வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

இலங்கையில் 'சமஷ்டி' போன்றே 'அதிகாரப் பகிர்வு' என்ற சொல்லும் காணாமல் போய்விடும்: கேணல் ஹரிகரன்
[சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2009, 11:48 மு.ப ஈழம்] [செ.நடராஜா]
சிறிலங்கா அரசியல்வாதிகள் எப்போதும் இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள். வேண்டும்போது எல்லாம் அவர்கள் எதனை வேண்டுமானாலும் பேசுவார்கள்; செய்வார்கள். அவர்கள் முன்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டி பற்றிப் பேசினார்கள். இப்போது அதனைத் தூக்கி வீசிவிட்டு அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசுகிறார்கள். சமஷ்டி போன்றே எதிர்காலத்தில் அதுவும் அரசியல் அரங்கில் இருந்து காணாமல் போய்விடும்.

சிறிலங்கா அரசு தமிழர்கள் விடயத்தில் பாராமுகமாக இருந்தால் கடந்த 30 வருடங்களில் அது சுற்றிவந்த சுழற்சியை மீண்டும் ஒருமுறை சந்திக்க வேண்டி இருக்கும் என்று இந்தியாவின் அரசியல் ஆய்வாளரும் இலங்கை அரசியல் பற்றி தொடர்ந்து எழுதி வருபவருமான கேணல் ஹரிகரன் இவ்வாறு தனது கட்டுரையில் தெரிவித்திருக்கிறார்.

இந்தியப் படையினர் இலங்கையில் இருந்தபோது அதனது புலனாய்வுத்துறையின் தலைவராகச் செயற்பட்டவர் கேணல் ஹரிகரன்.

அவரது கட்டுரையின் முழு விபரம் வருமாறு:

அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கீழான சிறிலங்கா அரசு, நாட்டின் சுதந்திரத்திற்கான போர் என்ற கூச்சலுடனேயே விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டைக்குத் தான் சென்றதாகக் கூறியது.

மக்கள் அவர்கள் பேசும் மொழியின் அடிப்படையில் பாகுபடுத்தப்படாது வாழும் ஒரு நாடு பற்றிய கனவு குறித்தும் அது பேசியது.

இப்போது, பெரும் தொகையான ஆட்களையும் பொருட்களையும் அழியக் கொடுத்து போரை முடித்துவிட்ட பிறகு, அங்கு மேற்கிளம்பிவரும் சமூக - அரசியல் சூழல் அந்தக் கனவு நனவாகும் என்ற நம்பிக்கையைப் பிரதிபலிக்கவில்லை. அந்தக் கனவு கனவாகவே போய்விடக்கூடும்.

இப்போது ஒன்று தெளிவாகிவிட்டது, இலங்கை அரசியலில் வழக்கற்றுப் போய்க்கொண்டிருக்கிற சொற்களின் பட்டியலில் 'சமஷ்டி' போன்றே 'அதிகாரப் பகிர்வு' என்ற சொல்லும் தூக்கி வீசப்பட்டுவிடும். அந்தப் பட்டியலில் 'சிறுபான்மையினர்' என்ற சொல்லும் விரைவில் சேர்ந்துகொள்ளக்கூடும்.

மேற்கிளம்பும் புதிய ஒழுங்கு

இலங்கை முழுவதும் இப்போது ஒரு புதிய ஒழுங்குமுறை மேற்கிளம்பி வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கூட்டணிக்குள் மட்டுமல்ல, ஏனைய முக்கிய அரசியல் கட்சிகளுக்குள்ளும் இந்தப் புதிய ஒழுங்கைக் காணமுடிகிறது.

முதன்மை அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் இதனைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அடிப்படை சமஷ்டிதான் என்று 2002 அமைதிப் பேச்சுக்களின்போது ஏற்றுக்கொண்டிருந்தார்.

இப்போதோ, தமது அரசியல் தேவைக்கேற்றாற்போல் அந்த விடயத்தை பலிபீடத்தில் தூக்கி வீசிவிடுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவோ அவரது கட்சியோ வெட்கப்படவில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சி இதனைவிட மேலானது ஒன்றல்ல.

அரசியல்வாதிகளின் இரட்டை நிலைப்பாடுகள்

சிறிலங்காவை அவதானித்து வருபவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமான விடயம் அல்ல. அங்குள்ள அரசியல் கட்சிகள், அவர்களின் தலைவர்கள் பலரைப் போலவே இவ்வாறு குத்துக்கரணம் அடிப்பது வழமையானதுதான். இது மாதிரியான நிகழ்வுகள் ஏற்கனவே பலமுறை நிகழ்ந்துள்ளன. அது அவர்களின் அரசியல் பண்பாட்டின் ஒரு பகுதியாகிவிட்டது.

தேர்தலுக்கு முன்னராக எடுக்கப்படும் இத்தகைய இரட்டை நிலைப்பாடுகளால் பொதுமக்கள் கவரப்படுவார்களாக என்பது சந்தேகத்திற்குரியதுதான்.

சிறிலங்காவின் அரசியல் நடவடிக்கைகள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்ததற்கு இத்தகைய அரசியல் இரட்டைப் பேச்சுக்களே முதன்மைக் காரணம். இறுதியில், சரியோ தவறோ, தமிழ் இளைஞர்கள் தங்கள் கைகளில் ஆயுதங்களைத் தூக்கினார்கள். ஏனெனில் தோற்றுப் போன அரசியல் நடவடிக்கைகளையே அவர்கள் தொடர்ந்தும் பார்த்து வந்திருந்தார்கள்.

மகிந்தவும் அவரது வாக்குறுதிகளும் தேர்தலும்

கிழக்கு மாகாணத் தேர்தல்கள் முடிந்ததும், அரசியலமைப்பின் 13 ஆவது சட்டதிருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மீண்டும் மீண்டும் வாக்குறுதி வழங்கியிருந்தார். ஆனால், இப்போது அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் அவர் எந்த அவசரத்தையும் காட்டவில்லை போன்றே தோன்றுகின்றது. இதற்கு வலுவான உள்நாட்டு அரசியல் காரணங்கள் ஏதாவது இருக்கலாம்.

தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாக அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே அரச தலைவர் தேர்தலை நடத்துவதற்கு மகிந்த தீர்மானித்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

இப்போது தனக்கு உள்ள பிரபலத்தை/செல்வாக்கை லாபமாக்கி இரண்டாவது பதவிக் காலத்தையும் பெற்றுவிடுவதற்கு அவர் எண்ணுகிறார் என்பது, அண்மையில் அவர் அளித்த நேர்காணலில் இருந்து தெரிகிறது. குறிப்பாக தெற்கில் தனது வாக்குகளை தக்க வைத்துக் கொள்வதற்கு அவர் விரும்புகிறார்.

அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு பெரும்பான்மை மக்களின் அனுமதி உண்மையில் தேவையா?

ஒருவேளை அப்படி நடவடிக்கை எடுப்பதற்கு மக்களின் ஆணை வேண்டும் எனில், அவர்களின் நாடித்துடிப்பை அறிந்து பார்ப்பதற்கு நாடாளுமன்றத் தேர்தலே உண்மையானதாக இருக்கும்.

அரச தலைவர் தனது பதவிக் காலத்தின் ஒரு பகுதியை இழக்காமலேயே நாடாளுமன்றத்தில் அவரது கட்சிக்குப் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்கும் அது உதவும்.

மாறாக, அரச தலைவருக்குக் கிடைக்கக்கூடிய உறுதியான ஆதரவானது நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பெரும் வெற்றி பெறுவதற்குக்கூட வழிவகுக்கலாம்.

அப்படி நடந்தால், சிறிய கட்சிகளில் தங்கியிருக்கும் நிலையில் இருந்து அரச தலைவரை வெளியே கொண்டுவருவதற்கு இது உதவக்கூடும்.

ஆளும் கட்சிக்குள் கொண்டுவரப்பட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்கள் போன்றோர் அரச தலைவரின் கொள்கை உருவாக்கத்தில் செல்வாக்குச் செலுத்தும் நிலையைக் குறைக்கவும் உதவக்கூடும்.

ஜனநாயகத் தேர்தல் சாத்தியமா?

முகாம்களில் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டுள்ள, ஏறத்தாழ தமிழர் சனத்தொகையில் 20 விழுக்காட்டினர் விடுவிக்கப்பட்டால், தேர்தல்கள் ஜனநாயக ரீதியாக நடக்கும்.

அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்களா? அரசு பதிலளிக்க வேண்டிய கேள்வி இது.

ஏனெனில் மக்களின் விடுதலை தொடர்பில் அரசின் வெவ்வேறு கிளைகளில் இருந்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகின்றன. அத்தோடு அரசின் இலக்குக்கும் அது அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையில் பாரம்பரியமாகவே பெரிய இடைவெளி காணப்படுகின்றது.

அனைத்துக் கட்சிக் குழு முடிவு

அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஆராய்ந்த அனைத்துக் கட்சியின் முடிவுகள் தொடர்பிலும் அரச தலைவர் ஆர்வத்துடன் இருக்கிறார். இந்தக் குழு 2006 ஆம் ஆண்டு மகிந்த அரச தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் பெரும் ஆரவாரங்களுடன் நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவின் முடிவுகள் எவையும் செயற்படுத்தப்படவில்லை என்றால் அது செயல் இழந்துபோன ஏனைய குழுக்களைப் போன்ற ஒன்றாகவே அமையும்.

குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. நிறைவேற்று அரச தலைவர் முறையில் இருந்து அடிமட்டங்களுக்கான அதிகாரங்கள் மற்றும் உரிமைகளை வழங்குவது வரையில் பரந்தளவு விடயங்களை அது உள்ளடக்கியுள்ளதாக குழுவின் தலைவர் திச விதாரண கூறினார்.

எனினும் இந்த அர்த்தமுள்ள நடவடிக்கையும் இப்போது ஆபத்தில் உள்ளது. அரசியலமைமைப்பைத் திருத்துவதற்கு முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க மேற்கொண்ட முயற்சியின் வரிசையில் இதனையும் வரலாறு சேர்த்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

இந்திய நிலைப்பாடு

இலங்கையில் அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியா முன்னர் காத்திரமாகக் கருத்துத் தெரிவித்து வந்தது. பின்னர் 13 ஆவது சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை விரும்புவதாக அது இறங்கி வந்தது.

அதுவாவது நடக்குமா என்ற சந்தேகம் வந்தபோது இந்தியா வாயை மூடிக்கொண்டு மௌனமாக இருந்துவிட்டது.

எகிப்தில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் கூட்டத் தொடரின்போது பிரதமர் மன்மோகன் சிங்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் சந்தித்துப் பேசிக்கொண்டதன் பின்னரே இந்தியா வாயை மூடி மௌனியானது.

ஆனால், இவை எல்லாம் அரசியல் நடவடிக்கைகள். இனப்பிரச்சினைக்கான தீர்வு நோக்கிய உறுதியளிக்கப்பட்ட பாதையில் நிகழும் நடவடிக்கைகள் அல்ல.

இது சிறிலங்காவின் குறைபாடும் அல்ல அவர்களின் நடைமுறைப்படுத்தலில் உள்ள குறைபாடு.

சிறுபான்மையினர் அற்ற இலங்கை

சிங்களவர்கள் அல்லாத சமூகத்தவரை சிறுபான்மையினர் என்று சொல்வதை அகற்றிவிடுவதே தனது விருப்பம் என்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். அதாவது சிறுபான்மையினர் அற்ற சிறிலங்காவை உருவாக்குவதே அவர் கனவு.

இது மிகச் சிறந்த உணர்ச்சிகரமான விடயம். ஆனால் அரசியல், பொருளாதார, அரசியலமைப்பு மற்றும் சமூக ரீதியில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாத வரை அந்தக் கனவு அது நனவாகவோ யதார்த்தமாகவோ முடியாது.

சிறுபான்மையினர் இல்லாத சிறிலங்கா என்கிற கனவு, யதார்த்தத்துக்குத் திரும்பும் நடவடிக்கைகளால் கலைக்கப்படும் வரையில் தூரத்தில் தெரியும் கனவாகவே தொடரும். அதுதான் உண்மையாகும் என்று தோன்றுவதான் கவலை தரும் விடயம்.

சாத்தியமாகா அதிகாரப் பகிர்வு

இரு சமூகங்களுமே ஒருவருக்கு ஒருவர் இடைஞ்சல் செய்து கொண்டதன் மூலம் இனப் பிளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் மேற்கிளம்பி வரலாம்.

தமிழர்கள் சமத்துவமாக நடத்தப்படவேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை அரசு தட்டிக்கழித்தால் இந்த நிலைமை மேலும் மோசமாகும்.

முன்னர் வாக்குறுதி அளிக்கப்பட்டபடி 6 மாதங்களுக்குள் தமது சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்பப்படாமல் 3 லட்சம் மக்களும் தொடர்ந்து தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்படுவது இதற்கு மேலும் மேலும் உரமூட்டுவதாக அமையும்.

பல பத்தாண்டு வலிதரும் முரண்பாடுகளின் பின்னர் இப்போது பயம் மற்றும் சந்தேகம் இல்லாத சூழலே இலங்கை மக்களுக்கு வேண்டியது. முடிவெடுக்கும் அதிகாரத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நியாயமான பங்கு கிடைக்கும் போதே அது சாத்தியமாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது நடைபெறவில்லை.

மீண்டும் ஒரு சுழற்சி தேவையா?

சிங்கள - தமிழ் சமூகங்களுக்கு இடையிலான வேறுபாடு அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. சிங்கள, தமிழ் அரசியலுக்கு இடையில் 'பாணும் பட்டரும்' மாதிரி அது வந்துவிட்ட பின்னர், ஒருங்கிணைந்த இலங்கை என்ற அடையாளத்தை கரு மேகங்களாக அது மறைக்கின்றது.

அதன் விளைவு இலங்கை அரசியலில் இருந்து கடும்போக்கு வாதத்திற்கும் அதில் இருந்து ஆயுத முனைப்புக்கும் அதில் இருந்து கிளர்ச்சிக்கும் அதில் இருந்து பயங்கரவாதத்திற்கும் அதில் இருந்து போருக்கும் அதில் இருந்து இப்போது அரசியலுக்குமாக ஒரு முழுச் சுழற்சியை முடித்துள்ளது.

இதே மாதிரியான சுற்றுக்குள் மீண்டும் ஒருமுறை இலங்கை பயணிக்க வேண்டுமா? இதுதான் இன்று ஆட்சியாளர்கள் முன்னும் மக்கள் முன்னும் உள்ள புறந்தள்ள முடியாத முக்கியமான கேள்வி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக