chennai high court லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
chennai high court லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 செப்டம்பர், 2012

இன்று "இந்தோ - சராசனிக்' கட்டடக் கலையின் அடையாளம்...

இன்று "இந்தோ - சராசனிக்' கட்டடக் கலையின் அடையாளம்...



'இந்தோ - சராசனிக்' கட்டடக் கலையின் மிகச் சிறந்த அடையாளமாகத் திகழும் சென்னை உயர் நீதிமன்றக் கட்டடம் ரூ.13 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டதாகும். இந்தக் கட்டடம் கட்டும் பணி 1888 அக்டோபரில் தொடங்கியது. ஜே.டபிள்யூ. பிராசிங்டன் என்ற கட்டடக் கலை நிபுணரின் மேற்பார்வையில் அவர் உருவாக்கிய கட்டட வடிவமைப்பின் அடிப்படையில் பணிகள் தொடங்கின. எனினும், எழும்பூர் ரயில் நிலையக் கட்டடம், ராஜாஜி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கட்டடம், சென்னை சட்டக் கல்லூரிக் கட்டடம் ஆகியவற்றை உருவாக்கிய ஹென்றி இர்வின் என்ற கட்டடக் கலைஞரின் மேற்பார்வையில் 1892 ஜூலையில் உயர் நீதிமன்றத்தின் கட்டடப் பணிகள் நிறைவு பெற்றன. மொத்தம் ரூ.9 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் உயர் நீதிமன்றக் கட்டடப் பணிகளை முடிப்பதென தீர்மானிக்கப்பட்டது. பணிகள் முடியும்போது ரூ.12 லட்சத்து 98 ஆயிரத்து 163 செலவாகியிருந்தது. ஐரோப்பிய கட்டடக் கலையை அடிப்படையாகக் கொண்டது என்றாலும், சென்னையின் காலநிலைக்கேற்ப வராண்டாக்கள், முற்றங்கள் போன்றவைகளையும் சேர்த்து இந்தக் கட்டடம் உருவாக்கப்பட்டது. லண்டன் நீதிமன்றத்துக்கு அடுத்து உலகிலேயே மிகப் பெரிய நீதிமன்றக் கட்டடம் எனப் போற்றப்படும் சென்னை உயர் நீதிமன்றக் கட்டடம், சென்னை மாநகருக்கான மிக முக்கிய அடையாளச் சின்னங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.கலையிலும் கரை கண்ட நீதிபதி சென்னை உயர் நீதிமன்றத்தின் நூற்றாண்டு விழா 1962-ம் ஆண்டு நடைபெற்றது. அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.அந்த விழாவில் அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி டி.எல். வெங்கட்ராமய்யர் கர்நாடக இசைப் பாடல்களைப் பாடியுள்ளார். அப்போது தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞராக இருந்த வி.பி.ராமன், நீதிபதியின் பாடலுக்கு வயலின் இசைத்துள்ளார்.பராசரன் - ஒரு சட்டக் கருவூலம்எதிர்த் தரப்பு வழக்குரைஞர்களாலும் மனம் திறந்து பாராட்டப்படும் சட்ட மேதை தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் கே.பராசரன்.1927-ம் ஆண்டு பிறந்த பராசரன், 62 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்குரைஞர் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவின் மிக மூத்த வழக்குரைஞர்களில் ஒருவர். 1983-ல் இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய சட்டத் துறையின் கருவூலமாகத் திகழும் பராசரனின் சேவையை போற்றும் வகையில், நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக மத்திய அரசு இவரை கடந்த ஜூன் மாதம் நியமித்தது.

உயர்நீதிமன்றத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா: காலனை வென்ற நீதிமன்றம்! chennai high court completed 150 years

உயர்நீதிமன்றத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா: காலனை வென்ற நீதிமன்றம்!



ஜெர்மனியின் எம்டன் போர்க் கப்பலின் பீரங்கி குண்டு வீச்சில் தப்பிய சென்னை உயர் நீதிமன்றம் காலனை வென்று இன்று லட்சக்கணக்கான மக்களுக்கு நீதி வழங்கிக் கொண
காலனான எமதர்ம ராஜனின் பாசக் கயிற்றை சிவ பெருமான் மீதான அதீத பக்தியால் பக்தன் "என்றும் பதினாறு' மார்க்கண்டேயன் வென்றது புராணம். ஆங்கிலேய கப்பல் படைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஜெர்மனியின் எம்டன் போர்க் கப்பலின் பீரங்கி குண்டு வீச்சில் தப்பிய சென்னை உயர் நீதிமன்றம் காலனை வென்று இன்று லட்சக்கணக்கான மக்களுக்கு நீதி வழங்கிக் கொண்டிருப்பது வரலாறு.சென்னையில் நீதிமன்றம் சுப்ரீம் கோர்ட் என்ற பெயரில் 1801-ம் ஆண்டு தொடங்கியது. முதல் தலைமை நீதிபதி சர் தாமஸ் ஆண்ட்ரூ ஸ்ட்ரேஞ்ச். இதுதான் பின்னர் உயர் நீதிமன்றமாக்கப்பட்டது. 1862-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்றம் தொடங்கப்பட்டது. துறைமுகத்துக்கு எதிரே உள்ள ஒரு கட்டடத்தில் இது இயங்கியது. முதல் தலைமை நீதிபதி சவால்டர் ஹார்மென் ஸ்காட்லேண்ட் என்ற ஆங்கிலேயர். பிற நீதிபதிகளும் வெள்ளையரே.பாரிமுனையில் ஓங்கி உயர்ந்து நிற்கும் சென்னை உயர் நீதிமன்றக் கட்டடம் கட்டும் பணி 1888-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1892 ஜூலை 12-ம் தேதி திறக்கப்பட்டது. அப்போது தலைமை நீதிபதியாக சர் ஆர்தர் காலின்ஸ் இருந்தார். "இந்தோ}சராசனிக்' எனும் கட்டடக் கலை நுட்பத்தை பயன்படுத்தி இக் கட்டடம் உருவானது. கலைநுணுக்கங்களுடன் கருங்கல்லில் அமைக்கப்பட்ட வளைவுகள், வட்ட வடிவில் கலை அம்சத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள கும்ப கோபுரங்கள் காண்போரை இன்றும் வியப்பில் ஆழ்த்தும். இத்தகைய அழகான கட்டடத்தை கட்ட அந்தக் காலத்தில் ஆன செலவு ரூ.13 லட்சம் மட்டுமே என்பது மூக்கில் விரலை வைக்கச் செய்யும் செய்தி. இன்று ரூ.500 கோடிக்கு மேல் இதற்குச் செலவாகும் என்று கட்டட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் கட்டடம் 1992-ம் ஆண்டு கட்டப்பட்டது. இருப்பினும், வெயில், மழை, குளிர் என காலம் எதுவாக இருந்தாலும் பழைய கட்டடத்தில் இருப்பதுபோல் இல்லை என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. இதுவே பழைய கட்டடத்தின் கட்டுமானச் சிறப்புக்குச் சான்றாகும்.சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி என்ற பெருமையை அடைந்தவர் திருவாரூர் முத்துசாமி ஐயர். வசதியற்ற குடும்பத்தில் பிறந்த இவர் தெரு விளக்கில் படித்து வாழ்க்கையில் உயரிய இடத்தைப் பிடித்தவர். சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இந்தியர் வரும் வாய்ப்பு நாடு சுதந்திரம் பெற்ற பின்புதான் கிடைத்தது. 1948-ம் ஆண்டு பி.வி.ராஜமன்னார் இந்த முதல் மரியாதையைப் பெற்றார்.உயர் நீதிமன்ற வளாகத்தின் கிழக்குப் பகுதியில் 1844-ல் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் புராதன சின்னமாக இன்றும் உள்ளது. இதனை பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.முதல் உலகப் போரின்போது சென்னை உயர் நீதிமன்றக் கட்டடத்துக்கு வந்த ஆபத்து "தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று' என்பது போல் விலகியது. எம்டன் கப்பலில் இருந்து வீசப்பட்ட குண்டு உயர் நீதிமன்ற வளாக கிழக்குப் பகுதி காம்பவுண்ட் சுவரின் ஒரு பகுதியை தகர்த்து சேதப்படுத்தியது. குண்டு 500 அடி உள்ளே தள்ளி விழுந்திருந்தால் உயர் நீதிமன்றமே உருக்குலைந்து போயிருக்கும்.இரண்டாம் உலகப் போர் தீவிரம் அடைந்த 1942-43ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் சில காலம் தியாகராய நகரில் உள்ள ஒரு பள்ளிக் கூடத்தில் இயங்கியது.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக 1992-ம் ஆண்டு ராஜஸ்தானைச் சேர்ந்த காந்தகுமாரி பட்நாகர் பணியாற்றினார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த பெண் இவர் ஒருவரே. சென்னை உயர் நீதிமன்ற முதல் பெண் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றவர் பத்மினி ஜேசுதுரை. 1962-ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் தனது 100 வயதை எட்டியது. அப்போது நடைபெற்ற விழாவில் அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். 1988-ல் 125-ம் ஆண்டு விழாவில் அப்போதைய குடியரசுத் தலைவரான ஆர். வெங்கட்ராமன் கலந்து கொண்டார்.சென்னை உயர் நீதிமன்ற 150-வது ஆண்டு நிறைவு விழா செப்டம்பர் 8-ம் தேதி சனிக்கிழமை (இன்று) நடைபெறுகிறது. தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விழாவில் பங்கேற்கிறார். வழக்கு மொழியாக தமிழ் விரைவில் அறிவிக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்றம் மேலும் பல்லாண்டு நீதி வழங்க வாழ்த்துகிறோம்.இந்த நல்ல நேரத்தில் நமது ஆதங்கம் ஒன்றையும் வெளியிடாது இருக்க முடியவில்லை. கொல்கத்தா, மும்பை உயர் நீதிமன்ற 150-வது ஆண்டு விழாக்களின்போது சிறப்பு அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. சென்னைக்கு ஏனோ அந்த மரியாதை தரப்படவில்லை. பொதுநல வழக்கு தொடரப்பட்ட பின்னரே சிறப்பு அஞ்சல் தலை வெளியிட மத்திய அரசு உத்தரவிட வாய்ப்பிருப்பதாக மத்திய அரசு வழக்குரைஞர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற விஷயத்திலேயே காலதாமதமான நீதியா? இதில் வடக்கு, தெற்கு பேதம் ஏதும் இருக்காது என்று நம்புவோமாக!

புதன், 29 ஆகஸ்ட், 2012

தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என ப் பெயர் மாற்றம் கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என ப் பெயர் மாற்றம் கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்



 சென்னை, ஆக. 28: சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி வழக்குரைஞர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.  பின்னர் வழக்குரைஞர் கே.பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:  உயர் நீதிமன்றத்தில் தமிழையும் வழக்கு மொழியாக அறிவிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதா உள்பட பலரும் இந்தக் கோரிக்கையை ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளனர்.  இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழா வரும் செப்டம்பர் 8-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். ஆகவே, இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக தமிழையும் உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக அங்கீகரித்து குடியரசுத் தலைவர் அறிவிப்பை வெளியிட வேண்டும்.  அதேபோல் சென்னை உயர் நீதிமன்றம் என்ற பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்திட வேண்டும்.  இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றிடுமாறு வலியுறுத்தி புதன்கிழமை முதல் கையெழுத்து இயக்கத்தை வழக்குரைஞர்கள் மேற்கொள்வார்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் செப்டம்பர் 3-ம் தேதி முதல் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றார் பாலு.  இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் பால் கனகராஜ், பொருளாளர் சுதா, வழக்குரைஞர்கள் ரஜினி, மு. பழனிமுத்து, பாரி, இரா. சிவசங்கர், முத்துராமலிங்கம், விஜயேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

பிரபாகரனின் தாயாருக்கு சிகிச்சை: அரசின் நிலையைத் தெரிவிக்க ஆணை



சென்னை, ஏப். 29: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயாருக்கு இந்தியாவில் சிகிச்சை அளிப்பது தொடர்பாக தமிழக அரசின் நிலையை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவிக்குமாறு ஆணையிடப்பட்டுள்ளது.வழக்கறிஞர் கருப்பன் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.இதுதொடர்பாக வழக்கறிஞர் கருப்பன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சிகிச்சைப் பெறுவதற்காக கடந்த 16-ம் தேதி இரவு மலேசியாவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். ஆனால், அவர் அதே விமானத்தில் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.முறையான விசாவோடு வந்த பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இது சட்ட விரோதம். தனி விமானம் மூலம் அவரை சென்னைக்கு மீண்டும் அழைத்து வந்து சிகிச்சை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் அவர் கோரினார்.நீதிபதி எலிப் தர்மாராவ், நீதிபதி கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.அப்போது, குடியுரிமை அதிகாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு விவரம்:பார்வதி அம்மாளை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு சார்பில் 2003-ம் ஆண்டு கோரிக்கை வந்தது. அதனடிப்படையில், அவருக்கு இந்திய விசா வழங்கக் கூடாது என்று வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்திய தூதரகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.ஆனால், கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகம் அவருக்கு தவறுதலாக விசா வழங்கியுள்ளது. இந்தியாவுக்குள் நுழையும் எந்த வெளிநாட்டவரையும் திருப்பி அனுப்புவதற்கான அதிகாரம் இந்திய குடியுரிமை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே, பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்று மனுவில் குடியுரிமைத் துறை தெரிவித்துள்ளது. பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக தமிழக அரசின் நிலை என்ன என்பதை அறிந்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருத்துக்கள்

இப்படியெல்லாம் கேட்டால் என்ன செய்வது? மத்திய அரசைக் ்காட்டிக் கொடுத்தால் தமிழக அரசு நிலைக்க முடியுமா? தமிழக அரசு உடந்தையாக இருந்ததைத்தான் ஒத்துக கொள்ள முடியுமா ? ஏற்னெவேதான் விரும்பினால் கேட்டால் கேட்டு முடியாது என்ற மறுமொழியைத் தெரிவிப்பதாகக் கூறியாயிற்றே! இதை விட வேறு வளா வளா கொளாகொளா விடை வேண்டுமா? சாமானியர்கள் ஆட்சி செய்வது மேட்டுக்குடி நீதிபதிகளுக்குப் பிடிக்கவில்லையா? எதிர்க்கட்சியாக இருந்தால் வீரமாக நடந்து கொள்வோம என்பதும் இல்லையேல் பெட்டிப்பாம்பாக அடங்கிக் கிடப்போம் என்பது்ம் இவர்களுக்குத் தெரியாதா என்ன? சரி! சரி! மாநாடு முடியும் வரையாவது வழக்கினை ஒத்தி வைக்கச் செய்வோம்.

(இலக்குவனார் திருவள்ளுவன்)

By Ilakkuvanar Thiruvalluvan
4/30/2010 2:59:00 AM

§"$&/$&((//$/%$"///&%$§(/%/§///%%$§)(=/($$"§/=)((&%$§"&%&(%&(%/§$§"&%%§"&%%$$%$$§%$$§%$$$%$"%&&%"!$$/((%$§$%$§§/&%(/%&&§§"%%&$"%%&%%&%%$::...இது என்னடான்னு பாக்குறீங்களா !...தமிழ்நாடு அரசு சீலிடப் பட்ட கவருல நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ரகசிய அறிக்கை !!! @ rajasji

By rajasji
4/30/2010 1:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை மாற்றக் கோரி வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம்



சென்னை, ​​ பிப்.2: சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று மாற்றக் கோரி வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ் மன்றம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இதுதொடர்பாக,​​ அந்த மன்றத்தின் தலைவர் அய்யாதுரை திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:அப்போதைய மெட்ராஸ் மாகாணத்துக்கு 'மெட்ராஸ் உயர் நீதிமன்றம்' என்று ஆங்கிலேயர்கள் பெயரிட்டனர்.​ இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு 'மெட்ராஸ் மாகாணம்' பிரிக்கப்பட்டு தமிழ்நாடு உருவானது.மெட்ராஸ் மாகாணத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் என்ற பெயர் பொருத்தமானது.​ ஆனால்,​​ தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பிறகு சென்னை உயர் நீதிமன்றம் என்ற பெயர் பொருத்தமற்றதாகும்.எனவே,​​ சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயர்மாற்றம் செய்ய வேண்டும்.உயர் நீதிமன்றத்தின் வழக்கு மொழி...சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆன பின்னரும் தமிழ்நாட்டின் தலைமை நீதிமன்றமான உயர் நீதிமன்றத்தில் தமிழ் உள்ளே நுழைய முடியவில்லை.உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக மாற்றக் கோரி தமிழக சட்டப்பேரவையில் 2008-ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.​ அந்த தீர்மானத்தின் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று தெரியவில்லை.பெயர்ப் பலகை...கேரளம்,​​ கர்நாடகம்,​​ ஆந்திர மாநிலங்களில் உயர் நீதிமன்றங்களின் பெயர்களில் அந்தந்த மாநில மொழிகள் இடம்பெற்றுள்ளன.​ ஆனால்,​​ சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் இடம்பெறவில்லை.​ இதற்காக எங்கள் மன்றம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மேற்கண்ட 3 கோரிக்கைகளையும் வலியுறுத்தி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தமிழ் மன்றம் சார்பில் என்.எஸ்.சி.​ போஸ் சாலையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

தமிழ்நாடு உயர்நீதி மன்றம் எனப் பெயர்சூட்ட வேண்டும்; தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்பதுடன் முத்திரையில் வாய்மையே வெல்லும் எனத தமிழ்தான் இடம் பெற வேண்டும் எனப் போராடி வெற்றி காணுங்கள். பிற மாநிலங்களில் மொழி உணர்வு இயல்பாக உள்ளதாலும் அந்தந்த மொழியாளர்களே முதன்மைப்பதவிகளில் உள்ளமையாலும் விசையைத் தட்டினால் விளக்கொளி எங்கும் சீராகப் பரவுவதுபோல் மொழிசார் நடவடிக்கைகள் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன. தமிழ் நாட்டில் ஒவ்வொன்றுக்கும் ஆணை தேவை. ஆணை இருந்தாலும் பொறுப்பில் உள்ளவர்க்கேற்ப நடவடிக்கை இருக்கும் என்ற அவல நிலை உள்ளது. மேலும் மாநிலத் தன்னாட்சி பேசும் கட்சியினர் இது போன்ற அதிகாரங்களையாவது பெறலாமே. தமிழுக்கே தலைமை;தமிழர்க்கே முதன்மை என்னும் நிலை தமிழ்நாட்டில் நிலவினால்தான் தமிழ் வாழும். தமிழர் வளம் பெறுவர்.மாறான சூழ்நிலையிலான வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/2/2010 3:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

அப்படியெல்லாம் பெருமைப்பட முடியாது. தமிழைக் காங்கிரசு என்றைக்கு மதித்தது. முதல்வர் சொன்னதைக் கேட்டு உடனே மாற்ற. கொல்கத்தா, மும்பை குவகாத்தி உயர் நீதி மன்றங்கள் பெயர் மாற்றம் பெறுவதால் அப்பட்டியலில் சென்னையும் சேருகிறது. சென்னை உயர் நீதி மன்றத்தைத் தமிழ்நாடு உயர் நீதிமன்றம் எனப் பெயர் மாற்றடம் செய்வதே முறையாகும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சென்னை, ஜன.31-

முதல்-அமைச்சர் கருணாநிதி வற்புறுத்தலை தொடர்ந்து `மெட்ராஸ் ஐகோர்ட்டு' என்ற பெயரை `சென்னை ஐகோர்ட்டு' என்று மாற்றம் செய்வது பற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. விரைவில் இதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

`மெட்ராஸ் ஸ்டேட்' என்று அழைக்கப்பட்டதை `தமிழ்நாடு மாநிலம்' என்று அண்ணா பெயர் மாற்றம் செய்தார். அதுபோல `மெட்ராஸ்' என்ற பெயரை சென்னை என்று பெயர் மாற்றம் செய்ய முதல்-அமைச்சர் கருணாநிதி சட்டம் கொண்டு வந்தார். அதன்படி, சென்னை என்ற பெயரில் அனைத்து நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. ஆனால், ஐகோர்ட்டு மட்டும் `மெட்ராஸ் ஐகோர்ட்டு' என்ற பெயரிலே இயங்குகிறது.
`மெட்ராஸ்' என்ற பெயர் சென்னை என்று முழுமையாக மாற்றம் செய்யப்பட்ட பிறகு `மெட்ராஸ் ஐகோர்ட்டு' என்பது சென்னை ஐகோர்ட்டு (தமிழில் சென்னை உயர்நீதிமன்றம்) என்று அழைக்கப்பட வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் கருணாநிதி கண்ணும், கருத்துமாக உள்ளார். இதையொட்டி மத்திய அரசை அவர் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், `மெட்ராஸ் ஐகோர்ட்டு' என்ற பெயரை `சென்னை ஐகோர்ட்டு' என்று பெயர் மாற்றம் செய்வது தீவிர பரிசீலனையில் இருப்பதாக மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை தெரிவித்து உள்ளது. தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் இதுகுறித்தும், இதேபோல பம்பாய் ஐகோர்ட்டு என்ற பெயரை மும்பை ஐகோர்ட்டு என்றும், கல்கத்தா ஐகோர்ட்டு என்ற பெயரை கொல்கத்தா ஐகோர்ட்டு என்றும், கவுகாத்தி ஐகோர்ட்டு என்ற பெயரை குவகாத்தி ஐகோர்ட்டு என்றும் பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுவான நடைமுறை என்னவென்றால் ஐகோர்ட்டுகளின் பெயரை மாற்றம் செய்யும்போது அந்தந்த மாநில அரசுகளுக்கு கருத்துரு அனுப்ப வேண்டும். அதுகுறித்து மாநில அரசுகள் ஆலோசனை செய்து அதற்கான கருத்துருவை அந்தந்த ஐகோர்ட்டுகளுக்கு அனுப்ப வேண்டும். அந்த கருத்துருவிற்கு ஐகோர்ட்டுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்பிறகு நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.
`மெட்ராஸ்' என்ற வார்த்தையை `சென்னை' என்று பெயர் மாற்றம் செய்வதற்காக தமிழக சட்டசபையில் 1996-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம், 1996-ம் ஆண்டு மெட்ராஸ் மாநகர் (பெயர் மாற்றம்) சட்டம் என அழைக்கப்படுகிறது. இந்த சட்டத்தின்படி `மெட்ராஸ்' என்ற சொல்லுக்கு பதிலாக `சென்னை' என்னும் சொல் அமைக்கப்படுதல் வேண்டும்.
``தொன்றுதொட்டே `மெட்ராஸ் மாநகர்' அடங்கியிருக்கின்ற பரப்பிடம் தமிழில் `சென்னை' என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது. பல்வேறுபட்ட மக்களால் பயன்படுத்தப்பட்டும் வந்துள்ளது. இந்த பெயரானது, ஒருமுகமாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. `சென்னை' என எல்லோராலும் ஒருமுகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதை கருத்தில் கொண்டும், மெட்ராஸ் மாநகரத்தின் சரித்திர, சமூக, பண்பாட்டு வகையிலான விவரங்களையும், பிற விவரங்களையும் சட்ட கருத்தில் கொண்டும், பிற மொழிகளில் இதுநாள்வரை `மெட்ராஸ்' என்றும் `மதராஸ்' என்றும் அழைக்கப்பட்டு வந்தது, இனிமேல் இந்நாள் (31-08-1996) முதல் `சென்னை' என அனைத்து மொழிகளிலுமே அழைக்கப்படும்'' என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது.
எங்கெங்கெல்லாம் `மெட்ராஸ்' என்ற பெயர் இருக்கிறதோ அவை எல்லாம் `சென்னை' என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதே இந்த சட்டத்தின் சாராம்சமாகும். அதன்படி `சென்னை' என்று எல்லா இடங்களிலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு முழு முதற்காரணம் முதல்-அமைச்சர் கருணாநிதிதான்.
ஆனால், `மெட்ராஸ் ஐகோர்ட்டு' என்றிருப்பதை `சென்னை ஐகோர்ட்டு' என்று பெயர் மாற்றம் செய்வது-ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசு ஆகியவற்றின் அதிகார எல்லைக்குள் வருவதால் பாராளுமன்றத்தில் இதற்காக சட்டம் நிறைவேற்றப்பட்டால்தான் `மெட்ராஸ் ஐகோர்ட்டு' - `சென்னை ஐகோர்ட்டு' என்று பெயர் மாற்றம் செய்யப்படும். இப்போது அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மத்திய அரசின் நடவடிக்கையால் விரைவில் பாராளுமன்றத்தில் இதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டு `சென்னை ஐகோர்ட்டு' என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.