மக்களுக்கெல்லாம் உதவ வேண்டும்!
கண் பார்வையற்றவராக இருந்தாலும்,
எம்.ஜி.ஆரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, மக்களுக்கு உதவும், கொளஞ்சி: நான்,
பெரம்பலூர் மாவட்டத்தின், கிளியூர் குக்கிராமத்தில் பிறந்தவன். மஞ்சள்
காமாலையால், ஏழு வயதிலேயே, இரு கண்களிலும், பார்வை இழந்தேன். எனினும்,
ஊரார் ஏளனமாக நடத்தாமல் ஊக்கமளித்ததால், பார்வை இல்லாததை ஒருபோதும்
உணர்ந்ததில்லை. திருச்சி, புத்தூர் பார்வையற்றோர் பள்ளியில் படிக்கும்
போது, பிரெய்லி முறையில் வாசிக்க கற்றுக் கொண்டேன். பார்வையற்ற நிலையிலும்,
சரியாக வாசிப்பதை ஆச்சரியத்துடன் பார்த்த, முன்னாள் முதல்வர்,
எம்.ஜி.ஆர்., என்னை தொட்டு பாராட்டினார். ஓட்டப் பந்தயத்திலும் பங்கேற்று,
அவர் கையால் முதல் பரிசு வாங்கிய போது, "நீ நல்லா படிச்சு பெரிய ஆளா
வரணும்; மக்களுக்கெல்லாம் உதவணும்' என, என்னை ஊக்கப்படுத்தினார். லயோலா
கல்லூரியில், பி.ஏ., தமிழ் படிக்கும் போது, என் தந்தை இறந்ததால், படிப்பை
தொடர முடியாமல், பேசின் பிரிஜ்ஜில், "டெலிபோன் பூத்' நடத்தி, குடும்பத்தை
காப்பாற்றினேன். படிப்பு முடிந்ததும், சேர்ந்த மாவட்டமான பெரம்பலூர்
பேருந்து நிறுத்தத்தில், ஒரு பங்க் கடை போட்டு, தொழில் செய்தேன். நான்
தினமும் பெரம்பலூர் செல்வதால், தாலுகா மற்றும் கலெக்டர் அலுவலகத்துக்கு
கொடுக்க வேண்டிய மனுக்களை, கிராமத்தினர், என் மூலம் கொடுத்தனுப்புவர்.
நானும் இதில் தன்னார்வத்தோடு ஈடுபட்டு, பல பேருக்கு முதியோர் பென்ஷன்
வாங்கி தந்திருக்கிறேன். அரசின் திட்டங்களை ஆர்வத்தோடு அறிந்து, என் கிராம
மக்களுக்கு பெற்று தருகிறேன். உள்ளாட்சி பிரதிநிதியாக, கட்சி வேறுபாடின்றி,
கிராம மக்களின் நியாயமான கோரிக்கைகளை, அரசு அதிகாரிகளிடம், முறையாக
விண்ணப்பித்து நிறைவேற்றுகிறேன். பதவி என்பது, சம்பாதிப்பதற்கான வழி
கிடையாது. அது ஊருக்கு உழைக்க கிடைத்த வாய்ப்பாக கருதினேன். 43 வயது
மாற்றுத் திறனாளியாக இருந்தாலும், மக்களுக்கெல்லாம் உதவணும் என்ற
வார்த்தைக்கு கட்டுப்பட்டு, இன்றும் உதவி செய்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக