ஸ்ரீவிக்கிரமராஜசிங்கனின் கொள்ளுப் பேரன் தன்னைப் பற்றியும் தனது மூதாதையர் பற்றியும் மேலும் பல தகவல்களைத் தந்துதவினார். பிரிட்டீஷார் எங்களது வம்சத்தவரை அரசியல் கைதிகளாக மதித்து, எங்களது குடும்பங்களுக்கு மன்னர் மான்யம் அளித்து வந்தனர். அது 1832 முதல் 1948 வரை தொடர்ந்தது. பின்னர் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னரும் இது தொடர்ந்தது. சேனநாயகா பிரதமராக இருந்த சமயம் தில்லியில் அவருக்கு கொடுக்கப்பட்ட விருந்து ஒன்றில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இலங்கைக்குள் எங்களது சந்ததியினர் நுழையக் கூடாது என்று பிரிட்டீஷார் போட்டிருந்த தடையை ரத்து செய்யக்கூடாதா என்று கேட்டேன். அந்தத் தடை இப்போது இல்லை; இலங்கை வந்து வாழ விரும்பினால் உதவி செய்வதாகவும் சொன்னார். நான் இலங்கைக்குச் சென்று அசோசியேடட் பிரஸ்ஸில் நிருபராகச் சேர்ந்தேன். அசோசியேடட்பிரஸ் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மூன்று மொழிகளில் தினசரிகளையும், வார இதழ்களையும் நடத்திக் கொண்டிருந்தது. பின்னர் பண்டாரநாயகா, அசோசியேடட்பிரஸ் நிறுவனத்தை தேசியமயமாக்கினார். அதற்குப் பிறகு அங்கே பத்திரிகைச் சுதந்திரம் இருக்காது என்று ராஜினாமா செய்தேன். லண்டனில் சிறிது காலம் பணியாற்றினேன். இப்போது நான் பெங்களூரில் வசித்து வருகிறேன். என் தந்தையார் கோவிந்தசாமி ராஜா தமிழக அரசில் நிதித்துறையில் பணியாற்றியவர். அவர் பிறந்ததே வேலூர் கோட்டைச் சிறையில்தான். அவருடைய தந்தை வெங்கடசாமி ராஜா இலங்கையில் பிறந்தார். நான் படித்தது சென்னையில்தான். பட்டுக்கோட்டை அழகிரிசாமி எங்களது வம்சாவளி. நானும் அவரும் அக்கா-தங்கையரை மணந்து கொண்டோம். கண்டியில் தமிழ் மன்னர்களின் ஆட்சியிலிருந்த சிங்கள மந்திரிகள், அரசு ஆணைகள் யாவற்றிலும் தமிழிலேயே கையொப்பமிட்டனர் என்பதுதான் முக்கிய அம்சம். பல நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கடித ஓலைகள் தமிழிலேயே இருந்தன என்பதும் வரலாற்றுச் சான்றுகள். இதற்கான ஆதாரங்கள் யாவும் கண்டி மியூசியத்தில் இன்றும் இருக்கின்றன. மந்திரியாய் இருந்த சிங்களவர்களுக்கும் பிரிட்டீஷாருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்திலும் தமிழில் தான் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்களுக்கு உரிமையில்லை என்று சொல்வதில் அர்த்தமே இல்லை. மன்னர்கள் இலங்கையில் தமிழர் பகுதியை மட்டும் ஆளவில்லை. அவர்கள் சிங்களவர் பெரும்பான்மையாக வசித்த பகுதிகளையும் ஆண்டு வந்திருக்கிறார்கள். இதற்கு எங்களது வம்சாவளியினரே சரித்திரச் சான்றாகத் திகழ்கிறார்கள். எனவே சிங்களவருக்கு எவ்வளவு உரிமைகள் இலங்கையில் உண்டோ அதற்கு அதிகமாக தமிழர்களுக்கும் உரிமை உண்டு'' என்றார் கே.ஜி.எஸ்.ராஜசிங்கன் (குங்குமம் வார இதழ் 1983). அஇஅதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு ஆகஸ்ட் 13-14, 1983-இல் சென்னையில் நடைபெற்றபோது ஜூலையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கும், குட்டிமணி, ஜெகன், தங்கதுரை போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட விடுதலை வீரர்கள், சிங்களக் கைதிகளால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஈழத் தமிழர்கள் நலன் காக்கும் வகையில் நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி "ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 14-ஆம் தேதி வரை கருப்புச் சட்டை அணிய வேண்டும்' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆகஸ்ட் 10-இல் நடைபெற்ற கண்டனக் கூட்டங்களில் அமைச்சர்கள் சோமசுந்தரம், கா.காளிமுத்துவின் உணர்ச்சிகரமான பேச்சுக்கள் குறித்து அக்டோபர் 17 அன்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த எம்.ஜி.ஆர்., ""சோமசுந்தரமோ, காளிமுத்துவோ என்னை மீறிப் பேசமாட்டார்கள். அவர்கள் பேசுவதற்கு முன்பு என்ன கருத்துக்களைச் சொல்லப்போகிறோம் என்று சொல்லிவிட்டுத்தான் பேசுவார்கள். எங்களுக்குள் கருத்து ஒற்றுமை உண்டு. அப்படி கருத்து ஒற்றுமை இல்லை என்றால், இந்த அமைச்சரவையைக் கலைத்துவிட்டு வெளியேறுவோம் (28.10.1983-தினமணி) என்று கூறினார். "தமிழர்கள் தலைவர்களிடம் நிபந்தனையுடன்தான் பேசுவேன்' என்று ஜெயவர்த்தன கூறியதாக ஆகஸ்ட் 30, 1983 செய்தியைப் பார்த்த எம்.ஜி.ஆர்., ஜெயவர்த்தனாவுக்கு ஒரு முதலமைச்சர் பதில் கூறி நேரடி அறிக்கை விடுவது மரபு இல்லை என்று தெரிந்தும், ஓர் அறிக்கை வெளியிட்டார். ""தமிழர்கள் கட்டுப்பட்டிருக்கிறார்கள்; கட்டுண்டிருக்கிறார்கள். ஜெயவர்த்தன தயவு செய்து தமிழகத்தை ஆத்திரத்திற்கு உள்ளாக்கிட வேண்டாம் என்று மட்டும் இந்த நேரத்தில் கேட்டுக்கொண்டு, இருப்பது ஓர் உயிர்தான், போவதும் ஒரு முறைதான்' என்று அறிஞர் அண்ணா கூறியதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈழத்தில் நடைபெறுகின்ற இனப்படுகொலை காரணமாகத் தமிழகத்தில் உள்ள ஐந்து கோடி தமிழர்களும் சீறிப் பாயக்கூடிய நிலையை ஜெயவர்த்தன நிச்சயமாக ஏற்படுத்தக்கூடாது என்று தமிழக முதல்வர் என்ற முறையிலும், அஇஅதிமுகவை நிறுவியவன் என்ற முறையிலும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். சிங்களப் பேரினவாத அரசுக்கு, அமெரிக்க அரசு ஆயுத உதவி செய்வதைக் கண்டித்து அக்டோபர் 12, 1983 அன்று அமெரிக்காவின் போக்கைக் கண்டித்து பேரணி நடத்தப்பட்டது. அன்றைய தினம் அமெரிக்கத் தூதரக துணை கான்சல் ராய் விக்டேக்கரிடம் ஒரு மனு ஒன்றினையும் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அளித்தார். அந்த மனுவில், ""மனித உரிமைகள் குறித்து நாள்தோறும் பேசி வருகின்ற அமெரிக்க அரசு, இலங்கைத் தமிழர் படுகொலைகள் குறித்து கண்டனம் எதுவும் தெரிவிக்காமல், தனது பாதுகாப்பு அமைச்சரை ரகசியமாக இலங்கைக்கு அனுப்பி வைத்தது தமழக மக்களின் உள்ளத்தைப் புண்படுத்தியுள்ளது. இதன்மூலம் இலங்கையில் நடந்த படுகொலைகளுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கிறது என்பது உறுதியாகிறது. அமெரிக்கா ஆயுத உதவி அளிக்கும் அதேவேளையில், தனது நலனுக்காக இலங்கைத் தமிழர் பிரச்னையை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்த முயல்வதைக் கைவிட்டு, திருகோணமலையில் அமெரிக்க ராணுவ தளம் அமைக்கும் முயற்சியையும் கைவிட வேண்டும்'' (13 அக்டோபர் 1983 - தினமணி) என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. நெடுமாறன் படகு மூலம் யாழ்ப்பாணம் செல்லும் போராட்டம் அறிவித்த நிலையில் உரிய நாள் வந்ததும், ராமேஸ்வரத்தில் இருந்து அனைத்து படகுகளும் அப்புறப்படுத்தப்பட்டன. இதுகுறித்து எழுந்த விமர்சனத்துக்குச் சட்டப்பேரவையில் 15 நவம்பர் 1983 அன்று முதல்வர் எம்.ஜி.ஆர். அளித்த பதிலில், ""நெடுமாறன் படகில் அங்கே போய், இடையில் யாராவது சுட்டால் அவரிடம் துப்பாக்கி இருக்கிறதா- தடுப்புக் கருவிதான் இருக்கிறதா; ஒன்றும் இல்லை; மனத்துணிவுதான் இருக்கிறது. அங்கே போய் ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? அதனால்தான் படகுகள் இல்லாமல் செய்தோம்... நான் போய் பிரசாரம் செய்யமுடியாது; நெடுமாறன் செய்கிறார்; ஆட்கள் வருகிறார்கள்; பத்திரிகைகளில் செய்தி வருகிறது; வரட்டும். அது, அந்த நாட்டுக்கு நல்லதாக அமையட்டும். உணர்வுகள் பெருகுமானால் பெருகட்டும் என்பதற்காகவே அவரைக் கைது செய்யாமல் விட்டோம் (சட்டமன்ற உரை). அக்டோபர் 1984-இல் முதல்வர் எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றிய நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி மட்டும் எம்.ஜி.ஆரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார். எம்.ஜி.ஆரின் உடல்நிலை தேற, தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்றும் தெரிவித்தார். இந்தச் சமயம் பார்த்துப் பிரதமர் இந்திரா காந்தி ஒருநாள் அதிகாலை தனது மெய்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு மரணமுற்றார். இந்தச் சம்பவம் எல்லோரையும் அதிர்ச்சியுற வைத்தது. இந்திரா காந்தி சுடப்பட்டு மரணமடைந்தார் என்று கேள்விப்பட்டதும் தமிழ் ஈழ விடுதலைப் போராளிகளும் அதிர்ச்சியடைந்தனர். இந்திரா காந்தி, ஈழத் தமிழர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவுவார் என்று அவர்கள் நம்பியிருந்தனர். இந்திரா காந்தி சுடப்பட்டு வீழ்ந்த செய்தி மக்களுக்கு போய்ச் சேரும் முன்பாக அடுத்த பிரதமர் ராஜீவ் காந்தி என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி முடிவெடுத்ததாக அறிவிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரும் ராஜீவுக்கு பதவிப் பிரமாணமும் செய்வித்தார். இரவு பகலாக இந்திரா காந்தியின் உடல் வைக்கப்பட்டிருந்த காட்சிகளை இந்தியத் தொலைக்காட்சி அஞ்சல் செய்தது. அடுத்த பதினோராவது நாளில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்தது. எம்.ஜி.ஆருக்கு அடுத்த நிலையில் இருந்த நிதியமைச்சர் நெடுஞ்செழியன் நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழ்நாட்டுத் தேர்தலையும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொண்டார். மத்தியில் ராஜீவ் ஆட்சி. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சி அமைந்தது. எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்து திரும்பியதும், உடல்நலம் குன்றிய நிலையிலும் முதல்வராகத் தொடர்ந்ததும் இப்போது சரித்திரமாகிவிட்ட நிகழ்வுகள். அதனால் நாட்டு மக்களிடையே ஏகப்பட்ட பரபரப்பு. அங்கே இலங்கையிலோ இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும், எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவும் சிங்கள இனவாத ஆட்சியாளர்களால் சாதகமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அவர்கள் தமிழர்களைக் கொன்று குவிப்பதுதான் நின்றதா? இல்லை; அது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தமிழ் விடுதலைப் போராளிகளும் தங்களால் முடிந்த வரை எதிர்த்தாக்குதல் தொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.நாளை: பண்டாரியின் பாராமுகம்!
கருத்துக்கள்
ஆசிரியரே! 1982இல் மதுரையில் நடைபெற்ற உலக தமிராச்சி மகாநாட்டில் எம்ஜிஆர் அமிர்தலிங்கம் முன்னிலையில் மேடையில் வைத்து இலங்கைத்தமிழர் பிரச்சனை பற்றி என்ன கூறினார் என்பதை ஏன் மறைத்து விட்டீர்கள். அவை இலங்கைத்தமிழர் வரலாற்றுக்குள் வராதா?
By Gnanam
7/25/2009 6:09:00 PM
7/25/2009 6:09:00 PM
M.G.R really great leader this karuna waste man.
By ISAAC
7/25/2009 12:30:00 PM
7/25/2009 12:30:00 PM
One doubt ! Is kandy king vikramarajha singhe was a hindu or buddhist? Because author says that vikramaraja singhe helped spreading of buddhism in SL. Clarification is required. Also author should also clarify whether is there any 'Hindu sinhala' population is there ? Hope author would clarify these points.
By C P Kumaravelu
7/25/2009 11:45:00 AM
7/25/2009 11:45:00 AM