சனி, 8 ஆகஸ்ட், 2009




தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF), தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), தமிழீழ விடுதலை அமைப்பு (EPRLF) ஈழப் புரட்சி அமைப்பு (EROS)மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOT) ஆகியவற்றின் அங்கத்தவர்கள் ஒருங்கிணைந்து ஓர் அறிக்கையினை (திம்பு பிரகடனம்: 1985 ஜூலை 13), பேச்சுவார்த்தைக்குப் பொறுப்பான இந்திய அதிகாரிகளிடம் அளித்தனர். பின்னர் இந்த அறிக்கை பத்திரிகைகளுக்கும் விநியோகிக்கப்பட்டது.அவ்வறிக்கை வருமாறு:தமிழ் தேசிய பிரச்னைக்கான பயனுள்ள தீர்வு எதுவாக இருந்தாலும் பின்வரும் நான்கு முக்கிய கோட்பாடுகளை அடிப்டையாகக் கொண்டிருக்க வேண்டும்.(1) இலங்கைத் தமிழர்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.(2) இலங்கையில் தமிழர்களுக்கென்று இனங் காணப்பட்ட ஒரு தாயகம் உள்ளது என்பதை அங்கீகரித்தல்.(3) தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்.(4) இலங்கைத் தீவைத் தமது நாடாகக் கருதுகின்ற எல்லாத் தமிழர்களினதும் பிரஜாவுரிமையையும் அடிப்படை உரிமைகளையும் அங்கீகரித்தல்.இக் கோட்பாடுகளை உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு நாடுகள், பல்வேறு அரசாங்க முறைகளை வகுத்துள்ளன. எமது மக்களுக்கு இந்த அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதனால் எழுந்துள்ள இப்பிரச்னைகளுக்கு தீர்வாக, நாம் சுதந்திரமான அரசொன்றைக் கோரியுள்ளதுடன், அதற்காகப் போராடியும் வந்துள்ளோம்.இப்பிரச்னைகளுக்குத் தீர்வாக, இலங்கை அரசாங்கம் அளித்துள்ள ஆலோசனைகள் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாதவை. எனவே 1985 ஜூலை 12-ஆம் தேதி எமது அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு, நாம் அவற்றை நிராகரித்துள்ளோம்.எனவே, சமாதானத்துக்கான எமது உளப்பூர்வமான விருப்பத்தின் காரணமாக, மேற்குறிப்பிட்ட எமது கோட்பாடுகளுக்கிணங்க முன்வைக்கும் ஆலோசனைகளை நாங்கள் பரிசீலனை செய்வோம் - என்று கூறி அனைத்து அமைப்பின் அங்கத்தவர்களும் கையொப்பமிட்டிருந்தனர்.இதன் அடிப்படையில் இலங்கை அரசு இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு சரியான திட்டங்களுடன் வரவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.இதன் மூலம் ஈழமே தீர்வு என்கிற நிலையிலிருந்து கீழிறங்கியதுடன், இதன்மீது முடிவெடுக்கும் நெருக்கடிக்கு இலங்கை அரசையும் உட்படுத்தினர்.காரணம் போராளிகள் எப்போதும் சமரசத் தீர்வுக்கு உடன்படமாட்டார்கள் என்று இலங்கை அரசுகள் அது எந்த அரசாக இருந்தாலும் கூறி, அவை ஒவ்வொன்றும், இந்தியாவையும் பிற உலக நாடுகளை நம்ப வைத்திருந்தன. இதன் காரணமாகவே, இப்போது முடிவெடுக்கும் நிலைக்கு இலங்கை அரசைத் தள்ளினர்.இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை 1985 ஆண்டில், ஆகஸ்டு 12-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி முடிவடையும் காலக் கெடுவைக் கொண்டிருந்தது. இப் பேச்சுவார்த்தை தொடங்கியதுமே அரசுத் தரப்பு நான்கு முக்கிய கோட்பாடுகளை முற்றிலுமாக எதிர்த்தது. இந்த எதிர்ப்பே திம்பு பேச்சுவார்த்தை முடிவுறும் நிலைக்கு வந்துவிட்டது என்பதை உணர்த்தியது.இதனால் எரிச்சல் அடைந்தது இலங்கைத் தரப்பு அல்ல; மாறாக - தமிழ்ப் போராளிகள் மீது இந்திய அரசு அதிகாரிகள் கடும் கோபம் கொண்டனர்.இதே நேரத்தில் அதாவது திம்பு பேச்சு முடிவடையும் நாளுக்கு முந்தின நாள் (16-ஆம் தேதி) வவுனியா ராணுவ முகாம் அருகே உள்ள மதகொன்றின் கீழ் குண்டு வெடித்தது. இதனைத் தொடர்ந்து ராணுவத்தினர் வவுனியா நூல்நிலையத்தை முற்றுகையிட்டனர். அந்த நூல்நிலையத்தினுள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, தீயும் வைக்கப்பட்டது.நூலகத்தில் இருந்த ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர். பல நூறு பேர் தீக்காயத்துக்கு ஆளாயினர். கடைகள், கட்டடங்கள், வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த வெறியாட்டத்தில் இரண்டாயிரம் பேர் அகதிகளாயினர்.இந்நடவடிக்கையினால் கோபமுற்ற போராளிக் குழுக்கள் போர் நிறுத்த காலத்தில் சிங்கள ராணுவத்தினரின் செயல் ஓர் ஒப்பந்த மீறல் என்று வாதிட்டனர். இதனை ஏற்க இலங்கை அரசுத் தரப்பு மறுத்தது. இந்திய அதிகாரிகள் போராளிக் குழுவினருக்கு நெருக்குதல் கொடுத்தனர். தொடர்ந்து, போராளிக் குழுக்களின் அங்கத்தவர்கள் உடனடியாக தங்களது நிலையை விளக்கி அறிக்கை ஒன்றை இந்திய மத்தியஸ்த பார்வையாளர்களிடம் அளித்தனர்.அந்த அறிக்கையில், "இலங்கைத் தரப்பில் அளிக்கப்பட்ட யோசனைகளில் மாவட்ட சபைக்கு அதிகாரம் என்று கூறப்படுகிறது. உண்மையில் மாவட்ட சபைகளுக்கு நிர்வாகப் பொறுப்புகளே இல்லை. கீழ்மட்ட சட்டங்களைத் தயாரிக்கும் மட்டுப்படுத்தப்பட்ட சட்ட நிர்ணய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுவும் கூட ஜனாதிபதியின் அதிகார வரம்புக்குட்பட்டதுடன் அவரது அங்கீகாரத்தையும் பெற்றாக வேண்டும்.அதுதவிர, மாவட்ட சபைகளுக்கு உரிய நிதி கிடையாது. ஜனாதிபதி நியமிக்கும் கமிஷன் ஒன்று மாவட்ட சபைகளுக்குத் தேவையான நிதியை சிபாரிசு செய்து, அதையும் ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்டும்.இலங்கை அரசாங்கம் வைத்துள்ள யோசனைகள் மத்திய இலங்கை அரசை வலுப்படுத்துபவையாகவே உள்ளன. மாவட்ட சபை நிர்வாக அமைப்பிலும் தமிழ் மக்களை அடக்கும் நோக்கமே அதிகம்' - என்று கூறப்பட்டிருந்தது.மேலும் அந்த அறிக்கையில், "தமிழர் தேசிய இனத்துக்குரியவர் அல்ல - அவர்களுக்குத் தாயக உரிமையும் இல்லை - சுயநிர்ணய உரிமையும் கிடையாது - மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் உரிமையும் கிடையாது என்று இலங்கை அரசு மறுக்கிறது. பொதுவான சர்வதேச சட்டத்தின் மறுக்க முடியாத அம்சங்களில் சுயநிர்ணய உரிமையும் ஒன்று - அது மறுக்கப்படுகிறது. பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் "பயனுள்ள கருத்துப் பறிமாறல்' நடைபெறும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டதைச் சுட்டிக்காட்டியும் பயன் இல்லை' என்றும் அறிக்கை கூறியது.அறிக்கையின் இறுதி அம்சமாக கூறப்பட்டது என்னவென்றால், "நாம் முன்வைத்த நான்கு முக்கிய கோட்பாடுகள் - தமிழ் மக்களது அடிப்படையானதும் - அத்தியாவசியமான உரிமைகளுக்குப் போராடும் உணர்வுகளைப் பிரதிபலிப்பவையும் ஆகும். 1950-ஆம் ஆண்டில் சமஷ்டியாட்சி கோரியதால் அடக்குமுறையும் பாகுபாடும் தலைதூக்க, தவிர்க்க முடியாத நிலையில் ஈழமெனும் சுதந்திரத் தமிழ்நாடு கோரிக்கை உருவானது. ஆயிரக்கணக்கான தமிழர் மாண்டு, பல்லாயிரக்கணக்கானோர் சொத்துக்களை இழந்து, உழைப்பு, வசதிகள் இழந்து, அழிந்து, இன்னல்கள் அனுபவித்தது அனைத்தும் தமிழ் மக்கள் சம உரிமையோடும் - சுதந்திரமாகவும் இருப்பதற்காகவே.""ஆகவே குரோதமின்றி பொறுமையோடு இன்று நாம் திம்புவிலிருந்து பிரகடனப்படுத்துவது, தமிழ் தேசிய இனம் சார்பில் அல்லாது பேச்சுவார்த்தைகள் திம்புவிலோ அல்லது வேறு எங்குமோ நடைபெறுவது இயலாது. பேச்சுவார்த்தையின்போது நாம் வெளிப்படுத்திய மூலக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு நியாயமான பேச்சு நடத்த இலங்கை அரசு தயாரா என்பதைத் திட்டவட்டமாக கூறும்படியும் கேட்கிறோம்.நாம் பேச்சுவார்த்தை நடத்தி வரும்பொழுதே எமது இனத்தை பூண்டோடு அழிக்கும் இலங்கை அரசின் நோக்கம் வெளிப்படுகிறது. கடந்த சில நாட்களாக இலங்கை ராணுவத்தினரால் வவுனியாவிலும் இதரப் பகுதிகளிலும் அப்பாவி மக்கள் 200 பேருக்கு மேல் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். நம் தாயகத்தில் தமிழ் மக்கள் சமாதானத்துடன், பாதுகாப்பாக வாழ முடியாத வேளையில் சமாதானப் பேச்சுக்கள் நடத்திக் கொண்டிருப்பது கேலிக்கூத்தாகும். சமாதானப் பேச்சை நாம் நிறுத்திக் கொள்ள முயலவில்லை. ஆனால் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அடிப்படை நிபந்தனையான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறிவிட்டதனால் பேச்சுவார்த்தைகளே நடைபெற முடியாதிருக்கிறது''-என அவ்வறிக்கை கூறியது. இந்த அறிக்கையை இந்திய அரசுத் தரப்புக்கு அளித்து பத்திரிகைகளுக்கும் கொடுக்கப்பட்ட நிலையில் பிரதமர் ராஜீவ் காந்தி, போராளிக் குழுவினரைச் சந்திக்க ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் போராளிக் குழுவினர் இந்தச் சந்திப்புக்குத் தயங்கினர். இந்திய அதிகாரிகள் நெருக்குதலை அதிகரிக்க அதிகரிக்க அவை வாக்குவாதத்தில் முடிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக