தமிழ்த்தாயின் அழுகுரல்! - இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்த்தாயின்
அழுகுரல்!
இலக்குவனார் திருவள்ளுவன்
மதுரையில் 100 கோடிஉரூபாய் மதிப்பில் தமிழ்த் தாய் சிலை
அமைக்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு மட்டில்லா மகிழ்ச்சியைத் தந்தது.
அமெரிக்காவில் உள்ள விடுதலைத்தேவியைப் போல், உலக மக்களால் போற்றப்படும்
சிலை! தமிழ் நாகரிகம், கலைச்சிறப்பு முதலானவற்றை எடுத்துக் காட்டும்
சிலை! அருகேயே தமிழ் வளத்தை உலகிற்கு உணர்த்த தமிழ்த்தாய்ப் பூங்கா ! படிக்கப்
படிக்க மகிழ்ச்சி!
அமெரிக்க விடுதலைத் தேவிச்சிலையைப் பார்த்ததால்தான் முதல்வராக இருந்த
பொழுது, என்.டி.இராமராவ்
ஐதராபாத்தில் 58 அடி உயரத்தில் ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட புத்தர் சிலையை
நிறுவினார். உசேன் தீவில் உள்ள
(உ)லும்பினி பூங்காவில் உள்ள புத்தர் சிலையைக் காணப் படகில் செல்வதும் தனி
இன்பம்தான். அதைப்பார்த்த பொழுது தமிழ்நாட்டில் தொல்காப்பியர், திருவள்ளுவர், சங்கப்புலவர்கள் சூழ தமிழன்னை வீற்றிருக்கும்
வண்ணம் நீர்நிலை நடுவே உயர்மேடையில் தமிழ்த்தாய்க்குப் படிமம் அமைத்துத் தமிழ்
நாகரிக, பண்பாட்டு,இலக்கியச் சிறப்புகளைப்
பரப்பலாமே என எண்ணியதுண்டு. எனவே இந்த
அறிவிப்பை எண்ணி மகிழ்ந்திருந்த பொழுது வெளியே அழுகுரல் கேட்டது. மெல்ல எட்டிப் பார்த்தேன். வீதியி்ல் ஒரு பெண் அழுது
கொண்டிருந்ததைப் பார்த்தேன்.
செல்வச்செழிப்புள்ள பெண்ணாகத்
தோற்றமளித்தார். முகத்தில் காண்போர் வணங்கத்தக்க பொலிவும் அழகும் பெருமிதமும் இருந்தாலும் வாட்டம்
தெரிந்தது. வாட்டத்திற்கும் அழுகைக்கும்
காரணம் என்னவாக இருக்கும் என்று அருகில் சென்று,
“அம்மா தெருவில் ஏன்
நிற்கின்றீர்கள்?
வீட்டிற்குள் வாருங்கள்!” என்றேன்.
“நீயாவது என்னை
அழைக்கின்றாயே! மகிழ்ச்சி அப்பா” என்றார்.
ஒருவேளை அவரது பிள்ளைகள் அவரை வீட்டை விட்டுத் துரத்தி
விட்டார்களோ என ஐயப்பட்டேன். என்
முகத்தைப் பார்த்தே நான் எண்ணியதை அவர் புரிந்து கொண்டார்.
“பணிப்பெண்ணைப்
பட்டாடையால் அழகு செய்து மகிழ்ந்து வீட்டுத் தலைவியை - தாயை விரட்டுவோர் பற்றிக்
கேள்விப்பட்ட தில்லையா” என்றார்.
தாயைப் பட்டினிப் போட்டுவிட்டு ஊராருக்கு அன்னதானம் அளிப்பவர் பற்றிக்
கேள்விப்பட்டுள்ளேன். அன்னை
கந்தலாடையுடன் இருக்கும் பொழுது ஊரில்
துணிமணிகளை வாரி வழங்குபவர் குறித்தும் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், இவரைப் பார்க்க வறுமையில் வாடுவதாகத் தெரியவில்லை. அதையும் புரி்ந்து
கொண்டார் போலும்.
“என் மக்களுள் சிலர் செல்வாக்கும் செல்வமும் இல்லாவிட்டாலும் என் மீது அன்பு
காட்டுபவர்களாக உள்ளனர். பிறர் என்னை
வீட்டை விட்டு விரட்டிவிட்டு வெளியில் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக நல்ல
ஆடைகளுடனும் அணிகலன்களுடனும் அனுப்பி விட்டனர்” என்றார்.
“அம்மா என்னிடம் உண்மையைக் கூறுங்கள். எங்கள் வீட்டிலேயே இருக்கலாம்” என்றேன்.
“நான் வரும் பொழுது என்ன நினைத்துக் கொண்டிருந்தாய்” என்றார். “தமிழ்த்தாய்ச்சிலை, தமிழ்த்தாய் பூங்கா பற்றி
மகிழ்ச்சியுடன் எண்ணிக்கொண்டிருந்த நான் உங்கள் அழுகுரல்கேட்டுக் கவலைப்பட்டேன்” என்றேன்.
“எனக்காகக் கவலைப்படுகிறாய் நீ! தமிழ்த்தாய்க்காக யாரும் கவலைப்படவில்லையே” என்றார்.
“என்ன அப்படிச் சொல்லி விட்டீர்கள்! உலகத் தமிழ்
மாநாடுகள் நடத்தவில்லையா? உலகச்செம்மொழி மாநாடு நடத்தவில்லையா?”
“அவற்றால் சிறு பயன்கள் விளைந்தன. ஆனால்
அவற்றிற்கு ஆன செலவில் ஒரு பகுதியைப் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும்
தமிழ்வழிப் படிப்புகள் அளிக்கப் பயன்படுத்தி இருக்கலாம் அல்லவா? இடர்ப்பாடுகளுடன் தாய்த்தமிழ்ப்பள்ளிகள் நடத்துபவர்களுக்குப் பொருளுதவி
வழங்கி இருக்கலாம் அல்லவா?”
“தமிழ்த்தாய் குடியிருக்க வேண்டிய கல்வியகங்களில் இருந்து விரட்டி விட்டு
மாநாடுகள் நடத்தி என்ன பயன்? இருக்கும் அரியணையைப் பிடுங்கி விட்டு வெற்றுப்
புகழ் பாடுவதால் தமிழன்னைக்கு மகிழ்ச்சியா ஏற்படும்? மாநகராட்சிப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயில யாரும் வரவில்லை என அவற்றை மூடிக் கொண்டே
வந்தார்கள். இப்பொழுது தமிழ்வழிப்பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவுகளைத் தொடங்கி
வருகின்றனர். என்ன கொடுமை இது?”
“மாணாக்கர்கள் விரும்புவதால் அதற்கேற்பத்தானே
முடிவெடுக்க முடியும்? தமிழ்
வழியாகப் படித்தால் என்ன வேலை கிடைக்கப் போகிறது? உலக மொழியான
ஆங்கிலத்தில் படித்தால்தானே வேலைகிடைக்கும்”.
“ஏன்
இந்தத் தாழ்வு மனப்பான்மை? தங்கள்
மொழி வழியாகவே படித்துச் சீனா, சப்பான் முதலான அயல்நாட்டினர் அனைவரும்
முன்னேற்றம் காணவில்லையா? கல்லூரிகளில் தமிழில் எழுதி வந்த அகத்தேர்வாகிய கருத்தளித்தலை ஆங்கிலத்தில்தான்
எழுத வேண்டும் என அறிவித்ததை அறிவாய்அல்லவா?”
“அதைத்தான் மாற்றித் தமிழிலும் எழுதலாம் என ஆணையிடப் போகிறார் களே!”
“ஆணை போட்ட பின்பு நடைமுறையில் வாய்வழி
ஆணைகளாலும் ஆங்கிலத்தில் எழுதினால் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியும் தமிழில்
எழுதுவதற்கு மறைமுகமாகத் தடை விதிக்க மாட்டாரகளா? அது சரி! ஏன், ஆங்கில வழியில் பயிலுவோர் தமிழில் கருத்தளிப்பைத் தர விரும்புகின்றனர் தெரியுமா?”
“இதுகூடத் தெரியாதா? ஆங்கிலத்தில் எழுதும் பொழுது
புரிந்து கொள்வதிலும் எழுதுவதிலும்
சிக்கல்கள் வருகின்றன. தமிழில் என்றால் நன்கு புரிந்து கொண்டு எழுதி மதிப்பெண்கள்
பெறலாம். மேலும், பள்ளிக்கூடம் முழுவதும் தமிழில் படித்து விட்டு
இங்கே ஆங்கிலத்தில் படிப்பதால் ஏற்படும் இன்னலகளுக்கு ஓரளவு இடர் நீக்கும்
மருந்தாக அமைகின்றது.”
“அஃதாவது மாணாக்கர்கள் தமிழில் எழுத விரும்புகின்றனர்
என்றால் ஆங்கிலத்தில் படிக்க விரும்பவில்லை என்றுதானே பொருள்? தமிழில் படிக்க மாணவர்கள் விரும்பவில்லை என மூடுவிழா நடத்தும்
அரசு, கல்லூரிகளில் ஆங்கிலவழிப்படிப்புகளுக்கு மூடுவிழா
நடத்தி இருக்க வேண்டும் அல்லவா? ஏன்
ஓரவஞ்சனை?”
“சிந்திக்க வேண்டிய கேள்விதான்.”
“உன்னைப்போன்ற மக்கள் யாவரும் சிந்தித்து எல்லா
நிலைகளிலும் தமிழ்வழிக் கல்வியே இருக்கப்பாடுபட்டால்தானே தமிழ்த்தாய் மகிழ்ச்சி
அடைவாள்.” என்றவர்,
“காரைக்குடியில் தமிழ்த்தாய்க்
கோயில் இருப்பது உனக்குத் தெரியுமா?”
எனக் கேட்டார்.
“தமிழ்த்தாய்க்கு ஏற்கெனவே சிலைகள் உள்ளனவா? “ என வியந்தேன் நான்.
“1975 ஏப்பிரல் 23 அன்று
முதல்வராக இருந்த கலைஞர் தலைமையில் கால்கோள் விழா நடத்தப்பெற்று அவர்
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த 1993
ஏப்பிரல் 16 அன்று தமிழ்த்தாய்க்
கோயில் திறந்து வைக்கப்பெற்றது.
அதனை உலகப்புகழ் பெற்றதாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளையினர்
மலேசியாவிலுள்ள கிள்ளான் தமிழ்ப்பள்ளிக்கும் அந்தமான்
தமிழ்ச்சஙக்த்திற்கும் தமிழ்த்தாய் படிமங்களை அளித்துள்ளனர்.
“அதுமட்டுமல்ல! குற்றாலத்திலும் தமிழன்னை சிலை வரப்போகிறது
தெரியுமா?”
“அப்படியா?”
“ஆமாம்! முனைவர் ஆறு.அழகப்பனின் தமிழ்ச்சுரங்கம்
சார்பில் தமிழ்க்கோட்டம் அமைக்கிறார்கள். அங்கே சேர, சோழ, பாண்டிய வேந்தர்களின் வில், புலி,கயல் முத்திரைகளுடன் தமிழ்ப்புலவர்கள் சூழ
தமிழன்னை வீற்றிருக்கப் போகிறாள். இப்படி ஆங்காங்கே உள்ள
உணர்வாளர்களின் அன்பால் தமிழ்த்தாய்க்கு மகிழ்ச்சி ஏற்பட்டாலும் நிலையான மகிழ்ச்சி
காண முடியாதே!”
தமிழ்த்தாய் அடையும் துன்பங்களை அடுக்கிக்
கொண்டே போ்கலாமே! இலங்கையிலும் ஈழத்திலும் தமிழ்ப்பிள்ளைகள்
அடையும் துயரத்தைக் கண்டும் இனப்படுகொலைகள் தொடர்வதைக் கண்டும் மனம் கலங்காமல்
எப்படி இருக்க முடியும்? ஈழம் தொடர்பில் தமிழக அரசின் தீர்மானம் ஆறுதலாக
இருந்தாலும் அவர்களை அழைத்து இங்கே மருத்துவ உதவி அளிக்கத் தடைஉள்ளதே! அவர்கள்
விரும்பிய நாட்டிற்குச் செல்லத் தடை உள்ளதே! நாட்டைக் காக்கும் இனத்தைக்
காக்கும் அன்புப் பிள்ளைகளின்
படங்களுக்குத் தடை!
தமிழ்ப்பகைவர்களுக்குப் பரிசுகள்! பட்டங்கள்! விருதுகள்! பதவிகள்!
தமிழுக்குக் குரல் கொடுத்தால் சிறை! புறக்கணிப்பு! என்பதுதானே
ஆட்சியாளர்களின் கொள்கைகளாக உள்ளன! பிள்ளைகளைத் துன்பத்தில் ஆழ்த்திவிட்டுத
தாய்க்குச்சிறப்பு என்றால் வருத்தம் வராதா? தமிழ்த்தாய்க்கு அளிக்கும் சிறப்பும் உண்மையான
சிறப்பன்று!
சிலையை
எண்ணி மகிழ்வதா?ஒரு கட்சி வைக்கும் சிலையையும் பிறவற்றையும்
மறுகட்சி ஆடசிக்கு வந்தால் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதுதானே தமிழக அரசியல்! ஆட்சி
மாறும் பொழுதெல்லாம் பந்தாடப்பட வேண்டுமா? புறக்கணிக்கப்பட வேண்டுமா?
வீடுகளிலும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வணிக
நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் கோயில்களிலும் இசையரங்கங்களிலும் திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும்
இதழ்களிலும் பிற ஊடகங்களிலும் இடம்
தராமல் ஒதுக்கி வைத்து விட்டு வீதியில் நிற்க வைத்தால் வீதிக்கு
விரட்டப்பட்டதாக எண்ணி அழாமல் என்ன செய்வது?
“அழாமல் என்ன செய்வதா? உண்மைதானே! அப்படியானால் . . . .
..அப்படியானால். . . . தமிழ்த்தாயே!
எங்களைப் பொறுத்தருளுங்கள் என நெடுஞ்சாண்கிடையாக அவர்
காலில் விழுந்தேன்.
நன்றி : நாம் தமிழர் சூன் 1-15, 2013 பக்கம் 7
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக