செவ்வாய், 11 ஜூன், 2013

சுண்டியிழுக்கும் மதுரைச் சுங்குடிச் சேலைகள்!






சுண்டியிழுக்கும் மதுரை சுங்குடி சேலைகள்!
 
மதுரையில் சில ஆண்டுகளுக்கு முன் கைத்தறித் தொழில் நலிவுற்றிருந்த போது, கஞ்சித் தொட்டிகளை த் திறந்து நெசவாளர்களை க் காப்பாற்ற வேண்டியிருந்தது. இதையடுத்து கைத்தறிக்கு முன்னுரிமை கொடுப்போம் என, அனைத்து த் தரப்பினரும் அப்போது முன்வந்து, கைத்தறி ச் சேலைகள், வேட்டிகளை அணிய த் தொடங்கினர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரும் போட்டி போட்டு க் கைத்தறி வேட்டி, சேலைகளை அணிய, கைத்தறி விற்பனை உயர்ந்தது.
சமீபத்தில் பிப்ரவரியில், "மாமதுரை போற்றுவோம்' என்ற கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மதுரையின் பாரம்பரியங்களில் ஒன்றான சுங்குடி சேலைகளை அனைவரும் வாங்கி அணிய வேண்டுமேன, மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா கேட்டு கொண்டார். அதையடுத்து அனைத்து தரப்பினரும் சுங்குடி சேலைகளை வாங்கி அணிந்தனர். இதன் மூலம் பாரம்பரியத்தையும், பெருமையையும் சுங்குடி சேலைகள் ஓரளவு தக்க வைத்தன.
மதுரையின் பாரம்பரிய மும், நவீனமயத்தின் கலவையாகவும் திகழும் சுங்குடி சேலைகள், காண்போரை சுண்டி இழுப்பவை.
நூறு ஆண்டு கால வரலாறு கொண்ட சுங்குடி சேலை உற்பத்தியில் சவுராஷ்டிரா இனத்தவர் பின்னணியில் உள்ளனர். "சுங்கு' என்றால் தெலுங்கில், "மடிப்பு' என பொருள். சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலம் மசூலிபட்டினத்தை சேர்ந்த சவுராஷ்டிரா மக்களிடம் மஸ்லீன் துணி வகைகள் பெயர் பெற்றிருந்தன. அங்கிருந்தும் சில மாறுபாடுகளுடன் சுங்குடி புடவைகள் வந்ததாக தகவல்கள் உண்டு.
மதுரை, சின்னாளப்பட்டி உட்பட ஓரிரு இடங்களில் உற்பத்தியாகும் சுங்குடி சேலைகளை, அனைத்து மாநில பெண்களும் விரும்பி அணிவர். முன்னாள் பிரதமர் இந்திரா சுங்குடி சேலைகளை அணிவதில் ஆர்வம் கொண்டவர். கோராகாட்டன் போன்ற மிக்ஸடு காட்டன் சேலைகள் போலின்றி, சுங்குடி சேலைகள் நூறு சதவீத பருத்தியால், தயாராகுபவை. கோடைக்கு மட்டுமின்றி குளிருக்கும் இதம் அளிப்பவை. மதுரையில் 6, 7, 9, பத்தரை முழம் கொண்ட சுங்குடி சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சுங்குடி சேலைகள் உற்பத்தி, மொத்த விற்பனையில் ஈடுபட்டுள்ள ஓ.ஜி.சரவணன் கூறுகிறார்: வெள்ளை நிறமாக வரும் காட்டன் சேலைகளை சாயம் அடித்து, அதில் கை அச்சு பதித்து, காய வைத்து, கஞ்சி போட்டு, சலவை செய்து சுங்குடிகளாக உருமாற்றுகிறோம். சுங்குடி சேலைகள் ரூ.150 முதல் 750 வரை விற்பனையாகின்றன. தரமான சுங்குடி சேலைகளை தண்ணீரில் எத்தனை முறை துவைத்தாலும், கலரோ, அச்சுக்களோ மறையாது, என அடுக்கினார்.
சுங்குடியில் இவ்வளவு சங்கதிகள் இருக்கும் போது, சுண்டி இழுக்காதா பின்னே? மதுரைக்கு போனால், மல்லிகைப்பூ மட்டுமின்றி சுங்குடி சேலைகளையும் இனி மறக்க மாட்டீர்கள் தானே!

எம்.  இரமேசுபாபு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக