செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'-65:
ஜெயவர்த்தனாவின் புதிய 14 அம்சத் திட்டம்



இடம் பெயரும் ஈழத் தமிழர்கள்- அமிர்தலிங்கம்
அதுநாள்வரை "அனைத்துக் கட்சி மாநாடு' என்று சொல்லப்பட்ட இந்த அமைவு 10.1.1984 அன்று கொழும்பில் தொடங்கியபோது, "வட்டமேஜை மாநாடு' என்று பெயரிடப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி, பிரதமர் இந்திரா காந்திக்குச் சொல்லப்பட்ட, காட்டப்பட்ட - ஒப்புதல் பெறப்பட்ட 14 அம்சத் திட்ட வரைவு மாற்றப்பட்டு புதிய 14 அம்சத் திட்ட வரைவின் கீழ் விவாதம் நடைபெறும் திடீர் என அறிவிக்கப்பட்டது. எனவே, இந்த மாநாட்டில் பங்கேற்க இயலாது என்று தமிழர் விடுதலைக் கூட்டணி கூறிவிட்டது. "நிபந்தனைகள் விதிக்கப்படா விட்டால் கலந்து கொள்வதாக ஏற்கெனவே கூறியிருந்தோம். புதிய 14 அம்சக் கோரிக்கையில் முதல் அம்சமே எங்களை வெளியேற்றப் போதுமானதாக உள்ளது' என்று கூட்டணி கூறி வெளியேறியது. இலங்கை அரசு கெஜட்டில் வெளியான புதிய 14 அம்சத் திட்ட வரைவு வருமாறு: 1984-ல் அனைத்து கட்சி மாநாட்டில் கவனிப்பதற்கான நிகழ்ச்சி நிரலினை உருவாக்குவதற்காக பின்வரும் நகல் பிரேரணைகளை உபயோகிக்கலாம் என்ற தலைப்புடன் தயாரிக்கப்பட்ட "ஆ' இணைப்பு (அய்ய்ங்ஷ்ன்ழ்ங்-ஆ) ஒரு 14 அம்ச திட்டம் ஆகும். 1. ""தனிநாடு'' கோரிக்கையை கைவிடுதல். 2. ஒவ்வொரு மாகாணத்திலுமுள்ள கவுன்சிலால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஒரு சர்வஜன வாக்கெடுப்பிலும் ஊர்ஜிதம் செய்யப்பட்ட பிறகு (அந்த மாவட்டங்கள் கொண்டதாக) பிரதேச சபைகள் ஏற்படுத்துவது. 3. மேலே கூறியபடி அமைக்கப்படும் பிரதேச சபைகள் ஒவ்வொன்றிலும் பெரும்பான்மையை பெறுகிற கட்சியின் தலைவர், அந்த பிரதேசத்திற்கு முதலமைச்சராக, குடியரசு தலைவரால் நியமிக்கப்படுதல் என்ற ஒரு மரபு ஏற்படுத்தப்படும். அப்படி நியமிக்கப்படும் முதலமைச்சர் சபை அங்கத்தவர் குழுவுடன் தமது பணிகளைச் செய்வது. 4. ""பிரதேசங்களுக்கு மாற்றிக் கொடுக்கப்படாத'' விடயங்கள் யாவற்றிலும் குடியரசு தலைவரும் பாராளுமன்றமும் தொடர்ச்சியாக தம் பொறுப்பினை வைத்துக் கொள்வதாக அமையும். தேசம் முழுவதையும் பற்றிய குடியரசின் இறைமை, தேசத்தின் ஐக்கியம், வளர்ச்சி, அபிவிருத்தி போன்றவை குடியரசு தலைவரது பொறுப்பிலும், பாராளுமன்ற தலைவரது பொறுப்பிலும் இருக்கும். 5. பிரதேசங்களுக்கு அதிகாரம் மாற்றிக் கொடுத்து ஒதுக்கப்படுகின்ற விடயங்கள் அடங்கிய ஒரு பட்டியலில் விவர நுணுக்கங்கள் ஆராயப்படும். அந்த பட்டியலில் உள்ள விடயங்கள் சம்பந்தமாக சட்டம் இயற்றவும், நிர்வகிக்கவும் பிரதேச சபைகளுக்கு அதிகாரம் தரப்படும். அந்த பட்டியலில் உள்ள விடயங்கள் சம்பந்தமாக சட்டம் இயற்றழும், நிர்வகிக்கவும் பிரதேச சபைகளுக்கு அதிகாரம் தரப்படும். வரிகள் விதிக்கவும், தீர்வைகள், கட்டணங்கள் விதிக்கவும், கடன் பத்திர வெளியீடு மூலம் கடன் பெறவும், மத்திய அரசிடமிருந்து மானியம், நிதி ஒதுக்கீடுகள் பெறவும் சபைக்கு அதிகாரம் உண்டு. 6. திருகோணமலை துறைமுகத்தின் நிர்வாகம் மத்திய அரசிடமே இருக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளுதல். 7. ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒரு மேல் நீதிமன்றம் இருக்கும். தேசம் முழுவதுக்குமாக ஓர் உயர் நீதிமன்றம் இருக்கும். இந்த உயர் நீதிமன்றம் அரசியலமைப்பு பற்றிய வழக்குகளிலும் தீர்ப்பளிக்கும் அதிகாரங்களுடன் வேறு சில சிறப்பு அதிகாரங்களும் கொண்டதாக இருக்கும். 8. பிரதேச ஊழியர், உத்தியோக வர்க்கம் ஒன்று ஏற்படுத்தப்படும். அது அந்த பிரதேச அரசினால் நியமிக்கப்படுவோர் விடயத்திலும், அந்த பிரதேசத்திற்கு மத்திய அரசினால் அனுப்பப்படும் உத்தியோகத்தர் விடயத்திலும் அதிகாரம் உள்ளதாக இருக்கும். 9. பிரதேச தேர்வாணைக் குழுக்கள் ஏற்படுத்தப்படும். ஊழியர்களை தேர்ந்தெடுப்பது, அவர்களுக்கான ஒழுக்காற்று அதிகாரங்களை செயல்படுத்துவது போன்ற அதிகாரங்கள் அந்த தேர்வாணைக் குழுவிடமிருக்கும். 10. இலங்கையின் உத்தியோக வர்க்கத்திலும், பாதுகாப்பு படையிலும் ஒவ்வொரு இனமும் அதன் ஜனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ற வகையில் இடம் பெறும். 11. உள்நாட்டு பாதுகாப்பிற்கான போலீஸ் படையில் அந்த பிரதேசத்து ஜனத்தொகையிலுள்ள விகிதாசாரத்தை பிரதிபலிப்பதாக இருக்கும். 12. புதிய குடியேற்றங்கள் ஏற்படுத்துவது நாடு தழுவிய ஒரு கொள்கை உருவாக்கப்படும். 13. அரச கரும மொழியான சிங்கள மொழி, தேசிய மொழியான தமிழ் இரண்டையும் பற்றி அரசியலமைப்பு ஷரத்துகளும் சட்டங்களும் ஒப்புக் கொள்ளப்படும், செயல்படுத்தப்படும். தேசிய கீதம், தேசியக் கொடி பற்றிய சட்டங்களும் அப்படியே. 14. அரசியல் லட்சியங்களுக்காக வன்செயல்கள், பயங்கரச் செயல்கள் கையாளப்படுவது எதிர்க்கப்படும் என்பதில் ஒற்றுமை காணப்படும். - இவ்வாறு புதிய 14 அம்சத் திட்டவரைவு கூறியது. இவ்விரு இணைப்புகளுக்கும் (அய்ய்ங்ஷ்ன்ழ்ங்) இடையே முக்கிய மாற்றங்கள் பல இருக்கின்றன. இரண்டாவதாக வெளியிடப்பட்ட "ஆ' அதாவது ‘ஆ’ இணைப்பில், (1) ஒரே மாகாணமாக வடக்கு - கிழக்குப் பகுதிகள் இல்லை என்றும் அவை தனித்தனியே இருக்கும் என்று கூறுகிறது. (2) சட்டம் ஒழுங்கு பற்றிய குறிப்பில் பின் இணைப்பில் மாகாணம் சார்ந்ததாகக் கூறப்படவில்லை. (3) குடியேற்றங்கள் தொடர்பான அதிகாரம் மைய அரசிடமே இருக்கும் என்கிறது இரண்டாவது இணைப்பு. இவ்வகையான மாற்றங்கள் தமிழர்களின் விருப்பங்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்றும் அமிர்தலிங்கம் குற்றம் சாட்டினார். தமிழர் விடுதலைக் கூட்டணியினரை இம்மாநாட்டில் பங்கேற்க வைப்பதில் ஜி. பார்த்தசாரதி பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். முடிவில் கூட்டணி சார்பில் அ. அமிர்தலிங்கம், எம். சிவசிதம்பரம், ஆர். சம்பந்தன் கலந்துகொண்டனர். அரசியல் கட்சிகள் மட்டுமே பங்கு பெறும் என்று சொல்லப்பட்டிருந்ததற்கு மாறாக சமயப் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர். ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஆர். பிரேமதசா, எம்.சி.எம். கலீல், திருமதி ஆர்.என். புலேந்திரன், தமிழர் காங்கிரஸ் சார்பில் ஜி.ஜி. பொன்னம்பலம் (ஜூனியர்) வி.சி. மோதிலால் நேரு, டி. மகேந்திரராச - இ.த.அ.ச. (சமஷ்டி) சார்பில் ஜி. கணேசலிங்கம், பி.எஸ். சூசைதாசன், எம்.ஏ. மகதூப் - இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் எஸ். தொண்டமான், ஜே. பெரியசுந்தரம், எம்.எஸ். செல்லசாமி - கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.பி. சில்வா, பீட்டர் கெனமன், சரத் முத்தெடுவக, ஐ.தொ.கா. சார்பில் ஏ. அஸிஸ், ஜி. குணதாசா, ஜெய சிங்கா, பி.ஆர்.ஏ. செüமிய மூர்த்தி, எஸ்.எஸ்.எல்.பி. சார்பில் டாக்டர் கொல்வின் ஆர்.டி. சில்வா, பெர்னார்ட் சொய்சா, எஸ். செந்தில்நாதன் மற்றும் மகா சங்கம், கிறிஸ்துவ குழு, இந்துக் குழு என மூன்று மூன்று பேர், அரசு சார்பில் அதுலத் முதலி, கே.டபிள்யூ. தேவநாயகம், எம்.எச். முகமது பங்கேற்றனர். இது தவிர சிறப்பு அழைப்பாளர்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். முதல் நாள் நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், ஜேவிபியும் கலந்துகொள்ளாவிட்டாலும் அதன் அங்கத்தினரில் பலர் அடுத்தடுத்த கூட்டங்களில் பங்கேற்றனர். ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவோ இதில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று கூறிவிட்டார். ஜேவிபியின் பிரதிநிதியான தினேஷ் குணவர்த்தனா மாநாட்டில் இருந்து விலகிக் கொண்டார். தங்களது கருத்து ஏற்கப்படவில்லை என்று அவர் காரணம் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ "இம்மாநாட்டின் மூலம் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை என்றால், தேர்தலைச் சந்திக்க வேண்டும்' என்று கூறியது. அதன்படி பண்டார நாயக்கா "இலங்கையின் சகல கட்சிகளும் ஏற்கத்தக்க ஓர் ஒப்பந்தத்தை நாட்டின் எல்லைக்குள் விவாதித்துத் தீர்மானிக்க வேண்டுமே தவிர அயல்நாட்டின் தலையீடு அல்லது வற்புறுத்தலின்பேரில் எடுக்க முடியாது'' என்றார். இவ்வாறாக முதலில் தயாரிக்கப்பட்ட 14 அம்சத் திட்டம் கைவிடப்பட்டு, அதில் மாற்றம் செய்து தமிழர்களின் எண்ணங்கள் நிராசையாக்கப்பட்ட திட்டங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஓராண்டு (ஜனவரியில் தொடங்கி டிசம்பர் வரை) பேச்சுவார்த்தை நாடகம் திடீர் என முடிவு எதுவும் எடுக்காமலே முடிவுற்றுவிட்டது. (பெüத்த சிங்களமும் சிறுபான்மையினரும் - சந்தியா பிள்ளை கீதபொன்கலன்) இந்த ஓராண்டு பேச்சுவார்த்தை காலங்களில் போராளிக் குழுக்கள் பல இடங்களில் தாக்குதலைத் தொடுத்தன. சிங்களவ குடியேற்றங்களிலும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்நிலையில், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தனது மெய்க்காப்பாளர்கள் சத்வந்த் சிங், பியாந்த் சிங், கேகார் சிங் ஆகியோரால் 1984 அக்.31-இல் சுடப்பட்டு இறந்தார். இவரின் திடீர் மறைவு ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. காரணம் ஜெயவர்த்தனாவுக்கு இந்திரா காந்தி எப்போதுமே சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். இந்திரா என்ன செய்வாரோ என்ற பயமே ஜெயவர்த்தனாவை அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இஸ்ரேலுக்கும், சீனாவுக்கும் ஓட வைத்தது. இந்த பயம் என்பது மனப்பிரமையால் வந்ததல்ல. பிரதமர் இந்திரா காந்தி சென்னை கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியது பொருள் பொதிந்தது என்று ஜெயவர்த்தனா நம்பினார். அந்த உரையின் ஒரு பகுதி வருமாறு: "இலங்கையில் காட்டுமிராண்டித்தனமாக செயல்கள் மீண்டும் நடைபெறாதவாறு இருக்க, நடவடிக்கை எடுக்கப்படும். தமிழர்களுக்கும் இந்திய வம்சாவளித் தமிழருக்கும் இலங்கையில் நடைபெறும் கொடுமைகள் குறஇத்து கவலைப்படுகிறேன். உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், காட்டுமிராண்டிச் செயல்கள் மீண்டும் ஏற்படாமலிருப்பதற்கும் அறிக்கைகள் வெளியிடுவதைவிட எவ்வாறு இயங்க வேண்டும் என்பதையே சிந்திக்க வேண்டும்' (2.1.1983) என்று கூறியிருந்தார். இந்தப் பேச்சுதான் ஜெயவர்த்தனாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது; அந்த அச்சம் அகன்ற நிம்மதியில் அவர் பேச்சுவார்த்தை என்று போக்குக் காட்டிக் கொண்டே ராணுவத் தளவாடங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தனர். 1984-ஆம் ஆண்டு இறுதியில் தேசிய பாதுகாப்பு இயக்கம் ஒன்றை ஏற்படுத்தி, லலித் அதுலத் முதலி கையில் ஒப்படைத்தார். அவர் பொறுப்பு ஏற்றதும் - பயிற்சி பெற்ற ஒவ்வொரு புலிக்கும் 100 வீரர்கள் வீதம் இங்கே பயிற்சி அளிக்கப்படுவார்கள், என்று இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதேநேரம் புத்தத்துறவிகளும், பயங்கரவாதத்தை ஒழிக்கும்வரை எந்தத் தீர்வும் சிங்களவருக்குத் தேவையில்லை என்று வீராவேசம் காட்டினர். சிங்கள இனவாத பத்திரிகைகளோ, "1985-ஆம் ஆண்டு தை மாதம் புலிகள் சுதந்திர நாடு பிரகடனம் செய்யப் போவதாக' செய்தி வெளியிட்டு சிங்களவருக்கு வெறி ஏற்றின. இவ்வாறாக ஜெயவர்த்தனாவின் பேச்சுவார்த்தையின் நாடகம் அற்ப ஆயுளில் முடிந்து போனது.நாளை: விடுதலை அமைப்புகள் ஒன்றுபட்டன!
கருத்துக்கள்

Mr.Boopathy excelaent but the peoples who does n't know the Tamils History they cannot understand your words. Dear all readers please find some time to read our history also other wise we will be always slaves before britesh now the so called Indians??????? 60 years before no India.

By ISAAC
8/4/2009 12:05:00 PM

பிரபாவை வெறும் சோனியா மற்றும் கருணா என்கின்ற கண்ணாடிகள் வழியாக பார்ப்போருக்கு அவரின் தனித் தன்மையோ , ஆளுமைதிறனோ தெரிய வாய்ப்பே இல்லை.... அவர் ஒரு காலத்தினால் மாண்டுபோன இனத்தின் மிச்சம் .. சரித்திரத்தில் அவர் தலையாங்கானத்து செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ,முதலாம் ராசேந்திரன், ராஜேந்திரன் , குலோத்துங்கன்,அவர் காண்பது விக்ரம சோழனின் கனவு,அவர் இமய வரம்பனின் வழித் தோன்றல் ..சேரன் நெடுஞ்சேரலாதனின் மறு பிறப்பு , மகேந்திர வர்மன் , நந்தி வர்மரின் பிரதிபலிப்பு . தமிழ்மீது உண்மையான உள்ளன்போடு உற்று நோக்கினால் உள்ளே தெரிவதெல்லாம் இனிக்கும் அடி கரும்பு.. பழுவேட்டரையரும்., வந்திய தேவனும் காணமல் போகவில்லை .. காலம் கனியும் பொழுது கட்சி தருவன் காட்சி தருவான் கனி முகத்தோன் தமிழர் குலம் காக்கும் வேல் அய்யா ...!

By Boopathy
8/4/2009 10:35:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக