அன்புக்குரிய தமிழீழ மக்களே! புலம் பெயர்ந்து பிரான்சு மண்ணில் மண்பற்றோடும், தாயக மண்ணின் சுதந்திரக்காற்றை ஆவலோடு சுவாசிக்க வேண்டும் என்ற அவாவோடும் வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு அரசியல் ஐனநாயக வழியில் அர்ப்பணிப்போடு தொண்டாற்றி வரும் தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு. இலங்கைத்தீவிலும், உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழீழ மக்களுக்கு அறியத்தரும் பணிவான தேர்தல் செய்தி. இன்றைய உலகம் தனது 21ம் நூற்றாண்டில் காலடியெடுத்து வைத்து மனிகுலத்துக்கு தேவையான அனைத்து தேவைகளையும் விஞ்ஞானரீதியிலும் அதன்வளர்ச்சியிலும் பெரும் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் இந்த பூவுலகின் ஒரு மூத்த பழங்குடியினம் இந்நொரு பெரும்பான்மை இனத்தினால் மனிதநாகரீகமே வெட்கித் தலைகுனியவைத்து பெரும் இனச்சுத்தீகரிப்பை திட்டமிட்டு நடாத்தி ஓய்ந்திருக்கின்றது. ஒரு இனத்தின் உண்மையும், நீதியும், தர்மமும் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இன்று இதற்கு காரணமாக ஜனநாயகம் பேசுகின்றவர்களும், தமக்கு வேண்டிய உரிமைகளை அனைத்து வழிகளிலும் போராடி பெற்றுக்கொண்ட நாடுகளும் உடந்தையாகி போய்விட்டனரே என்று பெரும் வேதனையும் மறக்க முடியாத பதிவுகளுமாக தமிழர் மனங்களில் ஏற்பட்டுவிட்டது என்பதும் எவராலும் மறுக்க முடியாததொரு உண்மையுமாகும். தமிழ் மக்கள் நாம் உலகத்தில் ஒரு மனிதனுக்குரிய அனைத்து சுதந்திரங்களை பெற்று வாழவேண்டும் என்று ஆசைப்பட்டதும் அந்த எண்ணங்கள் எல்லாம் ஆட்சியாளர்களால் அடக்கியொடுக்கப்பட்டதும் அதற்கெதிராக எம் தமிழர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் திட்டமிட்ட இனக்கலவரமாக்கி இனஅழிப்புக்களாய் மாறியிருந்தமையும் அதிலிருந்து எம்மக்கள் காப்பாற்றப்பட வேண்டும்; என்ற அவசியத்தால் இளைஞர்கள், யுவதிகள் ஆயுதம் ஏந்தவேண்டிய ஒரு நிலைக்கு தவிர்க்க முடியாமல் கொண்டு செல்லப்பட்டனர் என்பதையும், எத்தனையோ அளப்பரிய உயிர்விலைகொடுப்புக்கு அப்பால் எமது இனப்பிரச்சனையில் சர்வதேசம் தலையிடுவதற்கானதொரு சூழ்நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது என்பதையும் இன்று எவரும் மறைக்க முடியாத இன்னொரு உண்மையாகும். இந்த நேரத்தில் சர்வதேச விருப்புக்கேற்ப தமிழ்மக்களினால் முன்னெடுக்கப்பட்ட உயிர்தியாகம் கெண்ட ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு ஜனநாயக அரசியல் ரீதியில் எமது உரிமைகளை பெற்றுக்கொள்ளவும் அதற்கு உதவிட வேண்டிய பாரிய பொறுப்பும் சர்வதேசத்துக்கு உண்டு என்பதையும் யாருமே மறக்க முடியாத இந்த நிலையில் தான் எமது உரிமைகளை நாம் பெற்றெடுக்கவொரு சந்தர்ப்பமும், அதற்கு மீண்டும் தமிழ்மக்களின் ஆணையிடும் ஒரு தேர்தல்களமும் கிடைத்துள்ளது. இந்த 21ம் நூற்றாண்டில் உலகில் ஈவிரக்கமற்ற மிகப்பெரும் மனிதப்படுகொலையும், பேரளிவும் இலங்கைத்தீவில் தான் நடந்தேறியிருக்கின்றது. இந்த பேரவலம் நடைபெறுவதற்கும், உலகத்தின் கண்களை மூடச்செய்யவும் சிறீலங்கா அரசுக்கு துணையாக எம்மினத்தவர்கள் சிலர் கூட உறுதுணையாக இருந்து கொண்டதும் தனது இனத்தின் போராட்டத்தை சிறீலங்கா அரசு பயங்கரவாதப்போராட்டமாக சித்தரித்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை என்று வெளியுலகிற்கு கூறி கொத்துக்கொத்தாக எமது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டபோதும், சுந்திரமாகவும், சந்தோசமாகவும், தனது குடும்பங்களுடன் வாழ்ந்த மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுள்ளோம் எனக்கூறிக்கொண்டு 3லட்சம் வரையான மக்களை இன்றுவரை முகாம்களுக்குள்ளும், மின்கம்பிவேலிகளுக்குள்ளும் அடைத்து வைத்துக் கொண்டும், எம் உடன்பிறந்த சகோதரர்கள் கடத்தப்பட்டும், விசாரணைகளின்றி சிறைகளில் அடைக்கப்பட்டும் தொடர்ந்தும் துன்பத்தையே வாழ்வாக்கி கொண்டு வாழ்வதையும் மௌனிகளாக பார்த்துக்கொண்டும், சிங்கள அரசுக்கு ஒத்துஊதி வாழ்பவர்களையும் எப்படித்தான் நாம் மறக்க முடியும். இந்தவொரு சூழ்நிலையில்தான் தமிழ்மக்களின் நாடிபிடித்து பார்க்கும் ஒரு தேர்தல் களம் அமைந்துள்ளது. இன்று உலக ஒழுங்கில் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனையானது தமிழ்மக்களுக்கு சமஉரிமை அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்ற கருத்து வலுவாக தெரியப்படுத்தப்பட்டு வரும் வேளையில் இலங்கைதீவில் இனி தமிழ்மக்களும், சிங்கள இன மக்களும் ஒற்றுமையாக, இணைந்து வாழமுடியும் என்ற எண்ணப்பாட்டின் இடைவெளி அதிகமாகிப்போய்விட்ட நிலையிலும், சிங்கள தேசத்தின் அரசுத்தலைவரினதும் அனைத்துகட்சிகளினதும் தமிழ்மக்களின் நிலைப்பாடு சம்பந்தமான அண்மைக்கால அறிக்கைகள் இன்னும் இன்னும் தமிழ்மக்களை விசனத்திற்கு உள்ளாக்கும் ஒரு நம்பிக்கையற்ற நிலைக்கு இட்டுச்செல்வதையும் யாராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாத இன்னொரு உண்மையாகும். எனவே தமிழ்மக்களாகிய நாம் எமது உரிமையை நாமே அரசியல் ரீதியாக பெற்றிட உண்மையானவர்களின் பலத்தை மேலும் பலப்படுத்த வேண்டிய நிலையில் நின்று கொண்டிருக்கின்றோம். இந்த வகையில் இலங்கை தீவிற்கு சுதந்திரம் கிடைக்க முன்பும், கிடைத்த பின்பும் அரசியல் ரீதியில் வாழையடி வாழையாக பலபடிப்பினைகளுக்கும், நெருக்கடிகளுக்கும், உயிர் ஆபத்துகளுக்கும் மத்தியில் தொடர்ந்தும் தமிழ்மக்களுக்கு தொண்டாற்றி, சேவையாற்றி வருபவர்கள் தமிழ்தேசியக்கூட்டமைப்பினரே இவர்களின் போராட்டம் உரிமைக்கான உறுதியான நேர்த்தியானது என்பதால்தான் தமதுயிர்களையும் இவர்கள் விலையாக கொடுத்துள்ளனர். இதே வேளை உலகஅரசுகளும், ராஐதந்திரிகளும் தமிழ்மக்களின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை அறியும் ஆவலோடும் இந்த தேர்தல்களத்தை பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். எனவே உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ்மக்கள் தமது உள்ளக்கிடங்கில் இருக்கும் தமிழீழமே தமிழ் மக்களின் தாகம் என்பதை ஒரு ஜனநாயகத்தேர்தலின் மூலம் வெளிக்காட்டுவார்கள் என்பது அசைக்க முடியாத உண்மையாகும். அதே போலவே தாயகத்தில் வாழும் அன்புத்தமிழ்மக்கள் எந்தவொரு மனக்கிலேசமோ, பயமுமோ இன்றி தன்னலம் பாராது சுயநலமில்லாது பொதுநலத்தை மனதில் ஏற்றி உண்மையின் பக்கம் தர்மத்தின் பாதையில் ஈழத்தமிழ் மக்களின் துயர்நீக்கவும் உலகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவும், அதர்மவாதிகளின் எண்ணங்களை தவிடுபொடியாக்கி உணர்வுள்ள, உன்னதமான உயர்வான தமிழ்மக்களாக அனைத்து தமிழ்மக்களும் தமிழ்தேசியக்கூட்டமைப்பினருக்கு இத்தேர்தலில் வாக்களித்து எமது ஒற்றுமையை நிலைநிறுத்துவோமாக. எமதுஉரிமை, எமதுசுதந்திரம், எமதுகௌரவம் எமது உயிரிலும் உன்னதமானது நன்றி பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக