ஈரோடு,ஆக. 7: நல்ல நூல்கள் வாழ்வின் போக்கையே மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவை என்றார் சொற்பொழிவாளரும், எழுத்தாளருமான பழ.கருப்பையா.மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோட்டில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் "யோசிக்கும் வேளையில்' என்ற தலைப்பில் வியாழக்கிழமை இரவு அவர் பேசியது: பூங்குன்றனார் எழுதியது 14 வரிகள்தான். அதில் கூறப்பட்டுள்ள ""யாதும் ஊரே; யாவரும் கேளிர்'' என்ற வரிகள்தான் தமிழர்களின் சிந்தனையாக உலகெங்கும் அறியப்பட்டுள்ளது. எனவே குறைந்த அளவில் எழுதினாலும், நல்ல விஷயங்களை எழுதுவது சிறந்தது.மக்களுக்குப் பயனில்லாததை எழுதுவதைவிட, அதை நிறுத்திவிடுவது நல்லது. இதேபோல் மக்களும் நல்ல நூல்களைத் தேர்வு செய்து படிக்க வேண்டும். முதலில், படிக்கின்ற பழக்கம் உருவாகும்போது, தகுதியற்ற நூல்களைப் படிக்கும் பழக்கம் நம்மிடமிருந்து படிப்படியாக அகன்றுவிடும். பின்னர் சிறந்த நூல்களை மட்டுமே வாசிக்கும் நிலை உருவாகும்.நாட்டுப்பற்று, தாய்மொழிப்பற்றை ஊட்டும் நூல்களை அதிகம் படிக்க வேண்டும். தொடர்ந்து நூல்கள் படிப்பது நம்மிடம் பல நல்ல மாற்றங்களை உருவாக்கும். சிறந்த சிந்தனைகள் வாழ்வின் போக்கையே மாற்றியமைக்கக் கூடியவை.திருவள்ளுவருக்கு... உலகின் மிகச்சிறந்த நூல் திருக்குறள்தான். இதை எழுதிய வள்ளுவருக்கு சிலை வைக்க, பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருப்பது வேதனைக்குரியது. தமிழர்கள் அறிந்திராத கன்னடக் கவிஞரின் சிலையை தமிழகத்தில் வைத்தால்தான், பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க முடியும் என்று கட்டாயப்படுத்துவது நியாயமல்ல. வள்ளுவரின் சிந்தனைக்கு மேலான சிந்தனை எதுவுமே இல்லை. சிலைகள் என்பவை வெறும் அடையாளங்கள்தான். கன்னியாகுமரியில் வள்ளுவருக்கு 133 அடிக்கு சிலை வைத்துவிட்டதாலேயே, மக்கள் அனைவரின் மனதிலும் திருக்குறள் புகுந்துவிட்டது என்று கூற முடியுமா? எனவே பெங்களூருவில் வள்ளுவருக்கு சிலை வைக்காவிட்டால் தமிழுக்கு நஷ்டமேற்பட்டுவிடப் போவதில்லை.தற்போது ஒழுக்கம் இல்லாத சமுதாயம் உருவாகி வருவது கவலைக்குரியது. லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலைநடக்கும் என்பது வேதனையளிக்கும் நிகழ்வு. கட்டுப்பாடு, ஒழுக்கம், நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் தலைமுறையின் தேவை அவசியமாகியுள்ளது.அளவுக்கு அதிகமான பணம் சம்பாதிப்பது மட்டும்தான் குறிக்கோள் என்ற லட்சியத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு போதுமென்ற மனம், பகிர்ந்து வாழ்தல் ஆகியவற்றைப் புரியவைக்க வேண்டும் என்றார் பழ.கருப்பையா. தொழிலதிபர் கேகேஎஸ்கே.ரபீக் தலைமை வகித்தார். "மேவும் விரல் யார் உனக்கு?' என்ற தலைப்பில் பத்திரிகையாளர் சுதாங்கன் பேசினார். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், டாக்டர் கே.எம்.அபுல் ஹசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக