வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

இலங்கையில் சிறுபான்மையினர் உரிமை காக்க கனடாவின் காத்திரமான நடவடிக்கை தேவை: 'தி பார்ரி எக்சாமினர்'
[வியாழக்கிழமை, 06 ஓகஸ்ட் 2009, 05:46 பி.ப ஈழம்] [பி.தெய்வேந்திரன்]
இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றைப் பாதுகாப்பதற்கு கனடா தனது பலத்தைப் பயன்படுத்தி காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கனடாவில் இருந்து வெளிவரும் 'தி பார்ரி எக்சாமினர்' நாளேடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நாளேட்டில் வெளியான ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் விபரம் வருமாறு:

இலங்கையில் நிலவிவரும் அரசியல் சூழ்நிலை சிறப்பானதாக இல்லை. அத்துடன், எந்தவிதக் குற்றச்சாட்டுக்களும் இன்றி தனிநபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும் சிறுவர்கள், பெண்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தனிநபர்கள் கடத்தப்படுவதும் காணாமல் போவதும் சித்திரவதை செய்யப்படுவதும் எல்லாப் பக்கங்களிலும் இருந்து மேற்கொள்ளப்படுகின்றன.

களத்தின் உண்மை நிலை என்ன என்பதை ஆராய்ந்தறிவதற்கான சுயாதீன வழிகளை அரசு தடைசெய்திருப்பது அனைவரதும் கவனத்திற்குரியது.

உள்நாட்டுப் போரில் தப்பிப்பிழைத்த தமிழர்கள் அரசின் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் பட்டினி மற்றும் படுகொலைகள் மூலம் வாராந்தம் 1,400 பேர் உயிரிழக்கின்றனர் என்று சில செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தத் தகவல் உறுதியானது என்று சொல்ல முடியாது. ஏனெனில் கனடா உள்ளிட்ட எந்தவொரு அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகளையோ அமைப்புக்களையோ சிறிலங்கா அரசு அந்த முகாம்களுக்குள் அனுமதிப்பதில்லை.

இது எங்கோ தொலைவில் உள்ள மண்ணில் நிகழும் அட்டூழியங்கள் அல்ல. இங்கே பார்ரியில் உள்ள எமது உறவுகளினதும் நண்பர்களினதும் உள்ளங்களை நொறுக்கும் சோகம் இது.

ஆரோனும் றஞ்சி சுரேஷ்குமாரும் பார்ரியில் வசிக்கும் 40 தமிழர்களில் இருவர். ஒருநாள் றஞ்சி கண்ணீருடன் எனது அலுவலகத்திற்கு வந்தார்.

ஏனெனில், வன்னி முகாமில் உள்ள அவரது உறவினரின் நிலை குறித்து அவர் மிகவும் கவலை அடைந்துள்ளார்.

றஞ்சிக்காக நான் கவலைப்பட்டேன். ஏனெனில் அவரது குடும்பத்தை இலங்கையில் பாதுகாப்பதற்காக இந்த உலகினால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும் என்பது எனக்குத் தெரியும்.

இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றைப் பாதுகாப்பதற்கு கனடா தனது பலத்தைப் பயன்படுத்தி காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நான் நம்புகிறேன்.

சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு வழங்க மறுத்துள்ள உணவு, குடியிருப்பு வசதிக்கான பொருட்கள், மருத்துவ நிபுணர்களை உள்ளடக்கிய மருத்துவப் பொருட்கள் போன்ற உதவிகள் நேரடியாக தமிழ் மக்களுக்குக் கிடைப்பதை நாம் உடனடியாக உறுதி செய்ய வேண்டும்.

இந்த வழியில் நாம் வழங்கியுள்ள 75 லட்சம் டொலர் பெறுமதியான உதவிகள் மிகச் சரியான நடவடிக்கை. இந்த முகாம்களுக்கு இப்போது உதவிகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன.

எமது வெளிவிவகாரத்துறை அமைச்சர் லோறன்ஸ் கனொன் இது தொடர்பில் ஏனைய நாடுகளுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார்.

மோதல் இடம்பெற்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதைத் தடுப்பது மற்றும் அனைத்துலகப் பார்வையாளர்கள் அவர்களிடம் செல்வதைத் தடுப்பது போன்ற செயல்களை சிறிலங்கா அரசு தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அது பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து விலக்கப்படும் ஆபத்தைக் கொண்டிருக்கும் என்பதை கனடா சிறிலங்காவிற்குப் புரிய வைக்க வேண்டும்.

கனடாவின் வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்றச் செயலர் தீபக் ஓபரேய், இந்த முகாம்களுக்குப் பயணம் செய்ய வேண்டும்.

இலங்கையில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள ஏனைய நாடுகளின் அவதானிகள் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்பதை அறிவதும் ஆர்வம் தரக்கூடியது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக