செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009




1983-இல் ஏற்பட்ட இனக் கலவரத்தையொட்டிய தீர்வுகாண பேச்சுவார்த்தைக்கு ஜெயவர்த்தனா உடன்படமாட்டார். அப்படி உடன்பட வைக்க வேண்டுமானால் ரகசியமான மாற்றுத் திட்டம் ஒன்றையும் செயல்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று, பிரதமர் இந்திரா காந்தியின் கொள்கை வகுப்பாளர்களான பாதுகாப்பு ஆலோசகர் ராமேஷ்வர் நாத் காவ் மற்றும் பிரதமரின் அலுவலக நிர்வாகிகள் நினைத்தனர். பலவகையிலும் ஆலோசித்து பிரதமர் இந்திரா காந்தியின் பார்வைக்குப் பாதுகாப்பு ஆலோசகர் காவ் "மிகவும் ரகசியம்' என்று எழுதப்பட்ட ஒரு கோப்பை வைத்தார். அந்தக் கோப்பில் இருந்த செய்தி இதுதான்: "ஜெயவர்த்தனா, இலங்கைப் பிரச்னையைத் தீர்க்க ராணுவ நடவடிக்கையே தீர்வு என்று செயல்பட்டால் பிரதமர் இந்திராவுக்கு இருவகையில் பாதிப்பு ஏற்படும். ஒன்று அரசியல் நெருக்கடி, மற்றது தெற்கில் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்படப்போகும் ஆபத்து. அரசியல் நெருக்கடி என்பது தமிழகத்தில் இருந்து உருவாகும். கூட்டணியின் புதிய நண்பரான எம்.ஜி.ஆர். நெருக்குதல் கொடுப்பார். தமிழகத்தில் மக்கள் இலங்கைப் பிரச்னையால் கொதிப்படைந்து இருக்கிறார்கள். இலங்கை மீது இந்தியா படையெடுத்துத் தாக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இரண்டாவது, அமெரிக்கா பக்கம் சாய்ந்துள்ள ஜே.ஆர். ஜெயவர்த்தனா ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு கண்டுவிட்டால் அது இந்தியாவின் தெற்கே, பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கும். இது கவனத்துடன் அணுக வேண்டிய பிரச்னை - என்று குறிப்பிட்டதுடன், ஜெயவர்த்தனாவை வழிக்குக் கொண்டுவர வேண்டுமானால் பேச்சுவார்த்தை என்ற உத்திக்கிடையே போராளிக் குழுக்களுக்குத் தேவையான பயிற்சியைக் கொடுத்து அவர்களை பலசாலிகளாகவும் உருவாக்க வேண்டும்' - என்றும் தெரிவித்திருந்தார், காவ். அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் ஆலோசனைகள் பெறப்பட்டு, அவர்கள் இலங்கையில் முகாமிட்டிருக்கும் நேரத்தில், இரு வழிகளில்தான் ஜெயவர்த்தனாவைப் பணியவைக்க முடியும் என்று இந்திராவும் நம்பினார். காரணம் கிழக்கு பாகிஸ்தானில் கிடைத்த வெற்றி. முக்தி வாகினி என்கிற போராளிக் குழுவினர் அதற்குப் பயன்பட்டனர். அதேபோன்ற "ரகசியத்திட்டப்படி' செயல்படுமாறு தனது "மூன்றாவது ஏஜென்சிக்கு' உத்தரவிட்டார். பேச்சுவார்த்தை நடக்கும் அதே வேளையில் போராளிக் குழுக்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து அவர்களை பலமுள்ளவர்களாக மாற்ற வேண்டும் என்பதே அந்த ரகசியத் திட்டமாகும். இந்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஜெயவர்த்தனாவை பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்குமாறு நெருக்குதல் அளிக்க வேண்டும். அப்படி அவர் ஒத்துக் கொள்ளவில்லையென்றால், அவரது நாடு சிதறுண்டு போகும் என்று உணர்த்தவே பயிற்சித் திட்டம் என கொள்கைத் திட்டம் உருவாயிற்று. (வேலுப்பிள்ளை பிரபாகரன் - டி. சபாரத்தினம் நஹய்ஞ்ஹம் ர்ழ்ஞ்) இதனைத் தொடர்ந்து இந்திரா காந்தி, எம்.ஜி.ஆரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, நாம் அரசியல் ரீதியாக ஜெயவர்த்தனாவை பேச்சுவார்த்தை நடத்த நிர்பந்திக்கும் அதேவேளையில், போராளிக் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சியும் அளித்து, அவர்களைத் தகுதியானவர்களாக மாற்ற வேண்டும் - என்று கூறியதாகத் தெரிகிறது. எம்.ஜி.ஆருக்கு இந்த அணுகுமுறை திருப்தி தரவில்லை. அவர், ""இது போதாது; இலங்கை மீது படையெடுக்க வேண்டும் என்பதே தமிழர்களின் உள்ளக்கிடக்கை'' என்றார். ""அப்படியென்றால் தமிழர்களின் நிலை என்ன ஆகும்? அவர்கள் ஏற்கெனவே சிங்களவர் பிடியில் உள்ளனர். காமினி திசநாயக்கா என்கிற அமைச்சர் பேசியதை நாம் கவனிக்க வேண்டும்: எங்கள் மீது படையெடுக்க இந்தியாவுக்கு 24 மணி நேரம் தேவைப்படும் என்றால், அனைத்து தமிழச்சிகளையும் - தமிழ் சிசுக்களையும் - குழந்தைகளையும் கொன்று முடிக்க எங்களுக்கும் அதே 24 மணி நேரம் போதும் என்று பேசியிருக்கிறார்'' எனக் கூறி முதல்வர் எம்.ஜி.ஆரை சமாதானப்படுத்தினார் பிரதமர் இந்திரா காந்தி. எம்.ஜி.ஆர். இந்திராவின் நிலைப்பாட்டிற்குச் சம்மதம் தெரிவித்து, பயிற்சி அளிப்பதற்கான வேலையில் உடனே ஈடுபடுவதாக கூறினார். (பண்ருட்டி ராமசந்திரன் நியூஸ்டுடே மே 2000-இல் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து) மூன்றாவது ஏஜென்சிக்கு பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் காவ் தலைமை ஏற்கவும், பிரதமரின் அலுவலக இயக்குநர் சங்கரன் நாயர், "ரா' அமைப்பின் தலைவர் கிரிஷ் சந்திர சக்சேனா உள்ளிட்ட குழுவினர் அவரின் கீழ் இயங்கவும் ஆரம்பித்தனர். போராளிக் குழுக்களுக்கு பயிற்றுவிக்கும் பொறுப்பு "ரா'வின் சென்னை அதிகாரியாக இருந்த டி.ஐ.ஜி. உன்னிகிருஷ்ணனுக்கு அளிக்கப்பட்டது. (இந்தியாவும் ஈழத் தமிழர் பிரச்னையும் - எல்.டி.டி.ஈ. வெளியீடு பக்-10) அவருக்கு உதவி செய்யும் இலங்கைத் தமிழராக சந்திரகாசன் (தந்தை செல்வாவின் இரண்டாவது மகன்) இருந்தார். குட்டிமணி, தங்கதுரை ஆகிய இருவருக்கும் இவர் வழக்கறிஞராக இருந்ததால், குழுக்களின் நிலையை அறிந்தவர் என்பதால், இந்தப் பணி வழங்கப்பட்டது. (ஆதாரம்: அதே வெளியீடு) பயிற்சி பெறப்போகும் முதல் குழுவாக "டெலோ' அமைந்தது. டி.ஐ.ஜி. உன்னிகிருஷ்ணன் இதனைத் தேர்வு செய்வதற்கு காரணம் இந்தியா சொல்வதை நிறைவேற்றும் ஓர் இயக்கமாக அது இருந்தது என்பதுதான் (ஊழ்ர்ய்ற்ப்ண்ய்ங் 1985) ஈ.பி.எல்.ஆர்.எஃப். இயக்கம் இடதுசாரி என்பதாலும் ஈராஸ் இயக்கம் சிறு குழு என்றும் ஒதுக்கப்பட்டது. இதன் பின்னர் இவ்விரு இயக்கங்களின் யாழ்ப்பாண அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் ""இந்தப் பயிற்சியை இயக்கத்தவர் பெறாவிட்டால் அழிந்து போவோம்'' என்று கூறினார்கள். "அப்படியென்றால் ஈழம் கோரிக்கையைக் கைவிடச் சொல்லி இந்தியா சொன்னால் என்ன செய்வீர்கள்' என்று எதிர்க்கேள்வி கேட்கப்பட்டது. "இதுதான் நிலைப்பாடு என்றால் நமது இயக்கத்தவர்கள் டெலோவில் இணைந்து விடுவார்கள். இங்குள்ள இளைஞர்களுக்கு வாழ்வே இல்லை. அவர்கள் எதையாவது செய்துவிட்டு சாகத் துடிக்கிறார்கள்' என்று கூறினர். இவ்வகையில் வாக்குவாதங்கள் இயக்கங்களிடையே நடைபெற்ற நிலையில் ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்க நிர்வாகிகள் உன்னிகிருஷ்ணனைச் சந்தித்து பயிற்சிக்கு இசைந்தார்கள். (வேலுப்பிள்ளை பிரபாகரன் - டி.சபாரத்தினம் நஹய்ஞ்ஹம் ர்ழ்ஞ்) பிளாட் இயக்கத் தலைவர் உமா மகேஸ்வரனை சந்திரகாசன் தொடர்பு கொண்டபோது, "ரா' என்னிடம் நேரில் தொடர்பு கொண்டால் பேசுகிறேன்'' என்று கூறிவிட்டார். உமா மகேஸ்வரன் இதற்கு சொன்ன காரணம் "சந்திரகாசன் நம்பிக்கைக்குரியவர் அல்ல; அவர் ஒரு சி.ஐ.ஏ. ஏஜென்ட்' - என்பதாகும். பின்னர் உமா மகேஸ்வரனும் இப்பயிற்சித் திட்டத்தில் இணைந்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அப்போது சென்னையில் இல்லை. பேபி சுப்பிரமணியம், சீலன் இருவர் மட்டுமே சென்னையில் இருந்தனர். மதுரையிலும் மேட்டூர் கொளத்தூரிலும் சென்னையிலுமாக நடைபெற்று வந்த இவர்களின் பயிற்சி முகாம்களுக்குப் பொறுப்பு ஏற்று அவர்கள் சென்னையில் இருந்தனர். பேபி சுப்பிரமணியத்தை சந்திரகாசன் தொடர்பு கொண்டார். அவர் மூலம் பிரபாகரனுக்குச் செய்தி அனுப்பிய போது ""இந்தியா உதவாக்கரைப் பேர்வழிகளுக்குப் பயிற்சி அளித்து ஊக்குவிக்கும் செயலில் ஈடுபடுகிறது. டெலோ 1981-இல் இருந்து களத்திலேயே இல்லை. ஈரோசும் அப்படித்தான். ஈரோஸ் குழுவினர் தானாக எதையும் செய்யவும் மாட்டார்கள்; மற்றவர்கள் செய்தால் அதைச் செய்ய விடவும் மாட்டார்கள்'' என்று கருத்து தெரிவித்த பிரபாகரன் "ரா' பிரிவினர் என்னை நேரடியாகத் தொடர்பு கொண்டால் யோசிக்கலாம் என்று கூறிவிட்டார். ஆனால் சென்னையில் நடைபெறும் நிகழ்வுகளை சரியான கோணத்தில் அணுகி, தனக்குத் தகவல் சொல்ல வேண்டும் என்ற நோக்கில் பிரபாகரன், லண்டனில் இருந்த பாலசிங்கத்தை சென்னை செல்லச் சொன்னார். பாலசிங்கத்தின் வரவுக்குப் பிறகு சில தொடர் மாற்றங்கள் நிகழ்ந்தன.நாளை: பிரபாகரன் சென்னை வருகை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக