அன்பார்ந்த யாழ், வவுனியாவாழ் தமிழீழமக்களே!
வணக்கம். எதிர்வரும் சனியன்று (08.08.2009) தாயகத்தில் யாழ்ப்பாணம் மாநகரசபை, வவுனியா நகரசபைத்தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன.
உலகமே வெட்கித்தலைகுனியும் பாரிய இனப்படுகொலைகளை வன்னியில் நடாத்திமுடித்த கையோடும், 3 இலட்சம் மக்களை முட்கம்பிவேலிகளிற்குள் அடைத்து வைத்துக்கொண்டும் இத்தேர்தலை சிங்களஅரசு அவசர அவசரமாக இரத்தக்கறையுடன் நடாத்துகின்றது.
இலங்கையில் கடந்த 30ஆண்டுகளாக நடைபெற்ற ஆயுதப்போராட்டமானது பயங்கரவாதப்பிரச்சனையேதவிர தமிழ்மக்களிற்கான உரிமைப்போராட்டமல்ல என்பதனை வெளியுலகிற்குத்தெரிவிக்க இத்தேர்தலை சிங்களஅரசு பயன்படுத்தப்போகின்றது. எனவே,சிங்களஅரசின் இக்கபடநோக்கத்தை நிறைவேற்ற பெரும் இனஅழிவைச்சந்தித்தநாம் அனுமதிக்கக்கூடாது.
தாயகத்தில் அகிம்சைரீதியிலான போராட்டங்கள் ஆயுதமுனையில் அடக்கப்பட்டபோதுதான் ஆயுதப்போரட்டம் வெடித்தது. இன்று அந்த ஆயுதப்போராட்டம் பெரும் இனஅழிப்பின்பின் மௌனமாக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தமிழர்களின்பேராட்டம் தணிந்துவிடவில்லை. அது தற்போது வேறுவடிவம் பெற்றுள்ளது. இந்தநேரத்தில்தான் யாழ், வவுனியாவாழ் தமிழ்மக்கள் இத்தேர்தலை சந்திக்கவுள்ளார்கள். இத்தேர்தலில் தன்கபடநோக்கத்தை நிறைவேற்ற சிங்களஅரசானது பலதுணைக்குழுக்களை தன்னோடு இணைத்தும் தனியாகவும் போட்டியிடவைத்துள்ளது. அத்துடன், முகாம்களில் வாழும் சிலமக்களிற்கு சலுகைகளைப்புரிகின்ற தேர்தல்காலநாடகங்களையும் சிங்களஅரசும் இக்குழுக்களும் இன்று அரங்கேற்றி நன்றாகவே நடிக்கின்றார்கள். இவ் நடிப்பைக்கண்டு எமதுமக்கள் ஏமாந்துபோய்விடக்கூடாது. இச்சலுகைகளிற்காக பல்லாயிரம் மாவீரர்களும் பல இலட்சக்கணக்கான தமிழ்மக்களும் தங்கள் இன்னுயிரை அர்ப்பணிக்கவில்லை, என்பதனையும் நிரந்தரத்தீர்விற்காகவே அவர்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்தார்கள் என்பதனையும் நாம் என்றென்றும் மறந்துவிடக்கூடாது.
எனவே, தங்களின் பலநாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிர்கள் சிங்களஅரசினால் ஏற்கனவே பறிக்கப்பட்டாலும் தமிழ்மக்களின் உரிமைக்காக தொடர்ந்தும் குரல்கொடுப்பவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் மாத்திரமே. இத்தேர்தலிலும் 'தமிழ்மக்கள் வரலாற்றுரீதியாக வாழ்ந்துவந்தபிரதேசங்களில் சுயநிர்ணயஉரிமையுடன்கூடிய ஆட்சியே இனப்பிரச்சனைக்குத்தீர்வாக அமையும்' என்று பலஉயிர் அச்சுறுத்தல்களிற்கு மத்தியிலும் போட்டியிடும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களிற்கே வாக்களிக்குமாறு யாழ், வவுனியாவாழ் தமிழ்மக்களை அன்போடும் உரிமையோடும் நாம் கேட்டுக்கொள்கின்றோம். மனதில் கவலைகளையும் சோர்வையும் சுமந்து வாக்களிக்காமல் இத்தேர்தலைப் புறக்கணித்தால், எதிரியே வெல்வான். எனவே, வாக்களிக்காமல் இருந்துவிடாதீர்கள். உங்களிற்குக் கிடைத்திருக்கும் இத்தேர்தல்வாக்கை தமிழினப்படுகொலைகளைப்புரிந்த சிங்களஅரசிற்கெதிராகப் பயன்படுத்துங்கள். தமிழினஉரிமையை வென்றெடுக்க சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துங்கள். தமிழர்களிற்கு சிங்களஅரசால் இழைக்கப்படுகின்ற கொடுமைகளையும் பாரிய உயிர்ச்சேதங்களையும் எமது போராட்டத்தின் நியாயத்தன்மையையும் இத்தேர்தல்மூலம் வெளிப்படுத்துங்கள். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கே வாக்களியுங்கள்!
தமிழினப்போராட்டம் வெல்லும்வரை நாம் அனைவரும் இணைந்து ஒன்றாய்போராடுவோம். தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம் நன்றி
நெதர்லாந்துத்தமிழ்அமைப்புக்களின் கூட்டமைப்பு |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக