செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு- 63: ஜெயவர்த்தனா தில்லி வந்தார்!இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் பி.வி. நரசிம்மராவ் நடத்திய பேச்சுவார்த்தையையொட்டி கொழும்பிலிருந்த அகதிகள் முகாம்களில் இருந்தவர்களை யாழ்ப்பாணம் கொண்டு செல்ல இந்தியாவில் இருந்து பயணிகள் கப்பல் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெயவர்த்தனாவின் தம்பி எச்.டபிள்யூ. ஜெயவர்த்தனா புது தில்லி வந்தார். தமிழர் - சிங்களவர் இடையே சமாதானம் பேச, இந்தியா நடுவராக இருப்பது குறித்தும், நிவாரணப் பணிகளில் ஈடுபட ஏற்படும் செலவுத் தொகைக்கான நிதியுதவி பெறுவது குறித்தும் அவர் பேச்சு நடத்தினார். அவரிடம் பத்து லட்சம் டாலர் இந்தியா வழங்குவதாகப் பிரதமர் இந்திரா காந்தி சம்மதம் தெரிவித்தார். இதன் பின்னர், ஜே.ஆர். ஜெயவர்த்தன இலங்கை நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி, தமிழர்த் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அப்பேச்சுவார்த்தை ஐந்து அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் தெரிவித்ததுடன், அதன் விவரத்தையும் வெளியிட்டார். அதன்படி, ஓரளவு சுயாட்சியுடன் கூடிய, திட்டமிடப்பட்ட அபிவிருத்தி சபைகளை அமைப்பது; வன்முறைகளில் ஈடுபட மாட்டோம் என உறுதியளித்தல், மன்னிப்பு வழங்குவது குறித்து பேசுதல்; யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படை நடமாட்டத்தை நிறுத்தி வைப்பதுடன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது; தமிழ்மொழியையும் தேசிய மொழியாக அறிவிப்பது; தமிழர் விடுதலைக் கூட்டணி பிரிவினைக் கோரிக்கையை கைவிடுவதும், தடுப்புக் காவலில் உள்ளோரை விடுவிப்பதும் என அவர் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதுமே இந்திரா காந்தி "இந்த அம்சங்கள் தமிழர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதாக அமையாது' என்று கருத்துத் தெரிவித்து, "அதே சமயம் இலங்கையின் ஒருமைப்பாட்டை ஆதரிப்பதாகவும்' கூறியதுடன் இலங்கை உள் விவகாரங்களில் "இந்தியா, தலையிடாது - மத்தியஸ்தர் பொறுப்பை மட்டுமே வகிக்கும்' - என்றும் உறுதிபட ஜெயவர்த்தனாவிடம் தெரிவித்தார். தொடர் நிகழ்வுகளாக இலங்கைத் தமிழர்த் தலைவர்களை இந்திரா காந்தி மீண்டும் சந்தித்து உரையாடினார். "ஒவ்வொரு தமிழ் இளைஞனுக்கும் ராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தோட்டப் பகுதிகளை தனி மாவட்டமாகப் பிரிக்க வேண்டும்' என்றும் வலியுறுத்தி வந்த தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் எஸ். தொண்டைமான் உள்பட பலரும் இந்த உரையாடலில் கலந்துகொண்டனர். இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் செப்டம்பர் 1, 1983 அன்று, பிரதமர் இந்திரா காந்தி, "தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் - இலங்கை அரசாங்கம் இடையே பேச்சுவார்த்தை நடத்த வசதியாக, இந்தியா தூதுவர் ஒருவரை அனுப்ப இருப்பதாக' அறிவித்தார். இந்த அறிவிப்புக்குப் பிறகு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ. அமிர்தலிங்கம், "நிபந்தனைகள் எதையும் அரசு விதிக்கவில்லை என்றால் - அப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளத் தயார்' - எனத் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் அ.அமிர்தலிங்கத்தை பத்திரிகையாளர்கள் சந்தித்த போது, "பேச்சுவார்த்தைகளில் எங்களது கட்சி நம்பிக்கை இழந்தபோதிலும் - இந்தியாவின் நடுவர் முயற்சிக்கு மதிப்பளித்து வந்திருப்பதாகவும்' அவர் கூறினார். புது தில்லியில் இந்திரா காந்தியையும் வெளியுறவுத் துறை அமைச்சர் பி.வி. நரசிம்மராவையும் அ. அமிர்தலிங்கம் சந்தித்தார். அவர் தரப்பில் வலியுறுத்தப்பட்டவை என்னவென்று தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்திரா காந்தியின் சிறப்புத் தூதராக, இந்திய வெளி விவகார கொள்கை வகுப்புக் கமிஷனின் தலைவராக இருந்த ஜி. பார்த்தசாரதி கொழும்பு சென்றார். அவர் இந்திரா காந்தியின் செய்தியாகக் கொண்டு சென்றது என்னவென்றால், "பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பாகவும், அது முடியும் வரையிலும் இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில், மக்கள் அச்சமின்றி வாழ ஏற்ற பாதுகாப்புச் சூழலை உருவாக்குவது அவசியம்' - என வலியுறுத்தியதாக யூகச் செய்திகள் வெளியாயின. இது தவிர, ஜி.பார்த்தசாரதி மேலும் இரு தடவைகள் கொழும்புப் பயணம் மேற்கொண்டார். அவரின் இரண்டாவது விஜயத்தின் போது (நவம்பர் 2-ஆம் தேதி) அவருக்கு அங்கே ஒரு சங்கடம் நேர்ந்தது. அதே நாளில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் கொங்டா பெய் மற்றும் அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதர் வால்ரஸ் ஆகிய இருவரும் இலங்கைக்கு வந்திருந்தனர். இந்தச் செய்கை வல்லரசு நாடுகள் இலங்கைக்கு அனுசரணையாக இருப்பதை, இந்தியாவுக்கு உணர்த்துவதாக அமைந்தது. அதைவிடவும் இலங்கை மீது இந்தியா அதிரடியாகப் போர் தொடுத்துவிடுமோ என்ற அச்சமும் ஜெயவர்த்தனாவுக்கு இருந்தது என்று இலங்கைப் பத்திரிகைகளே அப்போது கருத்து தெரிவித்தன. முன்பு ஜெயவர்த்தனாவால் அறிவிக்கப்பட்ட ஐந்து அம்சங்களுடன், (அ) தமிழர்ப் பகுதிகளை ஒன்றிணைக்கும் பிரதேச சபை (ஆ) காவல் துறை சம்பந்தமான அதிகாரத்தை பிரதேச சபையிடம் ஒப்படைப்பது (இ) மத்திய அரசாங்க சேவையிலும் ராணுவத்திலும் மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தல் (ஈ) இனக் கலவரத்தின்போது ஏற்பட்ட இழப்புகளுக்கு நட்ட ஈடு வழங்குதல் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்தியது. இவ்வகையான மாற்றங்களுடனும், 26 ஜூலை 1957-இல் ஏற்பட்ட பண்டா - செல்வா உடன்படிக்கை மற்றும் 24 மார்ச் 1965-இல் ஏற்பட்ட டட்லி - செல்வா உடன்படிக்கையின் அடிப்படையிலும் அனைத்துக் கட்சி மாநாட்டில் வைப்பதற்கென 14 அம்சத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த திட்ட வரையறை, புது தில்லியில் 1983 நவம்பர் 21-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற இருந்த காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, அதற்கு முன்பாக புது தில்லி வந்திருந்த எஸ்.தொண்டைமான், அ.அமிர்தலிங்கம் ஆகிய மூவருடனும் தனித்தனியே நடத்திய பேச்சுவார்த்தைகளின் மூலமாக உருவானதாகும். இதனை உருவாக்குவதில் ஜி. பார்த்தசாரதியின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. இந்திரா காந்தியால் உருவாக்கப்பட்ட 14 அம்சத் திட்ட வரைவு இலங்கை அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டது:நாளை: 14 - அம்சத்திட்ட வரைவு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக