புதன், 5 ஆகஸ்ட், 2009

ஆகஸ்ட் 05,2009,00:00 IST

சென்னை : ""புராதனச் சின்னங்களையும், சிற்பங்களையும் பாதுகாப்பதன் மூலம் அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லலாம்'' என, தமிழக சுற்றுலாத் துறைச் செயலர் இறையன்பு தெரிவித்தார். தமிழக சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை சார்பில், "புராதனச் சின்னங்களை பாதுகாத்தல்' என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கு நடத்தப்பட்டது. தமிழக அரசின் தலைமைச் செயலர் ஸ்ரீபதி, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாட்டின் மீது கொண்ட அன்பை, புராதனச் சின்னங்களை பாதுகாப்பதன் மூலம் வெளிப்படுத்தலாம். மகாபலிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவில், மிகக் கவனமாக பாதுகாக்கப்பட்டும், பல்வேறு காரணங்களால் சிதைந்து வருகிறது. பாறைகளில் செதுக்கப்பட்ட ஓவியங்கள், சிற்பங்கள் போன்றவற்றை பாதுகாப்பது குறித்து, கட்டுமானப் பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மலைகளில் உள்ள புராதனச் சின்னங்கள், ஓவியங்கள், நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில், அங்கு கல் குவாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புராதன சிற்பங்களைச் சுற்றிலும் வீடுகள் எழுப்படுவதால், அவற்றின் கலை அழகு பலருக்கும் தெரியாமல் போகிறது. சுற்றுலா தலங்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. சட்டங்கள் மூலம் இவற்றை தடுக்க இயலாது. மக்களுக்கு அவர்களுக்குள்ளாகவே விழிப்புணர்வு ஏற்பட்டால் தான், பண்டையகால சிற்பங்கள் முழு வீச்சில் பாதுகாக்கப்படும். இவ்வாறு ஸ்ரீபதி கூறினார்.சுற்றுலாத் துறைச் செயலர் இறையன்பு பேசியதாவது: தமிழகத்தில் உள்ள புராதனச் சின்னங்களையும், சிற்பங்களையும் பாதுகாப்பதன் மூலம் அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லலாம். நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட, இதுபோன்ற பணிப்பட்டறைகள் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் வெவ்வேறு இடங்களில் இதுபோன்ற விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்படும். தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், கங்கை கொண்ட சோழபுரம் கோவில், மகாபலிபுரத்தில் உள்ள சிற்பங்கள் உள்ளிட்ட, பாரம்பரியம் மிக்க, கலைநயத்துடன் கூடிய அரிய சிற்பங்கள் இந்தியாவில் தான் உள்ளன. இந்தியாவை உலகின் அருங்காட்சியகம் என்றே கூறலாம். இந்தியாவில் உள்ளது போல, உலகில் வேறெங்கும் புராதானச் சின்னங்கள் அதிக அளவில் இல்லை. அக்கால சிற்பிகள், முழு ஈடுபாட்டுடன் சிற்பங்களை உருவாக்கி உள்ளனர். அவற்றை பராமரிப்பதும், பாதுகாப்பதும் மக்களின் கடமை. சிற்பிகள் தங்களின் சிற்பங்களில், அவர்கள் பெயரை அச்சிடவில்லை. ஆனால், அதைச் சுற்றிப் பார்க்க வரும் பயணிகள் தங்கள் பெயரை அதில் குறிப்பிடுவதால், சிற்பங்களின் உண்மையான தன்மை சீரழிந்து வருகிறது. இவற்றைத் தடுக்க, பல அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு இறையன்பு கூறினார்.இந்நிகழ்ச்சியில், தொல்லியல் துறை முதன்மைச் செயலர் ஸ்ரீதர், சுற்றுலாத் துறை இயக்குனர் மோகன்தாஸ், இந்து சமய மற்றும் அறநிலையத் துறை ஆணையர் சம்பத் மற்றும் சுற்றுலாத் துறையின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக