திங்கள், 10 ஜூன், 2013

மனத்தில் உறுதி வேண்டும்!

மனத்தில் உறுதி வேண்டும்!
மின்சார விபத்தில் பலத்த காயமடைந்து, மறுநாளே பிளஸ் 2 தேர்வையும் எழுதி, 1,056 மதிப்பெண் பெற்ற, தனசேகரன்: நான், தேனி மாவட்டத்தின், முத்துதேவன்பட்டியைச் சேர்ந்தவன். மேலப்பேட்டை இந்து நாடார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தேன். தேர்வுக்கு முந்தைய நாளான, பிப்., 28ம் தேதி, வழக்கம் போல் நண்பர்களுடன் வயக்காட்டிற்கு சென்ற போது, வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை எதிர்பாராமல் மிதித்து விட்டேன். மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதால், பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைக்கு பின், கண் விழித்தேன். கை, கால்களில் தீக்காயம் அதிகம் இருந்ததால், தேர்வெழுத வேண்டாம் என, மருத்துவர்கள் கூறினர். விடிந்தால் தேர்வு, என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதுவரை படித்த பாடங்கள் எல்லாம் பாழாகி விட்டதே என, நான் மனமுடையவில்லை. கை, கால்களை அசைக்க முடியாமல், உடல் நிலை ஒத்துழைக்காத நேரத்திலும், எப்படியாவது தேர்வு எழுதியே ஆக வேண்டும் என்ற மன உறுதி மட்டும் இருந்தது. படுக்கையில் இருந்தபடியே பாடங்களை படித்தேன்.
மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளிடம், என் நிலையை விளக்கி சிறப்பு அனுமதி பெற்றேன். எனக்காக தனி அறை ஒதுக்கி, நான் சொல்வதை எழுத, ஒரு ஆசிரியரை நியமித்தனர். அவர் உதவியால் தேர்வு எழுதினேன். அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தால், உடல் நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை, நானே எழுதி, 1,056 மதிப்பெண்கள் எடுத்து, வெற்றி பெற்றேன்.
அப்பா மற்றும் தாத்தாவுக்கு உள்ள, இதய நோயை குணமாக்க, மருத்துவர் ஆவதே என் நீண்ட நாள் கனவு. இதற்காக, அதிக மதிப்பெண்களை எதிர்பார்த்தேன். எய்ம்ஸ் மற்றும் புனே ராணுவ மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வையும் எழுதி, அதன் முடிவுகளுக்காக காத்திருக்கிறேன். விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், என் வெற்றிக்கு வழிகாட்டும் என, மன உறுதியுடன் இருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக