்திக் கேட்டபோது அடுத்தடுத்த நாளில் நடைபெறும் என்றார். இலங்கை அரசு ஆயுதம் கையளிப்பதை விரிவான அளவில் விளம்பரம் செய்வதாக இருந்ததை அவர் விரும்பவில்லை. மேலும் எந்த ஓர் ஆயுதத்தையும் இலங்கை அரசிடம் நேரடியாகக் கையளிப்பதையும் அவர் விரும்பவில்லை என்பதும் தெரியவந்தது' என்கிறார் தீபிந்தர்சிங்.அடுத்தநாள் தீபிந்தர்சிங் யாழ்ப்பாணப் பல்கலைத் திடலில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கவும், அவரை மாத்தையா வரவேற்று, பிரபாகரன் இருக்குமிடத்துக்கு அழைத்துச் சென்றார். ஆயுதம் கையளிப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இலங்கை அரசிடம் ஆயுதம் கையளிப்பது நடக்காது என்றே பிரபாகரன் தெரிவித்தார். ஆயுதம் கையளிப்பது இல்லை என்றால், போராளிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்குவது என்பது தடைபடும். எனவே, ஆயுதம் கையளிப்பது என்பதை அவரின் பிரதிநிதியாக ஒருவர் ஆயுதம் வழங்க, இந்தியப் பிரதிநிதி முன்னிலையில் ஆயுதத்தை அளித்தால் போதும் என்று தீபிந்தர்சிங் யோசனை கூறினார்.அதன்படி, பலாலி ராணுவ முகாமில் ஆயுதக் கையளிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒரு மேசை போடப்பட்டு, அதன் எதிர்ப்புறத்தில் மேஜர் ஜெனரல் ஹர்கிரத்சிங்கும், இலங்கை பாதுகாப்பு செயலாளர் சேபால அட்டியகாலேவும் நிற்க, இந்தப் பக்கத்தில் நின்ற யோகரத்தினம் யோகி, ஒரு துப்பாக்கியைக் கையளிப்புக்கு அடையாளமாக மேசையில் வைத்தார்.இந்தக் காட்சியை இலங்கை, இந்தியப் பத்திரிகையாளர்கள் தவிர, உலகநாடுகளின் பத்திரிகையாளர்களுமாக 200 பேர் பதிவு செய்தனர். இதே நேரத்தில், ஜெயவர்த்தனா போராளிகளுக்கு வழங்கிய பொதுமன்னிப்பை அட்டியகாலே வாசித்தபின், அக்கடிதத்தை யோகியிடம் வழங்கினார். ஆயுதக் கையளிப்பு நிகழ்ச்சி முடிவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக