கருநாடகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்: செயலலிதா
முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இயற்கை பொய்த்தாலும், தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுத்தாலும்,
நாட்டின் முதனிலைத் தொழிலாக விளங்கும் வேளாண் தொழிலை வெகுவாக வளர்ச்சி
அடையச் செய்வதிலும், விவசாய பெருங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை
வளப்படுத்துவதிலும் எனது தலைமையிலான அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு
வருவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
தற்போதைய நிலவரப்படி, 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் 17.65அடி
நீர் மட்டுமே உள்ள சூழ்நிலையில், காவேரி டெல்டா மாவட்டங்களில் உள்ள
விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொள்வது குறித்து இன்று (14.6.2013)
தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் விரிவான ஆய்வுக் கூட்டம்
நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில், நிதி அமைச்சர், மின்சாரம், மதுவிலக்கு
மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக
வளர்ச்சித் துறை அமைச்சர், வீட்டு வசதித் துறை அமைச்சர், வேளாண்மைத் துறை
அமைச்சர், பொதுப்பணித் துறை அமைச்சர்,வருவாய்த் துறை அமைச்சர், தலைமைச்
செயலாளர், தமிழ்நாடு மின்சார வாரியத்தின்தலைவர், நிதித் துறை முதன்மைச்
செயலாளர், பொதுப்பணித் துறை செயலாளர்,வேளாண்மைத் துறை செயலாளர், அரசு தலைமை
வழக்குரைஞர், சட்டத் துறை செயலாளர்மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து
கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், மேட்டூர் அணையின் இருப்பு 3.45 டிஎம்சி அடியாக
மட்டுமே உள்ளது என்றும், அணையின் நீர் வரத்து வினாடிக்கு 60 கன அடி என்ற
வீதத்தில் உள்ளது என்றும், மேட்டூர் அணையின் நீர் இருப்பு போதுமானதாக
இருந்து, அணைக்கு வரும் தண்ணீரின் அளவு நல்ல முறையில் இருந்தால் மட்டுமே
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறக்க முடியும்
என்றும், தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 17.65 அடியாக இருப்பதால்,
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தற்போது தண்ணீர் திறந்துவிட
இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டது.2013 ஆம் ஆண்டில் இதுவரை இயல்பாக பெய்ய
வேண்டிய மழை அளவான 180மில்லி மீட்டருக்கு பதிலாக 156 மில்லி மீட்டர் அளவே
மழை பெறப்பட்டுள்ளது என்றும்,நடப்பாண்டிலும், கடந்த ஆண்டிலும் மழையின் அளவு
குறைவாக உள்ளதால் நிலத்தடிநீரின் அளவும் குறைந்துள்ளது என்றும்
தெரிவிக்கப்பட்டது.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முடியாத சூழ்நிலையில்,
தஞ்சாவூர்,திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு
பருவமழை பெய்து வருகிறது. இதனை வைத்து, நடவுப் பணிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், மேலும்சில ஏக்கர் நிலப்பரப்பில் நெல்
நாற்றங்கால் விடப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள்
எடுத்துரைத்தனர்.இதனையடுத்து, இந்த இக்கட்டான சூழ்நிலையில், டெல்டா
விவசாயிகள் அதிக அளவில் குறுவை சாகுபடியை மேற்கொள்வதற்குத் தேவையான உதவிகள்
புரிவது மற்றும் புதிய தொழில்நுட்ப உத்திகளை கையாளுவது குறித்து நான்
அதிகாரிகளுடன் கலந்து உரையாடினேன். இதன் அடிப்படையில் கீழ்க்கண்ட
நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இதன்படி,
1. நிலத்தடி நீரை தற்போது பயன்படுத்தி நெல் சாகுபடியை மேற்கொள்ளும்
வகையில்,டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு
வழங்கியது போல்,நடப்பாண்டிலும் 12 மணி நேர மும்முனை மின்சாரம்
வழங்கப்படும். இந்த மும்முனைமின்சாரம் நாளை (15.6.2013) முதல் செப்டம்பர்
மாதம் வரை வழங்கப்படும்
.2. நீர் ஆதாரத்திலிருந்து வயலுக்கு நீரை எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக
180 மீட்டர்நீளம், 90 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட 6000 ழனுஞநு குழாய்கள்
விலை ஏதுமின்றி விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதனால் அரசுக்கு 12 கோடி
ரூபாய் செலவு ஏற்படும்.
3. குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் உயிர்
உரங்கள்,நுண்ணூட்ட சத்துக்கள், தாவரப் பூச்சிக்கொல்லி ஆகியவை விலை
ஏதுமின்றி வழங்கப்படும். இதனால் அரசுக்கு 6 கோடி ரூபாய் செலவு
ஏற்படும்.அரசின் இந்த நடவடிக்கைகளின் காரணமாக, சுமார் ஒரு லட்சம் ஏக்கர்
பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ள இயலும்.வரும் நாட்களில் தமிழகத்தில்
உள்ள காவேரி நீர்பிடிப்புப் பகுதிகளிலும்,கர்நாடகாவிலும் இயல்பான அளவில்
மழை பெய்யும் என நான் நம்புகிறேன். தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்க வேண்டிய
நீர் பெறப்படுவதற்கான உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன் பேரில்
குறுவை சாகுபடிப் பரப்பின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற தமிழக
அரசின் இடைக்கால மனு 10.5.2013 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த
போது,கர்நாடகம் சார்பில் தற்காலிகமாக ஒரு மேற்பார்வைக் குழு
அமைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, உச்ச நீதிமன்றம் அதனை
ஏற்றுக்கொண்டு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட தற்காலிக மேற்பார்வைக் குழு 12.6.2013
அன்றுகூடிய போது, கர்நாடக அரசு இந்தக் குழு முறைப்படி அமைக்கப்படவில்லை
என்றும், இந்தக் குழு எந்த முடிவினையும் எடுக்க முடியாது என்றும்
தெரிவித்தது. இதிலிருந்து, கர்நாடகம்,தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக் கூடாது
என்ற நிலைப்பாட்டை எடுத்து இருப்பதுதெள்ளத் தெளிவாகிறது. கர்நாடகம்
கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட தற்காலிக மேற்பார்வைக்
குழுவிற்கு முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை என்று கூறுவதால்,இது உச்ச
நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் செயலாகும். எனவே, தமிழகத்தின் சார்பில்
கர்நாடகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். அதே
போன்று,காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில்
வெளியிடப்பட்டுள்ளதால், அந்தஆணையின் அடிப்படையில் காவேரி மேலாண்மை வாரியம்,
காவேரி நீர் முறைப்படுத்தும்குழு ஆகியவை உடனடியாக அமைக்கப்பட வேண்டும்
என்ற ஒரு மனுவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.எனது
தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு திருப்தியையும், மன
நிறைவையும் அளிக்கும் என்று நான் நம்புகிறேன் என கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக