ஞாயிறு, 16 ஜூன், 2013

கோவையில் உருவாகும் தமிழ் நேயம் அறக்கட்டளை

 கோவையில் உருவாகும் தமிழ் நேயம் அறக்கட்டளை
                                                                                              நண்பர்களுக்கு வேண்டுகோள்

                        13-06-2013 கோயபம்புத்தூர், காந்திபுரம் சிபி ஐ.ஏ.எஸ். அகாதமியில் எழுத்தாளர்கள், நண்பர்கள் பலர் கூடி தமிழ் நேயம் என்ற பெயரில் ஓர் அறக்கட்டளை உருவாக்க வேண்டுமென்றும் அதன் சார்பில் சில முக்கியமான பணிகளை மேற்கொள்வதென்றும் தீர்மானித்தோம்.
 கூட்டத்தில் பேராசிரியர் கி. நாச்சிமுத்து, அறிஞர் செ. நாராயணசாமி, முனைவர் கோ. ஆறுமுகம், கவிஞர். அறிவன், பாவலர் இரணியன், நந்தினி பதிப்பக உரிமையாளர் திரு. வேனில், முனைவர் வே. சுகுமாரன், எழுத்தாளர் சு. வேணுகோபால், மருத்துவர் அரங்கசாமி, திரு.கு.வே.கி.செந்தில், திரு. கார்த்திகேயன், முனைவர் கு. முத்துக்குமார், முனைவர் க. ஜவகர் ஆகியோர் கலந்துகொண்டனர். கலந்துகொள்ள இயலாத பிற நண்பர்கள் பலர் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்பதாகக் கூறினர்.
                   கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிலக்கியத்திறனாய்வு பற்றியும் மார்க்சியம், மெய்யியல் பற்றியும் தொடர்ந்து எழுதிவருவதோடு பரிமாணம், நிகழ், தமிழ் நேயம் ஆகிய சிற்றிதழ்களைச் சிறப்பாக நடத்தியவர் என்ற முறையிலும் இதர பல இயக்கப் பணிகளில் காலம் முழுதும் இயங்கியவர் என்ற முறையிலும்  கோவை ஞானி சார்பில் "தமிழ் நேயம்" அறக்கட்டளை என்றோர் அமைப்பை உருவாக்குவதென நண்பர்கள் முடிவுசெய்தனர். 

அறக்கட்டளையின் பணிகளென கீழ்காணும் சிலவற்றைத் தீர்மானித்தனர்

 1. 5000 பக்கங்களுக்கும் மேற்பட்ட ஞானியின் படைப்புக்கள் அனைத்தையும் இலவயமாகப் பார்க்கவும் படி எடுத்துக் கொள்ளவும் உரிய முறையில் ஒரு வலைதளத்தை உருவாக்கவேண்டும்.

2. ஞானியின் விருப்பப்படி ஆண்டுதோறும் இலக்கியத் திறனாய்வுத்துறை/ படைப்பிலக்கியத் துறையில் வெளியிடப்படும் மிகச்சிறந்த நூல்கள் மூன்றைத் தக்க நடுவர்களைக் கொண்டு தெரிவு செய்து மூவருக்கும் ரூ. 25,000 வீதம் விருது வழங்குவது.

3. கோவை வட்டாரத்தில் கடந்த நூறாண்டுகளுக்கிடையில் எழுத்தாளர்கள், கவிஞர், ஆய்வாளர் ஆகியோரின் அனைத்துப் படைப்புக்களையும் எதிர்காலத் தலைமுறையினர் படிப்பதற்கும் ஆய்வு செய்வதற்கும் தேவையான முறையில் ஒரு நூலகம் அமைக்கவேண்டும்.

4. கோவை வட்டாரத்தில் கடந்த ஒரு நூறாண்டளவில் வாழ்ந்த/ வாழும் அறிஞர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் தாம் வாழும் காலத்தில் சேர்த்து வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான நூல்களை ஒரு சேர இயன்ற அளவில் தொகுத்து மேற்குறிப்பிட்ட நூலகத்தில் பாதுகாத்து ஆய்வாளர்களுக்குப் பயன்படும்படி வைக்கவேண்டும்.

 மேற்கண்ட பணிகளில் குறிப்பிட்ட வரிசையில் ஒவ்வொன்றாகச் செய்துமுடிக்க வேண்டும். 
 இத்தகைய அறக்கட்டளை ஒன்றை உருவாக்கும் முறையில் தற்காலிகச் செயற்குழு ஒன்றை நண்பர்கள் தெரிவு செய்தனர். தலைவராகப் புலவர் ஆதி, செயலாளர்களாக முனைவர் கு. முத்துக்குமார், திரு . கார்த்திகேயன் ஆகியவர்களோடு சந்திப்பில் கலந்துகொண்ட அனைத்து நண்பர்களும் செயற்குழு உறுப்பினர்களாக முடிவுசெய்தோம். அறக்கட்டளை தொடர்பான அனைத்து விவரங்களையும் தமிழ் உணர்வு சார்ந்த இதழாளர்கள், தமிழியக்கத்தினர், தமிழாய்வு நிறுவனத்தினர் முதலிய அனைவரோடும் பகிர்ந்து கொள்வதென்றும் அவர்கள் மூலம் தேவையான தொகையைத் திரட்ட முயற்சி செய்வதென்றும் முடிவுசெய்தோம். இதுகுறித்துத் தங்கள் கருத்துரைகளைப் பெரிதும் எதிர்ப்பார்க்கிறோம்.
                                                                                                                     நன்றி, 
                                                                                                                                                                            செயற்குழுவின் சார்பாக‌

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக