வியாழன், 6 ஆகஸ்ட், 2009

இலங்கைத் தமிழர்கள்
இந்தியா, சீனா மீது கடும் கோபம்
பிரசுரித்த திகதி : 06 Aug 2009

போர் முடிவடைந்து இரு மாதங்கள் ஆகியுள்ளபோதும், இப்போரை முன்னெடுத்துச் செல்ல ஆதரவு வழங்கிய இந்தியா, சீனா நாடுகள் மீது புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். புலிகளுக்கு எதிரான போரில் சீனா பல தொன் பெறுமதியான ஆயுதங்களையும், ஆயுத தளபாடங்களையும் வழங்கியதால் அவர்கள் மீது கடும்கோபமுற்றிருக்கும் தமிழர்கள், மேற்கத்தைய நாடுகளின் மனித உரிமைகள் மீதான வாக்கெடுப்பு வந்தபோது, இலங்கைக்குச் சார்பாக புதுடில்லி மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கைகள் காரணமாக இந்தியா மீது கோபமாக உள்ளனர்.

இலங்கைக்கு சீனா உதவிசெய்வதற்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்றை சீனாவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான உயர் ஸ்தானிகம் முன்பாக தமிழர்கள் கடந்த திங்கட்கிழமை நடத்தியுள்ளனர். இதில் கலந்துகொண்ட சுமார் 50 அமெரிக்கத் தமிழர்கள் " சீனா, இலங்கையின் தமிழ் இன அழிப்பு நடவடிக்கைக்கு உதவிசெய்வதை நிறுத்து" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கி நின்றதோடு, "இலங்கையின் யுத்த மீறல்களுக்கு சீனாவே நிதியுதவி வழங்காதே" என்ற சுலோகங்களும் ஒன்றுகூடி சத்தமாகக் கூறப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டப் போராட்டத்தை மேரிலாண்டை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அரச சார்பற்ற நிறுவனமான, இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு ஒழுங்கு செய்திருந்தது. இலங்கையில் நடந்த ராணுவ நடவடிக்கைகளுக்கு புதுடில்லி ஆதரவு வழங்கியமைக்கு தமது அதிருப்தியை இதன் பேச்சாளர் வெளிப்படுத்தியுள்ளார். அதோடு இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டதாகவும், சமாதானப் பேச்சுக்கள் மூலம் தனித்த நாட்டை அடைவதற்கான குறிக்கோளுக்கு தாம் ஆதரவு வழங்குவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக